பேரா.வெ.இன்சுவை
என் பார்வையில் பிரிட்டன் 05

மனசே வராமல், ‘இலண்டன் ஐ’யை விட்டு வெளியே வந்தேன். ஒரு நிமிடம், இது கனவா, நனவா என்று கூட யோசித்தேன். அன்றைய தினம் வெயில் இருந்தது எங்கள் அதிர்்ஷ்டம். நூற்றுக்கணக்கான புறாக்கள், அவற்றிற்கு ஈடாக அழகான வெள்ளை வெளேர் குழந்தைகள்… கொள்ளை இன்பம் போங்க. ஏறக்குறைய மக்கள் அனைவரின் கைகளிலும் ஃபிஷ் அண்ட் சிப்ஸ் (Fish and Chips), ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் மற்றும் காப்பிக் கோப்பைகள் இருந்தன. ஓர் இடத்தில் அமர்ந்து நாங்கள் வெள்ளை எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் சாப்பிட்டோம்.
அன்று நிறைய ஜப்பானியர்களைப் பார்த்தோம். ஏகப்பட்ட ஜப்பானியர்கள். ஒரே ஆச்சர்யம். என்ன காரணம்? எதற்கு இன்று இங்கே இத்தனை ஜப்பானியர்கள் வந்துள்ளார்கள் என்று யோசித்தேன். அதற்கு விடை அன்று மாலையே கிடைத்தது.

இலண்டன் மாநகரைச் சுற்றிப் பார்ப்பதற்கு ‘‘ஹாப் ஆன், ஹாப் ஆஃப்’’ (Hop-on, Hop-off) பேருந்துகள் மிகவும் வசதியானவை. குறிப்பாக, முதன்முறையாக இலண்டன் செல்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்தச் சேவை பேருந்துப் பயணிகளுக்காகவே பிரத்யேகமாக இயக்கப்படுகிறது.

நாம் 24, 48 அல்லது 72 மணிநேரத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். அந்த வழித்தடத்தில் உள்ள எந்த நிறுத்தத்திலும் நாம் இறங்கி அந்த இடத்தைப் பார்த்துவிட்டு, பிறகு அதே டிக்கெட்டைப் பயன்படுத்தி அடுத்த பேருந்தில் ஏறிக்கொள்ளலாம். இந்தப் பேருந்துகளின் மேல்தளம் திறந்த நிலையில் இருப்பதால், இலண்டனின் அழகைத் தடையின்றி ரசிக்க முடியும். இலண்டனில் பல நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்கினாலும், மூன்று நிறுவனங்கள் மிகவும் பிரபலமானவை.

1. Big Bus Tours (பெரிய நெட்வொர்க் மற்றும் தரமான சேவைக்குப் பெயர் பெற்றது).
2. Toot Bus (குடும்பத்துடன் செல்வோருக்கு ஏற்றது).
3. Golden Tours (இவர்கள் ப்ளூ பேட்ஜ் (Blue Badge) வழிகாட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக மூன்று முக்கிய வழித்தடங்கள் உள்ளன.
சிவப்பு வழித்தடம் (Red Route) இது இலண்டனின் மையப் பகுதியைச் சுற்றும். பிக்பென், இலண்டன் ஐ, வெஸ்ட்மின்ஸ்டர் அபே மற்றும் இலண்டன் டவர் ேபான்ற இடங்களை இது கவர் செய்யும்.

அடுத்து நீல வழித்தடம் (Blue Route) இது மியூசியங்கள் நிறைந்த மேற்குப் பகுதியைச் சுற்றும்.
பச்சை வழித்தடம் (Green Route) இது முக்கிய இரயில் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களுடன் இணைக்கும்.

பேருந்தில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் தமிழ் உட்பட பல மொழிகளில் ஆடியோ விளக்கம் கேட்கலாம்.

நாங்கள் ரெட் பஸ்ஸில் ஏறி, மேல் தளத்துக்குச் சென்று அமர்ந்தோம். இலண்டன் தெருக்களின் வழியாகப் பேருந்து சென்றது. உயரமான கட்டடங்கள், நீண்ட தெருக்கள், அகலம் அதிகம் இல்லை. நம்ம ஊர் ராஜபாட்டை அங்கு இல்லை. ஆங்கிலேயர்கள் பழமை விரும்பிகள். ஆகவே பழைய கட்டடங்களைப் புதுப்பிக்க மாட்டார்கள். அப்படியே பாதுகாப்பார்கள். பேருந்தில் அமர்ந்தவாறே முக்கியமான இடங்களைப் பருந்துப் பார்வை பார்த்துவிட்டு இறங்கினோம். இலண்டன் எப்படி இருக்கும்? என்று கேட்டால் ஓரளவு சொல்லத் தெரியும் என்று தோன்றியது.
அன்று நான் பார்த்த இடங்களைப் பற்றி சொல்லட்டுமா?

முதலில் பக்கிங்ஹாம் அரண்மனைப் பற்றிக் கூறுகிறேன்.

இது இங்கிலாந்து மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், இலண்டனின் மிக முக்கியமான அடையாளமாகவும் திகழ்கிறது.
இது முதலில் 1703-இல் ‘பக்கிங்ஹாம் பிரபு’ என்பவருக்காகக் கட்டப்பட்டது. அதன் காரணமாகவே

இது ‘பக்கிங்ஹாம் இல்லம்’ என பெயர் பெற்றது.

1761 – இல் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இதைத் தன் மனைவி ஷார்லட்டிற்காக வாங்கினார். 1837 – இல் விக்டோரியா மகாராணி அரியணை ஏறிய பிறகு, இது அதிகாரப்பூர்வமாக, அரச குடும்பத்தின் இலண்டன் வசிப்பிடமாக மாறியது. அவரே இந்த அரண்மனையில் தங்கிய முதல் ராணி.
இது உலகின் 14 – ஆவது பெரிய அரண்மனையாகும். விக்டோரியா அரசியாரின் சிலை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. இது மொத்தம் 775 அறைகளைக் கொண்டது. அரச குடும்பத்திற்கான படுக்கை அறைகள் 52, பண்டக அறைகள் 19, அலுவலகங்கள் 92, அலுவலர் படுக்கையறைகள் 188, குளியலறைகள் 78, மேலும் நீச்சல்குளம், தபாலாபீஸ், மருத்துவமனை, திரையரங்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம். அரண்மனைக்குப் பின்புறம் பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்காவும், அரச குதிரை லாயங்களும் உள்ளன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அரண்மனை முழுவதும் சுமார் 350க்கும் மேற்பட்ட கடிகாரங்கள் உள்ளன (எல்லாம் ஓடுகின்றன).

அரச விழாக்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கப் பயன்படும் 19 முக்கிய அறைகள் தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் (நம்ம ராஜாக்களும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்).

பாதுகாவலர்கள் முறை மாறும் நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்கிறது.
இது அரண்மனைக்கு வெளியே இலவசமாகப் பார்க்கக் கூடிய நிகழ்வு.
சிவப்பு நிற சீருடை மற்றும் கரடித் தோலால் ஆன உயரமான தொப்பி அணிந்த வீரர்கள், இசை மேளங்களுடன் அணிவகுத்து வந்து முறை மாற்றுகிறார்கள். இது காலை 11.00 மணிக்குத் தொடங்கும்.