முயற்சி தரும் முன்னேற்றம்!

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ந்தச் சிறுவனுக்குப் பதிமூன்று வயது நடந்த போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்று புற்றுநோயின் நான்காம் நிலையில் அச்சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான். தாய் டெரி ஸ்வர்னர் தன் மகனிடம் அதைக் கூறாமல், ‘‘உனக்கு ஒரு நோய் வந்துள்ளது; அதிலிருந்து நீ மீள்வாய்’’ என்று மட்டுமே சொல்லி வந்தார். மருத்துவர்கள் ‘‘உங்கள் மகன் இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே அதிகபட்சம் உயிரோடு இருப்பான்’’ என்று சொன்னார்கள். தாய், தந்தையர் அந்தச் சிறுவனிடம் அதுபற்றிப் பேசவில்லை.

சீன் ஸ்வர்னர் என்ற அந்தச் சிறுவனுக்குப் பதினாறு வயது நடந்த போது இன்னொரு புற்றுநோய் தாக்கியது. உலகில் இரண்டு புற்றுநோய் தாக்கிய முதல் மனிதர் என்ற பரிதாப நிலையை அடைந்தார் சீன் ஸ்வர்னர். இப்போது விஷயம் சீன் ஸ்வர்னருக்கும் தெரிந்துவிட்டது. காரணம், இன்னும் பதினான்கு நாட்கள் தான் உயிரோடு இருப்பார் சீன் ஸ்வர்னர் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆஸ்கின்ஸ் சார்கோமா எனப்படும் புற்றுநோய் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அவரது ஒரு நுரையீரல் செயலிழந்தது. மிகக் கடுமையான சிகிச்சைகளைக் கொடுத்து ஒரு நுரையீரலை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். இன்றுவரை அந்த ஒற்றை நுரையீரலுடன் தான் சீன் ஸ்வர்னர் வாழ்கின்றார்.

மருத்துவமனையில் படுக்கையிலிருந்து எழுந்து கழிவறை செல்வதற்கு ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தார் சீன் ஸ்வர்னர். அப்போது ‘‘எனக்கு புற்றுநோய் இருக்கும்; ஆனால் அதனை வெற்றிகொண்டு சாதிப்பேன்’’ என்று தன் மனதுக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டார்.
சீன் ஸ்வர்னர் தன் தந்தையிடம் முதலில் ‘‘நான் எவரெஸ்ட் சிகரத்தில் எனது புற்றுநோயுடன் ஏற விரும்புகின்றேன்’’ என்ற கூறினார். அப்போது அவரது தந்தை ‘‘பனிக்கட்டிகளுக்கு இடையே உன்னைக் கொண்டு சென்று உன்னைக் கொலை செய்ய நாங்கள் விரும்பவில்லை’’ என்று வேதனையுடன் பதில் சொன்னார்.

இரண்டு முறை புற்றுநோய்

பள்ளி மைதானத்தில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது தனது கால் முட்டியில் வலிக்கிறது என்று தன் தாயிடம் வந்து சொன்னார் சீன் ஸ்வர்னர். உடனே பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே போன்ற பல மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். இறுதியில் ‘ஹாட்ஜ்ஹின்ஸ்’ லிம்போமா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்கள். ‘‘இது புற்றுநோய் என்று என் பெற்றோருக்குச் சொல்லப்பட்டதால் அதை என்னிடம் மறைத்தார்கள். என் தூரத்து உறவினர் ஒருவர் புற்றுநோயாக இருக்கலாம் என்று என்னிடம் தனியாகப் பேசிய போது குறிப்பிட்டார். என் பெற்றோர்கள் அப்படிச் சொல்லவில்லையே என்று சிந்தித்த நான் மருத்துவமனையிலிருந்த நூலகம் சென்று அது என்ன நோய் என்று அறிந்து கொண்டேன்’’ என்று ஒரு பேட்டியில் கூறினார். அதேசமயம் மூன்று மாதத்தில் அவர் இறப்பைச் சந்திப்பார் என்ற செய்தி அவருக்குத் தெரியவில்லை.

சீன் ஸ்வர்னரின் பெற்றோர்கள் அதைக் கூறவில்லை. மாறாக, புரொக்கோலி, முட்டை ஆகிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். தொடர்ந்து அவரது உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்தால் நலமடையலாம் என்று மருத்துவர்கள் சொன்னதாகக் கூறி நல்ல, சரியான உணவுகளைக் கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள்.

இச்சூழலில் தான் பதினாறு வயதில் இரண்டாவது புற்றுநோய் வந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு ஹீமோதெரபி கொடுக்கப்பட்டு புற்றுநோய் கட்டி கரைக்கப்பட்டது. பெற்றோர் மீண்டும் புற்றுநோய் வந்துள்ளதையும், பதினான்கு நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் சீன் ஸ்வர்னர் என்று சொல்லப்பட்டதும் உடைந்து போனார்கள். எப்படியாவது உயிர் பிழைக்க வைக்க வேண்டும் என்று தினமும் தொடர்ந்து ஹீமோதெரபி கொடுத்தார்கள். மூன்று மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்தது.

வாரத்தின் ஐந்து நாட்கள் ஹீமோதெரபி கொடுக்கப்பட்டது. பின்பு ரேடியேஷன் தரப்பட்டது. இதனால் மிகவும் வலுவிழந்த நிலையில் இருந்த சீன் ஸ்வர்னர் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு மருத்துவர்கள் சீன் ஸ்வர்னரை கோமா நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். கோமா நிைலயிலே இருந்த படியே ஓராண்டு முழுவதும் தீவிர சிகிச்சை சீன் ஸ்வர்னருக்குத் தரப்பட்டது.

பதினான்கு நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று சொல்லப்பட்ட சீன் ஸ்வர்னர், பதினைந்தாம் நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் விழித்தெழும் போது மருத்துவர்கள், பெற்றோர்கள் அவர் உயிரோடு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் சீன் ஸ்வர்னர் உறங்கி எழுந்ததும் ‘‘ஆஹா இன்று நான் உயிரோடு இருக்கிறேன்’’ என்று மகிழ்ச்சியடையக் கூடிய மனநிலைக்கு வந்துவிட்டார். ஒவ்வொரு நாளும் அவரைக் கண்ட நண்பர்களும் இதையே உணர்ந்தார்கள், வெளிப்படுத்தினார்கள். இப்படி சீன் ஸ்வர்னர் மனதில் தினம் உயிர் பிழைப்பதே அதிசயம், மகிழ்ச்சியானது என்று பதிய ஆரம்பித்தது. இந்த எண்ணத்தையே நேர்மறையாக எடுத்துக்கொண்டு வாழ்வை நம்பிக்கையோடு கொண்டு சென்றார் சீன் ஸ்வர்னர்.