வரலாறு பேசுவோம் – 7
– திரு.முகில்

வுண்டமணி ஒரு படத்தில் செந்திலைப் பார்த்து நக்கலாகச் சொல்லுவார், ‘ஆமா இவரு பெரிய ஜி.டி.நாயுடு… விஞ்ஞானி…’ என்று. யாராவது எதையாவது புத்திசாலித்தனமாக விளக்க முற்பட்டால் அவர்களைக் கேலி செய்ய அன்றைக்கு இப்படித்தான் சொன்னார்கள். ‘நீ என்ன பெரிய ஜி.டி.நாயுடுவா?’

சரி, யார் அந்த ஜி.டி.நாயுடு?

இன்றைய மாணவர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. எழுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்களிடம் கேட்டால், ‘சயிண்டிஸ்ட்’, ‘விஞ்ஞானி’, ‘நிறைய கண்டுபிடிச்சிருக்காரு’ என்றெல்லாம் பொதுவாகச் சொல்லுவார்கள். ஆனால், அந்தப் பதில்கள் எல்லாம் சரியானதல்ல அல்லது நிறைவானதல்ல. உண்மையில் ஜி.டி.நாயுடு யார்? அவரைப் பற்றி நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? அப்படி அவர் சமூகத்துக்கு என்ன செய்துவிட்டார்?
தெரிந்து கொள்வோம்.

கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் சுருக்கமே ஜி.டி.நாயுடு. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெயரோடு சாதியைச் சேர்த்துக் கொள்வது புழக்கத்தில் இருந்தது. ஜி.டி.நாயுடு என்ற பெயரில்தான் அவர் புகழ்பெற்றார். இன்றும் அறியப்படுகிறார் என்ற விளக்கத்தோடு கட்டுரையைத் தொடரலாம்.

1893, மார்ச் 23 அன்று கோவைக்கு அருகில் கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த துரைசாமி, திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டவில்லை. அதிகப்படியாகச் சேட்டை செய்யும் மாணவர். வாத்தியாருடன் ஒரு பிரச்சனை. மண்ணை அள்ளித் கண்ணில் தூவி ஓடி வந்து விட்டார். பின்பு பள்ளிக்குச் செல்லவில்லை. அவரது தந்தை கோபால்சாமி, தோட்டத்தைக் கவனிக்கும் பொறுப்பை துரைசாமியிடம் வழங்கினார். அங்கே ஓய்வு நேரத்தில் தமிழ்ப் புத்தகங்களைச் சேகரித்து வாசிப்பது துரைசாமியின் வழக்கமாகிப் போனது. புத்தக வாசிப்பே அவரது அறிவை வளர்த்தது. மேலும் புதிய புதிய விஷயங்களைத் தேடிக் கண்டடையச் செய்தது.

ஒருநாள் துரைசாமி மண் சாலையில் நடந்து செல்லும்போது காலில் புட்டி ஒன்று தட்டுப்பட்டது. ஊருக்கு வந்த ஆங்கிலேயே வருவாய் ஆய்வாளரிடம், புட்டியைக் காட்டி அது என்னவென்று விசாரித்தார். ‘அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பார்க் டேவிஸ் என்ற வலி நிவாரணி மருந்து. கை, கால் மூட்டு வலிகளுக்கானது’ என்று அவர் சொல்லவும், அதைத் தனக்கு வரவழைத்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். அப்படி வரவழைக்கப்பட்ட பார்க் டேவிஸ் மருந்தை, ஊரில் பலருக்கும் விற்று பணம் சம்பாதித்தார். லாபம் மட்டும் எண்ணூறு ரூபாய் கிடைத்தது. அதிகம் படிக்காவிட்டாலும் சிறுவயதிலேயே வணிக நுட்பம் புரிந்த ஆளாக துரைசாமி இருந்தார்.

லங்காஷயர் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒரு மோட்டார் சைக்கிளை வைத்திருந்தார். கலங்கல் கிராமம் வழியே அந்த மோட்டார் சைக்கிளில் அவ்வப்போது சென்றார். துரைசாமி தன் வாழ்க்கையில் கண்ட முதல் மோட்டார் சைக்கிள் அதுவே. அந்த வண்டியின் மீது அவருக்குக் காதல் பிறந்தது. எப்படியாவது அந்த வண்டியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார். லங்காஷயரிடம் சென்று மோட்டார் சைக்கிளை விலை பேசினார். அவர் சொன்ன தொகை துரைசாமியிடம் அப்போது இல்லை.

