வெற்றியோடு விளையாடு!   – 28

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

ருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருளிய, உலகநல வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள படி, “உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்து, உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கி, பலதொழில்கள் வளர்ச்சி பெற்று பாட்டாளிகள் வாழ்வு சிறப்படைந்து மக்கள் அனைவரும் அறவழியில் நல்வாழ்வு வாழ வேண்டும்!” என்கிற நோக்கத்தை இதயத்தில் ஏந்தி, சரியான பாதையில், திசைமாறாமல்,  முழுக் கவனத்துடன்  பயணித்து, அறம், பொருள் என்கிற இரு வாழ்க்கையிலும் உச்சம் தொட்டு, சாதனை படைத்திருக்கிறார்
SKY வே.சுந்தர்ராஜ் அவர்கள்.

திருப்பூர் SKY குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர்,  நிறுவனர் – உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நிறுவனர்  – வெற்றி நலவாழ்வு மையம், நிறுவனர் – வானம் அறக்கட்டளை, நிறுவனர் மற்றும் செயலாளர், வனம் இந்தியா ஃபவுண்டேஷன்,  நிறுவனர், நகைச்சுவை மன்றம் – திருப்பூர்  துணைத் தலைவர், உலக சமுதாய சேவா சங்கம், அறங்காவலர் – ஆழியார் அறிவுத்திருக்கோவில் ஆகிய பொறுப்புகளை வகித்து வரும் SKY வே.சுந்தர்ராஜ் அவர்கள்,  சிறந்த குடும்பத் தலைவராக, வெற்றிகரமான தொழில் அதிபராக முத்திரை பதித்திருப்பவர். ‘‘இயற்கைச் சூழலைப் பேணுதல், பல்லுயிர்ப் பாதுகாப்பு, சக மனிதர்கள் அனைவருக்குமான மேம்பாடு என்கிற ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சமூக நலத் திட்டங்களை முன்னிறுத்தி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவ பண்பு’’ என பல பரிமாணங்களைக் கொண்டவர்.

அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில் உள்ள புளியம்பட்டி என்னும் குக்கிராமத்தில் பாரம்பரியமான எளிய விவசாயக் குடும்பத்தில், 1958-ம் ஆண்டு பிறந்து, குடும்பத்தில் நிலவிய வறுமைச் சூழ்நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, 1972 – ஆம் ஆண்டு தனது தந்தையார் நடத்தி வந்த விசைத்தறிக் கூடத்தில், சாதாரண தொழிலாளியாகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். படிப்படியாக வளர்ந்து, தொழில் நுணுக்கங்களைக் கற்று, தந்தையார் தொடங்கிய நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார்.

பின்னர், SKY குழுமம் எனும் ஐவுளி உற்பத்தி நிறுவனத்தை நிறுவினார். திட்டமிட்ட அயராத உழைப்பு, கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த குழுச் செயல்பாடு  மூலம், ஆண்டு வர்த்தகம் சுமார் ரூபாய் நானூறு கோடி,  ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு என இன்று வானுயர வளர்ந்து நிற்கிறது SKY குழுமம்.

“பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் ஒரு மனிதர், தனது வளர்ச்சி ஆதாயங்களின் ஒரு பகுதியை சமூக நலனுக்கு பங்களிக்க வேண்டும். சக மனிதர்களின் நல்வாழ்விற்கு அதைப் பயன்படுத்த வேண்டும்” என்கிற உயரிய கோட்பாட்டை வகுத்துக் கொண்டு, அதற்கான செயல்திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறார்.

வானம் அறக்கட்டளை

தனது குடும்பத்தார் சார்பாக,  1993 – ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, அத்தகைய  குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் படிக்க வைத்து, ஆசிரியர்களாகத் தரம் உயர்த்துவது, தகுதிக்கு ஏற்ப பணி வாய்ப்பை உருவாக்கித் தருவது ஆகிய சேவைகளைச் செய்து வருகிறார்கள். இதுவரை, சுமார் 1500 – க்கும் மேற்பட்டோர் இந்தச் சேவையின் மூலம் கல்வி கற்று, அரசு மற்றும் தனியார்துறை, கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஒருசிலர் வெளிநாடுகளில் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.

