கலாமைக் கொண்டாடுவோம்
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து –
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

மூத்த அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்களின் அறிவியல் கட்டுரைகளை ‘அரும்பு’ மாத இதழில் மாணவப் பருவத்தில் வாசித்தது தான் அவருக்கும் எனக்குமான முதல் அறிமுகம். பின்னர் இராணுவ விஞ்ஞானியான பிறகு சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறேன். தொடர்ந்து எனது எழுத்துப் பயணத்தில் அவருடைய அணிந்துரைகள் வாழ்த்துரைகள் அறிவியல் நூல்களுக்கு அழகு சேர்த்தன.

ஒரு தொலைபேசி உரையாடலில், Cricketers, Actors & Politicians (CAP) இவர்களை எனது எழுத்துகளில் பயன்படுத்துவதில்லை என்றார். நானும் எனது பேனாவில் CAP இல்லாமல் தான் எழுதுகிறேன்.

அப்துல் கலாம் எழுதிய புத்தகங்கள், அவரைப் பற்றி பல மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் என ஏறக்குறைய 200 நூல்களை தனது வீட்டு நூலகத்தில் சேகரித்து வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்ட போது வியந்தேன். அவருடைய ‘கலாமின் அடிச்சுவடுகள்’ நூலை நான் ரசித்து வாசித்தேன்.

2021 – ஆம் ஆண்டு, லக்னோ நகரில் அலுவல் நிமித்தமான பயணத்தினிடையே ஒரு மாலையில் இணைய வழியில் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகளைப் பற்றி நெல்லை சு.முத்து அவர்களோடு கலந்துரையாடினேன். அதிலிருந்து…

அப்துல் கலாம் அவர்களை எப்போது முதலில் சந்தித்தீர்கள். எப்படி இருந்தது சந்திப்பு?
1963 -ல் அப்துல் கலாம் திருவனந்தபுரத்தில் விண்வெளி ஆய்வில் இணைந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் அதே விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். எஸ்.எல்.வி-3 ஏவுவூர்தியின் முதல் இரண்டு நிலைகளுக்கான ராக்கெட் எரிபொருள் தயாரிக்கும் பணிமனையின் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் நான் பணியாற்றி வந்தேன்.
எஸ்.எல்.வி-3 திட்டத்தின் இயக்குனரான அப்துல் கலாம், எங்கள் பணிமனைக்கு அவ்வப்போது வருவார். அப்போது தான் அவரை முதலில் சந்தித்தேன். பணிமனையின் எல்லா நிலையிலுள்ள ஊழியர்களிடமும் மிக சகஜமாக கலாம் பழகுவார். தரக்கட்டுப்பாட்டில் கடைநிலை ஊழியர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. ‘கீழிருந்து மேல்’ என்ற சித்தாந்தம் தரக்கட்டுப்பாட்டுத்துறையில் முக்கியம். அதை நன்கு உணர்ந்தவராக கலாம் இருந்தார்.
அப்துல் கலாம் இஸ்ரோவிலிருந்து டி.ஆர்.டி.ஓ நிறுவனத்துக்கு பணிமாறிய போதும் நீங்கள் அவரோடு தொடர்பில் இருந்தீர்கள். அதைப் பற்றி?

கலாம் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் இணைந்த பிறகும் அவரோடு எனது தொடர்பு நீடித்தது. புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை தவறாமல் அவருக்கு அனுப்புவேன். அவர் பதில் வாழ்த்து அனுப்புவார். டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் அவர் தலைமை வகித்த அக்னி ஏவுகணைச் சோதனை வெற்றி பெற்றது. அதன் பிறகு கலாம், விக்ரம் சாராபாய் ஆய்வு நிறுவனத்திற்கு வருகை புரிந்தார். நான் ஒரு வாழ்த்துக் கவிதையை எழுதிக் கொடுத்தேன்.

‘திக்கெல்லாம் புகழ் பரப்பி
சீறியெழும் பாரதத்தின்
அக்னி போல பாதுகாப்பு
அருங்கணைகள் செலுத்திக்காட்டி
அக்கறையாய் அயர வைத்த
அருணாசலம், அப்துல் கலாம், அகர்வால்
போன்றோர் வாழ்த்தி
அகமகிழ்வோம் திறமை போற்றி!’

பின்னர் ஒரு முறை ஏ.எஸ்.எல்.வி ஏவூர்தி திட்ட பரிசோதனைக் குழு உறுப்பினராக அவர் எங்கள் ஆய்வகம் வந்திருந்தார். ‘இந்திய தற்காப்பு ஏவுகணைகள்’ என்ற அக்னி ஏவுகணையைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை அவரிடம் கொடுத்தேன். ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்..’ என்ற பாரதியாரின் வரிகளோடு கட்டுரை தொடங்கியதை படித்து, ‘சபாஷ்’ என்று தோளில் தட்டி பாராட்டினார். அந்த 10 பக்க கட்டுரையை தன்னுடன் எடுத்துச் சென்று 2 இடங்களில் கைப்பட திருத்தம் செய்து பின்னர் எனக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.