உடனே கோவைக்குக் கிளம்பினார் துரைசாமி. ஹோட்டல் ஒன்றில் சர்வராக சுமார் மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்தார். சம்பளம் போக கிடைக்கும் டிப்ஸை எல்லாம் உண்டியல்களில் கவனமாகச் சேகரித்தார். மோட்டார் சைக்கிள் வாங்குவதற்குத் தேவையான பணம் சேர்ந்ததும் லங்காஷயரைத் தேடி வந்து மோட்டார் சைக்கிளை வாங்கினார். அதைப் பெருமையுடன் ஓட்டிக் கொண்டு ஊர் சுற்றவில்லை. அதற்குப் பின் துரைசாமி செய்த காரியத்தைக் கண்டு எல்லோரும் திகைத்துப் போயினர்.

மோட்டார் சைக்கிளை அக்குவேறு, ஆணிவேறாகக் கழற்றிப் போட்டார். அதன் பாகங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்தார். மீண்டும் பழையபடியே மாட்டுவதற்கு முயற்சி செய்தார். மீண்டும் கழற்றினார். மாட்டினார். கழற்றினார். மாட்டினார். கழற்றினார். மாட்டினார். ராப்பகலாகத் தூங்காமல் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவரது நோக்கம், ஒரு மோட்டார் சைக்கிளில் என்னென்ன பாகங்கள் இருக்கின்றன, அவை எவ்விதம் இயங்குகின்றன என்று தெரிந்து கொள்வதே. இப்படி எந்திரங்கள் மீது தீராக்காதல் கொண்ட மனிதராக வளர்ந்தார் ஜி.டி.நாயுடு. (அவர் வாங்கிய அந்த முதல் மோட்டார் சைக்கிளை கோவையிலிருக்கும் ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் காணலாம்.)

பருத்தி விவசாயத்தில் நல்ல அனுபவம் கொண்டிருந்த ஜி.டி.நாயுடு, முதல் உலகப் போர் சமயத்தில் பருத்தித் துணிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று சாமர்த்தியமாகக் கணக்கிட்டார். சிங்காநல்லூரில் மில் ஒன்றைத் தொடங்கினார். தேவைக்கேற்ப உற்பத்தியைப் பெருக்கி அந்தக் காலத்திலேயே லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதித்தார். தனது பகுதியைச் சார்ந்த விவசாயிகள் பலரும் லாபம் பெற உதவினார். ஊரின் ஹீரோ ஆனார். எல்லோருக்கும் அடி சறுக்கும்தானே. பம்பாய்க்குச் சென்ற ஜி.டி.நாயுடு, அங்கே சிலரது வார்த்தைகளை நம்பி Cotton Gambling என்றழைக்கப்படும் பருத்தி சூதாட்டத்தில் தனது பணம் மொத்தத்தையும் இழந்தார். ஜீரோ!

ஆனால், ஜி.டி.நாயுடு நம்பிக்கையை இழக்கவில்லை. எல்லாவற்றையும் வாழ்க்கையின் பாடமாக எடுத்துக் கொண்டார். மீண்டும் பெரிய தொழிலபதிராக வளர இன்னும் ஏராளமான புதிய வாசல்கள் திறக்கும் என்று காத்திருந்தார். இனி ஒருமுறை குறுக்குவழி குறித்து யோசிக்கவே கூடாது என்பதிலும் உறுதியாக நின்றார். ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையில் அடுத்த மிக முக்கியமான திருப்பம் 1920-ஆம் ஆண்டில் நடந்தது. மோட்டார் வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலை மேற்கொண்டிருந்த ராபர்ட் ஸ்டேன்ஸைச் சந்திக்க ஜி.டி.நாயுடு சென்றார்.

