பேரா.வெ.இன்சுவை
என் பார்வையில் பிரிட்டன் 05

பக்கிங்ஹாம் அரண்மனையை வெளியே இருந்து மட்டுமே பார்த்த சோகத்தில் இருந்த என்னிடம் என் மகன், ‘‘அம்மா, இப்போ உங்களை ஓர் இடத்துக்கு அழைத்துப் போகிறேன். நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்’’ என்றான். நான் ‘‘எங்கே போகிறோம்?’’ என்று கேட்ட போது, ஈஸ்ட் ஹாம் (East Ham) என்று விடை கிடைத்தது.

East Ham – என்றால்? ‘Ham’ என்பது ஆங்கிலச் சொல்லான ‘Hamm’ என்பதிலிருந்து வந்தது. இதற்கு ‘ஆறுகளுக்கு இடைப்பட்ட உலர்ந்த நிலம்’ அல்லது ‘சதுப்பு நிலங்களுக்கு நடுவே உள்ள குடியிருப்பு’ என்று பொருள்.

லீ (Lee), தேம்ஸ் (Thames) மற்றும் ரோடிங் (Roding) ஆகிய மூன்று ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இது அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.

ஒரு காலத்தில் இது காடுகளும், வயல்வெளிகளும் நிறைந்த ஒரு சிறிய கிராமமாக இருந்தது. குறிப்பாக 19 – ஆம் நூற்றாண்டில் இங்கிருந்து இலண்டனுக்குத் தேவையான உருளைக்கிழங்குகள் பெருமளவில் விநியோகம் செய்யப்பட்டன. 1850 – களுக்குப் பிறகு இரயில் போக்குவரத்து ஏற்பட்டவுடன் இது ஒரு பரபரப்பான நகரமாக மாறியது.

ஈஸ்ட் ஹாம் இன்று தெற்காசிய மக்களின், குறிப்பாகத் தமிழர்களின் புகலிடமாகத் திகழ்கிறது. ஹை ஸ்ட்ரீட் நார்த் (High Street North) பகுதியில் நாம் நடந்தால், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு நகரத்தில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும். எங்கு நோக்கினும் நம் மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் இங்கு அதிகம் பேர் வசிக்கிறார்கள்.

இங்கிலாந்தில் இறங்கியதில் இருந்து நம்ம ஊருக்காக ஏங்கிய ஏக்கம் சட்டென விலகியது. நம்ம ஊர் கடைகள், பூசைப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் என அச்சு அசலாக நம்ம ஊரே தான். அங்கும் ஒரு ஹோட்டல் சரவண பவன் (மக்கள் வெளியே காத்திருந்தார்கள் – அங்கும்), அடையாறு ஆனந்தபவன், கேரள உணவகம், நகைக் கடைகள், கொஞ்சம் குப்பைகள், நெகிழி உறைகள் எல்லாமும் அந்தக் கடைகளையும், குப்பைகளையும் பார்த்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ‘பளிச்’ தூய்மை நமக்குப் பழக்கமில்லையே. நடக்க நடக்க எவ்வளவு கடைகளைப் பார்க்க ்முடிந்தது தெரியுமா!

முருகன் இட்லி கடை, சஹானா நகைக்கடை (ஒரே தெருவில் பத்துக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன). லட்சுமி ஜூவல்லர்ஸ், சூரியா ஜூவல்லர்ஸ் என அவ்வளவு நகைக்கடைகள். அட, சென்னை சில்க்ஸ் கூட இருக்கு. மகாலட்சுமி சில்க்ஸ்… அடடா! கேரம் போர்டு (60 பவுண்டுகள்), பாய் (12 பவுண்டுகள்), பொட்டு, கிளிப்புகள், வளையல்கள் என மகளிருக்குத் தேவையான நம் பொருள்கள் அனைத்தும் கிடைக்கின்றன. நம்ம ஊரில் பாதி பொருட்களைக் கடைக்கு ெவளியே வைத்திருப்பது போலவே இங்கும் வைத்திருக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்களின் சட்டம் இவர்களை அசைக்க முடியவில்லைபோலும். தீபாவளி நோன்பு கயிறும், பிற பூசைப் பொருள்களும்கூட கிடைக்கின்றன. நம்ம ஊர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கின்றன. அங்கு குடியிருந்தால் நம்ம ஊர் ஏக்கமே எட்டிப்பார்க்காது. காது குளிரத் தமிழைக் கேட்கலாம்.

ஈஸ்ட் ஹாம் என்பது வெறும் இடமல்ல; அது புலம்பெயர்ந்த மக்களின் கடின உழைப்பு, கலாச்சாரப் பிணைப்பு மற்றும் பழமை மாறாத வரலாற்றின் தொகுப்பு எனலாம்.

கடைகளைப் பார்த்துக் களிப்படைந்த மனம், அடுத்து மகாலட்சுமி கோயிலைக் கண்டதும் கூத்தாடியது. இந்தக் கோயில் 1989ஆம் ஆண்டு ‘லட்சுமி நாராயணா டிரஸ்ட்’ மூலம் கட்டப்பட்டது. 1990ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. கோயில் தென்னிந்தியத் திராவிடக் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சிற்பக்கலைஞர் பத்ம முத்தையா ஸ்தபதி அவர்களின் மேற்பார்வையில் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் உட்புறச் சந்நிதிகள் செதுக்கப்பட்டன.