ஆளப் பிறந்தோம் – 29

திரு.இள.தினேஷ் பகத்

வாழ்க்கை’’ என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம். இங்கு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். தோற்றவர்களை எவரும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் ஓடக் கற்றுக்கொள்ள வேண்டும். ஓடப் பழகவில்லை என்றால் நம்மை எல்லாரும் முந்திச் சென்றுவிடுவர்.

என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.

கால்பந்து விளையாட்டு என்றாலே நம் நினைவுக்குப் பல வீரர்கள் வந்தாலும் அனைவரும் அறிந்த ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றால் மறுப்பதற்கில்லை. உலகப் புகழ்பெறுவது சாதாரண காரியமில்லை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சரித்திரத்தில் இடம்பிடிப்பது என்பதாலும் உழைப்பின் உச்சம் என்றுதான் கூறவேண்டும்.

1985 பிப்ரவரி 5 – இல் போர்ச்சுகலில் உள்ள சிறிய நகரத்தில் பிறந்தார் ரொனால்டோ. அவரது பெற்றோர் மிகவும் வறுமையான சூழலில் இருந்தனர். இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் இருந்தனர். வீட்டில் வறுமை காரணமாக அனைவருக்கும் மூன்று வேளை உணவு என்பதற்கு சாத்தியமே இல்லை. கால் வயிறு, அரை வயிறு உணவுதான் எப்போதுமே அவர்களுக்கு. இதனால் இந்தக் குழந்தை வேற வேணுமா? என்ற எண்ணத்தில் கருவைக் கலைக்க மருத்துவரிடம் சென்றார் ரொனால்டோவின் தாய்.

கருவைப் பரிசோதித்த மருத்துவர் ‘‘கருவைக் கலைக்க முடியாது; அது உயிருக்கு ஆபத்தாகிவிடும்’’ என்று சொல்ல, கடவுள் விட்ட வழி என நினைத்துக் கொண்டு மூன்றோடு நாலாவதாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார் ெரானால்டோவின் தாய். இப்படியிருக்க, ரொனால்டோவின் தந்தை நகராட்சியில் தோட்டக்காரராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் சம்பாத்தியத்தில், அவர் குடிச் செலவுக்குப் போக கொடுக்கும் மீதமுள்ள பணம் குடும்பத்திற்கு பத்தவில்லை. இதனால் ரொனால்டோவின் தாய் அங்குள்ள வீடுகளுக்கு சமையல் வேலைக்குச் செல்வார். மிகவும் சிறிய வீட்டில் புரண்டு கூட படுக்க இயலாத அறையில் அனைவரும் உறங்கி வந்தனர்.

ஒரு கால் பந்து கூட வாங்க முடியாத ரொனால்டோ, ரோட்டில் நடந்தாலே கால் தானாக பந்தை உதைப்பதற்கு நீளும். ரோட்டில் கிடக்கும் உதைப்பதற்கு தோதாக எது கிடைத்தாலும் விடமாட்டார். தெருவில் உதைத்து உதைத்து உருட்டிக் கொண்டே போவார். இவரின் செயலைப் பார்க்கும் தெருக்காரர்கள் இவரைக் கேலி செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஒரு கால்பந்து வாங்கிவிட்டார். சிறு சிறு கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொண்டு இவர் கால்பந்துப் போட்டியில் விளையாடும் திறனைப் பார்க்கும் பார்வையாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். 12 – வயது இருக்கும் போது போர்ச்சுகலில் இருக்கும் ஒரு கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆகிறார். இதற்காக அவருக்கு 1500 பவுண்டுகள் தருகிறார்கள். மிக்க மகிழ்ச்சியுடன் கால்பந்து விளையாட்டினை அடியெடுத்து வைத்த அவருக்குப் பள்ளியில் கவனம் செலுத்த முடியவில்லை. 6 – ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த ரொனால்டோவிற்கு கால்பந்தின் மீது இருந்த ஆர்வத்தால் தன் தாயிடம் ‘‘என்னால் படிக்க முடியல, முழு நேரமும் புட்பால்ல கவனம் செலுத்தப் போகிறேன்’’ என்கிறார். மகனின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடாமல் ஒரு சில கண்டிசன் போட்டதற்குப் பிறகு அனுமதியும் தந்துவிட்டார்.

