மூளை என்னும் முதல்வன்
திரு.A.மோகனராஜூ,சேலம்

நினைவுக்கூடத்தை அதாவது மனதைக் கூர்ந்து கவனித்து உள்ளதை உள்ள படியே புரிந்துகொள்வதுதான் தியானம் என்பது. ‘‘தியானமற்ற வாழ்க்கை வண்ண வண்ண ஒளியுள்ள உலகில் வாழும் குருடனின் வாழ்விற்கு ஒப்பானது’’ என்று
ஜெ. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.

தியான மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று ஒருவரைக்கேட்டேன், ‘‘அமைதியாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு எழும் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களுடன் போராடித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள், வெளியில் அமைதியும் உள்ளத்தில் புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. கண்களுக்குத் தெரியாத மனதுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று ஒரு நண்பர் சொன்னார்.

எனக்குத்தெரிந்து கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்கும்போது அடுத்தவர் நமக்குத் துன்பமும், நாம் அடுத்தவருக்கு துன்பமும் செய்ய முடியாது என்று தான் நான் சொல்வேன், இது போதாதா… ‘‘தியானம் என்பது மலர்கள், மலர்ந்து நறுமணத்தை வெளியிடுவதுபோல, சூரியன் காலையில் பொன்னிறக் கதிர்களுடன் உதயமாவதுபோல, கருமேகம் அடர்ந்து மழைப்பொழிவதுபோல, மாலையில் மெல்ல இருள் கவ்விச்சூழ்வதுபோலத் தானாக நிகழ்வது. வலுக்கட்டாயமாக உங்களால் நிகழ்த்திக்காட்ட முடியாத ஒன்று’’ என்று ஓர் அறிஞர் சொல்கிறார். இவ்வளவு குழப்பதிற்கும் இடையே தியானத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் ஒரு சில புத்தகங்களைப் படிக்கலாம் என்றால், தியானம் பற்றி மூன்று அற்புதமான புத்தகங்களை எழுதிய ஒருவர் மகான் ஓசோவைப் பார்த்து ‘‘ஐயா தியானம் என்றால் என்ன?’’ என்று கேட்டார்.

அதற்கு ஓசோ “நீங்கள் 3 புத்தகங்கள் தியானம்பற்றி எழுதி இருக்கின்றீர்கள், அதை நான் முழுவதுமாகப் படித்திருக்கிறேன், மிகவும் அற்புதமான புத்தகங்கள். ஆனால் நீங்கள் தியானம் என்றால் என்ன என்று என்னைக் கேட்பது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

செய்கின்ற வேலையைச் சரியாக முழு கவனத்துடன் அற்புதமாகச் செய்யும்போது அதுவே மிகப்பெரும் தியானம் ஆகிறது, வேறு எதுவும் தியானத்திற்கு நீங்கள் சிறப்பாகச் செய்யவேண்டியதில்லை என்று டைனமிக் தியானம் என்ற (Dynamic Meditation) கலையை உலகிற்குக் கற்றுக்கொடுத்த மகான் ஓஷோ சொன்னார். The Sleep is unconscious meditation and the Meditation is conscious sleep, என்றும், நீங்கள் நன்றாகத் தூங்கி எழுவதே மிகப்பெரும் தியானத்திற்கு ஒப்பானது, தூக்கமும் ஒரு சிறந்த தியானம்தான் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

60 – வயதிற்குப்பின் உடலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு மெலிந்துபோகிறது, அதனால் உறக்கக் குறைவு, பி.பி. சுகர் அதிகரிப்பு, ஞாபகக் குறைவு, உடல் சோர்வு ஆகிய நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. உடலில் நோய் ஆரம்பிக்கிறது. தியானம் உடலையும் மூளையையும் இணைக்கிறது. மூளை எண்ணங்களைக் குவித்துக்கொண்டிருப்பதை நிறுத்தி உடலைக் கவனிக்க வைக்கிறது ஆரோக்கியம் பெருகுகிறது.

