அறிவியலின் கதை – 02

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

பாபிலோனியர்களின் அறிவியல்

ண்டைய காலத்தில் மனித சமூகம் முழுவதுமே அறிவுத் தேடலைத் தொடங்கி இருந்தாலும் பாபிலோனியர்களின் அறிவியல் நோக்கிய பயணமே நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது. காரணம், அவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருந்தனர். விவசாயத்தின் வருகையால் பொருளாதாரம் உயர நேர்கையில், பாபிலோனியர்கள் அந்த ஆண்டில் நடைபெற்ற அறுவடைகள், சேகரிப்புகள், நிதி, பொருளாதாரம் எல்லாவற்றையும் கவனமாக ஆவணப்படுத்தினார்கள். விவசாயம் பரவலானவுடன் தினசரி வேட்டையாடும் வேலை இல்லாமல் போனது. உழைக்கும் நேரம் குறைந்தது. ஓய்வு நேரம் அதிகரித்தது. பாபிலோனிய சமூகத்தின் பூசாரிகள், ஓய்வு நேரங்களை தம்மைச் சுற்றி இருக்கும் உலகை அறியச் செலவிட்டனர். அவர்கள்தான் முதன்முதலில் நிலங்களை அளந்தனர். தொலைவுகளைக் கணக்கிட்டனர். வானை உற்றுநோக்கினர். பொருட்களை எண்ணுவதற்கு கணக்குகளை உருவாக்கினர். அவற்றில் சில கண்டுபிடிப்புகளை நாம் இன்னமும் பயன்படுத்துகிறோம்.

உதாரணமாக பாபிலோனியர்கள்தான் முதன் முதலில் பொருட்களை கணக்கிடக் கோடுகளை வரைந்தார்கள். ஐந்து ஆடுகள் இருக்கிறது என்றால் ஒவ்வொன்றாகக் கோடுகளை வரைவார்கள். நான்கு கோடுகள் முடிந்தவுடன் ஐந்தாவது கோடாக அதனை குறுக்காய் அடித்துவிடுவார்கள். இதுபோன்ற சித்திரத்தை நாம் இன்றைய கார்டூன்களில் பார்த்திருப்போம்.

இதைவிட முக்கியமாக பண்டைய பாபிலோனியர்கள்தான் நேர கணக்கிட்டின் ஆரம்பகால முன்னோடிகள். ஒரு நிமிடத்தில் அறுபது நொடிகள் இருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் இருக்கின்றன. ஒரு வட்டம் வரைந்தால் அதற்கு 360 டிகிரி கோணம் உண்டு. ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பதை எல்லாம் வரையறுத்தது பாபிலோனியர்கள்தான்.
அதற்காக இவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. பாபிலோனிய நாகரீகம் உலகில் எங்கெல்லாம் தொடர்பு வைத்திருந்ததோ அங்கிருந்து எல்லாம் பெற்ற அறிவின் அடிப்படையில்தான் இந்தச் சிந்தனை உருவாகி இருக்கிறது. மேலும் பாபிலோனியர்களுக்கு முன்னமே வாழ்ந்த சுமேரியர்கள்தான் நேரக்கணக்கை உருவாக்கினார்கள் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. ஆனாலும் அதை முறைப்படுத்தி, பதிவு செய்து, பரவலான சிந்தனை முறையாக மாற்றியது பாபிலோனியர்கள்தான்.

யோசித்துப் பார்த்தால் ஏன் அறுபது நொடிகளை ஒரு நிமிடம் என்று சொல்ல வேண்டும் என்றோ, ஏழு நாட்களை ஏன் ஒரு வாரம் என வரையறுக்க வேண்டும் என்றோ நமக்குத் தெரியாது. ஆனால் பாபிலோனியர்கள் அதை முறையான அமைப்பாக வடிவமைத்தாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வானியல் – ஜோதிடம்

பாபிலோனியர்கள் வானியலிலும் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் வானத்தில் சொர்க்கம் இருப்பதாக நம்பி, அதை ஆராயத் தொடங்கினார்கள். இப்படிப் பல நூறு ஆண்டுகளாக மேற்கொண்ட அவதானிப்புகள் இரவு வானத்தில் நட்சத்திரங்களும் கோள்களும் எந்த இடத்தில் இருக்கின்றன என்கிற நிலையை உணர்த்தியது. அவர்கள் பூமிதான் எல்லாவற்றுக்கும் மையம் என்று நம்பினார்கள். நமக்கும் நட்சத்திரங்களும் இடையில் ஏதோ சக்திவாய்ந்த தொடர்பு இருப்பதாகக் கருதினர்.

பூமியே அண்டத்தின் மையம் எனக் கருதியதால் அவர்கள் பூமியை ஒரு கோளாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரவு வானத்தை பன்னிரண்டு மண்டலங்களாகப் பிரித்தனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பெயர் கொடுத்தனர். அம்மண்டலத்தில் தினசரித் தோன்றும் நட்சத்திரங்களை எல்லாம் தொடர்புபடுத்தி அவற்றை பொருட்களாகவும் விலங்குகளாகவும் கற்பனை செய்தனர். இப்படித்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் மேஷம், ரிஷபம், கடகம் என்பது போன்ற ஜோதிடச் சின்னங்கள் (Zodiac Signs) முதன் முதலில் உருவாகின. இதுதான் முதல் வானியல் ஆய்வும்கூட.

