நீ என்னவாகப் போகிறாய்..?
– 1 கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மு.முருகேஷ்

ஒரு நொடி கூட ஓய்வேயில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது பூமி; வீசிக்கொண்டேயிருக்கிறது காற்று; கரையேறி வந்து கால் நனைத்துப் போகின்றன அலைகள்; எப்போதும் முன்னோக்கியே ஓடிக்கொண்டிருக்கின்றன காலச்சக்கரத்தின் கால்கள். ஒருபோதும் காலத்திற்கு ஓய்வென்பதே கிடையாது.
கணந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகில், “மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only constant)” என்று கிரேக்க தத்துவஞானி ஹெராக்ளிடஸ் சொன்னது மட்டுமே இன்னமும் மாறாமலிக்கிறது.
“இயற்கை என்றும் மாறாதது. ஆனால், மனித சமூகமானது மாறிக்கொண்டேயிருக்கிறது. உற்பத்தி முறைகள் மற்றும் சமூக உறவுகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில்தான் மனித வரலாறு காலந்தோறும் மாறி வருகிறது” என்றுரைத்த மாமேதைகளான காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கருத்தையே அறிவியல் ஆய்வுகளும் உண்மையென்று ஏற்றுக்கொண்டுள்ளன.
“எது நடந்தாலும், நடக்காம போனாலும் நான் எப்பவுமே இப்படித்தான்…” என்று யாராவது சொன்னால், அது முழு உண்மையல்ல; அதிலிருப்பது ஒரு பகுதி உண்மைதான். ‘காலமாற்றத்தோடு சேர்ந்தே தான், தானும் மாறி வருகிறேன்’ என்கிற மறுபாதி உண்மையை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். மாற்றத்தின் திசைவழியே பயணிப்பதால்தான் மனித குலம், மேலும் வளர்ச்சி என்கிற உயரத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
‘நேற்றின் வரலாறு தெரியாமல் போனால்
இன்று என்ன செய்வதென்று புரியாமல் போகும்;
இன்று என்ன செய்வதென்று புரியாமல் போனால்
நாளை என்பது நம் கையில் இல்லை.’
இக்கூற்றானது காலத்தின் சங்கிலித் தொடர்ச்சியில் சரியென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தன் மண்ணின் வரலாற்றையும், முன்னோடிகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டுமென்பதை எவராலும் மறுக்கவியலாது.
நேற்று நாம் என்னவாக இருந்தோம், இன்று என்னவாக இருக்கிறோம், நாளை என்னவாகப் போகிறோம் என்பதான கேள்விகள், ஒவ்வொரு தனிமனிதனும் சுயசிந்தனையுடன் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய அடிப்படையான கேள்விகளாகும்.
‘கேள்வியெழாத இடங்களில் பதிலுக்கு வேலையில்லை; கேள்வியெழாமல் எந்தப் பதிலும் முழுமையடைவதில்லை’ என்பார்கள்.
ஆரம்பக் கல்வி பயில்கிற பள்ளி மாணவர் தொடங்கி, கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் வரை எவரிடத்தில் கீழுள்ள கேள்வியைக் கேட்டாலும், தெளிவான – உறுதியான குரலில் பதில் வருவதில்லை. நிறைய குழப்பத்தோடும், கொஞ்சம் அச்சத்தோடும் தயங்கித் தயங்கித்தான் இக்கேள்விக்கான பதிலைச் சொல்லவே முன்வருகிறார்கள். இதிலும் விதிவிலக்காக ஓரிருவரே துணிந்து, சிந்தித்து, தெளிவான பதிலைச் சொல்கிறார்கள். சரி, அதென்ன கேள்வி..?
‘நீ என்னவாகப் போகிறாய்..?’
‘அட… இதுதானா… அந்தக் கேள்வி?’ என்று நம்மில் பலரும் இப்போது சாதாரணமாக நினைத்துவிடக் கூடும். இந்தக் கேள்வியை உங்கள் பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிக் காலத்திலோ யாராவது கேட்டிருந்தால், அப்போது உங்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்பதை இப்போது ஒரு கணம் நினைத்துப் பார்த்தால்தான், இந்தக் கேள்விக்குள் பொதிந்திருக்கும் அசாதாரணமான பதிலை நம்மால் கண்டடைய முடியும்.
பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் நமக்குப் படிப்பில் இருக்கும் ஆர்வத்தில் கொஞ்சமேனும் படித்து நாம் என்னவாகப் போகிறோம், நமக்குப் பிடித்தமான துறை எது, எந்தத் துறையில் நமக்கான பங்களிப்பைச் சிறப்பாக வழங்கிட முடியும் என்பது குறித்த தெளிவு பலரிடத்தும் இருப்பதில்லை. ‘ஏன் இல்லை?’ என்று நமக்குள் கேட்டுக்கொண்டாலே, அதற்கான பல பதில்கள் முன்னே வந்து விழுகின்றன..
“படிச்ச படிப்புக்கேத்த வேலையா கிடைக்கிது..!” “நமக்குன்னு என்ன விதியிருக்கோ, அதுதானே நடக்கும்..!”
“நாம நினைக்கிறதாலே எதுவும் மாறப்போறதில்லை. எது நடக்குதோ, அதை ஏத்துக்கிட்டுப் போக வேண்டியதுதானே..!”
இப்படியான இன்னும் பல ‘அச்சில் வார்த்த பதில்கள்’ எல்லோரிடமும் இருக்கின்றன. ஆனாலும், ‘நான் என்னவாக வேண்டும்?’ என்கிற எண்ணம் முதலில் நமக்குள் எழுந்தால் தானே, அது குறித்த தேடலும் பயணமும் முதலில் நமக்குப் புரிபடும். யார் கையிலோ விளக்கினைக் கொடுத்துவிட்டு, தன் பயண வழியில் வெளிச்சமில்லை என்று சொல்வது எப்படிச் சரியாகும்..? நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளப்போகிற / எதிர்கொள்ள வேண்டிய எவ்வளவோ நிகழ்வுகள் வரிசைக்கட்டிக் காத்திருக்கின்றன. அதில், நாம் என்னவாக இருக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் முதலில் நம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நாம் குழம்பி நின்றால், நமக்கான முடிவை வேறெவரோ எடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.