உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 28
– முனைவர் எஸ்.அன்பரசு

ர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைப் பள்ளி (Sardar Vallabhai Patel International School of Textiles and Management (SVPISTM)), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பீளமேட்டில் மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற ஜவுளி மற்றும் மேலாண்மை நிறுவனமாகும். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்று. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்று தமிழ்நாடு அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது ஜவுளித் தொழில்நுட்பம், ஆடை மேலாண்மை ஆகியவற்றில் AICTE மற்றும் NAAC அங்கீகாரத்துடன் பட்டப் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

2024 – ல் இந்தியா டுடே நடத்திய அனைத்திந்திய அரசு மேலாண்மைப் பள்ளிகளின் தரவரிசைப் பட்டியலில் கோயம்புத்தூர் மண்டலத்தில் முதலாவதாகவும், தமிழ்நாட்டில், இரண்டாவதாகவும் தென்னிந்திய அளவில் ஏழாவது இடத்திலும் இந்நிறுவனம் விளங்குகின்றது.

இளநிலைப் பாடப்பிரிவுகள்

1. B.Sc., Textiles and Fashion
2. B.Sc., Technical Textiles
3. B.Sc., Textile and Apparel Design
4. BBA.,Textile Business Analytics

முதுகலைப் பட்ட / பட்டய படிப்புகள்

1. M.B.A., Textile Management
2. M.B.A., Apparel Management
3. M.B.A., Retail Management
4. M.B.A., Technical Textiles
5. PGDM., முதுகலை ஜவுளி மேலாண்மை பட்டயப் படிப்பு

கல்வித் தகுதி

இளநிலைப் பாடப்பிரிவிற்கு +2 வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி. முதுகலைப்பாட பிரிவுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம்.
நுழைவுத் தேர்வு

தேசிய அளவில் நடத்தப்படும் CUET நுழைவுத் தேர்வு அல்லது SVPET (Sardar Vallabhai Patel Entrance Test) நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். முதுகலைப் படிப்புகளுக்கு MAT/ CAT/XAT/ CMAT தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும்.

SVPET தேர்வு முறை

இணைய வழியில் நடத்தப்படும் இத்தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும். பொது அறிவு (General knowledge), ஆங்கில அறிவு (English Excellence) கணிதத் திறன் (Aptitude) மற்றும் பகுப்பாய்வுத் திறன் (Analytical Ability)ஆகிய பிரிவுகளில் 50 வினாக்கள் கேட்கப்படும். ஏப்ரல் / மே மாதத்தில் விண்ணப்பித்து, ஜூன் மாதம் முற்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்

SVPISTM – திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், அகில இந்திய கைத்தறிக் கழகம் ஆகிய தொழில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களோடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை உறுதி செய்கிறது. Reliance Industries, Aravind Fashion, Cotton Corporation of India, Calvin Klein and Pallava group ஆகிய நிறுவனங்கள் வளாகத் தேர்வின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் 100% வேலைவாய்ப்பினை உறுதி செய்கின்றன.