
ஆளப் பிறந்தோம்
திரு.இள.தினேஷ் பகத்
என் சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.
2026 – ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் 05 ஆண்டுக்கான பதவிக்கே மிகக் கடுமையாக சூறாவளியாக சுழன்று வீதி வீதியாகச் சென்று வாக்கினைச் சேகரித்து வருகின்றனர். 05 ஆண்டுகளுக்கான பதவிக்கே எவ்வளவு சிரத்தை மேற்கொள்ளும் போது 60 வயது வரை அரசுப் பணிகளில் அமர நினைக்கும் நீங்கள் எவ்வளவு உழைப்பினை மேற்கொள்ள வேண்டும் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நாம் ஆசைப்பட்ட அரசுப் பணி கிடைத்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்! இதற்கு ஒரு வழி சொல்கிறார் திருவள்ளுவர். இந்தக் குறளில்.
‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியார் ஆகப் பெறின்’’.
மனமும் உடலும் செயலும் உறுதியாகச் செயல்பட்டால் எண்ணியதை எண்ணியபடியே அடையலாம். இளைஞர்களே நீங்கள் அனைவரும் அரசுப் பணியில் அமர வாழ்த்துகிறேன்.
தற்போது துரந்தர்-2 என்ற திரைப்படம் வெளியாகி வசூலில் குறிப்பிட்ட மைல் கல்லைப் பிடித்து சாதனை செய்துள்ளது. இத்திரைப்படத்திற்கு நிறை/குறையான பல விமர்சனங்கள் வெளிவந்தவாறே உள்ளது. பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டுமே பருகும் அன்னப்பறவையாக நாம் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.
நமது தேசப் பாதுகாப்பிற்கு தன்னுடைய சுகபோகங்களைத் துறந்து அன்னிய நாட்டில் உயிருக்கு உத்தரவாதிமின்றி உளவு செய்துவரும் அனைத்து உளவாளிகளுக்கும் நன்றிகள் பல. ஜய்ஹிந்த்.
மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள் விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களில் ஒன்றாகும். இராணுவம், கிளர்ச்சி (ம) தீவிரவாதம் உட்பட உள்நாட்டு அச்சுறுத்தல்களை நீக்குதல், சமூக ஒற்றுமையை உண்டாக்குதல், பாதுகாத்தல், உறுதி செய்தல், சட்டத்தை அமலாக்கி தகுந்த நேரத்தில் நீதியைக் காத்தல், மனித உரிமையை நிலைநிறுத்துதல், இயற்கை (ம) மனிதப் பேரழிவுகளால் உண்டான இழப்புகளைச் சீர்செய்தல் ஆகிய முக்கியப் பணிகளைச் செய்கிறது. இப்பணிகளைச் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இந்திய உளவுத்துறை (IB), தேசியப் புலனாய்வு முகமை (NIA), தேசியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பன்நோக்கு முகமை மையம், தேசியப் புலனாய்வுக் கட்டமைப்பு, கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை செயல்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளில் சிறப்பு வாய்ந்த நமது நாட்டின் உளவுத் துறையில் உதவி மத்திய உளவுத் துறை அதிகாரி (Assistant Central Intelligence, Officer-II) பணிக்கான தேர்வு பற்றி இந்த இதழில் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக வேடம் அணிந்து பல எதிரித் தாக்குதல்களை முன்கூட்டியே தெரிவித்து முறியடிக்க உதவியாக இருந்த தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் கதையினைப் பார்ப்போம்.
உத்தராகண்ட் மாநிலம் பவுரி கர்வால் அருகே கிரி என்ற மணிக்கிராமத்தில் கடந்த 1945-ஆம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்தார். 1968ஆம் ஆண்டில் IPS அதிகாரியானார். 1971ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் பணியாற்றிய போது தலச்சேரியில் நடைபெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்தி நாடு முழுவதும் பிரபலமடைந்தார். 1972 – ஆம் ஆண்டில் இந்திய உளவுத் துறையில் அஜித் தோவல் இணைந்தார். மிசோரமில் செயல்பட்ட தீவிரவாத குழுக்கள் குறித்த தகவல்களைத் திரட்ட அவர் அனுப்பப்பட்டார்.
இவரது தீவிர முயற்சியால் 1986 – ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து தகவல்களைக் கொண்டுவர அந்த நாட்டுக்கு அஜித் தோவல் அனுப்பப்பட்டார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே கஹீதா என்ற பகுதியில் உள்ள கான் ஆராய்ச்சி மையத்தில் பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டப் பணிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியது. அங்கு பிச்சைக்காரராக வேடமிட்டு வேவு பார்த்து வந்தார். அருகிலுள்ள கடையில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் முடிதிருத்தம் செய்தனர். அந்த சலூன் கடைக்குச் சென்று முடிகளைச் சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த முடிகளை ஆய்வு செய்த போது யுரேனியம் உள்ளிட்ட கதிர்வீச்சு இருந்தது தெரிய வந்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.