
முயற்சி தரும் முன்னேற்றம்! (புதிய தொடர்)
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
மார்ச் மாதம் 8-ஆம் தேதியை அகில உலக மகளிர் தினமாக உலகம் கொண்டாடுகின்றது. உண்மையில் பெண்களின் முன்னேற்றத்துக்காக, அடிமைத்தன ஒழிப்புக்காக, உரிமைக்காகத் தேர்வு செய்யப்பட்ட நாள் தான் மார்ச் 8 – ஆம் தேதியாகும்.
உலகளவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்று உலகளாவிய பெண்கள் வாக்குரிமை இயக்கம் போராடிய போது, சர்வதேச மகளிர் தினம் ஒன்று உருவாக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
1909 – ஆம் ஆண்டு, அதாவது 20 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 28 – ஆம் தேதி நியூயார்க் நகரில் அமெரிக்கப் பொதுவுடைமைக் கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்தில் ‘மகளிர் தினம்’ என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆர்வலரும், அரசியல்வாதியுமான கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) என்பவரால் 1910 – ஆம் ஆண்டு கோபன்ெஹகனில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் ஒரு நாளை மகளிர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.
அடுத்த ஆண்டு ஐரோப்பா நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தின ஆர்ப்பாட்டங்கள் பலவும் நடந்தன. உழைக்கும் பெண்கள் தினமாக சர்வதேச மகளிர் தினம் அமைய வேண்டும் என்று எழுதியும், பேசியும் வந்தார் ஜெட்கின்.
கிளாரா ஜெட்கின்
கிளாரா ஐஸ்னர், ஜெர்மன் நாட்டில் 1857-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 – ஆம் தேதி பிறந்தவர். தந்தை ஒரு ஆசிரியர் மற்றும் ஆலயப் பணியாளர். தாயும் படித்தவர். பெற்றோரின் தூண்டுதலால் ஆசிரியப் பயிற்சி வரை படித்தார் ஜெட்கின். பத்திரிகையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த அவருக்குப் பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டது. பாரிஸில் அனைத்துலகப் பொதுவுடைமைக் குழுவை அமைப்பதில் ஆர்வம் காட்டினார். அவரோடு பழகிய பொதுவுடைமைவாதியான ஓசிப் ெஜட்கின் என்ற இரஷ்ய நாட்டு யூதருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கிளாரா ஜெட்கின் என்று அழைத்துக் கொண்டார். மார்க்ஸிம், கான்ஸ்டான்டின் என்று இரண்டு மகன்கள் பிறந்தனர்.
கணவரும், மனைவியுமாக பொதுவுடைமைக் கூட்டங்களில் கலந்துகொண்டு பெண்களின் விடுதலைக்காகப் போராடினார். பொதுவுடைமைக்காரர்கள் ஏழை, பணக்காரர் விகிதத்தைக் குறைக்கப் போராடுவதும், பெண்கள் தங்கள் நிலையை மீட்டு நல்வாழ்வு பெறப் போராடுவதும் வேறு என்று உணர்ந்து பெண்கள் நல்வாழ்வுக்காகக் குரல் கொடுத்தார். இவர்களது போராட்டக் குணங்கள் மற்றும் கூறுகளால் நாடு கடத்தப்பட்டார்கள். மிகவும் கடினப்பட்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டும் பொது வாழ்விலும் தீவிரப் பங்காற்றினார். இதற்கிடையில் 1899 – ஆம் ஆண்டில் இவரது கணவர் ஓசிப் ஜெட்கின் இறந்துவிட்டார்.
கிளாரா ஜெட்கின் பொதுவுடைமைக் கோட்பாடுகள் மூலம் பெண்களுக்கான சம வாய்ப்புகள், வாக்குரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை வலியுறுத்தினார். ஜெர்மனியில் சமூக ஜனநாயக இயக்கத்தை வளர்க்கப் பெரும்பாடுபட்டார். 1891 முதல் 1917 வரை 27 – ஆண்டுகள் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் முன்னேற்றச் செய்தித்தாளான ‘சமத்துவம்’ (Die Gleichheit) என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
முதல் உலகப் போர் நடந்த போது அந்தப் போருக்கு எதிராக 1915 – ஆம் ஆண்டு பெர்லினில் சர்வதேசப் பொதுவுடைமை இயக்கப் பெண்களின் போர் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். அப்போது, ‘‘போர் நடப்பதால் சிலருக்கு மட்டுமே இலாபம், அவர்கள் யாரென்றால் துப்பாக்கிகள், பீரங்கிகள், கவசத் தட்டுகள், படகு உற்பத்தியாளர்கள், கப்பல் கட்டும் தள உரிமையாளர்கள் மற்றும் ஆயுதப் படைகளின் தேவைகளை வழங்குபவர்கள். இவர்கள் மிகவும் சிறுபான்மை இலாபக்காரர்கள். ஆனால், போரின் மூலம் அவர்கள் குடும்பத்துக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்து என்பதை உணராமல் அதன் மூலம் பலன் பெற நினைக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதோடு அமைதி வழிப் போராட்டமே மக்களுக்கு நல்லது’’ என்று எழுதினார், எடுத்துச் சொன்னார்.
ஆயினும் போர் எதிர்ப்புக் காரணமாக பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டார். இப்படி சமூகத்தின் ஒவ்வொரு தேவையையும் உணர்ந்து போராடியவர்தான் ஜெட்கின்.
