
அறிவியலின் கதை – 8
– திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
அறிவியல் உலகில் தவிர்க்க முடியாத பெயர் அரிஸ்டாட்டில். நவீன அறிவியல் இயங்குவதற்கான அடித்தளத்தை 2000 – ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கித் தந்தவர். அறிவியல், அரசியல், தர்க்கவியல் எனப் பன்முகம் கொண்டு இயங்கியவர்.
அரிஸ்டாட்டில் கி.மு. 342 – இல் கிரேக்கத்திலுள்ள ஸ்டகிரா எனும் இடத்தில் பிறந்தார். 17 – வயதில் ஏதென்ஸ் நகருக்குச் சென்று அறிஞர் பிளேட்டோ நடத்திய பள்ளியில் இணைந்தார். சுமார் 20 வருடங்கள் அங்கேயே இருந்தார். அரிஸ்டாட்டில் ப்ளேட்டோவின் சிறந்த மாணவர். ஆனால் ஆசிரியர் காட்டிய வழியை அப்படியே பின்பற்றாமல் மாற்றுப்பார்வையில் தான் கற்ற விஷயங்களை அணுகினார்.
பிளேட்டோ உலகம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார். அழகு என்பது என்ன? உண்மை என்பது என்ன? அறிவு என்பது என்ன? சமூகத்தை ஒழுங்கமைப்பது எப்படி? மனிதர்கள் நல்லவர்களாக என்ன செய்ய வேண்டும்? மனிதர்கள் வாழ்வதற்கான விதிகள் எப்படி எழுதப்பட வேண்டும்? இப்படிப் பல கேள்விகள்.
அரிஸ்டாட்டிலுக்கும் இதே கேள்விகள் இருந்தன. ஆனால் பிளேட்டோவைப்போல் வெறும் சிந்தனையாகவே இல்லாமல், பரிசோதனைகள் மூலமும், ஆராய்ச்சிகள் மூலமும் இந்தக் கேள்விகளுக்கான விடை தேட முயன்றார். இதுவே இன்றைய அறிவியல் முறைமைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
அரிஸ்டாட்டில் நிஜ உலகையும் இயற்கையையும் அறிய ஆர்வம் செலுத்தினார். பூமி, அதிலுள்ள உயிர்கள், விண்வெளி ஆகியவற்றையும், எப்படி இயற்கையாக சில பொருட்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன, நகர்கின்றன, மாறுகின்றன என்பதை எல்லாம் உற்று நோக்கினர். இயற்கை உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய விரும்பினார்.
அலெக்ஸாண்டரின் ஆசிரியர்
324 – கி.மு. – ல் அரிஸ்டாட்டிலுக்கு மிகப்பெரிய பதவி ஒன்று தேடி வந்தது. மசெடோனியாவின் மன்னன் மகா அலெகஸாண்டருக்கு ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு அது. அதனை ஏற்றுக்கொண்டார் அரிஸ்டாட்டில். அவருக்குத் தத்துவத்தையும், ஞானத்தையும் வழங்கி வழிகாட்டினார்.
அலெக்ஸாண்டர் படையெடுத்துச் சென்று நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியவுடன் ஏதென்ஸில் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார் அரிஸ்டாட்டில். அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளைப்போலச் சாதாரணமான பள்ளி கிடையாது. அது ஒரு நடைப்பள்ளி. அதாவது அரிஸ்டாட்டிலும் அவரது மாணவர்களும் நடந்துகொண்டே பல விஷயங்கள் குறித்து விவாதிப்பார். இதனாலேயே அந்தப் பள்ளி Peripatos என அழைக்கப்பட்டது. கிரேக்கத்தில் பெரிபடோஸ் என்றால் நடைபாதை என்று அர்த்தம். அரிஸ்டாட்டிலும் அவரது சீடர்களும் Peripatetics என அறியப்பட்டனர். அலெக்ஸாண்டர் இறந்தவுடன் அரிஸ்டாட்டில் நகரைவிட்டு வெளியேறி தனது ஆய்வுகளிலேயே முழு நேரத்தையும் செலவிட்டார்.
இயற்கையின் வகைகள்
அரிஸ்டாட்டில் இயற்கையை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்தார். முதல் பகுதி உயிர்கள் பற்றியது. அதாவது, தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் பற்றிய ஆய்வுகளை அவர் முன்னெடுத்தார். இரண்டாவது, இயக்கமும், மாற்றமும் பற்றியது. அதாவது ஒரு பொருள் எவ்வாறு இயங்குகிறது என்ற அடிப்படை இயற்பியலை ஆய்வு செய்தார். மூன்றாவது சொர்க்கம் பற்றியது. அதாவது, வானம் பற்றியது. பூமிக்கும் வானில் உள்ள சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்தார்.
