வெற்றித் திசை

-ஆதவன் வை.காளிமுத்து

உடம்பினுள் உத்தமன்

“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்

உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புள்ளேஉத்தமன் கோவில் கொண்டானென்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”

என்பது ஒரு அழகான திருமந்திரப் பாடல் உடலை ஏன் பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை திருமூலரைத் தவிர யாரால் இவ்வளவு சிறப்பாக விளக்கமுடியும்?

நாம் எல்லோருமே நம் உடலை ஏதோ உணவை மலமாக்கும் எந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உடம்புள்ளே “உறுபொருள்” கண்டேன் என்கிறார். நாமும் அந்த “உறு பொருளை”க் காண வேண்டும், உணர வேண்டும் அப்போதுதான் திருமூலரைப் போல நாமும் நம் உடலைப் போற்றிப் பாதுகாக்கும் விழிப்புணர்வு உண்டாகும். “உறுபொருள் – என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் உடலை இயக்கி நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பேராற்றல், ஒரு மாபெரும் சக்தி, அந்த சக்தியைத்தான் உத்தமன்” என்கின்றார் திருமூலர்.

ஏன் உத்தமன் என்கின்றார் நாம் ஒரு வேலை செய்தால் அதற்குக் கூலி வாங்குகிறோம் அல்லது சம்பளம் வாங்குகிறோம். நமக்குள்ளே என்னென்ன இயந்திரங்கள் இருக்கின்றன, எவ்வளவு நுட்பமான இயந்திரங்களாக இருக்கின்றன, நாம் உண்ணுகின்ற உணவு ஏழு தாதுக்களாக மாறுகிறது, இருதயம் ரத்தத்தை சுத்திகரிக்கிறது, நுரையீரல் செய்கின்ற வேலை எவ்வளவு மதிப்புடையது, நம்முடைய செரிமான மண்டலங்களுடைய வேலை எத்தகையது, நம்முடைய மூளை எவ்வளவு பெரிய அற்புதம். மேலும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம் இன்றுவரைக்கும் ஏதாவது ஒரு எந்திரத்தை நமக்கு இயக்கத் தெரியுமா? இவ்வாறு இவ்வளவையும் இயக்கிக் கொண்டு இருக்கக்கூடிய அந்த “உறு பொருள்” என்கின்ற ஒரு பொருள் நம்மிடத்தில் என்ன கூலி வாங்குகிறது? நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறது? எதுவுமே இல்லை. அதனால்தான் அந்த மாபெரும் ஆற்றலை, உறு பொருளை “உத்தமன்” என்கின்றார்.

உயிருக்கு ஊதியம்

நமது அறிவாசான் திருவள்ளுவரும், இவ்வளவையும் நமக்குள்ளே இருந்து இயங்கிக் கொண்டிருக்க கூடிய அந்த உத்தமனுக்கு என்று ஒரு விலை இருக்கிறது, அந்த விலையை நாம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்கின்றார். அப்படி நாம் என்ன விலை கொடுத்துவிட முடியும்? என்ன விலை என்றால்”

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு”

அதாவது நம்மிடத்தில் இருக்கின்ற ஒரு பொருளை அது இல்லாத மற்றவர்களுக்கும் மனமுவந்து கொடுக்கின்ற போது நம்முடைய உயிரானது மகிழ்ச்சி அடைகின்றது, அவ்வாறு ஈகை செய்கின்றபோது நமக்குப் புகழ் கிடைக்கின்றது, ஆக கொடுப்பது அதனால் அடையக்கூடிய புகழ் இவற்றிலே தான் நம்முடைய உயிரானது மகிழ்ச்சி அடைகிறது. அதைத் தவிர வேறு ஊதியம் உயிருக்கு கிடையாது. வேறு எதையுமே நம்மால் கொடுக்க முடியாது.

திருமூலர் உரைக்கின்ற அந்த “உறு பொருளை” “உத்தமனை” திருவள்ளுவர் “உயிர்” என்கின்றார். அந்த உயிர் என்ற மாபெரும் ஆற்றல் தான் நம்முடைய இவ்வளவு பெரிய உடலையும் வாழ்நாள் முழுவதும் தூக்கிச் சுமக்கிறது. அப்படி என்றால் நம்முடைய உடல் எப்படிப்பட்டது? அந்த உடலுக்குள்ளே இருந்துகொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற சக்தி எப்படிப்பட்டது? என்பதையெல்லாம் நாம் சிந்திக்கின்ற போது நம்முடைய உடலின் மதிப்பும் விளங்கும், நம்முடைய உயிரின் மதிப்பும் விளங்கும்.

சிற்றிறைவன்

இயற்கையினுடைய ஒரு அதி அற்புதமான, உலகத்திலேயே, ஏன்? இந்த பிரபஞ்சத்திலேயே ஒரு சிறந்த படைப்பு என்றால் அது மனிதப் படைப்பு தான். இந்த உலகம் தான் பெரிது என்றால் மனிதன் ஒரு சிறிய உலகம். இந்தப் பிரபஞ்சம் தான் பெரிது என்றால் மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம். இறைவன் தான் பெரியது என்றால் மனிதன் ஒரு சிறிய இறைவன்.

உலகத்தை, இந்த பிரபஞ்சத்தை, பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களை, உலகில் உள்ள பொருட்களை, நிலவை, சூரியனை, கடலை, நதியை, மழையை, மலரை இன்னும் மற்ற மற்ற அனைத்துப் பொருட்களையும் மனிதனால் மட்டுமே மதிக்க முடியும், மனிதனால் மட்டுமே இரசிக்க முடியும். மனிதனைத் தவிர இன்னொரு உயிரால் இந்த பிரபஞ்சத்தையோ, உலகத்தையோ, அதன் அற்புதங்களையோ இரசிக்க முடியாது. எனவே மனிதனுக்காகவே, மனிதனை குறிவைத்து இவ்வளவும் படைக்கப்பட்டிருக்கிறது அல்லது பரிணமித்திருக்கிறது. அதனால்தான் ஞானிகள் சொல்கிறார்கள் இறைவன் தன்னைத் தானே இரசிப்பதற்காக எடுத்த வடிவமே மனிதன் என்று. இயேசு பெருமானும் இறைவன் தனது சாயலிலேயே மனிதனைப் படைத்தான் என்கின்றார்.

சிறப்புடன் வாழ…

அப்படிப்பட்ட மனிதர்களாகிய நாம் நமது மதிப்பை உணர வேண்டாமா? ஔவையார் சொல்கிறார், அரிது! அரிது! மானிடராய் பிறத்தல் அரிது! என்று. பாரதியார் “மானிடராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்கிறார். அப்படி பெறுவதற்கு அரிய பிறவியைப் பெற்ற நாம், உடலை பெற்ற நாம் இந்த பிறவியை பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென்றால் நம்முடைய உடலை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். உடலை நலமாக வைத்துக்கொள்ள நாம் கற்க வேண்டும். எனவே நாம் உடலை ஓம்ப கூடிய, உடலை நலமாக வைத்துக் கொள்ளக்கூடிய சில வழிமுறைகளை நாம் நாள்தோறும் பின்பற்றினால் நாம் நலமாக வாழலாம், மகிழ்வாக வாழலாம், நிறைவாக வாழலாம். அதற்குத் தேவை கொஞ்சம் மாற்றி யோசித்தல் மட்டுமே. கொஞ்சம் சிந்தனை செய்தால் போதும் சிறப்பாக வாழலாம்.

“அதிகாலை துயிலெழு”

அதிகாலையில் எழுவது என்பது ஒரு மிக நல்ல பழக்கம் என்பதைவிட நல்ல உடல் நலத்திற்கு அப்பழக்கம் ஒரு ஆதாரமாகவும் இருக்கிறது. நாம் சிற்றறிவு என்று சொல்லக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் யாரும் எழுப்பி விடாமல், அலாரம் வைக்காமல் ஆதிகாலம் தொட்டு இன்று வரையில் பழக்கம் மாறாமல் அதிகாலையிலேயே கூட்டில் இருந்து கிளம்பி விடுகின்றன. மனிதனும் அப்படி இருந்தவன் தான் இன்று இப்படி ஆகிவிட்டான்.