இவரது சிறப்பான அணுகுமுறை, பெண்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக இரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் இவரை அடிக்கடி அழைத்துப் பேசினார். அந்தச் சமயங்களில் எல்லாம் உலகளவில் பெண்களுக்கு, அவர்கள் வாழ்க்கை மாற்றத்துக்குத் தேவையான அடிப்படை உரிமைகள் பற்றி எடுத்துரைத்தார். இதன் விளைவாகத்தான் 1922 – ஆம் ஆண்டு மார்ச், 8 – ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் என்று விளாடிமிர் லெனின் அறிவித்தார். அது முதலில் கம்யூனிச நாடுகளில் கொண்டாடப்பட்டது. பின்பு 1977 – ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாள் 1857 – ஆம் ஆண்டு மார்ச் 8 – ஆம் தேதி நியூயார்க்கின் பெண் ஆடைத் தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்ற போது பலமாகத் தாக்கப்பட்டு பலரும் இரத்தம் சிந்தியதின் நினைவாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றார்கள். எப்படியானாலும் பெண்ணுரிமை பேணிட, உலகம் அதை உணர்ந்து அவர்களுக்கு அங்கீகாரம் தர இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு என்றே நாம் பாராட்ட வேண்டும்.
இரஷ்யத் தலைவர் லெனின் அவர்களைப் பலமுறை நேர்காணல் செய்தவர் ஜெட்கின். அப்போதெல்லாம் லெனினின் மக்கள் நலச் சிந்தனைகளைக் கண்டறிந்து, அவற்றை எழுத்தின் மூலம் கொண்டு வந்தார். லெனினின் நினைவுகள், லெனினும் வெகுஜனங்களும் போன்ற கிளாரா ஜெட்கினின் பதிப்புகள் புகழ்பெற்றவை. 1920 – இல் ‘பெண்கள் சார்பான கேள்விகள்’ என்ற தலைப்பில் விளாடிமிர் லெனினிடம் நேர்காணல் செய்தார்.
லெனினின் ஆட்சிக்காலத்தில் பல உயர் பொறுப்புகளை கிளாரா ஜெட்கின் வகித்தார். பெண்களின் விடுதலை, கல்வி, பெண்களின் சுதந்திரம், குழந்தைகள் பராமரிப்பு உரிமைகள், பெண் தொழிலாளர் நலன்கள், முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிரான விதிமுறைகள் என்று பல நல்ல வாய்ப்புகளைப் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க கிளாரா ஜெட்கின் – லெனின் ஆகியோரின் நட்பு உதவியது.
ஜெர்மன் நாட்டின் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் ஜெட்கின் நினைவுகூறப்படுகின்றார். ஜெர்மனி நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரிலும் ஜெட்கின் பெயரில் ஒரு தெரு உள்ளது. கிளாரா ஜெட்கின் பூங்கா, கிளாரா ஜெட்கின் சிலை என்று அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது. பெண்களின் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிய அவர் இறந்த போது அன்றைய இரஷ்ய தலைவர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சாவித்திரிபாய் பூலே
உலகளவில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாய் நின்றவர் தான் சாவித்திரிபாய் பூலே. மராட்டிய மாநிலத்தின் பூனேக்கு ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிருந்த நைகோன் என்ற கிராமத்தில் 1831 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 – ஆம் தேதி பணக்கார விவசாயி ஒருவரின் மகளாகப் பிறந்தவர். அக்கால வழக்கப்படி இளம்வயதிலேயே ேஜாதிராவ் பூலே என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
ேஜாதிராவ் பூலே சமூக சிந்தனை கொண்டவர். எனவே தன் மனைவிக்குக் கல்வி கற்பித்தார். அக்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் குறிப்பாக கல்வி மறுக்கப்பட்டது. பெண்கள் படிப்பது பாவம், குற்றம் என்று கருதப்பட்டது. எனவே முதல் நான்கு ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் தன் மனைவிக்குக் கல்வி கற்றுத் தந்தார். பின்பு அகமத் நகரிலிருந்த அமெரிக்கக் கிறிஸ்தவக் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி கற்றார். பின்பு ஆசிரியப் பயிற்சி பெற்றார். இதன் மூலம் ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ என்ற பெருமை அடைந்தார்.
தன் கணவரின் உதவியுடன் பெண்களுக்கான ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பெற்றோர்கள் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்ப மறுத்தனர். ஜோதிராவின் தந்தை வீட்டிலிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது. வீட்டிலிருந்து விரட்டப்பட்ட இவர்களை ஜோதிராவ் பூலேயின் நண்பர் உஸ்மான் ஷேக் தன் வீட்டில் தங்க வைத்தார்.
உஸ்மான் ஷேக்கின் மனைவி பாத்திமா படித்திருந்தார். எனவே அவரையும் ஊக்கமூட்டி ஆசிரியர் பயிற்சி பெற வைத்தார்கள், ஜோதிராவ் – சாவித்திரி தம்பதியர்கள்.
சாவித்திரி பூலே, பாத்திமா, ஜோதிராவ் இணைந்து பள்ளியை நடத்தினார்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து கல்வி கற்பித்தார்கள். கணவனும், மனைவியும் சேர்ந்து பதினெட்டுப் பள்ளிகளைத் தொடங்கினார்கள்.