
வரலாறு பேசுவோம்-10
திரு.முகில்
அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகள், பயணத்தின் இடையே தங்கி, ஓய்வெடுத்துச் செல்வதற்கு சத்திரங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக அரசர்கள், பக்தகோடிகள் புண்ணிய யாத்திரை செல்லும்போது தங்குவதற்காகவே சத்திரங்களைக் கட்டினர். வட இந்தியாவில் அவை ‘தர்மசாலா’ என்றழைக்கப்பட்டன. தனிநபர்களால் நடத்தப்பட்ட தர்மசாலாக்களும் இருந்தன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாகத் தம் அதிகார எல்லையை விரிவுபடுத்திய பத்தொன்பதாம் நூற்றாண்டில், அவர்கள் தங்கிச் செல்வதற்காக, பயணப்பாதையில் சத்திரங்கள் தேவைப்பட்டன. இந்தியர்களின் சத்திரங்கள் அவர்களுக்கு ஒத்துப்போகாது அல்லவா. ஆகவே, தமக்கென தங்கும் மாளிகைகள் கட்டத் தொடங்கினர். அவை ‘தாக் பங்களா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.
அதென்ன ‘தாக் பங்களா’?
முதலில் ‘பங்களா’ என்ற சொல்லின் மூலத்தைத் தெரிந்து கொள்வோம். வங்காளத்தில் கூரை வீடுகள், ‘பங்லா’ (Bangla) என்றழைக்கப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியலாளர்கள் தாம் உருவாக்கிய கட்டடங்களை பங்கெலோ (bungelo), பங்கல்லா (bangalla) போன்ற சொற்களால் குறிப்பிட்டனர். அது பின்பு உலகமெங்கும் பயன்படும் Bungalow (பங்களா) என்ற சொல்லாகப் புழக்கத்துக்கு வந்தது.
Dak என்ற இந்தி அல்லது பெங்காலி சொல்லுக்கு, அஞ்சல் / Post என்று பொருள். கிழக்கிந்திய கம்பெனியினருக்கான அஞ்சல்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியிலிருந்தோர் Dak Runners என்று ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்டனர். தௌரியா (Dauriya), ஹர்காரா (Harkara), தாக்வாலா (Dak-Wallah) ஆகிய பெயர்களால் இந்தியர்கள் அவர்களைக் குறிப்பிட்டனர். சாலைகளோ, பாதைகளோ, வாகன வசதிகளோ அதிகம் இல்லாத பதினெட்டாம் நூற்றாண்டில், இந்தத் தபால் ஓட்டக்காரர்களே, செய்திகளோடு ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு உயிரைப் பணயம் வைத்து ஓடினர். வனப்பகுதிகளில் காத்திருக்கும் ஆபத்துகளைத் தாண்டி, அடுத்து காத்துக் கொண்டிருக்கும் இன்னோர் ஓட்டக்காரரிடம் தபால்களை ஒப்படைத்தனர். இந்தத் தொடர் ஓட்டக்காரர்களின் மூலம் அன்றைய ‘தபால் சேவை’ நிகழ்த்தப்பட்டது.
இப்படி இந்தத் தபால் ஓட்டக்காரர்கள் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகளில், அதாவது சுமார் எட்டு முதல் பன்னிரண்டு மைல்கள் தொலைவுக்கு இடையில், பங்களா கட்டும் திட்டத்தை கிழக்கிந்திய கம்பெனியினர் செயல்படுத்தினர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் தாக் பங்களா எது என்பது குறித்த முறையான ஆவணம் எதுவும் இல்லை. 1840 – களில் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் காலத்தில் இவை தபால் வழித்தடங்களில் ஆங்காங்கே கட்டப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கம்பெனியிடமிருந்து, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு அதிகாரம் கைமாறிய பிறகும் இப்படிப்பட்ட பங்களாக்களை உருவாக்கும் பணி தொடர்ந்தது.
அமைப்பும், அமைவிடமும் அதாவது, தாக் பங்களா என்றால் ‘தபால்காரர்களுக்கான மாளிகை’. அங்கே அஞ்சல் ஓட்டக்காரர்கள் மட்டும் தங்கி, வயிராறச் சாப்பிட்டு, ஓய்வெடுத்து, வசதியாகத் தம் பணிகளை மேற்கொண்டனர் என்றெல்லாம் அதீகமாகக் கற்பனை செய்துவிட வேண்டாம். தபால் கொண்டு செல்லும் வழித்தடங்களில் அமைக்கப்பட்டவை என்பதால் அவை ‘தாக் பங்களா’ என்றழைக்கப்பட்டன. அது தபால் ஓட்டக்காரர்கள் சந்திக்கும் புள்ளியாக மட்டுமே இருந்தது.
