
பேரா.வெ.இன்சுவை
என் பார்வையில் பிரிட்டன்
ஆங்கில இலக்கியத்தில் தேம்ஸ் நதி பற்றி படைப்பாளிகள் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். ஆகவே, அந்நதி பற்றிய கற்பனை என் மனதுக்குள் உண்டு. தற்போது அந்த நதிக்கரையில் நின்றுகொண்டிருக்கும் போது, உள்ளத்து உணர்வுகளை எப்படி வார்த்தைகளால் வடிப்பது என்று தெரியவில்லை.
“நீதானா அந்த தேம்ஸ் நதி? உன் அழகில் மயங்கிப்போய் உன்னைப் பாடியவர்கள் எத்தனை பேர்? உன்னைக் காண எனக்கும் கொடுத்து வைத்துள்ளதே!” – இந்த மாதிரி மனதுக்குள் பிதற்றிக் கொண்டிருந்தேன்.
நாம் ஆறுகளைப் பெண்களாகப் பார்க்கிறோம், தாயாகப் பார்க்கிறோம், கடவுளாக வழிபடுகிறோம். ஆனால் நம் ஆறுகள் மாசடைந்து பாழ்பட்டு இருக்கின்றன. அவர்களோ ஒரு நீர்நிலையாக மட்டுமே பார்க்கிறார்கள், அதைக் கொண்டாடுகிறார்கள்; ஆனால் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள்.
ஒருசில கவிஞர்களின் வரிகளை மட்டுமே உங்களுடன் பகிர்கிறேன்:
எட்மண்ட் ஸ்பென்சர் தனது புகழ்பெற்ற ‘ப்ரோதலாமியான்’ (Prothalamion) என்ற கவிதையில் மீண்டும் மீண்டும் அவர் பயன்படுத்தும் இந்த வரி உலகப் புகழ்பெற்றது: “Sweet Thames, run softly, till I end my song” — “இனிய தேம்ஸ் நதியே, என் பாடலை நான் முடிக்கும் வரை மென்மையாக ஓடிக் கொண்டிரு” என்கிறார்.
டி. எஸ். எலியட் தனது காவியமான ‘தி வேஸ்ட் லேண்ட்’ (The Waste Land) இல் ஸ்பென்சரின் வரியை ஒரு சோகமான சூழலில் பயன்படுத்துகிறார்:
“Sweet Thames, run softly, till I end my song. The river bears no empty bottles, sandwich papers, silk handkerchiefs, cardboard boxes, cigarette ends.” “இனிய தேம்ஸ் நதியே, என் பாடலை நான் முடிக்கும் வரை மென்மையாக ஓடு.” இப்போது இந்த நதியில் காலி பாட்டில்களோ, சாண்ட்விச் காகிதங்களோ, பட்டு கைக்குட்டைகளோ மிதந்து வரவில்லை. அப்போது அந்த நதியின் தூய்மை கெட்டுப் போய் இருந்திருக்கிறது போலும்; தற்போது அவ்வாறு இல்லை.
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தின் மீது நின்று அதிகாலை லண்டனைப் பார்த்தபோது அவர் எழுதிய வரிகளின் தமிழாக்கம் இது: “நதி தனது சொந்த விருப்பப்படி மென்மையாக நகர்கிறது. இறைவா! அந்த வீடுகளே உறங்குவது போல் தெரிகிறது. அந்த மாபெரும் இதயம் (லண்டன்) இன்னும் அமைதியாகக் கிடக்கிறது.”
சர் ஜான் டென்ஹாம் அவரது ‘கூப்பர்ஸ் ஹில்’ (Cooper’s Hill) கவிதையில் தேம்ஸ் நதியை ஒரு லட்சிய மனிதப் பண்புகளோடு ஒப்பிடுகிறார்.
இவ்வாறு தேம்ஸ் நதி பல இடங்களில் பேசப்படுகிறது. அனைத்து வரிகளையும் நான் இங்கே எழுதினால் அது ஆங்கில இலக்கிய வகுப்பு போல் ஆகிவிடும்.
எதற்கு இவ்வளவு மேற்கோள்களையும் சுட்டிக்காட்டினேன் தெரியுமா? ஒரு ஆங்கில இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு தேம்ஸ் நதி மிகவும் முக்கியமானது. அந்த நதியின் கரையில் நின்றுகொண்டு மென்மையாக ஓடும் அதனை ரசித்துக்கொண்டு பரவசம் போங்கள்……
மகன் கேட்டான், “அம்மா! இப்படி இங்கே நின்றுகொண்டு தேம்ஸ் நதியையே கண்களால் விழுங்கி விடுவதைப் போல் பார்க்கிறீர்களே… வாருங்கள், உங்களைப் படகில் அழைத்துச் செல்கிறேன். தேம்ஸ் நதியை உணருங்கள்.” உடனே சம்மதம் சொல்லிவிட்டேன்.
தேம்ஸ் நதியின் மீது படகுப் பயணம்—மறக்க முடியாத இனிய அனுபவம்! லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சாலைப் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அமைதியாகக் கண்டு களிக்க ‘தேம்ஸ் க்ரூஸ்’ (Thames Cruise) சிறந்த வழி.
