
உயிரைக் காத்த அறிவியல் கதைகள்!
இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிக்குமார்
ஒவ்வொரு நாளும் நம் பார்வைக்குப் புலப்படாமல் எண்ணற்ற நிகழ்வுகளும் செயல்களும் நடந்துகொண்டே இன்று ஒரு மருத்துவரைப் பார்த்தவுடன் நம் கண்களில் முதலில் படுவது அவரது கழுத்தில் தொங்கும் ஸ்டெதஸ்கோப் (Stethoscope) தான். மருத்துவத் துறையின் அடையாளமாக மாறிவிட்ட இந்த எளிய கருவி, உண்மையில் மனித உடலின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை முதன்முறையாக மருத்துவர்களுக்குக் கேட்க வைத்த ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும். இன்று அது மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும், 1816-ஆம் ஆண்டுக்கு முன்பு மருத்துவர்களால் நோயாளியின் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக அறிய முடியவில்லை. இதயத் துடிப்புச் சரியாக உள்ளதா, நுரையீரல் நன்றாகச் செயல்படுகிறதா, மார்புக்குள் நீர் சேர்ந்துள்ளதா போன்ற கேள்விகளுக்குப் பதில் காண ஒரே வழி, மருத்துவர் தனது காதை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்பதுதான்.
உண்மையில் நம் உடல் அமைதியாக இல்லை. நாம் அமைதியாக அமர்ந்திருந்தாலும், உடலுக்குள் எண்ணற்ற ஒலிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதயத்தின் வால்வுகள் மூடும்போது “லப்-டப்” என்ற ஒலி உண்டாகிறது. நுரையீரலுக்குள் காற்று நுழைந்து வெளியேறும்போது மென்மையான மூச்சுச் சத்தம் கேட்கிறது. இரத்தம் தமனிகள் வழியாகப் பாயும்போது நுண்ணிய அதிர்வுகள் உருவாகின்றன. குடல்களில் உணவு நகரும்போது “குர்… குர்…” என்ற செரிமான ஒலிகளும் தோன்றுகின்றன. ஆனால் இந்த ஒலிகள் மிகவும் மென்மையானவை. அவை தசைகள், கொழுப்பு, எலும்புகள் மற்றும் தோலைக் கடந்து வெளிவருவதால், நமது காதுகளுக்கு நேரடியாகத் தெளிவாகக் கேட்பதில்லை.
1816-ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பணியாற்றிய இளம் மருத்துவர் ரெனே லென்னக் (Rene Laennec ) ஒரு இளம் பெண் நோயாளியைப் பரிசோதிக்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் மருத்துவர்கள் நோயாளியின் மார்பில் நேரடியாகக் காதை வைத்து இதயத் துடிப்பைக் கேட்பார்கள். ஆனால் அந்தச் சூழ்நிலையில் அது சங்கடமாக இருந்ததால், லென்னக் வேறு வழியை யோசித்தார். ஒரு காகிதத்தை இறுக்கமாகச் சுருட்டி குழாய் போல மாற்றி, அதன் ஒரு முனையை நோயாளியின் மார்பிலும் மற்றொரு முனையைத் தன் காதிலும் வைத்தார்.
அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இதயத்தின் துடிப்பு, நேரடியாகக் காதை வைத்து கேட்டதைவிட மிகவும் தெளிவாகக் கேட்டது. திறந்த காற்றில் சிதறிச் செல்லும் ஒலி, குழாயின் வழியாக ஒரே திசையில் பயணித்ததே இதற்குக் காரணம். அந்த எளிய காகிதச் சுருள்தான் மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றிற்கான விதையாக அமைந்தது.
இந்த அனுபவத்திற்குப் பிறகு லென்னக் மரத்தால் செய்யப்பட்ட உருளை வடிவக் கருவியை உருவாக்கினார். அதற்கு அவர் “ஸ்டெதஸ்கோப்” (Stethoscope) என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் “Stethos” என்றால் மார்பு என்றும், “Skopein” என்றால் ஆராய்தல் என்றும் பொருள். அதாவது “மார்புக்குள் என்ன நடக்கிறது என்பதை ஆராயும் கருவி” என்பதே ஸ்டெதஸ்கோப்பின் பொருள்.