தலைவருக்கு உதாரணமாக வாழ்ந்தவர் அப்துல் கலாம்
ஏவுகணை விஞ்ஞானி கி.சேகர் –
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சேகர், மூத்த ஏவுகணை விஞ்ஞானி. ஏறக்குறைய 39 ஆண்டுகள் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ஏவுகணை ஆய்வகங்களின் பொது இயக்குனராகச் சேவையாற்றியவர். 10 ஆண்டுகள் அப்துல் கலாம் அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்.
கரக்பூர் ஐ.ஐ.டியில் இளநிலைப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், சென்னை ஐ.ஐ.டியில் முதுநிலைப் பொறியியல் பயின்றவர். கண்டிபிடிப்புகளுக்காக 101 காப்புரிமைகளைப் பெற்ற டாக்டர்.சேகர், ஐக்கிய நாடுகள் சபையின் வேதியியல் ஆயுதத் தடுப்பு நிறுவனத்தின் (OPCW) ரகசியக் காப்பு ஆணையத் (Confidentiality Commission) தலைவராகப் பணியாற்றியவர்.
சென்னை, வேல்ஸ் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். பல ஆண்டுகளாக நான் அவரோடு தொடர்பில் இருக்கிறேன். கோவையில் வாழ்ந்துவரும் டாக்டர் சேகர் அவர்களுடன் கலாம் அவர்களுடனான அனுபவங்களை ஒரு மாலையில் இணைய வழியில் அசை போட்டோம். அதிலிருந்து…

அப்துல் கலாமுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பின் அனுபவம் பற்றி….

ஏவுகணைக்காக, முப்பது டன் உந்து சக்தி கொண்ட திரவ ராக்கெட் எஞ்சினை நாங்கள் வெற்றிகரமாக ஹைதராபாத் டி.ஆர்.டி.எல் (DRDL) ஆய்வகத்தில் சோதனை செய்தோம். 1980களில் நடந்த இந்தச் சாதனை ஆசியாவிலேயே முதல் முயற்சியாகும். அப்போதைய டி.ஆர்.டி.ஓ தலைவர் வி.எஸ்.அருணாசலம் இதைப் பாராட்டினார். இஸ்ரோவிலிருந்து அப்துல் கலாம் அவர்களை அழைத்து வந்து இந்த ராக்கெட் சோதனைக் கூடத்தைக் காட்டினார்.

சில ஆண்டுகளில் அப்துல் கலாம், டி.ஆர்.டி.எல் நிறுவனத்தில் இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சில நாட்கள் கழித்து என்னை அழைத்த அப்துல் கலாம், ராக்கெட் சோதனைக்கூடத்தைப் பார்வையிட விரும்பினார். நான் அவருக்கு சோதனையைப் பற்றி விளக்கினேன். ‘‘இங்கு 60 டன் உந்து சக்தியுள்ள ராக்கெட்டை சோதிக்க முடியுமா?’’ என்று கேட்டார். நான் ‘‘முடியும்’’ என்றேன். இஸ்ரோ – பிரான்ஸ் கூட்டு முயற்சியில் 60 டன் ராக்கெட் ஆராய்ச்சி நிலையில் இருந்து வந்தது. அந்த ராக்கெட்டை மனதில் கொண்டே இந்தக் கேள்வியை கலாம் கேட்டிருக்கிறார் என்பதைப் பின்பு நான் யூகித்தேன். கலாமின் தொலைநோக்குப் பார்வையை எண்ணி வியந்தேன்.

பிருத்வி, அக்னி ஏவுகணைத் திட்டங்களில் அப்துல் கலாம் அவர்களோடு பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

அப்துல் கலாம் திட எரிபொருளால் இயங்கும் ராக்கெட் ஆராய்ச்சியில் இஸ்ரோவில் ஈடுபட்டிருந்தார். அதனால் திரவ எரிபொருள் ராக்கெட் பற்றித் துவக்கத்தில் அவருக்கு முழுநம்பிக்கை இல்லை. நாங்கள் அவருக்கு முழு நம்பிக்கை அளித்து, பிருத்வி உந்து நிலைச் சோதனையை 1987 ஜூலை மாதம் வெற்றிகரமாக முடித்தோம்.

தொடர்ந்து கலாம் என்னை பிரித்வி ஏவுகணை சோதனைகளுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக (Safety Officer) நியமித்தார். எனக்கு இதில் உடன்பாடில்லை. ஆனால் கலாம் பாதுகாப்பு அதிகாரியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய பிறகு நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

1988 பிப்ரவரி 25 ஆம் நாள் பிருத்வி ஏவுகணைச் சோதனை வெற்றி பெற்றது. பிருத்வி இந்தியாவின் முதல் ஏவுகணை என்ற சிறப்பைப் பெற்றது. ஏவுகணை உருவாக்கிய தேசங்களின் பட்டியலில் இந்தியா இணைந்து உலக சாதனை படைத்தது. பாதுகாப்பு அதிகாரியாக நான் இந்தச் சோதனையில் முக்கியப் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அப்துல் கலாம் அவர்கள் ஏவுகணைச் சோதனைகளில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் என்பதைப் பல விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். உங்களுடைய கருத்து என்ன?
உண்மை தான். அக்னி ஏவுகணைச் சோதனைக்குத் தயார் நிலையில் இருந்தது. நான் சோதனையின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். சோதனைக்கு முந்தைய இரவில் கலாம் என்னைக் கேட்டார். ‘‘நாளை மேற்கு வங்காள கவர்னர் ஏவுகணைச் சோதனையைப் பார்வையிட வருகிறார். உடல் பருமனான அவரால் அதிக தூரம் நடக்க முடியாது. அவருடைய வாகனத்தை சோதனைக்கூட வாசல் வரை அனுமதிக்கலாமா? பாதுகாப்பு அதிகாரியான உங்கள் கருத்து என்ன?’’ என்றார்.

‘‘பாதுகாப்புக் கருதி, வெடிபொருள் கொண்ட ஏவுகணை உள்ள இடத்தைச் சுற்றி 15 மீட்டர் சுற்றளவுக்கு மோட்டார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. எனவே, நான் வாகனத்தை அனுமதிக்க முடியாது’’ என்று கூறினேன். ‘‘இருப்பினும் நீங்கள் என் மேலதிகாரி என்பதால் என் கருத்தை மீறி நீங்கள் முடிவெடுக்கலாம்’’ என்றேன். ‘சரி’ என்று கூறிய கலாம் சென்று விட்டார். மறுநாள் கவர்னரின் கார் 15 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே நிறுத்தப்பட்டு, கவர்னர் இறங்கி நடந்து வந்து பார்வையிட்டார். கலாம் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் தந்தார். அதிலும், இளைய விஞ்ஞானியின் கருத்துக்கும் மதிப்பளித்ததைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன்.