மூளை என்னும் முதல்வன்

திரு. A.மோகனராஜூ, சேலம்

ரு கிண்ணத்தை ஏந்துகிறேன், ஏன் ஏன்’’ ஏன் என்ற திரைப்படப் பாடலைக்   கேட்டிருப்பீர்கள், ஆனால் உண்மை வாழ்வில் ஒருவன் நான் ஏன் ஒரு போதை மருந்தை நாடுகிறேன். நான் ஏன் மதுவிற்கு அடிமையானேன், நான் ஏன் புகையால் எனக்கு  நானே பகையானேன் என்று  பாதிக்கப்பட்டவன் கேட்பானா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்ற கேள்வியைக் கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற பாடலையும் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் ஏன் என்ற கேள்வியை நம்மிடம் நாம்  என்றாவது கேட்கிறோமா?

ஏன் என்ற கேள்வியை அடுத்தவரிடம் கேட்டால் கண்டிப்பாகப் பிரச்சனை வரும்.  ஆனால்  நமக்கு நாமே கேட்டால்  அது அற்புதமான விளைவை வாழ்வில் தரும்.  யார் இந்தக்கேள்வியை கேட்பது என்பதுதான் நம்  கேள்வி.

மனம் நிம்மதியாக இருந்தால் உடல்  நலமாக இயங்கும், வாழ்வு போற்றுதலுக்குறியதாய் இருக்கும். மனிதனின் இளைமைப்பருவம் எல்லையில்லாத இன்பம் நிறைந்தது. இதில் அவனுக்குத் தேவையான உயர் கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் ஆரோக்கியமன உடலும் இருக்க வேண்டும். அப்போது அவன் பல  சாதனைகளைச் சாதிக்கிறான், புதுமைகளின் பிறப்பிடமாக இருக்கிறான், சமுதாயத்தை அமைதியான, ஆனந்தமான வழியில் அழைத்துச்செல்கிறான். அவனிடம் மனித வாழ்விற்கு அவசியம்  தேவையான கல்வியும் பொருளாதாரமும் சுகாதாரமும் இல்லாதபோது அவன் ஒரு மனிதனாகவே இருப்பதில்லை.

ஒரு இளைஞன் எப்போதும் கவலையுடன்  முழு நாளும் சோம்பலுடன் கல்வியில் எந்த ஒரு  ஈடுபாடும் இல்லாமல் இருக்கிறான். அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பது அவனுக்கும் அவனைச்சார்ந்த குடும்பத்தாருக்கும் ஒன்றும் தெரிவதில்லை, ஏதோ வாழ்வில் ஏமாற்றம்  நிகழ்ந்திருக்கிறது என்பது தெரிகிறது.

தன் வாழ்வில் ஏற்படும் ஏமாற்றத்திற்கான காரணத்தைக்  கண்டறிய முடியாத நிலையில் ஒரு இளைஞனின் உடலும் மனமும் தவிப்புக்குள்ளாகிறது. இந்த நிலையில் தற்காலிக நிவாரணம் அளிக்கும் எதையாவது ஒன்றைத் தேட அவன் மனம் தவிக்கிறது. அப்போது மதுக்கிண்ணமும், மயக்கும் போதை மருந்துகளும் புகைக்கும் பொருட்களும் அவன் கண்முன் அற்புதமான மாற்றாக அவனுக்குத் தோன்றுகின்றன.

