
வரலாறு பேசுவோம்-03
திரு.முகில்
காந்தியின் அரசியல் வாழ்க்கையானது, தென் ஆப்பிரிக்காவில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அவர் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், அவரை ரயிலில் இருந்து வெளியே தள்ளியதிலிருந்துதான் தொடங்கியது. அதன் பிறகு காந்தியின் பொது வாழ்க்கை முழுக்கவே ரயில் பயணங்களால் நிறைந்திருந்தது.
ஆரம்பத்தில், ‘காலனியாதிக்கத்தின் சுரண்டல் கருவியே ரயில்!’ என்பது காந்தியின் எண்ணமாக இருந்தது. பின்பு, அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டார். ரயில் மூலமாகத்தான் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளுக்குப் பயணம் செய்து, தேசத்தை, மக்களைப் புரிந்து கொண்டார். காந்தியின் ரயில் பயணங்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் எழுச்சியை உண்டாக்கின.
எப்போதும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதையே அந்த அரையாடை மனிதர் விரும்பினார். மூன்றாம் வகுப்பு எளிய மனிதர்களின் நலனுக்காக அக்கறை காட்டிய தலைவராகவும் காந்தி இருந்தார். ரயில் பயணங்களில் எதிர்கொள்ளும் இன்னல்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து காந்தி, குஜராத்தி மொழியில் எழுதிய துண்டறிக்கை, 1916-17 காலகட்டத்தில் குஜராத் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அந்தத் துண்டறிக்கையில் ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், காவல்துறையினர், படித்தவர்கள், வசதி படைத்த பயணிகள், மிகவும் சாதாரண பயணிகள் என்று அனைவருக்குமான ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் வழங்கப்பட்டிருந்தன. தவிர, Third Class in Indian Railway என்ற தலைப்பில் காந்தி எழுதிய நீண்ட கட்டுரை, அன்றைய எளிய பயணிகளின் அவல நிலைமையைப் பதிவு செய்த எழுத்துச்சித்திரம்.
‘…12-ஆம் தேதி பம்பாயிலிருந்து மெட்ராஸ் செல்ல மெயில் ட்ரெயினில் பயணிப்பதற்காக 13 ரூபாய் 9 அணா செலுத்தி பதிவு செய்தேன். 22 பயணிகள் ஏறிக்கொள்வதற்கான பெட்டி என்று அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது. மெட்ராஸைச் சென்றடைவதற்கு முன்பாக இரண்டு இரவுகள் அதில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ரெய்ச்சூரை அடைந்த போது, அங்கே கட்டுக்கடங்காத கூட்டம். ரயில்வே ஊழியர்களும் பாதுகாவலர்களும் பெட்டிக்குள் மேலும் அதிகமான பயணிகளைத் திணித்தனர்.
பயண வழியில் மோசமான சர்க்கரை கலக்கப்பட்ட டீ தண்ணீர், பால் என்றழைக்கப்பட்ட சகதியாகத் தோற்றமளித்த வெண்மையான திரவம் போன்றவையே பயணிகளுக்குக் கிடைத்தன. அந்தப் பயணம் முழுக்க அந்தப்பெட்டி ஒருமுறைகூடச் சுத்தம் செய்யப்படவில்லை. தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாததால், தண்ணீர் வசதியின்றி கழிப்பிடம் சுத்தம் செய்யப்படாமலே இருந்தது…’
1921 – ஆம் ஆண்டில் காந்தி மெட்ராஸ் மாகாணத்தில் மேற்கொண்ட ரயில் பயணங்கள், இங்கே மாபெரும் மன எழுச்சியை உண்டாக்கின. அந்த ஆண்டு செப்டெம்பரில் காந்தி, கல்கத்தாவிலிருந்து கல்கத்தா மெயிலில் கிளம்பினார். பின்பு தனியாகப் பிரிக்கப்பட்ட பெட்டியில் மெட்ராஸ் சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். காந்தி ஒரு ரயில் நிலையத்துக்கு வருகிறார் அல்லது அந்த ரயில் நிலையத்தைக் கடக்கிறார் என்றாலே கூட்டம் கட்டுங்கடங்காமல் கூடியது. அன்றைக்கு சென்ட்ரலிலும் ஜேஜேவெனக் கூட்டம்.
மெட்ராஸில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களை எல்லாம் முடித்துவிட்டு, செப்டெம்பர் 17 அன்று ரயிலில் விழுப்புரம் கிளம்பினார். அங்கே ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படி இந்தியாவின் பல்வேறு ரயில் நிலையங்களில் காந்திக்கு வரவேற்புக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. பல்வேறு ரயில் நிலைய வளாகங்களில் காந்தி உரையும் ஆற்றியிருக்கிறார்.
பரங்கிப்பேட்டைக்குச் சென்று அங்கிருந்து காரில் கடலூர் சென்று, ஒரு கூட்டத்தில் கலந்துவிட்டு, மீண்டும் பரங்கிப்பேட்டைக்கு வந்து செப்டெம்பர் 18 அன்று அங்கிருந்து ரயில் ஏறி கும்பகோணம் செல்வதாகத் திட்டம். காலையிலேயே காந்தி கிளம்பித் தயாராகிவிட்டார். அவரது அன்றாட உணவுக்கு ஆட்டுப்பால் வேண்டுமல்லவா. ‘எனது வெள்ளாட்டை ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்’ என்று சொல்லியிருந்த ஒருவர், வாக்கு தவறிவிட்டார்.
