
கேட்டலும் அறிதலும் –
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
வணக்கம் ஐயா..
வணக்கம்.. வணக்கம்.. என்ன சதீஷ் முடியெல்லாம் ஒரு மாதிரி வெட்டியிருக்கிறாய். பள்ளியில் படிக்கும் மாணவன் போலில்லையே.. இதை மாற்றி, நாளை சரியாக வெட்டிவரவில்லையென்றால் நானே உனக்கு முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்வேன். ஆமா முடிவெட்ட எவ்வளவு கட்டணம் கொடுத்தாய்..
இருநூறு ரூபாய் ஐயா..
நல்லவேளை இஸ்ரேல் பிரதமர்கள் போலச் செலவு செய்யலையே..
இஸ்ரேல் பிரதமர் முடிவெட்ட ஆயிரம் ரூபாய் கொடுப்பாரா..?
ம்..ம்.. கடந்த 7 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரம், மேக்கப் ஆகியவற்றிற்காகச் சுமார் நான்கரைக் கோடி ரூபாய்ச் செலவிடப்பட்டதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் யாரா விங்க்லர் ஷாலிட் என்பவர் கோரிய தகவல்களை ‘அரசு பாதுகாப்பு’ என்ற காரணம் காட்டி பிரதமர் அலுவலகம் தர மறுத்துவந்தது. ஆனால், அவர் விடவில்லை. நீதிமன்றம் போனார். அதன்பின் இந்தத் தகவல்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வழங்கியது.
குறிப்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நெதன்யாகு அமெரிக்கா சென்றிருந்தபோது, ஒரு முறை சிகை அலங்காரம், மேக்கப் செய்ய 13 லட்சம் ரூபாய்ச் செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – காசா போர் உச்சத்தில் இருந்த 2023 செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நெதன்யாகு தலைமுடியை சரிசெய்ய 22 லட்சமும், மேக்கப் செய்ய 13 லட்சமும் அரசு பணத்தில் இருந்து செலவிட்டுள்ளார்.
இது அதிகமில்லையா..? இவர் மட்டும்தான் இப்படியா அல்லது இவருக்கு முன் இருந்தவர்களும் முடி வெட்ட கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்களா?
இந்தச் செலவு முன்னாள் பிரதமர்களான நஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லாபிட் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 23 லட்சம் ரூபாயாக இருந்தது. சரி, நேபாள பேரழிவு குறித்து நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்த்தீர்களா?
பார்த்தோம் ஐயா.. மிகவும் வேதனையாக இருந்தது அதில் குழந்தைகள் உயிரிழப்புக் குறித்துப் பெரிதாகச் சொல்லப்பட்டதாக நினைவு இல்லையே…
சொல்றேன். ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்நாட்டைப் புரட்டிப் போட்டது இல்லையா? அதில் நேபாளின் ரசுவா, நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் 600 குழந்தைகள் மாயமாகி உள்ள விவரம் நேபாளத்தில் செயல்படும் கல்வி மேம்பாட்டுக்கான அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொகுத்துள்ள புள்ளிவிவரங்களில் இப்போது வெளியாகி இருக்கிறது. மத்திய நேபாளத்தில் உள்ள ரசுவா மாவட்டத்தில் 290 குழந்தைகள், நுவாகோட் மாவட்டத்தில் 300 முதல் 350 குழந்தைகள் வரை காணவில்லை என்கிறார் நுவாகோட் கல்வி மேம்பாட்டு ஒருங்கிணைப்புப் பிரிவு தலைவர் சூர்யா பகதூர் கத்ரி. மாணவர்கள் தவிர ரசுவாவில் 16 ஆசிரியர்களைக் காணவில்லை.
இவர்களில் 15 பேர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஒருவர் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர். ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 22 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 12 முற்றிலும் அழிந்துவிட்டதாக அந்நாட்டுக் கல்வி அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
நேபாள வெள்ளத்தில் மீன்களும் அடித்து வரப்பட்டதாகச் சொல்கிறார்களே?
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் திரிஷூலி மற்றும் நாராயணி நதிகள் வழியாக இந்தியாவின் கண்டக் நதிக்குள் புகுந்தது. வெள்ளநீருடன் மரக்கட்டைகள், குப்பைகள் சில இடங்களில் மனித உடல்களும் அடித்துவரப்பட்டன. அதோடு நேபாள ஆற்றில் வளர்ந்த ராட்சத மீன்களும் வந்தன. பீகாரின் கோபால்கஞ்ச், பகா, வால்மீகிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் இந்த மீன்களை வியப்புடன் பார்த்தார்கள்.. காரணம் பிடிபட்ட ஒவ்வொரு மீனும் 15 கிலோ முதல் 50 கிலோ எடையுள்ளதாக இருந்தது. என்றாலும் இது ஆபத்து என்கிறார்கள்.
இதில் ஆபத்து என்ன இருக்கிறது? அதிக எடையுள்ள மீன் கிடைப்பது மகிழ்ச்சிதானே ஐயா..?
பிடிபட்ட அந்த மீனின் பெயர் கூஞ்ச் (Goonch). இந்த மீனை பாகர் அல்லது கோய்டா என்றும் அழைக்கின்றனர். இந்த மீனின் அறிவியல் பெயர் Bagarius yarrelli.
ஆங்கிலத்தில் Devil Catfish (பேய்மீன்) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வேட்டையாடும் மீன். சிறிய மீன்கள், தவளைகள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்கிறது. இந்த மீனின் தோற்றம் பயமுறுத்தும் வகையில் இருக்கும். அகலமான தலையும், பெரிய வாயும், கூர்மையான பற்களும், நான்கு ஜோடி மீசையும் இருக்கும். பொதுவாக இந்த மீன் மலைப்பகுதி ஆறுகளின் ஆழமான பகுதிகளில் வாழ்கிறது. வெள்ளம் ஏற்பட்டபோது, அடிப்பகுதியில் இருந்த இந்த மீன்கள் நீரோட்டத்தால் அடித்து வரப்பட்டு பீகார் பகுதிகளை அடைந்துள்ளன.
அப்படி வரும் போது பல மீன்கள் ஏற்கனவே இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாக மீனவர்கள் கூறுகின்றனர். வெள்ளநீரில் பல வகையான கழிவுகள், இறந்த விலங்குகள் மற்றும் பிற மாசுகள் கலந்திருக்கும். எனவே அதன் உடலில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும் என்பதாலும் சிலருக்கு இந்த மீனை சாப்பிட்ட பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாகத் தகவல்கள்
