வரலாறு பேசுவோம்-09
திரு.முகில்

கல்யாணத்துக்கோ, காது குத்துக்கோ பத்திரிகை வைத்து அழைப்பதுபோல, பிரிட்டிஷ் இந்தியாவில் பக்கத்து சமஸ்தான மகாராஜாக்களுக்கும், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளுக்கும் வேட்டைக்கு அழைப்பு விடுப்பது என்பது மிகச் சாதாரணமாக ஒன்றாக இருந்தது. அதுவும் வைஸ்ராய்கள் பற்றி கேட்கவே வேண்டாம். வேட்டையாடுவதற்கென்றே, காடுகள் உள்ள சமஸ்தானத்துக்குச் சென்று அங்கே உரிய பாதுகாப்புகளுடனும், சகல வசதிகளுடனும் கட்டப்பட்டிருக்கும் மாளிகைகளில் (சிகார்) தங்குவார்கள். விருப்பமிருந்தால் துப்பாக்கியை எடுத்துச் சுடுவார்கள். இல்லையென்றால், யாரோ ஒருவர் சுட்டு அரைகுறை உயிருடன் கிடக்கும் சிங்கத்தையோ, புலியையோ, யானையையோ நெருங்கிச் செல்வார்கள். மீண்டும் சுட்டு வழியனுப்பி வைப்பார்கள். செத்துக் கிடங்கும் விலங்கின் முன்பு தம் வீட்டுக்கார அம்மணியுடன் (லேடி வைஸ்ராய்) பவுசாக துப்பாக்கியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். வீர வைஸ்ராய் சுட்ட புலி என்றுதானே வரலாறு சொல்லும்!

தவிர, ஒரு ராஜா என்பவர் காட்டின் அரசனான சிங்கத்தையோ அல்லது வனத்தையே மிரட்டிக் கொண்டிருக்கும் புலியையோ வேட்டையாடி தான் ஒரு வீரன் என்று நிரூபிக்க வேண்டுமென்ற அழுத்தமும் காலம் காலமாக இருந்தது வந்தது. ராஜா, புலியை வேட்டையாடிய, நேருக்கு நேர் நின்று அதன் வாயைக் கிழித்த சம்பவங்கள் காலந்தோறும் புனைகதைகளாவும் பாடல்களாகவும் மக்களுக்குக் கடத்தப்பட்டு வந்தன. ஆக, புலி வேட்டை என்பது மகாராஜாக்களின் இயல்பான பழக்கவழக்கங்களில் ஒன்றாகிப் போனது.

தவிர, பக்கத்து சமஸ்தானத்துடன் ஏதாவது தகராறா? அந்த மகாராஜாவை வேட்டைக்கு அழைத்து, கௌரவித்து, விலங்குகளைக் கொல்ல வைத்து, குஷியாக விருந்து வைத்து, பிரச்னைகளை எல்லாம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். பிரிட்டிஷார் ஆட்சியில், வெள்ளைக்கார அதிகாரிகளை அழைத்து, இஷ்டம்போல வேட்டையாட வைத்து, சந்தர்ப்பம் பார்த்து, ‘துரை, நமக்கு அந்த சமாசாரத்தை முடிச்சுக் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்’ என்று காரியம் சாதித்துக் கொண்டார்கள்.

இந்தியக் காடுகளில் புலிகளே அதிக அளவில் விரும்பி வேட்டையாடப்பட்டன. (சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே உண்டு). பிகானீர் மகாராஜா கங்கா சிங், தன் வாழ்வில் நூறாவது புலியைச் சுடுவதைக் கொண்டாட்டமாகவே மாற்றினார். கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயணனுக்கு எதை வேட்டையாடினாலும் தெளிவாகக் கணக்கு எழுதி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அவர் தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை 365 (பிற விலங்குகளின் எண்ணிக்கை தனி). சர்குஜா சமஸ்தானத்தின் மகாராஜா ராமானுஜ் சிங்தான் இதில் எவரும் முறியடிக்க முடியாத (கொடுஞ்)சாதனை புரிந்துள்ளார். அவர் தம் வாழ்வில் வேட்டையாடிய வங்கத்துப் புலிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை அநாயசமாகத் தாண்டுகிறது. இப்படி சென்ற நூற்றாண்டில் ஒவ்வொரு மகாராஜாவும் கொன்று குவித்த புலிகளின் எண்ணிக்கைக்குக் கணக்கே கிடையாது.

காடும், காட்டில் புலிகளும் இருந்த ராஜஸ்தானின் துங்கர்பூர் சமஸ்தானத்தில் பிறந்தார் இளவரசர் லஷ்மண் சிங் (1908, மார்ச் 7). அங்கே உதய் விலாஸ் அரண்மனையில் வளர்ந்தார். லஷ்மண் சிங்குக்குப் பத்து வயது இருக்கும்போது கடுமையான விஷக் காய்ச்சல் தாக்கியது. அவரது தந்தையான மகாராஜா பிஜய் சிங்கும் அதேபோலக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மகன் பிழைத்துவிட, தந்தை நிமோனியா பாதிப்பு அதிகமாகி இறந்துபோனார். லஷ்மண் சிங்குக்குப் பத்து வயதில் அரியணை ஏற வேண்டிய சூழல். பெயருக்குத்தான் மகாராஜா. மற்றபடி நிர்வாகத்தை எல்லாம் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியாக சமஸ்தானத்தில் நியமிக்கப்பட்ட ரெஸிடெண்ட் டொனால்ட் ஃபீல்ட் கவனித்துக் கொண்டார்.

