
ஆளப் பிறந்தோம் – 40
– திரு.இள.தினேஷ் பகத்
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரலாறுகளை சற்று புரட்டிப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த தன்னம்பிக்கை ஆகும். எந்தச் செயலிலும் தன்னம்பிக்கை உள்ள மனிதன் எளிமையாக வெற்றி பெறுவான். தன்னம்பிக்கை அற்றுப் பேசுபவர்கள் தோற்றுப் போய்க்கொண்டே இருப்பார்கள். இது நிதர்சனமான உண்மை. மத்திய/மாநில அரசுகளுக்கு நிறைய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அத்தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று மத்திய/மாநில அரசுப் பணிகளில் அமர வாழ்த்துகிறேன்.
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 26 முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் முழுமையான விவரத்தினை இந்த இதழில் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் ஒரே நேரத்தில் 19 போட்டித் தேர்வுகளை வென்ற சாரு பாண்டே அவர்களின் வெற்றிக் கதையினை பார்க்கலாம்.
மக்கள் தொகை அளவில் முதல் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்க நமது இந்திய நாட்டில் ஒரு பணிக்கு இலட்சக்கணக்கான பேர் போட்டியிடுகின்றனர். ஒரே ஒரு அரசுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கே பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் தனது 23 வயதுக்குள் 19 போட்டித் தேர்வுகளில் (SSC, வங்கித் தேர்வு, இரயில்வே தேர்வு, மாநில அளவிலான தேர்வுகள்) சாரு பாண்டே வெற்றி பெற்றிருப்பது போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சாரு பாண்டே, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தில்டாவில் உள்ள சிறிய கிராமத்தில் பிரவின்குமார் பாண்டே – சுதா பாண்டே தம்பதியருக்கு மகளாகப் பிறக்கிறார். தனது சொந்த ஊரிலே பள்ளிக் கல்வியைப் பயின்றார். பிறகு கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (B.Sc., Mathematics) பெற்றார். பட்டப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே, போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வந்தார். போட்டித் தேர்வுகள் எழுதிய ஆரம்ப காலங்களில் தொடர் தோல்விகளையும், தடைகளையும் அவர் பலமுறை சந்தித்தார். ஆனாலும், ஒவ்வொரு முறையும் அவர் தடுமாறிய போதும், முன்பைவிட வலிமையாகத் தன்னைத்தானே மீட்டெடுத்தார்.
ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் மனம் தளராமல், அதிக உத்வேகத்துடன் மீண்டு வந்தார். தற்போது 19 அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்று மகத்தான சாதனை புரிந்த சாரு பாண்டே அவர்கள், வருகிற சுதந்திர தினத்தன்று, குடியரசுத் தலைவர் அவர்களால் தங்கப் பதக்கம் பெற உள்ளார்.
இந்தியா முழுவதும் SSC தேர்வுகள், வங்கி (ம) இரயில்வே (ம) மாநிலத் தேர்வாணையத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சாரு பாண்டே அவர்களின் கதை ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் பாடத் திட்டத்தில் உள்ள பொதுவான தலைப்புகளில் கவனம் செலுத்துதல், மாதிரி தேர்வுகளைத் தவறாமல் பயிற்சி செய்தல் ஆகியவை தொடர் பயிற்சியாக இருப்பின் அவர்கள் வெற்றி பெறுவது உறுதி. தற்போது சென்னையில் உள்ள தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகத்தில் உதவித் தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்துவரும் சாரு பாண்டே அவர்களை நமது ஆளுமைச் சிற்பி மாத இதழ் பாராட்டி மகிழ்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் Group-I தேர்வுக்கான முழு விவரம்.
UPSC ேதர்வு வாரியம் நடத்தும் அகில இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு போல மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group-I தேர்வில் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மாவட்டப் பதவிகள் போன்ற முக்கிய பணியிடங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது.