வெள்ளோட்டம் வெல்லட்டும்-19

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

சில சமயங்களில் கைதவறி விழும் கண்ணாடி டம்ளர், தரையில் பட்டு உடைவதை பதைபதைப்போடு பார்த்த அனுபவம் நமக்கு நேர்ந்திருக்கும். வேண்டுமென்றே உடைக்கவில்லை, கைதவறி விழுந்தது என நமக்கும் பிறருக்கும் சமாதானம் சொல்லி கொள்வோம்.

அறிவியல் ஆராய்ச்சியில் வேண்டுமென்றே சிலவற்றை உடைக்க வேண்டிய நிலையில் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட சோதனைகள் அழிப்பு சோதனைகள் (Destructive Tests) என்று அழைக்கப்படுகின்றன. சாதம் வெந்திருக்கிறதா என சில பருக்கைகளை நசித்துப் பார்ப்பது ஒரு வகையில் அழிப்பு சோதனை தான். பாத்திரத்தில் உள்ள பிற பருக்கைகளின் தரத்தை அறிய சில பருக்கைகளை அழிப்பது போல, தொழில்நுட்பத்துறையில் அழிப்பு சோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

ஹெலிகாப்டர் மேலெழும்புவதற்கும், தரையிறங்குவதற்கும், விமானங்களைப் போல ஓடுபாதைகள் தேவையில்லை. இதனால் தேவையான இடங்களில் ஹெலிகாப்டரை தரையிறக்கிக் கொள்ளலாம். இதனால் தான் மீட்புப்பணிகளில் ஹெலிகாப்டர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

வீழ்ச்சி சோதனை:

இறக்கையின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஹெலிகாப்டர் மிருதுவாக தரையிறங்கும். சில தொழில்நுட்பக் காரணங்களால் எஞ்சின் அல்லது இறக்கை இயங்காமல் போனால், மிருதுவாக தரையிறங்குவது சாத்தியப்படாது. அந்த சமயங்களில் ஹெலிகாப்டர் அதன் எடையின் காரணமாக மிக வேகமாக தரையிறங்கி (Hard Landing) விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் உண்டு. எனவே கடினமாகத் தரையிறங்கினாலும் பாதிப்படையாத உறுதியான உடலைப்போடு ஹெலிகாப்டரை வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அப்படி வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டரின் உறுதித்தன்மையை சோதிக்க சில சோதனைகள் உண்டு. அதில் ஒன்று ‘வீழ்ச்சி சோதனை’ (Drop Test).

ஹெலிகாப்டரின் உடல்பகுதி (Fuselage), ஏறக்குறைய 30 அடி உயர்த்தப்பட்டு, பிறகு கீழே விழ வைக்கப்படும். அப்படி விழுந்த பின் ஹெலிகாப்டர் அடைந்த சேதம் அளவிடப்படும். ஹெலிகாப்டரில் அதிர்வுகளை அளக்கும் உணரிகள் பொருத்தப்பட்ட, மனித பொம்மைகள் (Manikins) இருக்கைகளில் உட்காரவைக்கப்பட்டு பட்டையால் இணைக்கப்பட்டிருக்கும். மனித பொம்மைகள் சந்திக்கும் அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படும். வீழ்ச்சி சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் ஹெலிகாப்டர் மறுவடிவமைப்பு செய்யப்படுவதும் உண்டு.

தரையிறங்க ஏதுவாக விமானத்தில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஹெலிகாப்டரில் சக்கரங்கள் அல்லது சறுக்கல் குழாய் (Skid Tubes) பொருத்தப்பட்டிருக்கும். நீரில் தரையிறங்கும் ஹெலிகாப்டரில் மிதவைகள் பொருத்தப்பட்டிருப்பதும் உண்டு.

காற்றுப்பைகள்:

கடினத் தரையிறக்கத்தின் போது, தரையோடு முதலில் மோதுவது ஹெலிகாப்டரின் அடிப்பாகத்தில் உள்ள சக்கரங்கள் அல்லது சறுக்கல் குழாய்கள். மோதலினால் இவை சேதமடைவதால், ஹெலிகாப்டரின் உடலின் அடிப்பகுதி தரையில் மோதும். இதனால் ஹெலிகாப்டரின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு நேரடி பாதிப்புகள் ஏற்பட்டு, உயிர்ச்சேதம் நிகழ்வதற்கும் வாய்ப்புண்டு.

தரைப்போக்குவரத்து வாகனங்களில் விபத்தின் பாதிப்பை குறைக்க காற்றுப்பைகள் (Airbags) வைக்கப்பட்டிருக்கும். இதே, யோசனையில் ஹெலிகாப்டரின் அடிப்பகுதி தரையோடு மோதுவதால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, காற்றுப்பைகள் அமைக்கும் ஆராய்ச்சி முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கனினியில் ஒப்புருவாக்க (Simulation) முறையில் ஹெலிகாப்டரின் வடிவமைப்பு சோதிக்கப்பட்டாலும் நடைமுறை சோதனைகள் செய்யப்பட்டே அது உறுதி செய்யப்படுகிறது. பொறியியல் முயற்சிகளில் பாதுகாப்பு (Safety) மிக மிக முக்கியம். மனித உயிர் விலை மதிக்க முடியாதது.

இப்படி பல சோதனைகளைக் வெற்றிகரமாக கடந்த பிறகே, ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு வருகிறது. தேசிய தினங்களில் பூக்களை வீசும் ராணுவ ஹெலிகாப்டர், போரில் தோட்டாக்களை வீசுகிறது. இந்த இரண்டு செயல்களையும்  விஞ்ஞானிகள்-பொறியாளர்களின் இடைவிடாத சோதனைகளே சாத்தியமாக்குகின்றன.