‘‘எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், மனதில் எந்த ஒரு சலனமும் சஞ்சலமும் இல்லாமல் அமைதியில் இருப்பதே தியானம்’’ என்று ஓர் அறிஞர் சொன்னார். ‘‘உங்களை முழுவதுமாக மறக்கும் நேரம்தான் தியானத்திலேயே மிகச்சிறந்த தியான நேரம்’’ என்று ஒருவர் சொல்கிறார். மேற்சொன்ன ஏதாவது ஒன்றை நாம் செய்தால் நாமும் தியானம் செய்தவர்தான்.

இன்பமும், துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்வு. இரண்டையும், இன்பமாகவும் துன்பமாகவும் வகைப்படுத்தியதும் நாம்தான், அதைத்தேர்வு செய்வதும் நாம்தான். ஆனால் எப்படி நமக்கு வாழ்நாள் முழுவதும் துன்பமே நிகழ்கிறது. ஐந்து அறிவுப் பறவை, விலங்குகள் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் இருக்கும்போது, ஆறு அறிவு மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதும் துன்பக்கடலில் ஏன் தத்தளித்து, தவித்து மூழ்குகிறான். ஒரு விலங்கு துன்பத்தை உணர்கிறது, அடிபட்டு வலியில் துடிக்கிறது. விரைவில் நலமடைகிறது. அத்துடன் துன்பம் அதற்குத் தொலைந்து போகிறது. அதற்கு இறந்த காலம் எதிர் காலம் என்பது எப்போதும் இல்லை, நிகழ்காலத்தில் வளர்கின்றன வாழ்கின்றன, மரணம் என்றால் என்ன என்று அவைகளுக்குத் தெரியாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்வாய் இருக்கின்றன.

அதைப்பார்க்க மனிதர்கள் விலங்குத் தேசியப் பூங்காக்களுக்கும், பறவைகள் சரணாலயங்களுக்கும் கூட்டம் கூட்டமாகச் சென்று சளைக்காமல் பார்த்து மகிழ்கிறார்கள். மனிதர்களிடம் இல்லாதது பறவை விலங்குகளிடம் அப்படி என்ன இருக்கிறது. எந்தப்பறவைகளாவது விலங்குகளாவது கூட்டம் கூட்டமாக மனிதர்களைப் பார்க்க வருகிறதா?. மனிதனைக்கண்டாலே ஓடி ஒளிந்துக்கொள்கின்றன.

பணம் அல்லது விலை உயர்ந்த ஆபரணம் தொலைந்துவிட்டது. தேடிக்கிடைக்கவில்லை. என்ன செய்வது. அதை மறந்து அடுத்த வேலையில் ஈடுபடும் ஒருவன், தொலைந்துவிட்டதை நினைத்து நினைத்து அழுது புரண்டு வாழ்நாள் முழுவதும் வருந்தி வாழாமல் நிற்பவனைவிட பல மடங்கு மகிழ்வாகத்தான் இருக்கிறான்.

ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து புன்னகைக்கிறது, இரவில் உறங்கும்போதும், முகத்தில் புன்னகை பூக்கிறது, அதைப்பார்க்கும் அனைவரின் முகத்திலும் புன்னகைப்பட்டு மகிழ்வு வீடெங்கும் பிரதிபலிக்கிறது. குழந்தை வளர வளர மனித வாழ்வில் துன்பமும் வளர்கிறது, முதுமையில் மனித வாழ்வு முழுவதும் துன்பத்தில் மூழ்கிப்போகிறது. ‘‘மனிதனின் எல்லா வயதிலும் எல்லா இடங்களிலும், எல்லா நேரமும் துன்பம் கூடவே இருக்கிறது. இந்த உலகம் துன்பத்தால் சூழபட்டுத்தான் இருக்கிறது’’ என்ற உண்மையை புத்தர் மகான் சொல்லிச்சென்றார்.

