
உயிரைக் காத்த அறிவியல் கதைகள்!
இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிக்குமார்
ஒவ்வொரு நாளும் நம் பார்வைக்குப் புலப்படாமல் எண்ணற்ற நிகழ்வுகளும் செயல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. அவை நம் கவனத்திற்கு வராத வரை நாம் அமைதியாக இருக்கிறோம். ஆனால், ஒரு தவறு நம் கண்முன்னே நிகழும்போதோ அல்லது நம் கவனத்திற்குத் தெரியவரும்போதோ மட்டுமே நாம் வெகுண்டெழுந்து, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறோம்.அதைப் போன்று நமது உடலில் என்ன நடக்கிறது என்பதை மூளை கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. அதற்காக மிகப்பெரிய நரம்பு மண்டலத்தைத் தகவல் தூதுவர்களாக வைத்துள்ளது.
நமது உடலில் ஏற்படும் வலி என்பது, ஏதேனும் ஆபத்து நிகழ்கிறது என்பதை மூளைக்குத் தெரிவிக்கும் இயற்கையான எச்சரிக்கை அமைப்பாகும். பல நோய்களுக்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை மருத்துவர்கள் கூறுகிறார்கள். அறுவைச் சிகிச்சை என்பது உடலின் உள்ளுறுப்புகள் அல்லது திசுக்களில் மருத்துவர் நேரடியாகச் செயல்படும் மிகவும் நுட்பமான மருத்துவ முறையாகும்.
அறுவைச் சிகிச்சையின் போது தோல் வெட்டப்படும்போதோ, தசைகள் பிரிக்கப்படும்போதோ அல்லது உறுப்புகள் கையாளப்படும்போதோ, இலட்சக்கணக்கான நரம்புகள் ஒரே நேரத்தில் மூளைக்கு வலி உணர்வை அனுப்புகின்றன. அந்த வலியை நோயாளி முழுமையாக உணர்ந்தால், தாங்க முடியாத வேதனை மட்டுமல்லாமல், பயம், பதற்றம், இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்தம் உயர்தல் போன்ற ஆபத்தான உடல் மாற்றங்களும் ஏற்படலாம். சில நேரங்களில் இந்தக் கடுமையான உடல் எதிர்வினைகள் நோயாளியின் உயிரையே ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.
அதனால்தான் மருத்துவ அறிவியல் பொது மயக்க மருந்தை உருவாக்கியது. மயக்க மருந்தின் நோக்கம் வெறும் “தூங்க வைப்பது” மட்டுமல்ல. வலி உணர்வைத் தடுக்கவும், நினைவு உருவாகாமல் பாதுகாக்கவும், தசைகளைத் தளர்வடையச் செய்யவும், அறுவைச் சிகிச்சை முழுவதும் நோயாளி அசையாமல் இருக்கவும் இது உதவுகிறது. இதனால் மருத்துவர்கள் நிதானமாகவும் மிகுந்த துல்லியத்துடனும் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளைச் செய்ய முடிகிறது. எனவே, பொது மயக்க மருந்து என்பது வலியை மறைக்கும் ஒரு மருந்து மட்டுமல்ல. நோயாளியின் பாதுகாப்பையும், அறுவைச் சிகிச்சையின் வெற்றியையும் உறுதிப்படுத்தும் நவீன மருத்துவத்தின் மிகப் பெரிய அறிவியல் சாதனைகளில் ஒன்றாகும்.
“அறுவைச் சிகிச்சை” என்ற வார்த்தையைக் கேட்டாலே இன்று நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. காரணம், இன்றைக்கு அறுவைச் சிகிச்சை மேஜையில் படுக்கும் ஒரு நோயாளி, மருத்துவர் கத்தியை எடுப்பதற்கு முன்பே ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று விடுகிறார். அறுவைச் சிகிச்சை முடிந்ததும், தான் எதையும் உணராமல் புத்துணர்ச்சியுடன் கண் விழிக்கிறார்.