திரைப்படங்களிலும், டி.வி தொடர் காட்சிகளிலும், மனம் உடைந்த ஒருவன் மதுவிலும், போதை மருந்திலும், புகைப்பதிலும் தன் மனதை சீர்படுத்திக்கொள்வதாக காட்சிகள் வருவது அவன் நினைவிற்கு வருகிறது.  உண்மையில் போதை என்பது ஒரு மனிதனுக்கு வாழ்வில் வருந்தும் நேரத்தைக் குறைத்து மனதையும் உடலையும் திசைதிருப்புகிறது. இன்ப ஹார்மோன் டோபோமினை  குறைந்த  நேரம் மண்டையின் மூளையில் தற்காலிகமாகச் சுரக்கிறது.  சிறிது நேரம் தன்னை முழுவதுமாக மறந்து இருக்க வாய்ப்பளிக்கிறது. ஆனால் அது சிறிது சிறிதாக உடலிலும் மனதிலும் தீர்க்கமுடியாத  பிணியை உண்டாக்குகிறது, அவன் சுதந்திரத்திற்கு நேர் எதிராக  அவனை சங்கிலியால் கட்டிப்போடுகிறது என்பது  சிறிதும் அவனுக்குத் தெரிவதில்லை.

ஆனால் முதல் முறையாக சிகரெட் குடிக்கும் ேபாதும், மது அருந்தும்போதும், போதை மருந்தைப் பயன்படுத்தும்போதும் அறுவருப்பாகவே இருக்கிறது, இது வேண்டாம் என்ற எண்ணம் அவன் மூளையில் எழாமல் இல்லை. ஆனாலும் இதனால் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்ற ஒரு எண்ணமும் கூடவே  உருவாகிறது. வாழ்வின்  வெறுப்பில் ஆரம்பித்த இந்தப் பழக்கம்  நண்பர்களாலும், தீய  விளம்பரங்களாலும் பழக்கப்டுத்தப்படுகிறது, நன்கு வளர்க்கப்படுகிறது. பின் அதற்கு முழு  அடிமையாகி எது இருந்தாலும் அது இல்லாமல் உயிருடன் இருக்க முடியாது என்ற நிலையை அவன் அடைகிறான்.  மகிழ்வுடன் வாழும்  வாழ்வில் முரண்பாடுகள் அதிகமாகி அதை விரட்டும் வழி தெரியாமல்  மனம்  மது இல்லாமலேயே மயங்கிப்போகிறான்.

வாழ்வில் வெறுப்பிற்குக் காரணம் வெளியில் என்றால் அதன் இடமிருந்து வலப்பக்கம்   விலகிப்போக வாய்ப்பிருக்கிறது. வெறுப்பு கண்களுக்குத் தெரியாத அவன் மூளையில்  இருக்கும் மனதில் என்றால், அதன் இரும்புப் பிடியில் இருந்து  வருந்தாமல் எப்படி வெளியேறுவது. பூ போன்ற மென்மையான மனதிற்குள்ளே மிகப்பெரும் பூகம்பமும் புயலும் என்றால், யார் வந்து எப்படித்  தடுத்து நிறுத்துவது. இந்த நிலை தொடரும்போது ஒரு மனிதன் தான் வாழத்தகுதி இல்லாதவன் என்று தானாகவே நினைத்துக்கொண்டு சில சமயம் தற்கொலைக்குச் செல்கின்றான். உடனே இறக்க மனம் விரும்பாத நிலையில் அவனுக்குத் போதைப்பழக்கம் தற்காலிக இடம்கொடுக்கிறது. ஆனால், அது சிறுகச்சிறுக ஒருவனைக் கொல்கிறது.

ஒரு இளைஞனுக்குத் தேவையானக் கல்வியையும் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மன நிம்மதியையும் கொடுக்க வேண்டியப் பொறுப்பும் கடமையும் சமுதாயத்திற்கும், அரசாங்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் கண்டிப்பாக இருக்கிறது. இதுவே அடுத்த  சந்ததியை வளமான சமுதாயமாக மாற்றியமைக்கும். இதைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவனுக்கு பசியையும் துன்பத்தையும் பணச்சிக்ககலையும்  வாழத்துவங்கும் இளமையில் கொடுக்கக்கூடாது. இளமையில் சரியான வேலையைக் கொடுப்பது அவனுக்கு சம்பாத்தியம் மட்டுமல்ல  உடலுக்கு உழைப்புமட்டுமல்ல அதில்  மன   நிம்மதியும் வாழ்வில் அமைதியும் கலந்திருக்கிறது.