‘‘மனிதன் கடின உழைப்பால் இறப்பதில்லை, அவன் மனச்சிதறலாலும் கவலைகளாலும்தான் இறக்கிறான்’’ (“Man don’t die from over work, he dies from dissipation and worries” said Charles Evans Hughes) என்று அமெரிக்காவின் தலைமை நீதிபதி சார்லஸ் இவான் ஹக்ஸ் சொல்கிறார். சரி இந்த நிலையில் எப்படித் தப்பிப்பது? மகிழ்வாய் இருப்பது, எங்கிருந்து மாற்றத்தைத் துவங்குவது, எப்படித் துவங்குவது.

ஒட்டுமொத்தமாக நம்பிக்கையை இழக்கின்ற சூழலிலும்கூட, அதிசயங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன, அப்படி அதிசயங்கள் தானாக நிகழாவிட்டாலும் அதை உங்களால் நிகழ்த்திக்காட்ட முடியும் என்கிறார், ஜெர்மானிய நாஜி வதை முகாமில் இருந்து தப்பிப்பிழைத்து உலகிலேயே மகிழ்ச்சியாக 100 வருடங்கள் வாழ்ந்த ஏ.டி. ஜேக்கூ.
உலகில் ஒவ்வொரு உயிரிக்கும் அமைதியும் ஓய்வும் தேவைப்படுகிறது, அதுதான் வாழ்வு.

உணவும் தண்ணீரும் உயிர் வாழ மிகவும் அவசியம் இது அளவிற்கு அதிகமாக இருந்தும் அமைதியும் ஓய்வும் இல்லாமல் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம். இந்த அமைதியும் ஓய்வும் ஒவ்வொரு உயிரிக்கும் கிடைக்க இயற்கை இரவையும் பகலையும் படைத்தது. மனிதன் மட்டும் இரவைப் பகலாக்கி, பகலை இரவாக்கி சாதனை படைத்தான். அதில் அமைதியையும் ஓய்வையும் தவற விட்டுவிட்டான். மின்சார பல்பைக்கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் முதல் குற்றவாளி ஆகிப்போனார். உடல் உறுப்புகளை ஓய்வாய் வைத்திருப்பது எப்படி என்று உங்களுக்குத்தெரியும், ஆனால் இடைவிடாது உழைக்கும் இதயம், நுரையீரல், மூளை இவைகளை அமைதியில் வைத்திருப்பது எப்படி என்று உங்களுக்குத்தெரியாது அல்லவா அதுதான் தியானம் செய்யும் வேலை.

இதயம் 4 வினாடி சுருங்கி, ஒரு வினாடி நிறுத்தி, 3 வினாடி விரிவடைகிறது. உடல் முழுதும் இரத்தத்தைப் பீச்சியடித்து எல்லாச் செல்களுக்கும் கொடுத்துவிட்டு, 3 வினாடி விரிவடையும் நேரம்தான் உண்மையில் இதயம் ஓய்வெடுக்கும், அமைதியில் இருக்கும் நேரம்.

நுரையீரல் இழுத்த காற்றில் இருக்கும் பிராணவாயுவை O2 எடுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்சைடுவை CO2 வெளியிட்டு மீண்டும் காற்று வரும்வரை காத்திருக்கும் நேரம்தான் நுரையீரல் உண்மையில் ஓய்வெடுக்கும், அமைதியில் இருக்கும் நேரம். மூளை இரவும் பகலும் எண்ணற்ற எண்ணங்களைச் சரமாரியாக உருவாக்கி வெளியிடுகிறது, எண்ணமற்ற நிலையில் வெற்று மனமாக, மூளையை வைத்திருக்கும் நேரம்தான் மூளை உண்மையில் ஓய்வெடுக்கும், அமைதியில் இருக்கும் நேரம். இந்த இதயம், நுரையீரல், மற்றும் மூளையின் செயலில் நாம் குறுக்கீடு செய்து கெடுக்காமல் பார்த்துக்கொள்ளும் முறைதான் தியானம் என்பது.