
மூளை என்னும் முதல்வன் – 28
– திரு.A.மோகனராஜூ
நான் எழுதி வைக்கும்வரை எனக்கு என்ன நினைக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது.” (Joan Didion said “I don”t know what I think until I write it down”) என்று ஜான் டிடியன் சொல்கிறார். “உங்கள் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் உங்கள் வாழ்வில் நடக்கும்” என்பார்கள், உண்மையில் உங்கள் தலைக்குள் மூளையில் எவ்வளவு எழுத்துக்களை உருவாக்கி உபயோகிக்கிறீர்களோ அந்த அளவு உங்கள் வாழ்வில் புகழும் மதிப்பும் உயரும். உங்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா என்று கேட்கும் கேள்விக்கு இந்தியாவில் 2026 – ல் கூட 20 சதம் தெரியாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
பத்து இளைஞர்களை அழைத்து ஒவ்வொருவரும் வாழ்க்கைக்குத் தேவையான 10 விசயங்களை எழுதச் சொன்னார்கள். ஒவ்வொரு இளைஞனும் பத்து தேவைகளை பணம், பதவி, என்று ஆரம்பித்து சொத்து, சுகம், வீடு, நிலம் என்று வரிசையாக எழுதினார்கள். ஒருவரும் தேவையான பட்டியலில் “அறிவு” என்பதை எழுதவே இல்லை.
உலகில் உயிரினங்கள் தோன்றின, நான்கு கால்கள் உள்ள உயிர்கள் தோன்றின, உலகின்மீது ஓடி விளையாடி மகிழ்ந்தன. பறவைகள் தன் முன்னங்கால்களை இறக்கைகள் ஆக்கி வானில் பறந்து கானம் பாடின. மனிதன் பிறந்தான், இரண்டு கால்களில் எழுந்து நின்றான், தன் முன்னங்கால்களை கைகள் ஆக்கி எழுதத்தொடங்கினான் சித்திரம் தீட்டினான். அந்த எழுதும் பண்புதான் மனித மூளை வளர்ச்சியின் முதல் அடியும், முடிவான அடியுமாக விளங்குகிறது.
நாம் எழுதும்போது ஃப்ரெண்டல் கோர்டெக்ஸ் (Frontal Cortex) என்ற (Thoughts and Idea centre) என்ற எண்ணங்களை, ஆலோசனைகளை நன்மை தீமைகளை அலசிப்பார்க்கும் தர்க்கரீதியான உணர்வுகளை உருவாக்கும் மூளைப் பகுதியையும், அமிக்டலா (Amygdala) என்ற (Emotional centre of the brain) கோபம், பயம், இன்பம் மற்றும் துன்பம் போன்ற மூளையின் உணர்வுப் பகுதியையும் இணைக்கும் வேலை நடக்கிறது. அப்படி இணையும்போது கிணற்று நீர் வயலுக்கு வந்து பயிர் செழித்து வளர்ந்து மலர்விடுவதுபோல, எண்ணங்கள் மூளையில் உருவாகி கை விரல்கள் வழியே வெள்ளைக் காகிதத்தில் எழுத்துக்களாக வார்த்தைகளாக, நல்லகருத்துக்களாக வார்த்தெடுக்கப்படுகிறது. அந்தக்கருத்துகளை மீண்டும் படிக்கும்போது நீங்கள் உங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்கிறீர்கள். (Developing self-talk).
ஸ்டன்ஃபோர்டு ஆய்வு நிறுவனம் (Stand ford research park) என்ன சொல்கிறது என்றால் மூளையின் ஃப்ரெண்டல் கோர்டெக்ஸ், அமிக்டலா இரண்டும் ஒரே திசையில், ஒரே பாதையில் பயணிப்பதால் மூளையில் அமைதியும், அறிவு விரிவாக்கமும் நடைபெறுகிறது என்று சொல்கிறது. தட்டச்சில் டைப் செய்வதைக்காட்டிலும் கை விரல்களால் எழுதுவது என்பது மேற்கண்ட இணைப்பை ஆழமாக்குகிறது, இது நம் எண்ணங்களை நாமே ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தகுதியான உணர்வுகளைத் தருணம் பார்த்து, அமைதியாக வெளிப்படுத்தவும் முடிகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எழுதுவது என்பது நம் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பதுபோல. அப்படி வடிகால் அமைக்காதபோது எழுந்த கோபமும் குழப்பமும், அடிதடி, கைகலப்பு, மருத்துவமனை, காவல் நிலையம், போய் நிற்கிறது. வாழ்வை நரகம் ஆக்குகிறது. சிந்திக்காமல் சீறிப்பாயும் கோபம் விலங்கிடம் இருந்து வந்தது. சிக்கலானது, அதைச் சிந்தனை அறிவுடன் இணக்கும்போது சிக்கல்களுக்கு எளிமையான தீர்வு கிடைக்கிறது.