பண்டைய பாபிலோனியத்திலும் சரி, பிற பகுதிகளிலும் ஜோதிடமும் வானியலும் இணைந்தே இருந்தன. இன்றைக்கும்கூட ஜோதிடத்தை அறிவியலாகப் பலர் நம்புகின்றனர். இதற்கு அடிப்படை பண்டைய காலத்தில் இருந்தே தொடங்குகிறது என்பதுதான் உண்மை. இன்றைக்கும் ஒரு குழந்தை பிறந்தால் எந்த நட்சத்திரம், என்ன ராசி என்பதெல்லாம் ஆராய்கிறோம். தினசரிச் செய்தித்தாள்களில் நட்சத்திரத்தைப் பொறுத்து அன்றைய தினம் எப்படி இருக்கப்போகிறது எனத் தெரிந்துகொள்கிறோம். நட்சத்திரங்களின் இயக்கமும், கோள்களின் இயக்கமும்தான் மனித விதியை தீர்மானிக்கின்றன என நம்புகின்றோம். ஆனால் ஜோதிடம் என்பது அறிவியல் கிடையாது என்பது பின்னர் நிரூபணமாகிவிட்டது.

எகிப்திய நாகரிகம்

அதற்காக பாபிலோனியர்கள் மட்டுமே அறிவியல் ஆய்வுகளைச் செய்யவில்லை. மத்தியக் கிழக்கிலேயே பல்வேறு நாகரீகங்கள் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தன. இதில் முக்கியமான நாகரிகம் எகிப்தியர்களுடையது. எகிப்தில் பாயும் நைல் நதியை ஒட்டியே அவர்களுடைய நாகரீகம் அமைந்திருந்தது. வரலாற்றில் ஒரே ஒரு இயற்கை அம்சத்தை சார்ந்து இருந்த நாகரீகம் அதற்கு முன்னும் இருந்தது இல்லை. அதற்குப் பின்னும் இல்லை.
நைல் நதிதான் எகிப்தின் வாழ்வாதாநரம். ஒவ்வொரு ஆண்டும் அந்நதியில் வெள்ளம் வரும்போது எல்லாம் சத்து மிகுந்த வண்டல் மணலை கரையில் கொண்டு வந்து சேர்த்துவிடும். இதனை அந்த வருடம் முழுவதும் பயிர் செய்வதற்கு எகிப்தியர்கள் பயன்படுத்திக்கொள்வர். எகிப்திலும் விவசாயம் செழித்ததும் அவர்கள் கலைகளில், ஆய்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர். விளைவாக, அவர்கள் உருவாக்கிய முக்கிய அம்சம், சித்திர எழுத்துக்கள் (Hieroglyphics).

இந்தச் சித்திர எழுத்துக்களில்தான் அவர்கள் வரலாறு, புராணம், அறிவியல், கலை அவ்வளவும் பதிவு செய்யப்பட்டன. எகிப்தை பின்னாட்களில் கிரேக்கமும் ரோமும் கைப்பற்றியதில் சித்திர எழுத்துக்களை எழுதுவதும் படிப்பதும் வழக்கொழிந்துபோனது. 2000 ஆண்டுகளாக அவர்கள் எழுதி வைத்த தகவல்கள் அனைத்தும் யாருக்கும் அர்த்தம் தெரியாமல் இருந்தது. 1798 – ஆம் ஆண்டு பிரெஞ்சு படை எகிப்தின் வடக்குப் பகுதியில் ரொசெட்டா எனும் இடத்தில் கற்பலகை ஒன்றை சிதிலங்களுக்கு இடையே கண்டுபிடித்தது. அதில் உள்ள தகவல்கள் சித்திர எழுத்துக்கள், கிரேக்கம், எகிப்தின் பழமையான எழுத்துவடிவமான டிமோட்டிக்ஸ் (Demotics) ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தன.

இந்த ரொசாட்டா பலகைதான் நமக்கு சித்திர எழுத்துக்களையும், அதன் மூலம் பண்டைய எகிப்தையும் புரிந்துகொள்ள வழிவகுத்துக் கொடுத்தது.

எகிப்தும் அறிவியலும்

எகிப்தியர்களும் பாபிலோனியர்களைப்போலவே வானியலை ஆய்வு செய்தனர். ஆனால் எகிப்தியர்களுக்கு மரணத்திற்குப் பின்னால் வாழ்க்கை என்ற நம்பிக்கை இருந்தது. இதற்கு நட்சத்திரங்களை அவர்கள் தெரிந்துகொள்வது அவசியமானது. இந்தக்காலகட்டத்தில்தான் நாட்காட்டிகள் (Calendar) உருவாகின. நாட்காட்டிகளை வைத்து அவர்கள் நைல் நதியில் எப்போது வெள்ளம் வரும் எனக் குறித்தனர். அந்தக் கணக்கை வைத்து எப்போது பயிர் செய்யலாம் என முடிவெடுத்தனர். எகிப்திய நாட்காட்டிகள் மதம் சம்பந்தமான விழாக்களையும் திட்டமிட உதவின. எகிப்தியர்களின் ஆண்டு என்பது 360 நாட்களைக் கொண்டது. மொத்தம் 12 மாதங்கள். ஒவ்வொரு மாதத்துக்கும் மூன்று வாரங்கள். ஒவ்வொரு வாரமும் பத்து நாட்கள். இப்படி பார்த்தால் ஐந்து நாட்கள் கூடுதலாக இருக்கும் இல்லையா? அவற்றை விஷேஷ நாட்களாகக் கருதி தெய்வங்களுக்குப் பண்டிகைகள் எடுத்துக் கொண்டாடினர் எகிப்தியர்கள்.