கலாமைக் கொண்டாடுவோம்
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
அப்துல் கலாமின் அண்ணன் மகள் முனைவர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், இராணுவ விஞ்ஞானி முனைவர் வி.டில்லிபாபு கலந்துரையாடல். (பகுதி-1)
என் வாழ்வின் வரங்களில் ஒன்று முனைவர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர் அவர்களின் நட்பு. பெரும்பாலும் வார இறுதிகளில் வரும் அவரது தொலைபேசி அழைப்புகள் மனதுக்கு மிக நெருக்கமானவை. குடும்பம், எழுத்து, பேச்சு என நீளும் உரையாடலின் இறுதியில் எனது துணைவியாரிடமும் குடும்பத்தினரிடமும் பேசுவார். ஆமீன் என்ற ஆசீர்வாதத்துடன் உரையாடலை நிறைவு செய்வார். அவரது பல அறிவுரைகள் மறைந்த எனது தாயின் வார்த்தைகளாகவே நான் வாஞ்சித்துச் சேமிக்கிறேன்.

முனைவர்.நசீமா மரைக்காயர், அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகம்மது முத்து மீரா மரைக்காயர் அவர்களின் மகள். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பயின்ற இவர் முனைவர் பட்டமும் பெற்றவர்.
அப்துல் கலாமின் குடும்ப வரலாற்றை விவரிக்கும் ‘ஆலவிருட்சம்’, விஞ்ஞானி ய.சு.ராஜன் அவர்களுடன் இணைந்து ‘அப்துல் கலாம்: நினைவுகளுக்கு மரணமில்லை’ உள்ளிட்ட 4 நூல்களை எழுதிய எழுத்தாளர். சொற்பொழிவுகள், சமூகச் செயற்பாடுகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்து வருபவர்.
அப்துல் கலாமின் இல்லத்தில் அமைந்துள்ள ‘ஹவுஸ் ஆப் கலாம்’ கண்காட்சியின் மேலாளர், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என அவரது சேவைகள் தொடர்கின்றன.
அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் தொழில்நுட்ப முகத்தை அறிய உடன் பணியாற்றிய விஞ்ஞானிகளின் மூலம் கலந்துரையாடினோம். அது போல அவருடைய குடும்பப் பக்கத்தை அறிய முனைவர்.நசீமாவுடன் ஒரு இணைய உரையாடல் நடத்தினோம். அதிலிருந்து…
உங்கள் சித்தப்பா அப்துல் கலாமுடன் உங்கள் நினைவில் உள்ள முதல் அனுபவம் எது?
எனக்கு ஏறக்குறைய 5 வயது இருக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தார். ‘எந்தப் பள்ளியில் படிக்கிறாய்?’ என்றார் சித்தப்பா. ‘நம்பர் 1 பள்ளியில் படிக்கிறேன்’ என்றேன். ‘அப்படியா, நானும் அந்தப் பள்ளியில் தான் படித்தேன்’ என்றார் சித்தப்பா. ‘அப்படியா நான் உங்களைப் பள்ளிக்கூடத்தில் பார்க்கவேயில்லையே?’ என்று கேட்டேன் நான். சித்தப்பா சிரித்த படி பல ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்ததாகக் கூறியதை அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தச் சிரிப்பான சம்பவம் என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது.
கலாம் அவர்களின் அறை புத்தகங்களால் நிறைந்திருக்கும் என அவரது சக விஞ்ஞானிகள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவரது வாசிப்புப் பழக்கம் பலரும் அறிந்தது. அவரது உரைகளில் கூடப் புத்தகங்களைக் குறிப்பிடுவார். எப்படிக் கலாம் அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது?
எனது பாட்டி ஆசியம்மாள் (கலாமின் தாயார்) வாசிக்கும் பழக்கம் கொண்டவர். கல்கண்டு இதழை வாசிப்பார். தாத்தா அன்றாடம் செய்தித்தாளை வாசிப்பார். அந்த வகையில் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கம் இருந்தது. சித்தப்பா புத்தகம் படிப்பார். எங்கள் பகுதியில் இருந்த எஸ்.ஜி.ஆர் மாணிக்கம் என்பவரின் வீட்டில் நிறைய நூல்கள் இருந்தன. அவர் சித்தப்பாவுக்குப் படிக்கப் புத்தகங்களைத் தருவார். சித்தப்பா படித்துவிட்டு திருப்பித் தருவார்.
படிக்க ஆர்வமுள்ள மனிதர்கள் நிறைந்த குடும்பத்தில் இருந்த அப்துல் கலாமுக்கும் வாசிப்புப் பழக்கம் இப்படி ஏற்பட்டது எனலாம். அவருக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை. எனவே புத்தகங்களே எல்லையற்ற அறிவுப்பரப்பாக அவர் முன்பாக விரிந்திருந்தன.