உயிரினங்களின் உடல் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உடல் உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என ஆராய்ந்தார். ஒரு உயிரினம் பிறப்பதற்கு முன்பு எப்படி இருக்கும், கருவாக வளரும் தருவாயில் எப்படி இருக்கும், பிறந்தவுடன் எப்படி வளரும் என்பதை எல்லாம் ஆராய்ந்தார். அப்போது நுண்ணோக்கி (Microscope) என்கிற கருவியே கிடையாத காலகட்டம். இருந்தாலும் அரிஸ்டாட்டிலால் உயிர்களின் உடலில் நடக்கும் மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
கோழி முட்டை குறித்த அவரது ஆய்வு பிரபலமானது. ஒரு கோழியைத் தேர்ந்தெடுத்து அது இடும் முட்டைகளைச் சேகரித்தார். பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முட்டையாய் உடைத்து அதனுள் கரு எப்படி வளர்ச்சி பெறுகிறது என்று ஆராய்ந்தார். கோழிக் குஞ்சு உருவாவதற்கு முதல் நிலை ஒரு சிறிய ரத்தத் துளி என்று அறிந்தார். அந்த ரத்தத் துளி இதயமாவதைக் கவனித்தார். இதனால் இதயம் என்பதுதான் ஒரு உயிரினத்தின் முக்கியமான பகுதி என அறிந்துகொண்டார்.
இதனாலேயே நம் உணர்வுகளுக்கும் நம் சிந்தனைக்கும் இதயமே மையம் என அவர் நினைத்தார். அப்போது பிளேட்டோவும், ஹிப்போகிரெட்ஸின் சீடர்களும் உணர்ச்சிகளுக்கும் சிந்தனைக்கும் மூளையே காரணம் எனக்கருதினர். இதனைத்தான் நவீன அறிவியலும் கூறுகிறது. ஆனால் அரிஸ்டாட்டிலோ இதயம்தான் காரணம் என்றார். நமக்கு பயம் வரும்போதும் நாம் பதற்றம் அடையும்போதும் நமது இதயம் வேகமாகத் துடிப்பதைப் பார்க்கிறோம். இதனால் இதயமே அனைத்துக்கும் மையம் என்றார்.
இன்றைக்கு அது தவறு என்று நிரூபணமானாலும், அன்றைக்கு அறிவியல்பூர்வமான சோதனைகள் மூலமே அதை அறிந்தார் என்பதால் முக்கியக் கருத்தாகப் பார்க்கப்பட்டது.
மனிதர்கள்தான் உயர்ந்தவர்கள்
அதேபோல் மனிதர்களைப்போன்ற உயர் விலங்குகளுக்கு ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக அவர் நம்பினார். ஆனால் ஆன்மாவைப் பேய் என்றோ, அமானுஷ்யம் என்றோ அவர் கருதவில்லை. மனிதத் தன்மையைத் தருவதில் ஆன்மாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதகாக் கருதினார்.
நமக்கு வேண்டிய ஊட்டச்சத்து, இனப்பெருக்கம், உணர்ச்சிகள், ஆசை, இயக்கம், கற்பனை, தர்க்கம் ஆகியவை இந்த ஆன்மாவால்தான் மனிதர்களுக்குள் இருக்கிறது என்று நம்பினார். இந்த ஆன்மாவே மனிதர்களை மற்ற விலங்குகளில் இருந்து தனித்துக் காட்டுகிறது எனக் கூறினார்.
அரிஸ்டாட்டிலைப் பொறுத்தவரை எல்லா உயிரினங்களுக்கும் சில அடிப்படைத் திறன்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரே அளவு திறன் கிடையாது என்பது அவரது கருத்து.
உதாரணமாகத் தாவரங்கள் என்பவை வளரும், இனப்பெருக்கம் செய்யும். ஆனால் அவற்றால் நகர முடியாது. அதேசமயம் பூச்சிகள் நகரும், அதன் சுற்றுப்புறத்தை உணரும். இதுபோல ஒவ்வொரு விலங்காக செல்லச் செல்ல அவை கொஞ்சம் கொஞ்சமாக கூடுதல் திறனைப் பெற்றுள்ளன. இறுதியாக மிக உயர்ந்த உயிரினமான மனிதர்களுக்கு `தர்க்கம்’ எனும் உயரிய சிந்தனை அமைந்திருக்கிறது என்று கூறினார். மனிதர்களால் ஒரு விஷயத்தைக் கவனமாகச் சிந்தித்து, ஆய்வு செய்து, முடிவு எடுக்க முடியும் என்பது அவரது கூற்று.
இதனாலேயே அரிஸ்டாட்டில் மனிதர்களை இயற்கையில் உயர் மட்டத்தில் வைத்தார். அவரைப் பொறுத்தவரை உயிரினங்களின் வாழ்க்கை என்பது ஏணிப்படி போன்றது. மிக எளிய உயிரினங்கள் ஏணிப்படியின் கீழே இருக்கும். சிக்கலான உயிரினங்கள் மேலே இருக்கும். அதாவது, தாவரங்கள் கீழே, விலங்குகள் மேலே, மனிதர்கள் உச்சத்தில் என்பதே அவர் கருத்து.
இந்தக் கருத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னால் வந்த விஞ்ஞானிகள்கூட இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் தர்க்கங்களுக்கு வலு சேர்த்தனர்.