உணவு குறித்து காந்தி கவலைப்படவில்லை. ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று கிளம்பினார். அதிலும் ஒரு பிரச்னை. பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்றுதான் அப்போது கிளம்பத் தயாராக இருந்தது. அதில் பயணிகளை ஏற்ற மாட்டார்கள். காந்தியின் பிரயாணத்தைத் திட்டமிட்டவர்களது தவறு அது. ரயில் நிலையத்துக்கு காந்தி வந்து காத்திருப்பதைக் கண்ட அதிகாரிகள் மடமடவென மாற்று ஏற்பாடுகளைச் செய்தார்கள். சரக்கு ரயிலோடு, காந்திக்காகச் சிறப்புப் பெட்டி ஒன்று இணைக்கப்பட்டது. புன்னகையுடன் காந்தி அதில் ஏறினார்.
காந்தியின் கும்பகோணம் ரயில் பயணம் குறித்து, ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலில் அ. இராமசாமி விவரித்திருக்கிறார்.
‘…வழியில் சிதம்பரம், கொள்ளிடம், சீர்காழி, மாயவரம் ஆகிய ரயில் நிலையங்களிலெல்லாம் ஒரே மக்கள் கூட்டம். ரயில் குறித்த நேரத்தில் ஊர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமே என்பதைப் பற்றியெல்லாம் யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. சிதம்பரத்திலும் கொள்ளிடத்திலும் மக்கள் பிளாட்பாரத்தில் அமர்ந்து, காந்திஜியை அங்கு அழைத்து, அவருக்கு வரவேற்புரை படித்துக் கொடுத்து, அவருடைய பேச்சையும் கேட்டு விட்டுத்தான் வீடு திரும்பினார்கள்.
சீர்காழியில் இதைக் காட்டிலும் பெரிய தடபுடல் நடைபெற்றது. நாகசுர இசையுடன் மேடைக்கு, கோயில் பட்டுக்குடையைக் கொண்டு வந்து விட்டார்கள். கூட்டம் கட்டுக்கடங்காததாக இருந்ததால் அது அமைதியடைந்து அண்ணல் இறங்கி வருவதற்குள் ரயில் புறப்படுவதற்கு ‘கார்டு’ விசில் ஊதிவிட்டார். ஆகவே, பழங்களையும் மாலைகளையும் அவசர அவசரமாக மகாத்மாவின் பெட்டிக்குள் வீசி எறிந்தனர். சந்தனமோ அநேகருடைய தலைகளை அலங்கரித்தது. ரயில் ஓட, மகாத்மாவின் முகத்தைப் பார்ப்பதற்காக மக்களும் சிறிது தூரம் ஓடித்தான் நின்றார்கள்.
அடுத்தாற்போல மாயவரத்தில் மக்கள் சற்றுக் கட்டுப்பாடாக நடந்து கொண்டதால், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறியது. இருபுறங்களிலும் மாணவர்கள் கைகோத்து நின்று வழி ஏற்படுத்திக் கொடுக்க, பிளாட்பாரத்திற்கு வந்து அண்ணல் சிறிது நேரம் பேசிவிட்டு கும்பகோணம் சென்றார்.
குடந்தையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்தது. கூட்டத்தினர் மோதித் தள்ளியதில் காந்திஜி ரயில் பெட்டியில் மோதி, அவருடைய இடது கையில் லேசாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. மிகுந்த சிரமத்துடன் எப்படியோ அண்ணல் வெளியே வந்து, தாம் தங்க இருந்த சமூக சேவா சங்கக் கட்டடத்திற்கு மோட்டாரில் சென்றார்…’
கும்பகோணத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அதேநாளில் காந்தி திருச்சிக்கு ரயிலில் கிளம்பினார். இருள் சூழந்த பின்னும் திருச்சி ரயில் நிலையத்தை நோக்கி மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். நிலைய அதிகாரி யோசித்தார். ‘ஐம்பது பேருக்கு மட்டும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார். நகரத்தின் முக்கியஸ்தர்கள்கூட நிலையத்துக்கு உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டார்கள். மக்களும் தவிப்புடன் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கே வந்த மாவட்டப் போக்குவரத்து சூப்பரின்டெண்ட் எஸ். கிருணாமாச்சாரி, கூடிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு, அனைவரும் ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதி கொடுத்தார். அங்கே மக்கள் கட்டுப்பாடுடன் வரிசையில் நின்றார்கள். ரயில் வர இரவானாலும் பொறுமையாகக் காத்து இருந்தார்கள். ரயில் நிலையத்துக்கு வெளியேயும் மக்கள் கட்டுப்பாட்டுடன் காத்திருந்தது காந்திக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
காந்தியின் ரயில் பயணம் திண்டுக்கல், மணப்பாறை வழியாக மதுரையை நோக்கி நீண்டது. திண்டுக்கலில் மெயில் ரயில் வந்து நின்றதால், மணப்பாறையில் காந்தி சென்ற ரயில் காத்திருந்தது. அது திட்டமிடப்படாத செயல். இருந்தாலும் அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று காந்திக்கு மாலையிட்டும் மலர்ச்செண்டு கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். அம்மயநாயக்கனூர், வாடிப்பட்டி, கருப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர் போன்ற ஒவ்வொரு சிறிய ரயில் நிலையங்களிலும் திருவிழா போன்ற கூட்டம்.