இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
விஞ்ஞானி ரா.அப்பாவுராஜ் –

இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

ராணுவ டாங்க் வாகனம் உள்ளிட்ட ஆயுதங்களைச் சோதிக்கும் ‘சான்று மற்றும் சோதனை அமைப்பு’ என்ற, ஒடிசாவில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகத்தின் இயக்குனராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி அப்பாவுராஜ் ராமசந்திரன்.

ஏவுகணைகளைச் சோதனைச் செய்யும் பணியில் அப்துல் கலாம் அவர்களின் தலைமையில் முக்கியப் பங்காற்றியவர்.

சென்னை, எம்.ஐ.டி யில் பட்டம் பெற்ற இவர், சென்னை ஐ,ஐ.டியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். டி.ஆர்.டி.ஓ நிறுவனத்திற்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘செப்டம்’ (CEPTAM) அமைப்பின் தலைவராகப் பணியாற்றியவர்.

ஒரு மாலையில் இணைய வழியில் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளை மீட்டினோம். அந்த உரையாடலில் இருந்து…

நீங்கள் அப்துல் கலாம் அவர்களை எப்போது முதலில் சந்தித்தீர்கள்?

அப்துல் கலாம், பத்மபூஷன் விருது பெற்றமைக்காக 1981 ஆம் ஆண்டில் அவர் படித்த சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்துல் கலாம் அதில் பங்கேற்றார். நான் அப்போது எம்.ஐ.டி யில் படித்துக் கொண்டிருந்தேன். அந்த விழாவில் அப்துல் கலாமின் பேராசிரியர் நரசிம்மன் பங்கேற்றுப் பேசினார். அவர், ‘அப்துல் கலாம் ஒரு சராசரி மாணவர். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவர். கல்லூரியில் அவர் ராக்கெட்டைப் பற்றி பேசியது கூட இல்லை. ஆனால், இன்று ராக்கெட் துறையில் சாதித்திருக்கிறார்’ என்றார். கலாம் அவர்கள் ஆர்வம் கொண்ட துறையில் தானே தேடி வாசித்து அறிவைப் பெருக்கி உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று எனக்குப் புரிந்தது.

ரோஹினி செயற்கைக்கோள் திட்டத்தில் தான் சந்தித்த சவால்களையும் அவற்றைக் கையாண்ட விதத்தையும் விளக்கினார் அப்துல் கலாம். அவரால் ஈர்க்கப்பட்டு அவரைப் போல விஞ்ஞானியாக வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். இது தான் அப்துகலாம் உடனான என் முதல் அனுபவம்.

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் விஞ்ஞானியாகி எப்படி உங்கள் கனவை அடைந்தீர்கள்?
எம்.ஐ.டி யில் விமானப்பொறியியல் படிப்பை முடித்த பின், சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் படிப்பில் சேர்ந்தேன். அங்கு நடைபெற்ற டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் வளாகத்தேர்வில் பங்கேற்றேன். அப்துல்கலாம் தேர்வுக்குழுவில் இருந்தார். நான் தேர்வாகவில்லை. எம்.டெக் படிப்பை சிறப்பாகப் படித்து முடியுங்கள் என்றார் கலாம்.

படிப்பை முடித்த பின்னர், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் இரண்டு நிறுவனங்களில் எனக்கு விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்று ஹைதராபாதில் உள்ள ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்’ (DRDL) மற்றொன்று ஆக்ராவிலுள்ள ‘வான் வழங்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (ADRDE).

ஆக்ராவில் எம்.டெக் படிப்பினால் அதிக சம்பளம், ஹைதராபதில் பி.ஈ படிப்பின் அடிப்படையில் சற்றுக் குறைவான சம்பளம் என்ற சூழலில், எனது பேராசிரியர், ‘பணத்தைப் பார்க்காதே, ஹைதராபாதில் ஏவுகணை ஆராய்ச்சியில் சேர்ந்தால் பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என அறிவுரை கூறினார். அதன்படியே செய்தேன்.

அப்போது, ஹைதராபாத் ஆய்வுக்கூடத்தின் இயக்குனராக இருந்தவர் அப்துல் கலாம். பணியில் சேர்ந்த முதல் நாளில் அவரை சந்தித்தேன். ஏவுகணைகளின் ஒப்புருவாக்கச் (Simulation) சோதனைப் பணியை எனக்களித்தார். ஒரு காகிதத்தில் ராக்கெட் தொடர்பான 5 புத்தகங்களின் பெயர்களை எழுதித்தந்து நேரம் கிடைக்கும் போது வாசிக்க அறிவுரை கூறினார். பிரித்வி ஏவுகணைத் திட்டத்தில் பணியாற்றத் துவங்கினேன். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஓயாமல் உழைத்தேன். கலாம் எங்கள் அனைவரையும் உழைக்க உற்சாகப்படுத்தினார்.