என் பார்வையில் பிரிட்டன் 07
– பேராசிரியர் வெ. இன்சுவை

வாட்டர்லூ இரயில் நிலையம் இலண்டனின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும். 1848 – இல் திறக்கப்பட்டது. ஏன் இந்த இரயில் நிலையத்திற்கு `வாட்டர்லூ’ என்று பெயர் வைத்தார்கள் தெரியுமா? வாட்டர்லூ என்ற இடத்தில், 1815 ஜூன் மாதம் 18ஆம் தேதி ஞாயிறன்று ஒரு போர் நடந்தது. வாட்டர்லூ என்ற இடம் பெல்ஜியத்தில் உள்ளது. ஆங்கிலேயர் படைகளும், பெர்சியப் படைகளும் இணைந்து நெப்போலியன் தலைமையேற்ற பிரெஞ்சுப் படை மீது தொடுத்த போர். ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கி அன்று மாலையே முடிந்துவிட்டது. நெப்போலியனின் தோல்வியில் முடிந்தது.
வாட்டர்லூ தோல்விக்குப் பிறகு, நெப்போலியனால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அவர் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா என்ற தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேயே 1821 – இல் அவர் காலமானார். இந்த வரலாற்று நிகழ்வு பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக விக்டர் ஹியூகோ (Victor Hugo) தனது புகழ்பெற்ற ‘லேஸ் மிசரபிள்’ (Les Miserables) நாவலி. இந்தப் போர் குறித்து, மிக விரிவாக எழுதியிருப்பார்.
இங்கிலாந்து பெற்ற வெற்றியின் அடையாளமாக இந்த இரயில் நிலையம் `வாட்டர்லூ’ என்று பெயர் பெற்றது. பள்ளியில் இந்தப் போர் பற்றிப் படித்ததும், தேர்வில் ஐந்து மதிப்பெண் கேள்வியாக வந்து விடை எழுதியதும் நினைவுக்கு வர, கொஞ்சம் சிலிர்த்துப் போனேன்.
இரயில் நிலையத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து போனேன். இங்கே 21 நடைமேடைகள் உள்ளன. இது தெற்கு இலண்டனை இணைக்கிறது. மக்களும் உடன் நாய்களும் போய்க் கொண்டே இருக்கிறார்கள். நிறைய பேர் காபி அல்லது கோக் குடித்துக் கொண்டே நடக்கிறார்கள். இதை ஏன் நான் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், கீழே எங்கும் கோக் பாட்டிலோ, காபி டம்ளரோ கிடக்கவில்லை. குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுகிறார்கள். எங்கும் சுத்தம் ஆட்சி செய்கிறது.
வெளியே வந்தோம். அங்கிருந்து நியூ ேஹம் என்ற இடத்துக்கு வாடகைக் காரில் பயணமானோம். முன்பதிவு செய்திருந்த ஒரு வீட்டின் அறையில் தங்கினோம். அந்த அறை வசதியாக இருந்தது. வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த இட்லிகளைச் சாப்பிட்டு விட்டு உறங்கப் போனோம். “நான் இலண்டனிலா?” நினைக்க, நினைக்க சொல்லத் தெரியாத மகிழ்ச்சிப் பரவசம் உள்ளமெங்கும்.
காலையில் எழுந்து கீழே உள்ள பொது சமையலறைக்குச் சென்றேன். சகல வசதிகளுடன் இருந்தது. சர்க்கரை, காபித்தூள், டீ பைகள், பால் பாத்திரம், தேநீர் கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், ஸ்பூன்கள் எல்லாம் இருந்தன. மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டில் மூன்று குடும்பங்கள் தங்கியிருந்தோம். மூன்று குடும்பங்களுக்கும் அந்த சமையலறை பொதுவானது. குளிர்சாதனப் பெட்டி, சுடும் கலன் (Oven) கூட இருந்தது. குளிர்சாதனப் பெட்டியை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார்கள். அலமாரிகள் மூன்று பேருக்கும் தனித்தனியாக உள்ளது. உலர் சலவை இயந்திரம், சுடுதண்ணீர் வைக்கும் சாதனம், உணவு மேசை – இப்படி எல்லாம் கச்சிதமாக இருந்தது.
நாங்கள் ரைஸ் குக்கர் எடுத்துப் போனதால் சாதம் ரெடியாகிவிட்டது. தாளிப்பு சாமான்களை எடுத்துப் போயிருந்தோம். ஆனால் எலுமிச்சை சாதம் செய்ய மஞ்சள் தூளைக் கோட்டைவிட்டுவிட்டோம். நம்ம ஊர் என்றால் உடனே போய் 100 கிராம் மஞ்சள் தூள் வாங்கி வந்துவிடலாம். அங்கு? ஆக அன்று வெள்ளை நிற எலுமிச்சை சாதம். நம் ஆட்களுக்குக் கலர் முக்கியம். கேசரிப் பவுடர் போடாமல் செய்யும் கேசரி வெள்ளையாக இருந்தால், ஏதோ உப்புமா சாப்பிடுவது போல உள்ளே போகத் தயங்குகிறது. கலர் கொஞ்சம் தூக்கலாக இருக்க, தனி மிளகாய்த் தூளோடு, கொஞ்சம் காஷ்மீரி மிளகாய் தூள் போடும் ரகம் நாம். கல்யாணச் சந்தையில் மட்டுமல்ல, அனைத்திலும் கலர் பார்ப்போம். சப்பாத்தியை சூடு பண்ணி சாப்பிட்டுவிட்டு, மதியத்திற்கு தயிர் சாதமும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அக்காலத்திலிருந்து இன்றுவரை நமக்குக் கட்டுச்சாதம்தான் கைகொடுக்கிறது. ஒரே வித்தியாசம், பாக்கு மட்டைக்குப் பதிலாக நெகிழிக் கலன்கள்.
அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குப் போய், எண்.262 (Metro) பேருந்தில் ஏறி வாட்டர்லூ ஸ்டேஷன் வந்து, அங்கிருந்து ஸ்ட்ராப் போர்டு ஸ்டேஷன் வந்து அங்கிருந்து டியூப் மூலம் இலண்டன் ஐ (London Eye) வந்தடைந்தோம்.