வெற்றி அறக்கட்டளை

இணக்கத்தன்மை இல்லாத, ஆரோக்கிய நலன் குன்றிய மனிதகுலமாக மாறிவருவதே சமுதாயத்தில் தோன்றுகின்ற குற்றச் சிக்கல்களுக்கு அடிப்படையாக இருந்து கொண்டிருக்கிறது!

‘தக்க வழிகாட்டுதல் இல்லாத, கலாச்சாரத்தைப் பின்பற்றாத, அறியாமை மிகுந்த போக்கு’ தான் இதற்கு காரணம் என்பதைத் தனது அனுபவத்தில் உணர்ந்து கொண்டு, இதனை மாற்ற வேண்டும் என்ற நல்நோக்கில்,  மனிதன் தனது முக்கியப் பருவக் காலத்தில் சந்திக்கும் தடுமாற்றங்களைக் களைந்து வாழ்வில் வெற்றியடையும் விதமாக, சேவை ஆற்றுவதற்காக, 2013-ம் ஆண்டு ஒத்த கருத்துடைய தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து, திருப்பூரில் இந்த அறக்கட்டளையைத் துவக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள்.

வனம் இந்தியா ஃபவுண்டேஷன்

இயற்கையாகவே, மண்வளமும், மழைப்பொழிவும் குறைந்த பகுதி பல்லடம் வட்டாரம். இதனால், நிலத்தடி நீர்மட்டத்தில் அடிக்கடி ஏற்பட்டு வந்த ஏற்றத்தாழ்வுகளால், வேளாண் தொழிலை விடுத்து, மக்கள் மாற்றுத் தொழில்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. வேளாண்  நிலங்களின் பரப்பளவு குறைந்தது, தொழில் பெருக்கம் ஆகிய காரணங்களால், ‘பருவநிலை மாற்ற’ பிரச்சனைகளை அதிக அளவில் எதிர்கொண்டு வந்தது பல்லடம் வட்டாரம்.

எதிர்காலச் சந்ததியினரைப்  பாதிக்கக் கூடிய இந்தப் பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில், உடனடியாகத் தீர்வு கண்டாக வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக, ஒத்த கருத்துடைய தொழில் அதிபர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, ‘வனம் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்கிற தன்னார்வ அமைப்பை 2015 – ஆம் ஆண்டு நிறுவினார்
SKY வே.சுந்தர்ராஜ் அவர்கள். கடந்த பத்தே ஆண்டுகளில்,  அரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது வனம் இந்தியா ஃபவுண்டேஷன்.

“எப்படி வாழ வேண்டும் என்கிற வழிமுறைகளை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுக்கும், வழிகாட்டிகளாக இல்லாமல், வாழ்ந்து காட்டி, வழித்துணையாக கூடவே பயணிக்கும் சக பயணியாக இருக்க வேண்டும்” என்கிற சிந்தனையின் விளைவாக, தெளிவான நோக்கங்களை முன்னிறுத்தி, சிறப்பான செயல் திட்டங்களை வகுத்து, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து SKY வே.சுந்தர்ராஜ் அவர்கள் செயல்படுகிறார் என்பதற்கு அவரது செயலின் விளைவுகள் சான்றாக இருந்து கொண்டிருக்கின்றன.

வனாலாயம்!

பல்லடம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், ‘வனம் ஃபவுண்டேஷன்’ துணைத்தலைவர் கணேஷ்வர் அவர்கள் கொடையாக வழங்கிய
18 – ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை எழில் மிகுந்த, பசுமைச்  சூழலோடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ‘வனாலயம்’. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மூங்கில் மரங்களின் ஊடே  நடைபயணப் பாதை, விளையாட்டுப் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், இராசி,  நட்சத்திர வனங்கள்
அரிய தாவர, மர வகைகளைக் கொண்ட மிகப்பெரிய நாற்றுப்பண்ணை, மூலிகைப் பண்ணை மற்றும் தோட்டம்
அறிஞர்களின் உரை கேட்க ‘அடிகளார் அரங்கம்’, உண்டு மகிழ ‘உழவர் அரங்கம்’, கருத்துக்களைப் பரிமாற ‘கானக சபை’ எனப் பல அம்சங்களைக் கொண்டு, புகழ்பெற்ற திரைப்பட நகரத்தைச் சுற்றிப் பார்த்த பிரமிப்பு அனுவத்தைக் கொடுக்கிறது ‘வனாலயம்’.