பெரும்பாலான சமஸ்தானத்து இளவரசர்கள் படிப்பதற்காகவே அஜ்மீர் நகரத்தில் மாயோ கல்லூரி அமைக்கப்பட்டிருந்தது. அங்கே படிப்பை முடித்த லஷ்மண் சிங், 1928-ஆம் ஆண்டில் துங்கர்பூருக்குத் திரும்பினார். மேஜர் ஆன காரணத்தில் சமஸ்தானத்தின் மகாராவலாக (மகாராஜா) பொறுப்பேற்றார். இனி என்ன, பிரிட்டிஷ் ரெஸிடெண்ட் வழிகாட்டுதலில்படி, நிர்வாகத்தைப் பெயரளவில் கவனித்துக் கொண்டால் போதும். மற்றபடி சொகுசாக வாழ்க்கையை ஆண்டு அனுபவிக்கலாம். ஒரு மகாராஜாவின் லட்சணப்படி வேட்டையாடிக் களிக்கலாம். ஆனால், லஷ்மண் சிங்கால் அப்படி இருக்க முடியவில்லை.
காட்டுக்குச் சென்றார். வேட்டையாட அல்ல. காடெங்கும் தேடிப் பார்த்தார்.

காடறிந்த மனிதர்களை விசாரித்தார். எல்லோரும் அதைத்தான் சொன்னார்கள். ‘மகாராவல், இங்கே புலிகள் கொல்லப்பட்டு விட்டன. ஒரே ஒரு புலிகூட மிச்சம் இல்லை.’ இதயம் நொறுங்கிப் போனார் லஷ்மண் சிங். தான் வேட்டையாட ஒரு புலிகூட இல்லை என்பதற்காக அல்ல. தன் ராஜ்ஜியத்தில் வலிமைக்கு அடையாளமாகத் திகழ்ந்த புலிகளை எல்லாம் அழித்துவிட்டார்களே என்று.
லஷ்மண் சிங்கின் முன்னோர்கள் எல்லாமே வேட்டைப் பிரியர்கள்தாம். அவரது தந்தை பிஜய் சிங்கும் புலிகளை விருப்பத்துடன் வேட்டையாடியிருக்கிறார். ரெஸிடெண்ட் டொனால்ட் ஃபீல்ட் வேட்டை வெறியர். தன் நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு சென்று, வன விலங்குகளைக் கொன்று குவிப்பதே அவரது தலையாய பொழுதுபோக்கு. அப்படியாக துங்கர்பூரின் கடைசிப் புலியையும் காணாமல் ஆக்கியிருந்தார்.

புலிகள் இல்லாத காடு ஒரு காடா! இப்படிப் புலிகளை அழித்துக் கொண்டே போனால் வனம் என்ன ஆகும்? பிரிட்டிஷாரின் இந்த வேட்டை வெறிக்கு ஒரு முடிவே கிடையாதா? என் சமஸ்தானத்தில் புலிகளே இல்லை என்பது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்? தன் குமுறல்களை எல்லாம் கொட்டி, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குக் கடிதமாக எழுதி அனுப்பினார் லஷ்மண் சிங். அதில் பிரிட்டிஷார் வேட்டையாட விருப்பத்துடன் தரும் தொடர் அழுத்தத்தையும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.

‘என் சமஸ்தானத்துக்குப் புலிகள் வேண்டும். வேறு எங்கிருந்தாவது இங்கே புலிகளைக் கொண்டு வர அனுமதி தாருங்கள்’ என்று கோரிக்கையும் வைத்திருந்தார். சிலர், லஷ்மண் சிங்கின் குமுறலை வேடிக்கையாகப் பார்த்தனர். ஆனால், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், அதிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டது. ‘விரைவிலேயே துங்கர்பூருக்கு இரண்டு புலிகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று பதில் அனுப்பியது. லஷ்மண் சிங்குக்கு மகிழ்ச்சி. அந்த நாளுக்காகக் காத்திருந்தார். தம் காட்டில் மீண்டும் புலிகள் உலவ, என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தார்.

உலகிலிருந்த பல்வேறு மிருகக்காட்சி சாலைகளுக்குப் புலிகளைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்ட் ஒருவர் இருந்தார். அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. குவாலியர் சமஸ்தானத்தின் காடுகளில் இருந்து இரண்டு புலிகளைப் பிடிக்க வேண்டும். ஓர் ஆண் புலி. ஒரு பெண் புலி. அவற்றைப் பத்திரமாக துங்கர்பூர் காடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். உலகின் முதல் புலி இடமாற்றத் திட்டம் (Tiger Relocation), 1930-ஆம் ஆண்டில் இப்படியாக ஆரம்பமானது.

இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், அப்போதெல்லாம் விலங்குகளை மயக்க ஊசியால் சுட்டுப் பிடிக்கும் முறை கண்டறியப்படவில்லை. கூண்டு வைத்துப் பிடிப்பது, குழி வெட்டிப் பிடிப்பது போன்ற புராதன முறைகளே இருந்தன. புலிகளை உயிருடன் பிடிப்பதில் அனுபவம் கொண்டிருந்த அந்த ஏஜெண்ட், குவாலியர் காடுகளில் திரிந்து கொண்டிருந்த இரண்டு ஆரோக்கியமான புலிகளைச் சிரமப்பட்டுப் பிடித்தார். அவற்றை குவாலியரில் இருந்து ரயிலில் ஏற்றினார்கள். புலி வருது புலி வருது என அந்த ரயில் வண்டி கிளம்பியது, தாலோட் (குஜராத்) நகரத்தை நோக்கி. நேரடியாக துங்கர்பூருக்கு ரயில் வசதி அப்போது இல்லை.