ரொனால்டோவிற்கு 15 – வயது இருக்கும் போது அந்த இடிபோன்ற செய்தி வந்தது. இதயத்தில் லேசாக வலி என்று போனவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு Jady Cardia என்ற இதய நோய் என்றும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

அன்றைக்கு இருந்த சூழலில் அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டு உயிர் பிழைப்பதுகூட கடினம். நம்பிக்கையோடு அறுவை சிகிச்சையினை எதிர்கொண்ட ரொனால்டோ, அறுவை சிகிச்சை முடிந்த சில நாள்களிலேயே மைதானத்தில் இறங்கிவிட்டார்.

கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலகிலேயே முதன்முறையாக அதிகபட்ச ஊதியமாக ஒரு பில்லியன் டாலர் வாங்கியவர் ரொனால்டோ தான். குடிசையில் உள்ளவரும் கோடீஸ்வரராகலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரொனால்டோ தான்.

ஒரு செய்தியாளர் நிகழ்வில் ரொனால்டோ கூறினார், ‘‘ஏழைக்கு ஆசை கூடாது என்றார்கள், நான் பேராசைப்பட்டேன் என்று’’. சாதிக்கத் துடிக்க நினைக்கும் அனைவருக்கும் ரொனால்டோவின் வாழ்க்கை ஒரு உத்வேகத்தை தரும் என நம்புகிறேன்.

இந்த இதழில் காவல் சிறப்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு பற்றி பார்க்க இருக்கிறோம்.

  1. கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (UG) பெற்றிருக்க வேண்டும்.

  1. வயது வரம்பு

பொதுப் பிரிவினர் 20 – வயதிலிருந்து 30  – வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 – வயது வரையிலும், SC/ST பிரிவினர் 35 – வயது வரையிலும் இந்தத் தேர்வினை எழுதலாம்.

  1. தேர்வு முறை

TNUSRB நடத்தும் காவல் சிறப்பு ஆய்வாளர் தேர்வானது 2 – தாள் கொண்டதாக நடைபெறும்.

பகுதி-I தமிழ்மொழி தகுதித் தேர்வு

* தமிழ்மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

*   இத்தேர்வில் கொள்குறி வகை வினாத்தாள் இருக்கும்.

*   இத்தேர்வானது 100 மதிப்பெண்கள், 100 வினாக்கள் கொண்டது. கால அளவு 100 நிமிடங்கள் ஆகும்.

*   தமிழ்மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தகுதி ெபற்ற விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்து தேர்வின் OMR விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

*   தமிழ்மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலை தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

பகுதி-II, முதன்மை எழுத்துத் தேர்வு

*   பகுதி (அ) பொது அறிவுப் பகுதி (மற்றும்) பகுதி (ஆ) தருக்க பகுப்பாய்வு, உளவியல் தேர்வு, 70 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

*   பகுதி (அ) 80 கேள்விகளைக் கொண்டது.

*   பகுதி (ஆ) 60 கேள்விகளைக் கொண்டது.

*   ஒவ்வொரு வினாவிற்கும் ½ மதிப்பெண்கள் வழங்கப்படும்.

*   எழுத்துத் தேர்வு 2 – மணி 30 –  நிமிடங்களுக்கு நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
15 – மதிப்பெண்களுக்கு உடல் தகுதித் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. பிறகு 10 – மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. மேலும், தேசிய மாணவர் படை/நாட்டு நலப்பணித்திட்டம் (ம) விளையாட்டுகளுக்கு மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப 5 – மதிப்பெண்கள் வழங்கப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சிறப்பு நேர்முகத் ேதர்வு (ம) சிறப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை தயார் ெசய்யப்பட்டு தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகக் காவல் துறையில் காவல் சிறப்பு ஆய்வாளராகப் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.

நன்றி, அடுத்த இதழில் சந்திக்கின்றேன். l