வரலாறு பேசுவோம் – 6
– திரு.முகில்

ந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குயின் விக்டோரியா உடைய மூத்த மகனும், அப்போதையே வேல்ஸ் இளவரசருமான ஆல்பர்ட் எட்வர்ட், 1875-ம் ஆண்டில் இந்தியச் சுற்றுப் பயணத்துக்குத் திட்டமிட்டார். சுமார் எட்டு மாதங்கள் பயணம். இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிரஜையாக, அதிகாரம் வாய்ந்த இளவரசராகத் தன்னைக் காட்டிக் கொள்வதுதான் நோக்கம்.

1875, அக்டோபர் 11 – அன்று ஆல்பர்ட் எட்வர்ட் லண்டனிலிருந்து HMS Serapis என்ற பிரத்யேக சொகுசுக் கப்பலில் ஏறினார். 50 பேர் கொண்ட குழுவுடன் நவம்பர் 8 – அன்று பம்பாயில் கரை இறங்கினார். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்…’ – ரக வரவேற்புகளில் அகமகிழ்ந்தார். இளவரசரின் பயணக்குறிப்புகளை எல்லாம் எழுதுவதற்காகவே வில்லியம் ஹாவர்ட் ரஸ்ஸெல் என்பவரும், அதை எல்லாம் ஓவியமாகத் தீட்ட சிட்னி ஹால் என்பவரும் பயணக்குழுவில் இருந்தனர்.

நவம்பர் 13 – அன்று, பம்பாயின் பெரேல் என்னுமிடத்திலிருந்து தானா ரயில் நிலையத்துக்கு இளவரசரின் முதல் இந்திய ரயில் பயணம் நிகழ்ந்தது. அந்தச் சிறப்பு ரயிலில் பயணம் செய்யவிருந்தவர்களது பெயர்ப்பட்டியல் அவரவர் தகுதிகளோடு ஒட்டப்பட்டிருந்தது. இந்தியாவின் ரயில் வரலாற்றில் பயணிகளின் பெயர்ப்பட்டியல் ஒட்டப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

தானாவிலிருந்து புனே. அங்கே அலுவல் சந்திப்புகள். சுற்றிப் பார்த்தல். கோயில்களுக்குச் செல்லுதல். மகாராஜாக்களைச் சந்தித்தல் என்று நிகழ்ச்சி நிரல்களை முடித்துக் கொண்டு மீண்டும் பம்பாய்க்கு வந்தார். அங்கிருந்து பரோடா ரயில் பயணம். ஆசை தீர வேட்டை. மீண்டும் பம்பாய். துறைமுகத்தில் தனது சொகுசுக் கப்பலில் ஏறி மேற்குக் கரையில் பயணம். முதலில் கோவா. அடுத்து கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள பேப்பூர். அங்கிருந்து சிலோன் பயணம். திகட்டத் திகட்டச் சுற்றுலா. யானை வேட்டை ஆடி, எம்மாம்பெரிய விலங்கை வீழ்த்திவிட்டேன் பார்த்தாயா என்று மவுசைக் காட்டிக் கொண்டார். சிலோனில் இருந்து மீண்டும் கப்பல் ஏறி, தென்னிந்தியாவை நோக்கிப் பயணம் செய்தார் வேல்ஸ் இளவரசர். அவர் வந்து இறங்கிய இடம் தூத்துக்குடி. அங்கிருந்து மெட்ராஸ் நோக்கிய ரயில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
1875, டிசம்பர் 9.

மாலை நான்கு மணிபோல செராபிஸ் கப்பலில் இருந்து பார்க்கும்போது தூத்துக்குடியின் கரையில் பனைமரங்கள் வேல்ஸ் இளவரசரை வரவேற்பதுபோல் காற்றில் அசைந்தாடின. இரவு முழுக்க நடுக்கடலிலேயே செராபிஸ் கப்பல் நின்று கொண்டிருந்தது.
டிசம்பர் 10.
அதிகாலையில் மூன்று படகுகள் கப்பலை நோக்கிச் சென்றன. வேல்ஸ் இளவரசர் தூத்துக்குடியில் கரையிறங்கினார். சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகளும் ஜமீன்தார்களும் இளவரசரை வரவேற்றார்கள். மரியாதை செய்தார்கள். இளவரசரது சாமான் செட்டுகளைக் கப்பலில் இருந்து இறக்குவதற்குத் தாமதமாகிக் கொண்டிருந்தது. துறைமுகத்தை ஒட்டித்தான் தூத்துக்குடி ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து முதல் ரயில் வேல்ஸ் இளவரசரைச் சுமந்து கொண்டு ஓடத் தயாராக இருந்தது.

