கேட்டலும் அறிதலும் – 13
– திரு.ப.திருமலை

வணக்கம் ஐயா..
வணக்கம். மழையில நனைஞ்சிட்டே வந்திருக்கீங்க. கோடை மழை நன்றாகப் பெய்கிறது. மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கிறது.
ஆம் ஐயா.. ஆனால், மழை விழும்போது ஏற்படும் சத்தம் நமக்குச் சற்றுத் தொந்தரவாக இருக்கிறது. நாம் சத்தமாகப் பேசவேண்டியதுள்ளது.
அந்தச் சத்தம் கூட நல்லதுதான். மழைத்துளி விழும்போது எழும் சத்தத்தினால் விதைகள் வழக்கத்தைவிட 30 – 40 சதவிகிதம் வேகமாக வளர்வதாக, அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. சிறிய தொட்டிகளில் விதைக்கப்பட்ட சுமார் 8,000 – க்கும் மேற்பட்ட நெல் விதைகளைச் செயற்கை மழை, ஒளிக்கு உட்படுத்தியபோது இது கண்டறியப்பட்டது. அந்தத் தாவர செல்களில் உள்ள ஸ்டேடோலித் (statolith), மழையால் உருவாகும் ஒலி அலைகளால் உந்தப்பட்டு வளர்ச்சியை நிகழ்த்துவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மழைச் சத்தத்தைக் கேட்காத விதைகளிடம் இத்தகைய வளர்ச்சி இல்லை.
அதிகச் சத்தம் உயிரைப் பறிக்கும் என்கிறார்களே ஐயா,
உண்மைதான். அதிகச் சத்தம் நமக்கு மட்டுமல்ல. பிற உயிரனங்களுக்கும் அதிகச் சத்தம் ஆபத்தானது. உத்தரப் பிரதேசம் சுல்தான்பூரில் அண்மையில் ஒரு திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒலிபெருக்கியில் அதிகச் சத்தத்துடன் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அருகில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர் முகமது சபிர், ஒலிபெருக்கி உரிமையாளரிடம் சத்தத்தைக் குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. மூன்று முறை வேண்டுகோள் விடுத்தும். பலன் இல்லை. ஒலிபெருக்கியின் சத்தத்தால் பண்ணையில் இருந்த 140 கோழிகள் உயிரிழந்தன. இதனால் போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு முகமது சபிர் புகார் தெரிவித்தார். இறந்த கோழிகளைப் பரிசோதனைக்கு அனுப்பியதில், அதிகச் சத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கோழிகள் இறந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கைத் தெரிவித்தது. ஒலி பெருக்கி உரிமையாளர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
சிறப்பான நடவடிக்கையாக உள்ளதே. ஐயா, நாம எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கிறோம். ரமேஷ் காலையிலேயே கொட்டாவி விட்டுட்டு இருக்கிறான் பாருங்க.
என்ன ரமேஷ் கொட்டாவி.. பரவாயில்லை. கொட்டாவி நல்லது தான்.
கொட்டாவி விடுவது நல்லதா? என்ன சொல்கிறீர்கள்?
கொட்டாவி விடும்போது, மூளையைப் பாதுகாக்கும் திரவ ஓட்டத்தில் ஒரு அசாதாரண மற்றும் எதிர்பாராத விளைவு ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. கொட்டாவி விடுவதன் காரணம் பற்றி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தி வரும் ஆய்வில் இந்தக் கூற்று நிரூபணமாகியுள்ளது. கொட்டாவி விடும்போது கழுத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது அவர்கள் கொட்டாவி விடவும், ஆழமாக மூச்சு விடவும், கொட்டாவியை அடக்கவும், சாதாரணமாக மூச்சு விடவும் அறிவுறுத்தப்பட்டனர். இதில், ஆச்சரியப்படும் விதமாக, கொட்டாவி விடும்போது மூளையிலிருந்து தண்டுவடத் திரவம் வெளியேற்றப்பட்டது.
இது நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொட்டாவி விடும்போது, மூளையைச் சுத்தப்படுத்தும் வகையில் மூளைத்தண்டுத் திரவம் சுரக்கிறது. எனவே மூளையைச் சுத்தப்படுத்துவதில் கொட்டாவி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது அல்லது மூளையைக் குளிர்விக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அடுத்தமுறை கொட்டாவி விடும்போது, அது ஒரு சாதாரணநிகழ்வு என நினைக்காமல், மனித உடல், மூளையைச் சுத்தம் செய்ய இதுபோன்ற ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதை நினைத்துப் பெருமிதம் கொள்ளலாம்.
எப்படிக் கொட்டாவி விட்டாலும் பயன் இருக்குமா?
கைவிரல் ரேகையைப் போல, ஒவ்வொரு நபரும் ஒரு தனித்துவமான முறையில் கொட்டாவி விடுகிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கொட்டாவி விடும்போது ஒவ்வொருவரின் நாக்கு அசைவும் மாறுபடுகிறதாம். என்றாலும் பயன் ஒரே போலத்தான் இருக்கும்.