அவர்கள், தாக் பங்களாக்களுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் அல்லது பங்களா வேலைக்காரர்களுக்கான சிறு வீடுகளில் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மற்றபடி அந்த மாளிகைகளில் தங்கி, சௌகரியங்களை அனுபவித்தது எல்லாம் வெள்ளைக்கார துரைமார்கள்தாம்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் பல்வேறு பணிகளுக்காக, தேசத்தின் வெவ்வேறு முனைகளுக்குச் செல்ல வேண்டியதிருந்தது. அப்போது காட்டுப் பகுதிகளில் தங்குவதற்கு கூடாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றார்கள். தங்கினார்கள். மழைக்காலங்களில் கடும் சிரமம். வன விலங்குகளால் உயிர் ஆபத்து. பாம்புகள் அடிக்கடி வந்து நலம் விசாரித்துவிட்டுப் போயின. ஆக, ஏதோ ஒரு காரியத்துக்காகப் பயணம் செய்யும் வெள்ளைக்காரத் துரைக்கே ‘காரியம்’ செய்ய வேண்டிய துர்சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆகவேதான் ‘தாக் பங்களா’ கட்டும் திட்டத்தை கம்பெனியினர் செயல்படுத்தினர்.
பொதுவாகவே இந்த தாக் பங்களாக்கள் ஐரோப்பிய பாணியில் ஒரே அமைப்பில் வடிவமைக்கப்பட்டன. நான்கு அறைகள் கொண்ட மாளிகை. மத்தியில் ஒரு பெரிய ஹால், அதன் இரண்டு பக்கமும் படுக்கை அறைகள், ஒரு சமையலறை. ஒரு கழிவறை. காற்று வாங்குவதற்காகவும் நிழலுக்காகவும் பங்களாவின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் நீண்ட விராண்டாக்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் மாடியில் அறைகள் கொண்ட தாக் பங்களாக்களும் இருந்தன. சுண்ணாம்புக்கற்கள், பிற கற்கள், செங்கல்கள், சுண்ணாம்புப் பூச்சு ஆகியவற்றைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தினார்கள். மேலே ஓடுகளினால் ஆன கூரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுவாக அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு பங்களாவை கட்டினார்கள். அந்தப் பகுதியிலிருந்த மரங்களைக் கொண்டு மரச்சாமான்களைத் தயாரித்தார்கள்.
பொதுவாக ஏதாவது ஓடையின் பக்கம், குளத்தின் பக்கம், ஆற்றின் பக்கம் மேடான பகுதியில் இந்த தாக் பங்களாக்கள் கட்டப்பட்டன. பங்களாவுக்கான கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டது. வெளியே ஒரு குதிரை லாயம். பங்களாவின் பணியாள்கள் தங்குவதற்கு ஒரு சிறு வீடு அல்லது குடிசை. சுற்றிலும் தோட்டமெல்லாம் பராமரிக்கப்படவில்லை. ஆனால், சிலுசிலுவெனக் காத்து தரும் வேப்ப மரங்கள், ஆல மரங்கள் மற்றும் பழ மரங்கள் வளர்க்கப்பட்டன.
மாளிகைக்குள் இரண்டு கட்டில்கள், ஒப்பனைக்கான மேசை, எழுதுவதற்காக இன்னொரு மேசை, சில நாற்காலிகள், சில சாய்வு நாற்காலிகள், குளியல் தொட்டி, பெரிய விசிறிகள் எனக் குறைந்த அளவிலான மரச்சாமான்கள் இருந்தன. சமையலறைக்குத் தேவையான பாத்திரங்கள், பீங்கான் பாத்திரங்கள், பீங்கான் தட்டுகள் பராமரிக்கப்பட்டன. ஒரு பெரிய கடிகாரம் அங்கே இருந்தது. அது ஓடுமா, ஓடாதா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இந்த பங்களாவைக் கட்டியவர் இன்னார் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் தொங்கியது. அதில் யாரோ ஒரு ஆங்கிலேயர் கம்பீரம் காட்டுவதாக முறைத்துக் கொண்டிருந்தார்.
பங்களாக்களில் படுப்பதற்கான மெத்தை என்பது பராமரிக்கப்படவில்லை. வெள்ளைக்கார அதிகாரிகள் சொந்த மெத்தைகளை, தலையணைகளைத் தூக்கிக் கொண்டே எங்கும் பயணம் செய்தார்கள். பங்களாக்களில் மெத்தைகள் இருந்தால் தாங்கள் இல்லாத சமயங்களில் இந்திய வேலைக்காரர்கள் அதில் படுத்து நாசம் செய்துவிடுவார்கள் என்று வெள்ளைக்காரர்கள் எண்ணியதும் முக்கியமான காரணமே.
‘பிரிட்டிஷ் அரசு அதிகாரியாக இருந்தால், இந்தியாவின் எந்த தாக் பங்களாவிலும் இலவசமாகவே தங்கலாம். அதுவே இந்தியர்களாக, இந்திய அதிகாரிகளாக, அல்லது உயர்குடியினராக இருந்தால் உரிய பிரிட்டிஷ் அதிகாரியிடம் அனுமதி வாங்கிவிட்டு பங்களாவில் தங்க முடியும். அதற்கு வாடகை உண்டு. அந்தச் சமயத்தில் துரைமார்கள் அங்கே தங்கியிருந்தால் இந்திய விருந்தாளிகளுக்கு அனுமதி கிடையாது. 1870 – களில் ஓர் இரவு ஒரு குடும்பம் தங்குவதற்கு சுமார் 8 அணா வரை வாடகை வசூலிக்கப்பட்டது. 1920 – களில் தனி ஆளுக்கு 8 அணாவும், ஒரு தம்பதிக்கு 12 அணாவும் வாடகை வசூலிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு.