கடந்த பத்து ஆண்டுகளில்  எட்டு இலட்சம் மரக்கன்றுகள், 1,25,000 பனை விதைகளை நட்டு, பசுமைப் பரப்பை விரிவுபடுத்தியுள்ளது.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் தலா ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 450 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், புத்தாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளோர், தனித்திறன் கொண்ட விற்பன்னர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களையும், தங்களது செல்பாடுகளையும சமூகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு சிறந்த தளமாகத் திகழும் இந்த வாராந்திரக் கலந்தாய்வுக் கூட்டம்,  495 – வாரங்களைக் கடந்து 500 -வது நிகழ்ச்சியை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அதேபோல், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, ‘வான்மழை’ கருத்தரங்கம நடைபெற்று வருகிறது.
இதுமட்டுமல்லாமல், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் திரு நாகராஜன் அவர்கள் வழங்கிய  ரூபாய் எழுபத்து ஐந்து இலட்சம் மதிப்புள்ள விழிப்புணர்வு வாகனம் மூலம், கிராமங்கள் தோறும் பசுமை விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை நிறுவனத்தார் வழங்கிய  ரூபாய் முப்பத்தைந்து இலட்சம் மதிப்புள்ள JCB இயந்திரம் இந்த வட்டாரம் முழுவதும் மரக்கன்று நடும் பணிக்குப்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

“1972-ல் தொடங்கி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான உழைப்பு. அதன் மூலம் உருவாக்கிய ரூ.400 கோடி ஆண்டு வர்த்தகம் புரிகிற தொழில் குழுமம், புதிய சிந்தனைகளோடும், புத்தாக்க முயற்சிகளோடும் நிறுவனத்தை வழிநடத்தும் துடிப்பு மிக்க அடுத்த தலைமுறை மற்றும் வலுவான நிர்வாக அமைப்பு முறை,
அன்பு நிறைந்த ஒத்திசைவான குடும்ப உறவுகள்,
1985 – முதல் 40 – ஆண்டு காலப் பொதுப் பணி. இதன் மூலம் உருவான உலகளாவிய நட்பு வட்டம்,நிறைவான, அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஆன்மிகப் பின்புலம், 70 – வயதை நெருங்குகிற  ஒருவருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?!”

அமைதியாக ஓய்வெடுக்காமல், எதற்கு இன்னும் இந்த ஓட்டம்? என்று அக்கறையோடு கேட்போருக்கு,

‘‘நானும் எனது குடும்பத்தாரும், சௌகரியமாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்குப் போதுமான வசதிகள் இருப்பது உண்மை தான்! இன்னும் சொல்லப்போனால், எனது அடுத்தடுத்த தலைமுறைகளும் பிரச்சனை ஏதும் இன்றி வசதியாக வாழலாம்! ஆனால், சமூகத்தில் பல பிரச்சனைகள் நிலவுகிற போது, அதனால், எதிர்காலச் சந்ததியினர் பேராபத்தைச் சந்திக்க வேண்டிய அபாயம் இருக்கிற போது, நானும், எனது குடும்பமும் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதில் பெரிதாக என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? எல்லோருக்குமான மகிழ்ச்சிச் சூழலை உருவாக்க வேண்டியது நம் கடமை!