இளைஞர்கள் மன அமைதியும் நிம்மதியும் கொண்டவர்களாக இருந்தால்தான், சமுதாயம் அமைதியாகவும் ஆனந்தம் நிறைந்ததாகவும்   இருக்க முடியும். அப்படி இல்லாதபோது அமைதியை இழந்த  அந்த இளைஞனின் வாழ்வு எப்படி இருக்கும், அவனைச் சார்ந்த சமுதாயம் எப்படித்தவிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இப்படி இருக்கும் நிலையில் யார்வந்து  பாதிக்கபட்ட ஒருவனுக்கு உதவுவது. ‘‘எங்கெல்லாம் நீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதன் அச்சுறுத்தலாய் அங்கே அநீதி இருக்கிறது’’ என்று சொன்ன மார்டின் லூதர்கிங் மேலும்  சொல்கிறார். ‘‘உங்கள் தலைக்குமேல் ஒரு பறவை வட்டமிட்டுப்பறக்கிறது என்றால், அதனை உங்களால் தடுக்க முடியாது, ஆனால் ஒரு பறவை உங்கள் தலையில் கூடு கட்டுகிறது என்றால் அதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்’’ என்று அற்புதமாகச் சொல்கிறார். அதையும் விடுங்கள், உங்கள் அற்புதமான அறிவின் பிறப்பிடம் மூளையானது  பூஞ்சை போன்ற நஞ்சுப் போதை போதைப்பொருளால் முழுவதுமாக மூழ்கிப்போகிறது  என்றால் யார் வந்து  எப்படி குறுக்கே  நின்று தடுக்க முடியும்.

லூதர்கிங் மேலும் சொல்கிறார் ‘‘காலியாயிருக்கும் சட்டைப்பையும், பசித்த வயிறும், உடைந்த மனமும்  உங்களுக்கு அற்புதமான பாடம் கற்பிக்க வேண்டும் என்று ( An Empty pocket, a hungry stomach, and a broken mind should  teach you wonderful lessons)’’. அதிலிருந்து உண்மையான பாடம் ஒரு இளைஞன் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தனி மனிதனின் பிரச்சனையை, அவனுக்கு வேண்டிய மூச்சை அவனே இழுத்து விடுவதுபோல,  தனியாகத்தான் அவனே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் மனிதனின் மூளை கல்வியால் சிறப்பாகச் சிந்தித்து செயல்படும் அளவில் வடிவமைக்கப்படுகிறது.

பிரச்சனை இல்லாத வாழ்வு ஒன்றைக் கேட்டால் அது கிடைக்காது. காரணம் அது இந்த உலகில் எங்கும் இல்லை, பிரச்சனையில்தான் வாழ்வு அமைத்திருக்கிறது. பிரச்சனையைத் தீர்க்கும் வழியைக் கேட்டால் அது   நமக்குக் கிடைக்கும் வாழ்வு நமதாகும். பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர், தொலைவைக் கண்டம் விட்டுக் கண்டம் கடந்து பறக்கிறது.  எனக்கு வானம் வேண்டாம் என்றால் பறவை எப்படிப் பறப்பது. யாருடைய உதவியையும்  கேட்காமல் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் மகிழ்ந்து பறக்க வானம் இருக்கிறது.  வாழ்வையும் உடலையும் மிகச்சரியாகத் தகவமைக்கும் தன்மையை இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிறது.

பிரச்சனையைத் தீர்க்கப் பல வழிகள் உலகில் இருக்கும்போது மதுவும் போதைமருந்தும் ஒரு இளைஞனின் பிரச்சனைக்கு எப்படித் தீர்வு கொடுக்கும்.  மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது வள்ளுவன் கண்ட உண்மை  வழி.