இளவரசர், ரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். உள்ளூர் மக்கள் பெருமளவில் கூடியிருந்தார்கள். சுற்று வட்டாரங்களில் இருந்து வண்டி கட்டி வந்திருந்தார்கள். அவர்கள் அன்றைக்கு இரண்டு விஷயங்களை முதன் முதலாக ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ‘வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் ராசா இவர்தானாம்!’ என்று வேல்ஸ் இளவரசரையும், ‘இந்த சக்கரம் வைச்ச இரும்பு பெட்டில ஏறித்தான் பெரிய துரை பிரயாணம் போகப் போறாராம்!’ என்று ரயிலையும் வாய்பிளந்து ரசித்தார்கள்.

ரயில் நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக் கொண்ட இளவரசர், தென் இந்திய ரயில்வேயின் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். தனக்காக பிரத்யேகமாகப் பொருத்தப்பட்டிருந்த, சகல வசதிகளும் நிறைந்த சொகுசு ரயில் பெட்டியில் (Royal Saloon Coach) ஏறினார். அப்போதைய எட்டயபுரம் ஜமீன்தாரான ஜகவீர ராமகுமார எட்டப்பன்

நாயக்கர் இளவரசருடன் பயணம் செய்ய அனுமதி வாங்கியிருந்தார்.
ரயில் பெருஞ்சத்தத்துடன் கிளம்பியது. கூடியிருந்தவர்கள் அனைவரும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்துக் குதித்தனர். கைகளைத் தட்டி மகிழ்ந்தனர். அந்த பேரொலியானது ரயில் எஞ்ஜினின் சத்தத்தை விஞ்சியது. ‘இப்படித்தான் லண்டன் தியேட்டரில் ரசிகர்கள் நாடகத்துக்கு கைதட்டுவார்கள்’ என்று நினைத்துக் கொண்டார் இளவரசர்.

பருத்திக் காடுகளையும், பசுமையான நெல் வயல்களையும், திரட்சியான கரும்புத்தோட்டங்களையும் கடந்து சென்றது ரயில். தங்கள் நாட்டில் காணக்கிடைக்காத காட்சிகளை வியந்து பார்த்துக் கொண்டே சென்றார் இளவரசர். ‘தமிழ் நிலம் என்று அழைக்கப்படும் இங்கே தேனாறும் பாலாறும் ஓடவில்லை என்றாலும் மக்கள் கனிவான மனப்பான்மையுடன் இனிமையானவர்களாகத் தெரிகிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டார். ஆம், அப்போதே உப்பு உற்பத்தியின் மூலமாக தமிழ் நிலம் வருடத்துக்கு 2 மில்லியன் ரூபாய் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

மணியாச்சி ரயில் நிலையத்தை அடைந்தார்கள். கிறித்துவ சமயப்பரப்பாளரும், தமிழ் மொழியில் புலமை பெற்றவருமான ராபர்ட் கால்டுவெல், இளவரசரை வரவேற்கக் காத்திருந்தார். கிறித்துவ மிஷனரிகள் மூலமாகக் கல்வி கற்கும் சுமார் ஆயிரம் தமிழ் மாணவர்களும் மாணவிகளும் அங்கே குழுமியிருக்க, ரயில் பெட்டியிலிருந்து உற்சாகமாகக் கையசைத்தபடியே இறங்கினார் இளவரசர். ராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலி திருச்சபை சார்பாக வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைய நகைகள் அணிந்த தமிழ்ப் பெண்ணொருத்தி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளை இளவரசருக்குப் பரிசாக வழங்கினாள்.