இதை நானும் எனது குடும்பத்தார் மட்டும் செய்தால், அதிகபட்சம் ஒருசில பேர் மட்டுமே பயனடைவார்கள். ஒத்த கருத்துடைய பலரும் இணைந்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டால், சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்! இந்த உணர்வை பொருளாதாரத்தில் உயர்நிலையில் உள்ளோர் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே, இந்த வயதிலும் இந்த ஓட்டம்!” என்று தெளிவான பதிலைத் தருகிறார் SKY வே.சுந்தர்ராஜ் ஐயா அவர்கள்.

‘‘இப்படிப்பட்ட மனோநிலை வாய்க்கப் பெறுவதற்கு அடிப்படையாக இருந்தது எது?’’ எனக் கேட்ட போது,

‘‘இளம் வயதில் வறுமையிலிருந்து மீண்டெ ழுவதற்காக, கல்வியைத் தொடர முடியாமல், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, விவசாயம் மற்றும் விசைத்தறிக் கூடத்தில் கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்பு வாழ்க்கை உயர்வுகளுக்கு அடித்தளமாக அமைந்தது!’’

‘‘தனிமனித அமைதியின் மூலம், உலக அமைதி” என்கிற நோக்கத்தை முன்னிறுத்தி, ஆன்மிகச் சேவையை உலகிற்கு அறிமுகப்படுத்திய கொண்டிருந்த உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு 1985-ம் ஆண்டு எனக்குக் கிடைத்தது. அதுவே எனது அருள் மற்றும் பொருள் சார்ந்த வாழ்க்கை உயர்வுக்கு அடித்தளமாக அமைந்தது. அவர் நேரடியாக எனக்குத் தீட்சை அளித்தார்.
உடனடியாக அவரது சீடராக, என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். உலக சமுதாய சேவா சங்கம், அதன் மண்டல அலுவலகத்தைத் தோற்றுவித்து, செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. மண்டலத் தலைவராக செயல்படும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாணவ, மாணவியர், பொது மக்கள், அரசு துறையினர் என  5,00,000 நபர்கள் மனவளக்கலைக் கல்வியைக் கற்று உள்ளனர். இதில் 500 பேர், யோகா பிரிவில் பட்டப்படிப்பு முடித்து யோகா ஆசிரியர்களாகச் சேவையாற்றி  வருகின்றனர். இதற்கு மண்டல அலுவலகத்தின் செயல்பாடுகள் அடித்தளமாக அமைந்தன.

தற்போது, உலக சமுதாய சேவா சங்கத்தின் துைணத்தலைவராகவும், ஆழியார் அறிவுதிருக்கோயிலின் அறங்காவலராகவும் இருந்து, அமைப்பின் வளர்ச்சிப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன்.

‘‘எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையில் உழன்று, வறுமையிலிருந்து மீண்டெழுவதற்குக் கடுமையாக உழைத்து, எதிர்கொண்ட சவால்களைச் சமாளிக்கும் துணிவைப் பெற்று, இன்று 1500 – குடும்பங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் தொழிற்குழுமத்தை உருவாக்கி வழிநடத்தி பொருளீட்டவும், பொருளாதாரத் தேடலில், வழிமாறாமல், நெறி தவறாமல் அறவழியில் தொழில் நடத்தி, கிடைக்கும் ஆதாயத்தை, சமூகத்தின் சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழிகாட்டியது வேதாத்திரியமும், மனவளக்கலை பயிற்சியும் தான்” என்று நன்றியுணர்வோடு கூறுகிறார் SKY வே.சுந்தர்ராஜ் ஐயா அவர்கள்.

“மண்ணும், மக்களும் பயனுற மரங்கள் வளர்த்து, மழைப்பொழிவை அதிகரிக்கும் பொருட்டு செயலாற்றி வரும், ‘அந்த வானத்தைபோல மனம் படைத்த மன்னவனே’ என்ற பாடலுக்கு முற்றிலும் பொருத்தமான வகையில், ‘நம் கடமை, அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!’ என்று வாழ்ந்து வரும், மதிப்புமிகு ஐயா, திரு. SKY வே.சுந்தர்ராஜ்.
அவர்களுடைய சேவை சிறக்க, ‘ஆளுமைச் சிற்பி’ நன்றி கூறி வணங்கி வாழ்த்துகிறது. l