
கேட்டலும் அறிதலும் –
திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்
வணக்கம் ஐயா..
வணக்கம். வணக்கம். பிரேயர் முடிந்ததும் ஏன் முண்டியடித்துக்கொண்டு வருகிறீர்கள். எறும்பு போல வரிசையாக வரத் தெரியாதா?
எறும்புகள் நேர்கோட்டில் வரிசையாக வருவதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருக்கிறதா ஐயா?
எறும்புகளின் உணவுக்கான தேடல்தான் அவை வரிசையாகச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றன எனச் சொல்லலாம்.
நீங்கள் கூறுவது புரியவில்லை ஐயா. விரிவாகச் சொல்லுங்களேன்..
ஒரு எறும்பு உணவைத் தேடித் தன் புற்றிலிருந்து வெளியேறும் போது, அது சீரற்ற பாதையில் தான் பயணிக்கும். அந்த எறும்பு ஒரு உணவைக் கண்டறிந்ததும், அதை எடுத்துக்கொண்டு மீண்டும் புற்றுக்குத் திரும்பும்போது, தன் உடலின் பின்பகுதியால் தரையைத் தொட்டுக்கொண்டே வரும். அப்போது அதன் உடலில் இருந்து ஃபெரோமோன் என்ற வேதிப்பொருள் தரையில் ஒரு வாசனைமிக்கத் திரவப் பாதையாகப் பதிகிறது. புற்றுக்குள் இருக்கும் மற்ற எறும்புகள் தங்களின் உணர் கொம்புகள் மூலம் அந்த வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டே அதே பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றன. அவையும் உணவை எடுத்துக்கொண்டு திரும்பும்போது, அதே பாதையில் மேலும் ஃபெரோமோன் வாசனையைச் சேர்த்துக்கொண்டே வரும். இதனால் அந்தப் பாதையின் வாசனை அடர்த்தியாகும். எறும்புகளின் வரிசையும் தொடரும்.
எறும்புகளுக்கு இருப்பது போல நமக்கு அப்படி எந்த ஏற்பாடும் இல்லையே ஐயா?
ஏன்? நமக்குத்தான் பகுத்தறிவு இருக்கிறதே? அதைப் பயன்படுத்த முடியாதா?. கடைகளில், காட்சிக்கு வைக்கும் கடிகாரத்தில் கூட அவை என்ன நேரம் காண்பிப்பதாக வைத்தால் பாசிட்டிவ் மனநிலை ஏற்படும் என்று கூட நாம் கணித்து வைத்திருக்கிறோமே? அப்படியிருக்கையில் வரிசையாக வருவதற்குச் சொல்லியா தரவேண்டும்?. ஒழுங்கு என்பது ஒரு பண்பு.
ஐயா, கடிகாரத்தில் நேரம் வைப்பதில் கூடப் பாசிட்டிவ்வான விஷயமா?
ஆமாம். சுவர் கடிகாரம் விற்பனைச் செய்யும் கடைகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கடிகாரங்களில் நேரம் 10:10 என்றிருக்கும். அதுபோலக் கடிகாரம் தொடர்பாக வரும் விளம்பரங்களும் 10:10-ஐ காட்டும். இது ஏன் என்ற கேள்விக்கு, Ulysse Nardin என்னும் சுவிஸ் வாட்ச் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சுசேன் ஹர்னி, ‘10:10 அமைப்பு, சிரிக்கும் முகம் (SMILEY FACE) போன்ற தோற்றத்தைத் தருவதால், வாடிக்கையாளர்களிடம் ஒரு பாசிட்டிவ் மனநிலையை ஏற்படுத்துகிறது’ என்கிறார். லக்ஸரி வாட்ச் விற்பனையாளரான Tourneau நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆண்ட்ரூ பிளாக், “இவ்வாறு வைத்தால் டயல் மிகவும் கவர்ச்சியாகத் தெரிகிறது” என்கிறார். சுருக்கமாகச் சொன்னால் டிசைன் மற்றும் சமச்சீர் தன்மையை (symmetry) மேம்படுத்தவே இப்படிச் செய்வதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.
உலகில் எல்லா நிறுவனங்களும் காட்சிக்கு வைத்திருக்கும் கடிகாரங்களில் 10:10 என்ற நேரத்தைத்தான் காட்டுகின்றனவா?
அப்படிச் சொல்லமுடியாது. Apple Watch விளம்பரங்களில் பெரும்பாலும் 10:09 நேரம் காட்டப்படுகிறது. என்றாலும் கடிகாரம் மற்றும் வாட்ச் துறையில் 10:10 நேரத்தைப் பயன்படுத்தும் வழக்கம் பல தசாப்தங்களாக ஒரு எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. அடுத்த முறை வாட்ச் விளம்பரத்தில் 10:10 நேரத்தைப் பார்த்தால், அது தற்செயல் அல்ல, ஒரு கச்சிதமான மார்க்கெட்டிங் உத்தி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஐயா.. வெப்பம் அதிகமாக இருக்கிறதே.. பள்ளிகளின் வேலை நாட்களைக் குறைக்கலாமே..?
நீ பள்ளிக்கூடம் வராமல் இருப்பதற்காக வெயிலைக் காரணம் காண்பிக்கிறாய். நமக்காவது பரவாயில்லை. ஐரோப்பாவில் ஏற்பட்ட தீவிர வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டதாம். ஜூன் மாத இறுதியில் இருந்து ஐரோப்பிய கண்டத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது. ஐப்பானில் வெயிலுக்குப் பயந்து அலுவலகங்களுக்கு டிஷர்ட் போட்டுவரலாம் என விதிகளைத் தளர்த்தியிருக்கிறார்கள். நம் நாட்டிலும் கடுமையான வெயிலடிக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிக வெயிலை எதிர்கொள்ளும் உலக நகரங்களின் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மதுரை 7 – ஆவது இடத்திலும், சென்னை 49 – ஆவது இடத்திலும், கொல்கத்தா 45 – ஆவது இடத்திலும் உள்ளது.
கடும் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி ஐயா?
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்து, உடலைக் பாதுகாப்பாக வைத்திருக்க மிக முக்கியமான வழிமுறைகள் எனப் பார்த்தால் முதலில் உடலின் நீர்ச்சத்தைப் பராமரித்தல் அவசியம். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இளநீர், கம்பங்கூழ், மோர், எலுமிச்சை சாறு, மற்றும் பதநீர் போன்ற உடலைக் குளிர்விக்கும் பாரம்பரிய பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.. பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் கார்பனேட்டட் குளிர்பானங்களைக் குடிக்காதீர்கள். இவை உடலில் உள்ள நீர்ச்சத்தை வேகமாக உறிஞ்சி, சீக்கிரமே சோர்வடையச் செய்துவிடும். நீங்கள் எல்லோரும் போதிய தண்ணீர் குடிக்கிறீர்களல்லவா?
பாருங்க ஐயா.. நான் இரண்டு பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வந்திருக்கேன் எனக் கூறியவாறே பாட்டில்களைத் தூக்கிக் காண்பித்தான் சதீஷ் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்திருக்கிறாய். இதற்குப் பதிலாகத் தரமான பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரவேண்டும்.