கோபமாக, பயமாக, வெறுப்பாக, துக்கமாக உயர்ந்து எழும் எண்ணங்களை எழுத்துக்களாக மாற்றி வெள்ளைக் காகிதத்தில், வார்த்தைகளாகக் கொட்டும்போது, எழுதும்போது அற்புதம் நிகழ்கிறது.
“எனக்கு சொற்களை மிகவும் பிடிக்கும், அறியப்படாத ஏதோ ஒரு உலகில் இருந்து அவைகள் தோன்றுகின்றன. இந்த பிரபஞ்சம் அணுக்களால் ஆனதல்ல, சொற்களால்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்று இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஸ்பெயின் நாட்டு கவிஞர் பாப்லோ நெரூதா கூறினார்.
எழுதுகோள் கொண்டு கையால் எழுதும்போது சரியான தீர்வு நம் கைக்குக் கிடைக்கிறது. அதனைத் தொடர்ந்து மூளையில் அமைதியும், மகிழ்வும் நிகழ்கிறது. இதனை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்கள் (Expressive Writing) என்று டாக்டர் பென்னிபேக்கர் (Dr. James Pennebaker) சொல்கிறார். நீங்கள் எழுதும் செய்தி நன்றிக்குத் தொடர்புடையதாய் இருந்தால் மூளை முழுதும் ஆனந்தம் நிலவுகிறது, அதனால் உங்கள் நரம்பு மண்டலம் முழுதும் சம நிலை அடைகிறது. எழுதுவது பொதுநலம் தொடர்புடையதாய் இருந்தால் நீண்ட நாட்கள் நினைவில் வைப்பதும் இடர்பாடுகளுக்கு இடையே மாற்றுவழி கண்டறிவது போன்ற திறன்களும் உங்கள் மூளைக்குக் கிடைக்கிறது.
தொடர்ந்து ஒரு புத்தகத்தைப் புரட்டும்போது அதன் எழுத்துக்கள் மௌன மொழியில் மென்மையாகப் பேசுவதை உங்களால் கேட்க முடியும். புத்தகம் அற்புதமாகப் பேசும் திறன் கொண்டது. எழுத்துக்கள் குறுக்குமறுக்குமாக கிறுக்கப்படும் துண்டுக்கோடுகள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஏமார்ந்து தான் போவீர்கள். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் கலை, இலக்கிய வாழ்வியல் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் திறன் கொண்டது. எழுத்துக்கள் உயிரோட்டமுள்ள குறியீடுகள். இன்று எழுதும் சிறந்த எழுத்துக்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குபின் பிறக்கும் மனிதர்களின் உணர்வுகளுடன் கலந்து பரவசமூட்டி மகிழ்விக்கும் திறன் கொண்டது.
தஸ்த்தவேஸ்கி சொல்கிறார் “மகிழ்ச்சி என்ற ஒன்றை என் வாழ்நாளில் என்றுமே நான் உணர்ந்தது இல்லை” என்று. காரணம் வாழ் நாள் முழுவதும் பஞ்சம், பட்டினி, கடுமையான உழைப்பு, ரோடு போடும் வேலையில் மாடாய் உழைத்தார், பல நாட்கள் சிறையில் அரசியல் கைதியாய் அடிவாங்கி மெலிந்துபோனார். வாழ் நாள் முழுதும் போராட்டம், துன்பம், உழைப்பு, தண்டனை என்றால் மனதில் எழும் கோபம், துன்பம், வெறுப்பு, பயம் இந்த உணர்வுகளை ஒரு மனிதனால் எங்கே போய்க் கொட்டுவது?. வடிகால் வேண்டாமா?. எல்லாவற்றையும் புத்தகங்களில் கொட்டினார். 43 அற்புதமான புத்தகங்களை எழுதினார். உலக மொழிகள் அனைத்திலும் அந்தப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு படித்துப் பாராட்டுக்களை குவித்தன.
அவர் எழுதிய புத்தகங்களைப் படித்ததால் நவீன உளவியல் தந்தை சிமண்ட் ஃப்ராய்டு “உளவியல் பகுப்பாய்வை” உருவாக்கினார். தஸ்த்தவேஸ்கியின் எழுத்துக்கள், இந்த உலகில் பிரச்சனை இல்லாத வாழ்க்கை என்ற ஒன்று எங்குமே இல்லை அதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதுதான் உண்மையான வாழ்க்கை என்று நமக்குப் புலப்படுத்துகின்றன.
நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்பது ஒரு சில மணிக்குப்பின் மறந்துபோகும், ஆனால் அதை எழுதிவிட்டால் என்றைக்கும் மறக்க வாய்ப்பே இல்லை. மனிதனின் விரல்கள், எழுதும்போது, இசைகேற்ற நடனம் ஆடுவதுபோல மூளையின் எண்ணங்ளுக்கு ஏற்ற எழுத்துக்களை விரல்கள் அற்புதமாக உருவாக்குகிறது. மூளையின் அனைத்து உணர்வுகளுக்கும் மிக எளிமையாக, மென்மையாக வடிகால் அமைத்துக் கொடுக்கின்றன.
நீங்கள் பார்க்கும்போது உங்கள் கண்களுக்கு மரம், மலர், மான், மனிதன் ஒரு பறவை தெரிகிறது. அது ஒரு விலங்கின் கண்களுக்குத்தெரியும் காட்சிதான். ஒரு புத்தகத்தைப் பார்க்கிறீர்கள். அதுவும் ஒரு விலங்கின் கண்களுக்குத் தெரியும் காட்சிதான். ஆனால் புத்தகத்தைத் திறக்கும்போது அதன் பக்கங்களைப் புரட்டும்போது உங்களுக்கு அறிவுலகம் திறந்துகொள்கிறது. அது ஒரு பறவை, விலங்கின் கண்களுக்குத் தெரிவதில்லை. கனவு காணும்வரை அது கனவு என்பது உங்களுக்குத்தெரியாது, கனவு கலையும்போது நமது உலகம் உங்களுக்கு நினைவு திரும்பும். அதேபோல அறிவுலகில் இருக்கும்வரை பூமி உலகம் நமக்குத் தெரியாது, புத்தகத்தைப் படித்து முடிக்கும்போதுதான். பூமி உலகம் நமக்குத் தெரியும். இந்த உலகில் உள்ள துன்பமும் துயரமும் தொடர்ந்து நினைவிற்கு வரும்.
எழுத்துக்களின் வடிவம், அறிவுலகம் மனிதனுக்குக் கிடைத்த தனிச்சிறப்பு. அது சாக்ரெடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், வள்ளுவர் போன்ற அறிஞர்களால் கட்டமைக்கப்பட்டது.
தற்போதைய டேட்டா உலகில் விடியோ கேம், யூடியூப், ஷொர்ட், நெட்ஃப்லிக், என்று ஆயிரம் ஆயிரம் சேனல்கள் தொடர்ந்து உங்கள் கவனத்தை சிதைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் நுழைந்த மனிதனுக்கு இந்த உலகில் உண்ணவும் உறங்கவும் யோசிக்கவும் நேரம் கிடைப்பதில்லை. மிகப்பெரும் தவிப்புக்குள்ளாகிறான். இந்த செல்போன் காட்சிகள் மின்னல் வேகத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. எதைப் பார்ப்பது, எதைப் பார்க்காமல் விடுவது என்று தீர்மானிக்கு முன்பே ஆயிரம் காட்சிகள் தோன்றி மறைந்துபோகின்றன.
மனித மூளை சிறப்புத்தன்மை கொண்டது.அது மிகக்கடினமான சிக்கலான அமைப்பைத் தன்னகத்தே கொண்டிருப்பதன் காரணம் அது எழுத்துக்களை அறிந்துகொள்கிறது, ஒன்று சேர்த்து, வார்த்தையாக்கி அதன் பொருளைப் புரிந்துகொள்கிறது. கருத்துக்களை ஒன்று சேர்த்து தொகுத்து அதில் சிந்திக்கிறது, கண்களுக்குத் தெரியாத கடினமானப் பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறது. புதுமைகளை உலகில் படைத்துக்காட்டுகிறது. நீங்கள் அறிவுலகில் பயணிக்கும்போது, படிக்கும்போது, எழுதும்போது உங்கள் மூளைச்செல்களில் அறிவின் விரிவாக்கம் நிகழ்கிறது. மூளையில் டொபோமின் என்ற இன்ப ஹார்மோன் சுரக்கிறது. அப்போது மூளைச் செல்களில் பழுதுபார்ப்பும், கழிவு நீக்கமும், புதிய செல்கள் உருவாக்கமும் நடைபெறுகிறது. நீங்கள் புதிய உணர்வுகளுடன் புதிய மனிதராய் மீண்டும் பிறக்கின்றீர்கள். புதிய சிந்தனைகள் மூளையில் வளர்த்தெடுகின்றீர்கள்