வாத்தியங்கள் முழங்க அங்கே கூடியிருந்த குழந்தைகள் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தமிழில் சேர்ந்து பாட ஆரம்பித்தனர். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பாடலின் பொருளை இளவரசருக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். அதிர்ந்து ஒலித்த பாடலின் முடிவில் இளவரசர் நெகிழ்ந்து நின்றார். இளவரசரது கைகளால் மாங்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அந்தப் பெருங்கூட்டத்திடமிருந்து விடை பெற்றுக் கிளம்பினார். ஆரவாரத்துடன் கையசைத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் எட்டயபுரம் ஜமீன்தாரின் ஏற்பாட்டில் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகல் 12.20-க்கு ரயில் கோவில்பட்டியை வந்தடைந்தது. அங்கும் பெருங்கூட்டம். மாலை மரியாதை, நினைவுப்பரிசுகளை ஏற்றுக் கொண்ட இளவரசர், அங்கே போடப்பட்டிருந்த பந்தலில் சற்றே இளைப்பாறினார். விருந்து பரிமாறப்பட்டது. எது எது என்னென்ன உணவு என்று கேட்டுத் தெரிந்து கொண்ட இளவரசர், பசியாறினார். மீண்டும் ரயில் ஏறினார். அதற்குப் பிறகு ரயில் எங்கும் நிற்கவில்லை. உண்ட களைப்பும், மகிழ்ச்சியால் கட்டுண்ட களைப்பும் தீர இளவரசர் தன் சொகுசுப் பெட்டியில் நீட்டி நிமிர்ந்து ஓய்வெடுத்தார். மாலை 5 மணிக்குச் சற்று முன்பாக ரயில் மதுரையை நெருங்கியது. வழியெங்கும் தோரணங்களால் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருப்பதைக் கண்டார். மதுரை ரயில் நிலையத்தில் எட்வர்ட் இறங்கினார்.

‘மெஜெஸ்டி, தங்களின் அருளால் தூத்துக்குடி முதல் மதுரை வரை இன்று இந்தப் புதிய ரயில் பாதை இயங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த ரயிலை இழுத்துவந்த அந்தப் பெருமைக்குரிய என்ஜினுக்குத் தாங்கள் பெயர் சூட்ட வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டார்கள். நதி, கப்பல்போல ரயில் என்ஜின்களும் பெண்பாலாகவே கருதப்பட்டன. ‘அலெக்சாண்ட்ரா’ என்றார் இளவரசர். என்ஜினின் காதருகே சென்று மூன்று முறை சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
மதுரை வீதிகளில் இளவரசரின் ராஜ ஊர்வலம் ஆரம்பமானது. தெருக்களெங்கும் விழாக்கோலம். பல இடங்களில் வரவேற்பு வாசகங்களுடன் அலங்கார வளைவுகள். சுமார் ஒரு மணி நேர ஊர்வலத்துக்குப் பிறகு தெப்பக்குளத்துக்கு அருகில் இளவரசர் தங்குவதற்கான பங்களாவை வந்தடைந்தார்.

டிசம்பர் 11. வேல்ஸ் இளவரசர் மதுரையைச் சுற்றிப் பார்க்கக் காலையில் நேரத்துடனேயே கிளம்பினார். முதல் இடம், 1636-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட திருமலை நாயக்கர் மஹால். பிரமாண்ட தூண்களில், கலைவேலைப்பாடுகளில் லயித்தார். அடுத்து மீனாட்சி அம்மன் கோயில்.

வாசலிலேயே பூசாரிகளின் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க நடனப் பெண்களின் நளினமான வரவேற்பு. கமகமக்கும் மலர்களை நாலாபுறமிருந்தும் இளவரசர் மீது பொழிந்து கொண்டே இருந்தார்கள். கோயில் பிரகாரங்களும், வேலைப்பாடுகள் நிறைந்த அமைப்பும், பெரிய பெரிய சிற்பங்களும் இளவரசருக்கும் உடன் வந்தோருக்கும் தீரா ஆச்சரியங்களைக் கொடுத்தன. இளவரசரது இந்தியப் பயணக் குறிப்புகளைத் தொகுத்துள்ள ஜார்ஜ் வீலர், மீனாட்சி அம்மன் கோயில் அனுபவங்களை இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

‘985 சிற்பங்கள் கொண்ட மண்டபம், உயரமான தூண்களுடன் நீளும் பாதை, பெரிய நுழைவாயில்கள், பயமுறுத்தும் அசுரனின் சிலைகள், ஏராளமானோர் வழிபடும் தொப்பையுடைய கடவுள், அச்சமூட்டும் பெரிய கண்களைக் கொண்ட கல் முகங்கள், சகிக்க முடியாத நாற்றம், தடுமாறும் பூசாரிகள், மர்மமான இருள், இத்தனைக்கு மத்தியில் மீனாட்சி தெய்வம். இளவரசருக்கும் மற்றவர்களுக்கும் சில நொடிகள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அது விசித்திரமானதாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், ஆழ்ந்த மனச்சோர்வை நீக்கும் தரிசனமாகவும் இருந்தது.’