அதிகாலை வேளையில் சுத்த காற்று என்கின்ற ஓசோன் புவியின் மீது கவிழ்ந்து இருக்கும். அந்த வேளையில் நாம் எழுந்து உலாவும்போது அந்த அதிகாலை தூய காற்றை நாம் சுவாசிக்கிறோம் அதன்மூலம் நமது நுரையீரல் மண்டலம் பலம் அடைகின்றது. தூய ஓசோன் நம் உடல் செல்கள் முழுவதும் நிறைந்து உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு அளிக்கின்றது.

“உடலினை உறுதி செய்”

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் அதிகாலையில் எழுந்து வயலுக்குச் சென்று வேலைகளைத் துவங்கி விடுவார்கள். உழைத்து களைத்து வரும்போது தான் காலை உணவையே எடுத்துக்கொள்வார்கள். எனவே அவர்களுக்கு தனியாக உடற்பயிற்சியோ, மனப்பயிற்சியோ தேவை இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று இந்த நவீன உலகத்தில் நம்மிடத்திலேயே உடல் உழைப்பு இல்லை அதன் காரணமாக பல நோய்களுக்கு ஆட்படுகிறோம். தினசரி குறைந்தது காலை மாலை இருவேளைகளிலும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் காலையில் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை அரைமணிநேரம் மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு மிக்க துணைபுரிகின்றது

“உணவும் ஒழுங்கும்”

இன்றைக்கு நமக்கு வருகின்ற மிகப்பெரும்பாலான நோய்க்கு காரணமாக இருப்பது நமது உணவு முறையும், நாம் கடைபிடிக்கும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கமுமேயாகும். எதைச் சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற வரையறையை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தக்க முறையில் வரையறை செய்து கொள்ளவேண்டியது
அவசியமாகிறது.

உடல்நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் உணவில் சுவையை விரும்பக் கூடாது. உணவில் அளவுமுறை மாற்றக்கூடாது. நாம் உண்ணுகின்ற அனைத்து உணவும் செரிமானமாகி சத்துக்கள் ஆவதில்லை. நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு உணவின் சத்துக்கள் மட்டுமே பிரிக்கப்பட்டு உடலில் சேர்கிறது. கூடுதலான அனைத்தும் மலமாக வெளியேறிவிடும். நல்லா சாப்பிடு, நிறைய சாப்பிடு என்பதெல்லாம் நம்மை நோயாளியாக மாற்றும் வேலை. ஏப்பம் வரும் போது உணவை நிறுத்திக்கொள்ள வேண்டும் அதுதான் உடலின் உணவு அளவுகோல். உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பே ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட வேண்டும். உணவுக்கு இடையிடையே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். பழக்கத்தால் உணவருந்தக்கூடாது, பசி எடுத்தால் மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஆரோக்கியத்தின்
திறவுகோல்.

“மன அமைதி”

இதைத்தான் இன்று நாம் முற்றாக தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றோம். அப்படி நாம் இழந்த அமைதியை வெளியே
தேடுவது வீண் வேலை. ஏனென்றால் நாம் தேடும் அமைதி வெளியே இல்லை நமக்குள்ளே இருக்கின்றது. அப்படி நமக்குள்ளே தேடுகின்ற முயற்சிக்கு பெயர்தான் தியானம் என்பது. காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு அமைதியான நேரத்தில், ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்துகொண்டு ஒரு இருபது நிமிட நேரமாவது தனிமையில் அமர்ந்து கண்களை மூடி இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும் சுவாசத்தைக் கவனித்துவாருங்கள். இவ்வாறு குறைந்தது ஒரு பதினாறு நாட்களாவது செய்து பாருங்கள் உங்கள் சுவாச ஓட்ட அளவு இன்னும் குறைந்து மனம் இலகுவாவதை உணர முடியும்.தொடர் பயிற்சியினால் மனம் ஆழ்ந்த அமைதி நிலைக்கு திரும்புவதை உணரமுடியும். நீங்கள் தொலைத்து விட்டதாக நினைத்த அமைதி உங்களுக்குள்ளேயே பொங்கி வருவதை உணரலாம். மனம் அமைதி அடைந்துவிட்டால் பாதி உடல் வியாதிகள் பறந்தோடிவிடும். நம்மை யாராலும் மாற்ற முடியாது நாம் மாறினால்தான் உண்டு.
மாறுவோம்!