மனித மூளையில் என்ன நடக்கிறது

ஒரு இளைஞன் ஏன்  புகைக்கிறான், குடிக்கிறான் என்றால் தன்னை ஒரு முதிர்ச்சியடைந்தவனாக உலகிற்குக் காட்டிக்கொள்கிறான் (Matured Man), இது ஒருபுறம் அவனுக்குத்தெரிகிறது.  அதுவே அவன்  முதிர்ச்சி அடையாத (Incomplete Brain) மூளையைக்கொண்டிருக்கிறான் என்பது அதன் மறுபுறம்  நமக்குத்  தெரிகிறது.  21 – வயதிற்குள் குடிப்பழக்கம் கொண்டவர்கள் வருடத்திற்கு 2 –  லட்சம்பேர்கள் அவசரச்சிகிச்சைப் பிரிவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், அதில் 5000 பேர்கள் வாகன விபத்து, நீரில் மூழ்கிப்போதல், விஷச்சாராயம் அருந்துதல், அடிதடி போன்ற நிகழ்வுகளால் இறப்பைத் தழுவுகிறார்கள்.

தினமும் குடிப்பதால் மூளையில் அறிவை அறிந்துகொள்ளல், சிந்தித்தல், கற்றல்,  கவனித்தல், ஞாபகம் வைத்தல், திட்டமிடுதல், போன்ற மனித மூளையின் சிறப்புப்பகுதி, பிரிப்ரெண்டல் கோர்டெக்ஸ் என்னும் பகுதியில் உள்ள  நியுரான் செல்கள் பழுதடைந்து இறக்க நேரிடுகிறது. வாரம் ஒருமுறை இருமுறை குடிப்பவர்கள் மூளையில் குடிக்காத நாட்களில் குடிக்க முடியவில்லையே என்ற கவலை துன்ப ஹார்மோன் கார்டிசோலை அதிகம் சுரந்து பிட்யுட்டரி அட்ரினல் சுரப்பிகளை பாதிப்படையச்செய்கின்றது. அதனால்  எப்படியாவது  ஒரு வழியில் குடிக்க வேண்டுமே என்று நினைத்து வருந்தும்போது மன அழுத்தமும் பதட்டமும் குடிப்பவருக்கு உருவாகிறது. 

ஏன் ஒருவன் மதுவும் போதை மருந்தும் புகையிலையையும் விற்கிறான் என்றால், அதில் அவனுக்கு  வேலையே செய்யாமல் அதிக லாபம் கிடைக்கிறது.
25-04-24 – இல் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட ஒரு கிலோ போதை மருந்தின் மதிப்பு ரூ. 50 கோடி. அதே விமான நிலையத்தில் 26-6-24-ல் பிடிபட்ட 3.5 கிலோ போதை மருந்தின் விலை  ரூ.35 கோடி. ஒரு சில மணிகளில் கை மாற்றிவிட்டால் பல கோடிப் பணம் கைக்குக்கிடைக்கும் என்றால் யார்தான் கடத்தல் செய்ய மனம் விரும்பமாட்டார்கள்.

சட்டம் போட்டுத் தடுக்கின்ற அரசு அதிவேகமாக திறம்பட தடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும்  தினம் தினம் டன் கணக்கில் போதைப் பொருட்கள் கோடிக்கணக்கான பணத்திற்கு பரிமாறிக்கொண்டுதான் இருக்கிறது.  வேலையில்லாத ஒருவனுக்கு வேலையே செய்யாமல் அதிக பணம் கிடைக்கும் வியாபாரம் இது. இந்த போதைப் பொருள் கடத்தல் என்பது சர்வதேசப் பணச்சந்தை என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இப்போதெல்லாம் தங்கம் யாரும் கடத்துவதில்லை. காரணம் போதைப் பொருட்கள்  எளியமுறையில்  உருவாக்கப்படுகிறது, எளிதில் அதிக விலைக்குக் கைமாற்றப்படுகிறது, எளிதில் உபயோகிக்கப்படுகிறது.

போதைப்பொருள் வியாபாரத்தால்  நாடு சீர்கேடு அடைகிறது, சீர்கெட்ட நாட்டில்தான் கடத்து பவனுடைய சமுதாயமும் வாழவேண்டியிருக்கிறது என்பது அவனுக்குத்தெரியாது. இந்த வியாபாரத்தில் கொல்லை லாபம் ஒரு சிலருக்கு. எல்லையில்லாத துன்பமும் பாதிப்பும்  இளைஞர் சமுதாயத்தினருக்கும் என்பதை  நினைக்கும்போதே  மனம் நிலை தடுமாறி மயங்கித்தவிக்கிறது.  

பாதிக்கப்பட்ட மனிதன் மாற்றியோசித்தால் ஏன் என்ற கேள்வியைத்  தனக்குள் கேட்டால்  ஒருமுறை ஒரேமுறை கொடுக்கப்படும் வாய்ப்பை மீண்டும் கிடைக்காத  மிகப்பெரும் வாழ்வை மகிழ்வுடன்  நீண்ட பெருவாழ்வாக வாழலாம். உடனே மூளையைச் சேதப்படுத்தும்  போதை மருந்துகளையும், கொடிய மதுப்பழக்கத்தயும் பாதை தவறும் புகையையும் கைவிட்டு  ஆயிரம் கோடி இன்பங்கள் நிறைந்த இந்த உலகின் மனித வாழ்வைப் போற்றி  மகிழலாம். நான் ஏன் இறப்பிற்குமுன் இன்பம் நிறைந்த  இளமையில் சாகவேண்டும் என்றக் கேள்வி ஒரு இளைஞனை  நல் வாழ்வை நோக்கி  நடக்க வழிவகுக்கும். 

போதைப்பொருள் வியாபாரம் ஏன் இந்த இளைஞர்களை மையமாக  வைத்து இயங்குகிறது என்றால் அவனுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று முழுவதுமாகத் தெரியாத பருவம் இது. பணத்தின் மதிப்பும் அவனுக்குத் தெரியாது, இளைஞர்களுக்குக் குறிப்பாக  மாணவர்களுக்கு எவ்வளவு  கடின உழைப்பால்  தன்  பெற்றோர்கள் இந்தப் பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பது அவர்களுக்குச் சிறிதும்  தெரியாது.  

பெற்றோருடன்  சேர்ந்து உழைக்கும்  ஒரு சில இளைஞர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என  நன்றாகத்தெரியும். அவர்களே சிரமம் இல்லாமல் வாழ்வில் முன்னேற்றம்  பெறுகிறார்கள். மிகவும் ஏழ்மையில் இருந்து வந்த பூஜா யாதவ் 2021 – ல் IPS ஆனார்.  மிகவும் ஏழ்மையில் இருந்து படித்த ஸ்வதீஸ் ஸ்ரீ என்பவர்  2020 – ல் IAS வெற்றிகரமாக முடித்தார். அன்சர் சேக்(Ansar Sheikh) என்ற ஆட்டோ டிரைவரின் மகன்  இந்திய வரலாற்றிலேயே மிகவும் இளைஞரான 21 – வயதில் IAS அதிகாரியானார். வருமானத்தில் மிகவும் குறைவான குடும்பத்தில் இருந்து எழுந்து வந்த  சுமித்குமார் ராய் மிகவும் எளிமையாக IAS – தேர்வில் வெற்றியடைந்தார்.

அதே சமயம் இளைமையில் மூளையைப் போதைப்பொருட்களில் மூழ்கடித்தவர்களின் நிலையைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. 4-05-24 அன்று நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான
21 – வயது பகவதி என்ற கல்லூரி மாணவன் தன் தாயையும் தாத்தாவையும் தன்னைக் குடிக்க விடாமல் தடுக்கிறார்கள் என்பதற்காக விஷமிட்டுக் கொன்றுவிட்டான். பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஐந்தறிவுப் பறவையோ, விலங்கோ தன் இனத்தில் ஒன்றைக் கெடுக்க  நினைப்பதுமில்லை. தற்கொலை என்பது வாழ்வில் என்றும் அவைகளுக்கு இல்லவே  இல்லை.

உறக்கத்தில் மூளையின் ‘ஹிப்னோகேம்பஸ்’ என்ற உன்னதமான உறுப்பு, பெயர்களை, நினைவுகளை, நிகழ்வுகளை, படித்தவைகளை, பார்த்தவைகளை, நீண்ட நாள் நினைவில் வைதிருக்க நம் மூளையில்  ஆழமாகப்பதிவிட உதவுகிறது. தூக்கம் மூளைச்செல்களின் அனடமி. பிசியாலெஜி மற்றும்  மூளையின் செயல் திறனை மாற்றியமைக்கிறது, இரத்த ஓட்டத்தினை தங்குதடையில்லாமல் மூளைக்கு செலுத்துகிறது. இந்த நிலையில் மூளை நன்கு வளர்கிறது சிறப்பாகச் செயல்படுகிறது. போதைப்பொருட்களால் தூக்கம் தொலைந்து மூளை மயக்கத்தில் மூழ்கிப்போகிறது. மூளையின்  எந்த வளர்ச்சியும் இருப்பதில்லை.

மூளை  மயக்கத்தில் இருப்பதுமட்டுமல்ல, உண்மையில் போதையால் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஐந்து அறிவு விலங்கு மூளை பாதிப்படையும் வேலை எதையும் செய்வதில்லை. ஆனால் ஆறு அறிவு மனிதன் தன் மூளையை எவ்வளவு சேதம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்கிறான். தினமும் இவர் படிப்பார் என்றால் அவர் ஒரு சிறந்த மனிதர், தினமும் இவர் குடிப்பார் என்றால் அவர் எப்படி ஒரு மனிதனாவார்.

மென்மையான மனித மூளை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருக்க மிகவும் கடினமான கபால எலும்பால் இயற்கையால் பாதுகாக்கப்படுகிறது. புத்தகம் படித்து மூளையை எல்லையில்லாது வளரச் செய்வதற்குப்பதில் அதைப் போதைமருந்து, மது, போன்றவற்றால் முழுவதுமாக நனைத்து மிதக்கவிட்டால் அது என்ன செய்யும் சொல்லுங்கள். மதுவகைகள் அனைத்தும், மற்றும் ஹெராயின் (Heroin), ஹான்ஸ் (Hones), கஞ்சா (Brown sugar/Kanjaa), கோகரின் (Cokarin) போன்றவைகள் மென்மையான மூளையை  அதிகமாகப் பாதிப்படையச் செய்கின்றன, மூளைச் செல்களின் மிக மெல்லிய இணைப்புகளை எளிதில் சேதப்படுத்துகின்றன.

ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்த ஒரு அறிவியல் அறிஞர் நமது நாட்டு குடிகாரர்களை ஆய்வுசெய்து, “இந்த நாட்டில் 30 வருடங்களில் இறந்த ஒருவனை 60 வருடத்தில் புதைக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். அதாவது குடிக்கு அடிமையான ஒருவன் வாழ்வில் 30 ஆண்டுகளை நடை பிணமாகத்தான் கழிக்கிறான் என்று சொல்கிறார். மூளையின் மதிப்பும் பேராற்றலும் தெரியாத ஒரு மனிதனின் மூளைக்குப் போதைப்பொருட்களின் கீழ்த்தரமான மயக்கமும் சீரழிவும்  தெரிய வாய்ப்பில்லை. திருடனாய் பார்த்துத்  திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் என் காதுகளில் எங்கிருந்தோ கேட்கிறது.