ஆனால், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்பு நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது. அப்போது அறுவைச் சிகிச்சை என்பது நோயாளிக்கும் மருத்துவருக்கும் ஒரு கொடூரமான அனுபவமாக இருந்தது. மயக்க மருந்து இல்லாததால், நோயாளிகள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர். அறுவைச் சிகிச்சையின்போது அவர்கள் அசையாமல் இருக்க, பலமுள்ள நபர்களைக் கொண்டு கைகளையும் கால்களையும் அறுவைச் சிகிச்சை மேசையில் இறுக்கமாகப் பிடிக்கவோ அல்லது கட்டிப்போடவோ செய்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க, வாயில் ஒரு துணியைத் திணிப்பதும் வழக்கமாக இருந்தது. ரம்பம் கொண்டு எலும்புகளை அறுக்கும்போதும், கத்தியால் சதைகளை வெட்டும்போதும் நோயாளிகள் வலியால் துடித்துத் துவண்டனர். இந்தக் கடுமையான வேதனையாலும், அதனால் ஏற்பட்ட உடல் அதிர்ச்சியாலும் (Surgical Shock), அல்லது தீவிர பயத்தாலும் பலர் அறுவைச் சிகிச்சையின்போதே உயிரிழந்தனர். இதனால் மருத்துவர்கள் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், முடிந்தவரை சில நிமிடங்களுக்குள் அறுவைச் சிகிச்சையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
அந்தக் காலத்தில் நோயாளியின் கைகளும் கால்களும் பலரால் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டன.
சிலருக்கு மது அல்லது அபின் (Opium) போன்ற போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டாலும், அவை முழுமையான வலி நிவாரணத்தை வழங்கவில்லை. வேதனையால் அலறும் நோயாளிகளின் குரல் மருத்துவமனைகளை நிரப்பியது. இதனால் பல நோயாளிகள், அறுவைச் சிகிச்சை செய்வதைவிட நோயுடன் வாழ்வதையே விரும்பினர். தலையில் பலமாக அடித்து மயக்கமுறச் செய்யும் முயற்சிகளும் நடந்தன. அறுவைச் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கு ஒரு மரண தண்டனைக்கு நிகரானதாகவே இருந்தது.
இந்நிலையில், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய வேதிப்பொருள் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அது ஈதர் (Ether). இதன் முழுப் பெயர் டைஎத்தில் ஈதர் (Diethyl Ether). இதனைச் சுவாசித்தவர்கள் சிறிது நேரம் மயக்க நிலையில் செல்வதைக் கவனித்தனர். அதேபோல் நைட்ரஸ் ஆக்சைடு (Nitrous Oxide) அல்லது “சிரிப்பு வாயு” (Laughing Gas) எனப்படும் வாயுவும் மகிழ்ச்சியான மயக்க நிலையை ஏற்படுத்தியது.
1800-ஆம் ஆண்டில் ஆங்கில வேதியியலாளர் சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy), நைட்ரஸ் ஆக்சைடு வலியைக் குறைக்கும் தன்மை கொண்டது என்றும், அறுவைச் சிகிச்சைகளில் இதைப் பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்தார். ஆனால் அவரது கருத்து அக்கால மருத்துவ உலகில் பெரிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1830 மற்றும் 1840-களில் அமெரிக்காவில் “ஈதர் ஃப்ராலிக்ஸ்” (Ether Frolics) என்ற பெயரில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மக்கள் ஈதர் அல்லது நைட்ரஸ் ஆக்சைடை சுவாசித்துச் சிரித்தும், ஆடியும், கீழே விழுந்தும் மகிழ்ந்தனர்.
அப்போது ஒரு சுவாரசியமான விஷயம் மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்தது. விழுந்து காயமடைந்தவர்களுக்கு அப்போது வலி தெரியவில்லை. மயக்கம் தெளிந்த பிறகே அவர்கள் காயத்தை உணர்ந்தனர். இதுவே மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது.
