பேரா.வெ.இன்சுவை
என் பார்வையில் பிரிட்டன் 05

ன்று நான் சமையல் வேலையை ஏற்றுக்கொண்டேன். மகளும், மகனும் வீட்டில் இருந்து வேலை என்பதால் கணினியுடன் அவர்களின் அறைகளில் இருந்தார்கள். முதலில் கொஞ்சம் தடுமாறினேன். எந்த சாமான் எங்கே உள்ளது என்று தேட வேண்டி இருந்தது. அதிக ஆர்வக் கோளாறினாலும், எனக்கே உரிய அவசரகுடுக்கைத் தனத்தாலும் எந்த சாதனத்தையும் கெடுத்துவிடக் கூடாதே என்ற அச்சமும் இருந்தது. குழாய் ஏதாவது உடைந்துவிட்டாலோ, அடுப்பின் திருகு உடைந்துவிட்டாலோ மிகவும் சிரமமாகிவிடும். நம் ஊர் போல, தொலைபேசியில் பிளம்பர், எலக்ட்ரீஷியன்களை வரவழைத்து சரிசெய்ய முடியாது. எது பழுதானாலும் ஏஜென்சிக்கு மெயில் அனுப்ப வேண்டும். அவர்கள் ஆள் அனுப்புவார்கள். அதற்குக் குறைந்தது பத்து அல்லது பதினைந்து நாட்கள் ஆகும். அதுவரை என்ன செய்ய? பக்கத்து வீட்டில் போய் உதவி கேட்க முடியாது. தவித்துத் தண்ணீர் குடித்துவிட வேண்டும்.

ஒருமுறை மகன் வீட்டில் சமையல் அறை சிங்க் அடைத்துக் கொண்டதாம். தண்ணீர் வெளியேறவில்லை. எவ்வளவோ குத்திப் பார்த்திருக்கிறார்கள். சரியாகவில்லை. ஏஜென்சிக்கு சொல்லி ஆட்கள் வந்து அடைப்பை எடுக்க பத்து நாட்கள் ஆகிவிட்டதாம். அதுவரை அவர்கள் அவஸ்தைப்பட்டுவிட்டார்கள். பாத்திரங்களையெல்லாம், குளியல் தொட்டிக்குக் கொண்டு போய் தேய்த்திருக்கிறார்கள். எவ்வளவு அவஸ்தை!

நான் 2020 – இல் சென்றிருந்த போது ஹீட்டரின் மீது மகனின் ஜீன்ஸ் பேண்ட்டைக் காயப் போட்டேன். போச்சு. ஹீட்டர் கெட்டுப் போச்சு. வேறு வாங்கினோம். ஆகவேதான் இம்முறை கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை காத்தேன். இம்மாதிரி சமயங்களில் நம் நாடு எவ்வளவோ தேவலை என்று தோன்றும் எது பழுதானாலும் உடனே சரிசெய்து கொள்ளலாம். தெருவுக்கு ஒரு ப்ளம்பர், எலக்ட்ரீஷியன் மற்றும் கொத்தனார் இருப்பார். பல சமயம் குடும்ப மருத்துவர் போன்று குடும்ப எலக்ட்ரீஷியன், குடும்ப ப்ளம்பர் கூட உண்டு. அங்கு திடீரென்று அடுப்பு எரியாவிட்டால், மிக்ஸி ஓடாவிட்டால் என்ன செய்வது? எதுவும் ஏடாகூடமாகச் செய்துவிடக்கூடாது என்று பயந்து கொண்டேதான் இருந்தேன்.

அன்று மாலை என் மகன் பணிபுரியும் ஐ.பி.எம். (IBM) அலுவலகத்துக்குச் சென்றோம். இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் (Hampshire) பகுதியில் ரோம்சி (Romsey) மற்றும் வின்செஸ்டர் (Winchester) நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது IBM ஹர்ஸ்லி அலுவலகம். ஒரு பெரிய பண்ணை வீட்டில் (Hursley House) அமைந்துள்ளது. 1958-ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் இங்கு செயல்பட்டு வருகிறது. சுமார் நூறு ஏக்கர் பரப்பளவு. அம்மாடி!

பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லலாம். ‘‘என் மகன் இத்தனை பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறானே’’ என்று எல்லா அம்மாக்களையும் போலவே நானும் பெருமிதம் கொண்டேன். அவனுைடய பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு (எம்.ஐ.டி.) எல்லாம் குரோம்பேட்டையில். அவனுக்குப் பெண் எடுத்ததும் குரோம்பேட்டையில். இப்படி குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டியவன், தற்போது பிரிட்டனையே அக்கு வேறு, ஆணி வேறு என்று ஆராய்ந்து வைத்துள்ளான்.

ஓரளவு சுற்றிப் பார்த்தோம். கேண்டீன் அன்று மூடப்பட்டு இருந்தது. ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ளது. அங்கே பணிபுரிபவர்கள் வேலைப் பளுவை குறைக்க கிரிக்கெட் விளையாடுகிறார்கள். மன அழுத்தத்தில் இருந்து பணியாளர்களை வெளிக்கொணரும் அந்த முயற்சியையும், அக்கறையையும் பாராட்டத்தான் வேண்டும். இந்த வளாகத்தின் மையப் பகுதி ஹர்ஸ்லி ஹவுஸ் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகையாகும். இது 18 – ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இந்த மாளிகை ஸ்பிட்ஃபயர் (Spitfire) போர் விமானங்களை வடிவமைக்கும் மையமாக இருந்தது. 1963 – ஆம் ஆண்டு ஐ.பி.எம். இந்த இடத்தை விலைக்கு வாங்கியது. வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இயங்குவதற்கு அடிப்படையான மென்பொருள்கள் இங்குதான் உருவாக்கப்பட்டனவாம்.

ஐபிஎம் நிறுவனத்துக்குப் பக்கத்தில் குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகம் இருந்ததைக் கண்டேன். ஜன்னல் வழியே பார்த்த போது குட்டிக் குட்டிப் படுக்கைகள், பொம்மைகள் எல்லாம் தெரிந்தன. காப்பகத்திற்கு முன் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. கொள்ளை அழகு. அக்குழந்தைகளைப் பார்த்து, சிரித்து கையசைத்தேன். ஆனால் அவை முறைத்துப் பார்த்தன. சிநேகபாவம் இல்லை. அங்கு ஒரு மணிநேரத்துக்கு 50 பவுண்டு என்று அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். நம்ம ஊர் பணத்தில் ரூபாய் 5,000. ஒரு நாளைக்கு? தேவையில்லாமல் கணக்குப் போட்டுப் பார்த்து கவலைப்பட்டேன்.

அங்கிருந்து மிகக்குறுகிய தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல் செயின்ட்ஸ் தேவாலயம் உள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் அரசர் ஆலிவர் குரோம்வெல் அவர்களின் மகன் ரிச்சர்ட் குரோம்வெல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தேவாலயம் விக்டோரியன் கோதிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் கோபுரம் 14 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த அமைதியான கிராமப்புறச் சூழல் மனதுக்கு இதமளிக்கிறது. அமைதியும், பழமையும், அழகும், இயற்கையும் அங்கே அரசாள்கின்ற அழகை எப்படிச் சொல்ல? சீராக வெட்டிவிடப்பட்டுள்ள புற்கள், குட்டிக்குட்டியாய் பூத்திருக்கும் காட்டுப்பூக்கள் என அந்த ஒத்தையடிப் பாதையின் இருமடுங்கிலும் அழகு பாய் விரித்திருந்தது.