
அறிவியலின் கதை -04
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
பண்டைய சீனா ஒரு பக்கம் அறிவியலில் முன்னேறிச் சென்றுகொண்டிருந்த அதே வேளையில் அன்றைய இந்தியத் துணை கண்டமும் பலவித அறிவியல் சிந்தனைகளை வளர்த்து வந்தது. அன்றைக்கு இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. வெவ்வேறு நிலப்பகுதிகளை வெவ்வேறு மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்கில் சித்த மருத்துவமும் வடக்கில் ஆயுர்வேதமும் அறிவியலாக உருவெடுத்தன.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் மனித உடலை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் சேர்ந்து உருவான பொருள் என்ற அடிப்படையில் அணுகியது. வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), கல்பம் (நீர்) என மூன்று வகை நீர்மங்கள் இருப்பதாகச் சித்த மருத்துவம் கூறியது. இவை தோஷங்கள் என அறியப்பட்டன. இந்த தோஷங்கள் உடலுக்குள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே உடல் சரியாக இயங்கும் என்றது. இந்த முன்று தோஷங்களில் எவை கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய் ஏற்படும். இதற்கு ஏற்றவாறு இயற்கையில் இருந்து கிடைத்த மூலிகைகள், உணவுகளைக் கொண்டு உடலைக் குணப்படுத்தும் மருத்துவ முறையாகச் சித்த மருத்துவம் இருந்தது.
உயிரின வகைப்பாடு
அதேபோல் பண்டைய தமிழ்ச் சிந்தனையில் நம் பூமியில் வாழும் உயிரினங்களையும் அறிவியல்பூர்வமாக வகைப்படுத்தும் சிந்தனை இருந்தது. இதனை ஆங்கிலத்தில் Classification என்று அழைக்கிறோம். தொல்காப்பியர் உயிர்களை ஆறாக வகைப்படுத்தினார். உடல், வாய், மூக்கு, கண், செவி என ஐம்புலன்களின் படி அந்த வகைப்பாடு அமைந்தது.
உயிரினங்களில் ஓர் அறிவு உடையது புல், மரம், செடி, கொடி ஆகிய தாவர இனங்கள் என்றார் தொல்காப்பியர். இவற்றுக்கு உடல் மட்டுமே அறிவு. இந்த உடலை வைத்து மட்டுமே அவை உலகை அறிகின்றன என்றார்.
அதேபோல நத்தை, மீன், சிப்பி போன்ற உயிரினங்கள் இரண்டு அறிவு உடைய ஜீவன்கள் என்றார். இவை உடலால் சுற்றுப்புறத்தை உணர்வதோடு, நாவாலும் சுவைத்து உணர்கின்றன என்றார்.
இதற்கு அடுத்து கரையான், எறும்பு போன்ற உயிரினங்கள் உடலாலும், நாவாலும், மூக்காலும் சுற்றுப்புறத்தை நுகரும் பண்பு உடையதால் இவை மூன்றறிவு உயிர்கள் என்றார்.
இதற்கு அடுத்து நண்டு, தும்பி, வண்டு ஆகியன உடல், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு பார்வைத் திறனாலும் சுற்றுப்புறத்தை உணர்வதால் இவற்றை நான்கு அறிவு உயிரினங்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து விலங்கினங்கள் அனைத்தும் ஐந்து அறிவு ஜீவன்கள் என்றார் தொல்காப்பியர். இவை உடலாலும், நாக்கு, மூக்கு, பார்வை ஆகியவற்றோடு கேட்கும் திறனையும் பெற்றுள்ளன.
இறுதியாக மனிதர்களை ஆறறிவு உடையவர்கள் என்கிறார் தொல்காப்பியர். ஐம்புலன்களின் அறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கிறது என்பதால் ஆறறிவு மனிதர்கள் என்றார்.
இன்றைய நவீன அறிவியலில் இந்த வகைப்பாட்டுடன் முரண்பாட்டைக் கொண்டிருந்தாலும் அன்றைக்கு இப்படி ஒரு வகைப்பாட்டுச் சிந்தனை இருந்ததே ஆச்சரியம் என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம், தமிழ் கூறும் இந்த வகைப்பிரித்தல் சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்றும், அதனை அவருக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நெறிப்படுத்தினர் என்பதாகவும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.