சுதீஷ் எழுந்திரு.. என்ன வெளியில வேடிக்கைப் பார்த்திட்டு இருக்கிறாய்?
ஐயா.. வானத்தில் பறவைகள் ஒரு கூட்டமாகப் பறக்கும்போது அழகாக, ‘V’ வடிவத்தில் பறப்பதை பார்த்திட்டு இருந்தேன். எப்போதுமே இப்படித்தானே பறக்கின்றன என யோசித்தேன் ஐயா..
இது வெறும் அழகாகத் தோன்றுகிறது என்பதை விடப் பறவைகளின் புத்திசாலித்தனமான சிந்தனை எனச் சொல்லலாம். பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இடம்பெயரும்போது, அவை தங்கள் சக்தியைச் சேமிக்க வேண்டுமல்லவா?.
இந்த ‘V’ வடிவத்தில் பறப்பது, அவைகளுக்குக் காற்றின் எதிர்ப்பை சமாளிக்கவும், குறைவான சோர்வுடன் நீண்ட தூரம் பறக்கவும் உதவுகிறது. முன்னால் பறக்கும் பறவை தன் இறக்கைகளை அடிக்கும்போது, அதன் பின்னால் ஒரு சிறப்புக் காற்றோட்டம் உருவாகிறது. இதை அறிவியலில் ‘அப்வாஷ்’ (Upwash) என்று சொல்வார்கள். இந்த மேலே செல்லும் காற்று அலை, பின்னால் பறக்கும் பறவைக்கு இயற்கையாக ஒரு தள்ளுதல் போல உதவுகிறது. அதனால் பின்னால் இருக்கும் பறவை அதிக உழைப்பு இல்லாமல் பறக்க முடிகிறது, அதன் சக்தியும் சேமிக்கப்படுகிறது. இப்படிப் பறக்கும் போது, தனியாகப் பறக்கும் ஒரு பறவையைக் காட்டிலும், முழுக் கூட்டமும் சேர்ந்து சுமார் 70 சதவிகிதம் கூடுதல் தூரம் பறக்க முடியும். இப்படிப் பறப்பது, பறவைகளின் அற்புதமான குழுப்பணி மற்றும் அறிவைக் காட்டுகிறது.
“அப்வாஷ்” என்று சொன்னீர்கள். அதுபோல “டவுன்வாஷ்” இருக்கிறதா?
சரியான கேள்வி சுதீஷ். பறவைகள் நேர்கோட்டில் ஒன்றின் பின்னால் ஒன்று பறந்தால், பின்னால் இருக்கும் பறவை ‘கீழ்நோக்கிய காற்றைப் பெறும். இது டவுன்வாஷ் (Downwash) எனப்படும். இந்தக் கீழே தள்ளும் காற்றானது பறப்பதை கடினமாகவும் சோர்வாகவும் மாற்றும். அதனால் தான் பறவைகள் பெரும்பாலும் முழுமையாக நேரான வரிசையில் பறப்பதில்லை. அதற்குப் பதிலாகச் சற்று விலகி ‘V’ வடிவத்தில் பறக்கின்றன. இதனால், முன்னால் பறக்கும் பறவையால் உருவாகும் நல்ல காற்றோட்டத்தின் நன்மையைப் பெறவும், கீழ்நோக்கிய காற்றின் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும் முடிகிறது.
பறவைகளின் செயல்பாடு வியப்பாக இருக்கிறது ஐயா..
அது மட்டுமா? இன்னும் வியப்பான விஷயம் சொல்கிறேன் கேள். ‘V’ வடிவத்தில் முதலில் பறக்கும் பறவை சோர்வானவுடன் கூட்டத்தின் பின்புறம் செல்கிறது. அதன் இடத்தில் மற்றொரு பறவை முன்னால் வந்து தலைமை ஏற்கிறது. இப்படியே எல்லாப் பறவைகளும் மாறி மாறி முன்னால் சென்று, பயணச் சுமையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தச் செயல்முறை மிகவும் துல்லியமாக நடக்கிறது. பறக்கும் போது பறவைகள், இதயத் துடிப்பையும் சுவாசத்தின் வேகத்தையும் மற்றொருவருடன் ஒத்துப் போகும் வகையில் கட்டுப்படுத்த முடிகிறது. பறவைகளின் இந்த ‘V’ வடிவம், இயற்கையின் அற்புதமான பொறியியல் திறமைக்கும், பறவைகள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கும் ஒரு சிறந்த உதாரணம்.
ராணுவத்தில் எலிக்குச் சிலை வைத்திருக்கிறார்களாமே?
நம் ராணுவத்தில் அல்ல. கம்போடியா ராணுவமானது, மகாவா என்ற எலிக்கு சிலை வைத்து நினைவுகூர்ந்துள்ளது.