ஸ்டேன்ஸுக்கு ஜி.டி.நாயுடுவின் அபாரமான திறமை மீது நம்பிக்கை இருந்தது. தன்னிடம் வேலை கேட்டு வந்து நின்ற ஜி.டி.நாயுடுவிடம், ‘நான் ஒரு பேருந்து தருகிறேன். அதை ஓட்டிச் சம்பாதித்து கடனை அடைத்துக் கொள்ளலாம்’ என்று உற்சாகமாகச் சொன்னார் ஸ்டேன்ஸ்.

ஜி.டி.நாயுடு, தன் முதல் பேருந்தை பொள்ளாச்சி – பழனி வழித்தடத்தில் ஓட்ட ஆரம்பித்தார். அவரே ஓட்டுநர், நடத்துநர், பேருந்தைச் சுத்தம் செய்பவர், மெக்கானிக், முதலாளி, கணக்கர் எல்லாம். இரவு பகல் பாராமல் பேருந்தை ஓட்டினார். பசிக்கு வாழைப்பழங்களை மட்டும் உண்டு சமாளித்தார். கடனை அடைக்க வேண்டுமென்பதற்காக மிகக் கடுமையாக உழைத்து, ஸ்டேன்ஸிடம் பணத்தைக் கொடுத்து முதலாளியாக நிமிர்ந்து உட்கார்ந்தார். பின்பு ஒரு பேருந்து, பல பேருந்துகளாகப் பெருகியது.

தன்னைப்போலவே எல்லா ஓட்டுநர்களும் பொறுப்போடு இருக்க வேண்டுமென அவர்களுக்கு வகுப்பெடுத்தார் ஜி.டி.நாயுடு. ‘வேகமாகச் செல்வது முக்கியமல்ல. விவேகத்துடன் ஓட்டுவதே முக்கியம். எதிரில் வண்டி வருகிறதா, ஒரு வளைவு வருகிறதா, சற்று முன்பாகவே வேகத்தைக் குறைத்துவிட வேண்டும். நாம் செல்லும் பாதையில் இருக்கும் குண்டு, குழிகள் எல்லாம் நமக்கு மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நம் பேருந்தில் ஏறும் ஒவ்வொரு பயணியும் நம்மை நம்பி அவர்களது உயிர்களை ஒப்படைக்கிறார்கள்.’

இப்படி ஓட்டுநர்களும் நடத்துநர்களும் ஒழுங்காக பேருந்தை இயக்குகிறார்களா என்று கண்டுபிடிக்க, ஜி.டி.நாயுடுவே அவ்வப்போது மாறுவேடத்தில் பயணி போலச் சென்று கண்காணிக்கவும் செய்தார். அவரது நிறுவனப் பேருந்துகளில் மக்கள் நம்பிக்கையுடன் ஏறினர். ஓர் ஊரில் குறிப்பிட்ட இடத்தை ஜி.டி.நாயுடு நிறுவனத்தின் பேருந்து கடக்கிறதென்றால், மணி என்னவென்று கடிகாரத்தைப் பார்க்காமலே மக்கள் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால் அவ்வளவு கச்சிதமாக நேரத்தை மேலாண்மை செய்தார்கள்.

‘பேருந்து பயணிகளால் நிறையாவிட்டாலும், ஒரு சில பயணிகளே பேருந்தில் ஏறியிருந்தாலும், ஒன்பது மணிக்குக் கிளம்ப வேண்டுமென்றால் ஒரு நிமிடம்கூட தாமதிக்கக்கூடாது. நமக்கு வருமானத்தைவிட, நம்மை நம்பி ஏறிய பயணிகளை சரியான சமயத்தில் கொண்டு போய் விடுவதே முக்கியம்’ என்பது ஜி.டி.நாயுடு கடைபிடித்த விதியாக இருந்தது.

வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே பேருந்துகள் எப்படி இயங்குகின்றன, பேருந்து நிலையங்கள் எவ்விதம் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் பார்த்துவிட்டு வந்து இங்கே அதே நிர்வாக விஷயங்களை அமல்படுத்தினார் ஜி.டி.நாயுடு. முதன் முதலில் இந்தியாவில் டிக்கெட் அச்சிட்டுத் தரும் எந்திரத்தைப் பேருந்தில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். உயர்தரமான பேருந்து நிலையங்களையும் கட்டினார்.