வழிகாட்டும் ஆளுமை – 19
திரு. நந்தகுமார் IRS
சிறு வயது முதலே நாம் தனியாக இருப்பதில்லை. நண்பர்களுடனேயே தான் நாம் நமது சிறுவயதைக் கழித்திருப்போம். அவ்வாறு சக மாணவர்களுடனான பழக்கவழக்கம் முக்கியமான ஒரு தேவையாக இப்போது உள்ளது. பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு படிக்கின்ற போது, பிள்ளைகளிடம் “அவன் பாரு நல்லா படிச்சு முதல் மார்க் வாங்கிடுவான். சயின்ஸ் குரூப் எடுத்துருவான். நீ குறைவான மார்க் எடுத்து காமர்ஸ் குரூப் தான் எடுக்க போகிறாய்” என்று வழக்கமாக கூறுவார்கள். உடனே சக மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். முதல் குரூப் எடுக்கவில்லை என்றால் நம்மை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்ற செயற்கையான முடிவுக்கு வருகிறார்கள். ஃபர்ஸ்ட் குரூப் எடுத்தால் தான் சிறப்பானது என்றும், மூன்றாவது அல்லது நான்காவது குரூப் எடுத்தால் கேவலம் என்பது போல ஒரு தவறான, செயற்கையான மனோபாவத்தை நம் அனைவருக்குள்ளும் விதைத்து விடுகிறார்கள். அதற்காகவே நம் மாணவர்கள் நன்றாகப் படித்து முதல் குரூப் எடுக்க வேண்டும் என்று நன்றாகப் படிக்கிறார்கள்.
பெற்றோர்கள், குழந்தைகளிடம் இந்த குரூப் எடுத்தால் தான், உயர்ந்த இடத்திற்கு செல்லலாம், இந்த வேலைகளுக்கு செல்லலாம் என்று சொல்லிக் கொடுப்பதில்லை. மாறாக, அவன் நல்லா படிக்கிறான், அவன் அந்த குரூப் எடுத்திடுவான், இவன் நல்லா படிக்கிறான், இவன் இந்த குரூப் எடுத்திடுவான் என்று தவறாகப் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இதேபோன்று தான் அலுவலகங்களிலும் தவறாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். என் மகன் இந்தப் படிப்பை படிக்கிறான், என் மகள் இந்த படிப்பு இந்த கல்லூரியில் படிக்கிறாள் என்று பகிர்ந்து கொள்வார்கள்.
இவ்வாறு பகிர்வதனால், ஒப்பிடும்போது சக மாணவர்களுடனான போட்டி, பொறாமைகள் அதிகரிக்கின்றன. பெற்றோர்கள் இவ்வாறு சக மாணவர்களுடன் தம் பிள்ளைகளை ஒப்பிடுகையில் கொஞ்சம் கவனம் தேவை. சில நேரங்களில் நம் பிள்ளைகளை இது பாதிக்கக்கூடும். நான் பள்ளியை விட்டு நின்றபோது என்னை அரவணைக்க, என்னை வழிநடத்த எந்த ஒரு சக மாணவர்களும், நண்பர்களும் அப்போது இல்லை.
இப்போது இருக்கக்கூடிய மாணவர்கள், தம் பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பதை விட, சக மாணவர்கள் எந்தெந்த முடிவுகளை எடுக்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் இவர்களும் முடிவெடுக்கிறார்கள். அதுதான் அவர்களை வழியும் நடத்துகிறது.
உங்கள் பிள்ளைகள் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கிறார்களா? கவலை வேண்டாம். உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்கின்ற மாணவர்களோடு நன்கு பழகச் சொல்லுங்கள். சக மாணவர்களுடன் அமர்ந்து கற்க சொல்லுங்கள். ஆனால், நன்கு படிக்கின்ற பிள்ளைகளுக்கு சில அகங்காரம் இருக்கும். நன்றாக படிக்காத பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் நாமும் இவனைப் போல் ஆகிவிடுவோமோ என்று நினைப்பார்கள். ஆசிரியர்களும் நன்றாக படிக்காத மாணவர்களுடன், நன்கு படிக்கின்ற மாணவர்களை இணைத்துப் படிக்க வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். இருவருக்கும் ஒரு பாலமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு செய்கின்றபோது நிச்சயமாக நன்றாக படிக்காத மாணவர்கள் தம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொண்டு படிக்க ஆரம்பிப்பார்கள்.
உங்கள் பிள்ளைகள் சிறப்பாகப் படிக்கவில்லையா? கவலை வேண்டாம், நன்றாகப் படிக்கின்ற பிள்ளைகளோடு சேர்த்து விடுங்கள். அதை விட்டுவிட்டு சக மாணவர்களுடன் ஒப்பிடாதீர்கள். இதுபோன்ற தேவையில்லாத ஒப்பீடுகள் மாணவர்களைத் தவறாக வழி நடத்தும்.
அதேபோல நன்றாகப் படிக்கின்ற மாணவர்கள் அவ்வப்போது தோல்விகளையும் ருசிக்க வேண்டும். ஏதேனும் ஓரிடத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டால், அதைத் துணிச்சலுடன் சந்திக்க வேண்டும். நாம் ஏன் நன்றாக படிக்கிறோம்? என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டும். சமூகம் உங்களைப் படிப்பாளியாக உருவாக்க விரும்புவதில்லை, மாறாக உங்களை அறிவாளியாக்க விரும்புகிறது.
நானும் என் இளமைக் காலத்தில் சக மாணவர்களுடன் அமர்ந்து படித்திருந்தால் இன்னும் நன்றாக படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஒரு பையன் நன்றாக படிக்கவில்லை என்று சொன்னால் அவனுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா, வீட்டில் ஏதேனும் பிரச்சனையா, புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்கிறதா என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆராய வேண்டும். பிள்ளைகள் ஒழுங்காக படிக்கவில்லை என்றுதான் கூறுகிறார்களே தவிர, ‘‘ஏன் படிக்கவில்லை?’’ என்ற காரணத்தை கண்டுபிடிப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நண்பர்களுடன் பேசுங்கள். தேர்வு நேரங்களில் சக மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து தயார் செய்வதற்கான சூழலை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளின் சக நண்பர்களுடன் ஏன் இவ்வாறு அவன் நடந்து கொள்கிறான்? ஏன் சரியாக படிக்க முடிவதில்லை? என்பது பற்றிப் பேசுங்கள். இவ்வாறு கேட்டால் நிச்சயமாக தங்கள் பிள்ளைகளைப் பற்றி இன்னும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.
“உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று நான் சொல்கிறேன்” என்ற வரிகளுக்கு ஏற்ப உங்களின் பிள்ளைகளை சக மாணவர்களுடன் நன்கு பழக விட வேண்டும். நிச்சயமாக இவ்வாறு இருக்கின்ற போது உங்களின் ஆசைகளும் நிறைவேறும், உங்கள் பிள்ளைகளின் ஆசைகளும் நிறைவேறும். ஆசிரியர்களும் ஒரு மாணவன் சரியாக படிக்கவில்லை என்றால், அவருடைய நண்பர்களை பாருங்கள். ஏன் படிக்கவில்லை என்ற காரணம் உங்களுக்கு புரியும். தனிமரம் தோப்பாகாது. எனவே, பிள்ளைகளை சக மாணவர்களுடன் நன்றாகப் பழக விடுங்கள். நிச்சயமாக அது அவர்களை உயர்ந்த இடத்தில் அமர வைக்கும். வாழ்த்துகள். =