
கேட்டலும் அறிதலும் –
திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்
வணக்கம் ஐயா
கடந்த முறை சந்தித்தபோது “கோடை வெப்பத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என ஒருபக்கக் கட்டுரை எழுதி வாருங்கள்” எனச் சொல்லியிருந்தேன். எத்தனை பேர் எழுதி வந்திருக்கிறீரகள்? (எல்லோரும் கையை உயர்த்த..) வெரிகுட்.. எல்லோரும் அதனை மேஜையில் வையுங்க. நான் படிச்சிட்டு பிறகு தொகுத்துச் சொல்றேன். வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிச்சிட்டு வருது. எல்லோரும் நிறையத் தண்ணீர் குடிக்கிறீர்களா?
ஆமாங்க ஐயா.. நான் சுத்தமான ஆர்.ஓ. தண்ணீர் குடிக்கிறேன்… எனக் குரல் கொடுத்தான் ரமேஷ். “எங்க வீட்டில் கேன் வாட்டர்..” என்றான் சுரேஷ்.
நல்லது. ஆர்.ஓ (RO) தண்ணீரை குடிப்பதால் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் கன உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் அகற்றப்பட்டு, தூய்மையான மற்றும் பாதுகாப்பான நீர் கிடைக்கிறது. எனவே இது பாதுகாப்பானது.
ஆனால் இந்தத் தண்ணீரில் பிரச்சனையும் இருக்கு. தண்ணீரிலுள்ள தாதுச்சத்துகள், நம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் உதவக்கூடியவை. இவற்றின் அளவை டோட்டல் டிஸ்ஸால்வ்டு சாலிட்ஸ் (TDS- Total Dissolved Solids) என்ற முறையில் கணக்கிடுவார்கள். இது 300 என்ற அளவில் இருக்க வேண்டும். அதுதான் உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. ஆனால், இன்று இந்த ஆர்.ஓ வாட்டரில் இந்த டிடிஎஸ் அளவானது, 25-க்கும் குறைவாக இருக்கும். அதன் விளைவாக, நம் உடலுக்குத் தேவையான தாதுச்சத்துகள் கிடைப்பதில்லை. நம் எலும்புகளும், நரம்புகளும் பலவீனமடைய இதுவும் ஒரு காரணமாகிறது. குறிப்பாக, வளரும் குழந்தைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து குறைந்த தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பது இதய நோய்கள் (Cardiovascular diseases) ஏற்படும் ஆபத்தும் உண்டு. மேலும், இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில நரம்பியல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கேன் வாட்டரிலும் ஆர்.ஓ டெக்னிக் பயன்படுத்தப்படலாம். தவிர, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்படுவதால், அது தொற்றுப் பாதிப்புக்கும் காரணமாகிறது.
என்ன ஐயா இவ்வளவு பாதிப்பு இருக்கிறதே இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க, ஆர்.ஓ தண்ணீரில் மீண்டும் தாதுக்களைச் சேர்க்கும் `ரீமினரலைசர்’ (Remineraliser)) பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்குக் குழாய் தண்ணீரே பெட்டர். குழாய் தண்ணீரில் குளோரின் சேர்க்கப்பட்டுதான் நமக்கு வருகிறது. ஆனால் நமக்கு வந்து சேரும் இடைவெளியில் அதிலும் ஏதேனும் கலப்பதால் தொற்று சேர வாய்ப்புகள் அதிகம். எனவே, குழாய் தண்ணீர் வரும் இடத்தில் ஃபில்டர் பொருத்தி, அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். லாரியில் வரும் குடிநீரை எடுத்து அதை 3 நிமிடங்களுக்கு நன்றாகக் கொதிக்கவைத்து, இறக்கி அன்றைய நாள் முழுவதும் பயன்படுத்தலாம் இதுவும் தொற்றுப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். சூடான நீரை மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடியுங்கள் நல்லது.
அது எப்படி ஐயா மண்பானைத் தண்ணீர் மட்டும் குளிர்ச்சியாக இருக்கிறது?
மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதன் பின்னணியில் “ஆவியாக்கக் குளிர்ச்சி” (Evaporative Cooling) என்ற அறிவியல் கொள்கை உள்ளது. மண் பானையின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான நுண்ணியத் துளைகள் உள்ளன. இதன் வழியாக நீர் கசிந்து பானையின் வெளிப்பகுதியை அடையும் போது, அது சுற்றியுள்ள வெப்பத்தை எடுத்துக் கொண்டு ஆவியாகிறது. இந்தச் செயல்பாட்டின் போது பானையின் உள்ளே இருக்கும் நீரின் வெப்பம் குறைக்கப்பட்டு, அது இயற்கையாகவே ஜில்லென்று மாறுகிறது.
இதனால் நன்மையா? தீமையா?
களிமண் இயற்கையிலேயே காரத்தன்மை (Alkaline) கொண்டது. இது தண்ணீரின் அமிலத்தன்மையைச் சமன் செய்து, உடலின் pH அளவைச் சீராக வைக்க உதவுகிறது.
மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இயற்கையாகவே கலக்கின்றன. இது தொண்டை எரிச்சலைத் தடுப்பதுடன், சிறுநீர் எரிச்சல் போன்ற கோடைகாலப் பிரச்சினைகளையும் குணப்படுத்த உதவுகிறது.