
சாதனையாளர்கள் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்
உலகம் முழுவதும்..AI..ஆட்டிப்படைக்குது.! அப்படி ஆட்டிக் படைக்கும் திறன் மிக்கவர்களாக இந்தியர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற “..AI மாநாடு..” பறைசாற்றுகிறது..!
தமிழக மாணவர்களின் பங்கு அளப்பரியது, மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக “..ஆன்மிகத்திலும்..” தங்கள் திறமையை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்..!
அந்த வரிசையில் சென்னை தாம்பரம் சித்தாலாப்பாக்கம் பகுதியில் உள்ள சங்கர் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வரும் செ.பே.டிஷிதா “..சிவவாத்தியம் வாசித்து..” அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்..!!!
சிவவாத்தியம் வாசிப்பது அத்தனை எளிதானது அல்ல..! இவ்வாத்தியம், தாளம் மற்றும் சந்தத்தின் அடிப்படையில் வாசிக்கப்படுகிறது யாவரும் கற்றுக் கொள்ள முடியும்..! ஆனால் இறையருள் இருந்தால் மட்டுமே வாசிக்க முடியும் என்று அனுபவம் கொண்டவர்களால் சொல்லப்படுகிறது..!
திருக்கயிலாய வாத்தியம் அல்லது சிவபூதகணங்கள், சிவவாத்தியம் என்பது சிவபெருமானுக்காக சிவனடியார்களாலும், சிவ பக்தர்களாலும் வாசிக்கப்படுகிற இசைக்கருவியாகும்..!
சிவாலயங்களில் சுவாமி வழிபாடு, திருவீதியுலா, மற்றும் திருமுறை ஊர்வலங்கள், திருவாசகம் முற்றோதல், திருக்கோயில் குடமுழுக்குகள் போன்ற திருவிழாக்காலங்களில்
“..சிவவாத்தியங்கள்..” வாசிக்கப்படுவதைப் பார்த்திருப்போம்..!
சிவவாத்தியம் அல்லது சிவவாத்தியங்கள் எனப்படுவது திருவுடல், திருச்சின்னம், எக்காளம், சங்கு, பிரம்மதாளம், தவண்டை, திமிலை, ஓவினந்தாரை, கொம்பு, கொக்கரை, கொம்புத்தாரை போன்ற பற்பல கருவிகளைப் பயன்படுத்தி வாசிப்பது அல்லது இசைப்பதாகும்..!
சென்னை பெரும்பாக்கம் பெரும்பாக்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி நாளன்று அப்பேர்ப்பட்ட தெய்வீகத் தன்மையுடைய “..சிவவாத்தியம் வாசிக்கும் மாணவர்களைப்..” பார்த்ததும் அதிசயத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் எல்லையே இல்லை..!
அந்தப் பள்ளி, கல்லுரி மாணவர்கள் நெற்றியில் திருநீறும், ருத்ராட்சமும் அணிந்து கொண்டு தங்களை இறைவனின் ஒப்படைத்து ஒரு குழுவாக வாசித்தது பார்வையாளர்களிடம் உடலெங்கும் தெய்வீக உணர்வுகளைக் கரை புரண்டு ஓட விட்டிருந்தார்கள்..!!!
இனிநம்மோடு செ.பே.டிஷிதா, பன்னிரண்டாம் வகுப்பு, சங்கர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சென்னை.
“..நான் ஏழு வயது முதலே இவ்வாத்தியம் கற்று வருகிறேன் மூன்றாவது படிக்கும் பொழுது என் வீட்டுருகில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் கயிலாய வாத்தியம் வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நானும், எனது கூடப்பிறந்த சகோதரியும், சகோதரனும் ஆர்வம் கொண்டு அக்குழுவில் இணைந்தது முதல் ஆர்வமுடன் கற்றுக் கொண்டோம்.
சிவவாத்தியங்களில் உள்ள அனைத்துக் கருவிகளையும் வாசிப்பேன், திருமுறை பாடுவேன், என்னோட ஆசை, இலக்கு எல்லாமே சிவவாத்தியம் வாசிக்க வேண்டும், இறைத் தொண்டு இறைவனுக்குச் செய்து கொண்டே இருக்கணும்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த பத்து வருடங்களில் 450-க்கும் மேலான திருக்கோயில்களுக்கு சென்று வாசித்திருக்கிறேன் அப்போது என் எண்ணமெல்லாம் ஈசனையே எண்ணுகிறது, அவன் என்னுள் இருப்பதை நான் உணருகிறேன்.
நான் படிக்கின்ற பள்ளியிலே இரண்டு முறை வாசித்திருக்கிறேன் “..எங்க டீச்சர் நீ நல்லா வாசிக்கிற எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கல..” என்பார்கள், மற்ற டீச்சர்ஸ் மற்றும் பிரின்சிபால் என்னை மிகவும் உற்சாகப்படுத்துவார்கள் அவர்கள் அனைவர்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இறைவனுக்கு நான் செய்யும் தொண்டு என்றும் இடை நில்லாமல் தொடர வேண்டுகிறேன் இதற்கு காரணமான எனது குருநாதர் ஜீவானந்தம் ஐயாவை வணங்குகிறேன்..”