பேராசிரியை திருமதி. வெ.இன்சுவை – அறிமுகம்

பேராசிரியை திருமதி. வெ.இன்சுவை அவர்கள் நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில் ‘சிந்தனைக் களஞ்சியம்’, ‘என் கண்ணோட்டம்’ மற்றும் ‘சிற்பிகளும், சிற்பங்களும்’ என்ற மூன்று நீண்ட தொடர்களைப் பல ஆண்டுகள் எழுதியுள்ளார். வாழ்க்கையின் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை வழங்குவதில் தமிழக எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். ‘தினமணி’ நாளிதழில் இவர் எழுதிவரும் எல்லா நடுப்பக்கக் கட்டுரைகளும் புகழ் பெற்றவை. நமது ஆளுமைச் சிற்பி மாத இதழைத் தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் பேராசிரியை அவர்கள் நமது வாசகர்களுக்காக இம்மாதம் முதல் ‘என் பார்வையில் பிரிட்டன்’ என்ற ஒரு புதிய தொடரை வழங்குகின்றார்கள். பல நூல்களையும், கட்டுரைகளையும் வடித்த இவர்களது எழுத்துக்களை நமது ‘ஆளுமைச் சிற்பி’ பெறுவதில் பெருமை கொள்கின்றது. பேராசிரியை திருமதி.வெ. இன்சுவை அவர்களின் இத்தொடரை வரவேற்று வணங்கி மகிழ்கின்றோம்.
– ஆசிரியர், ஆளுமைச்சிற்பி

என் அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.

உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன்; மகிழ்ச்சி.
இதுகாறும் மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்து மட்டுமே எழுதி வந்ேதன். இந்த முறை வேறு ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றியது.

2020, 23, 25 ஆண்டுகளில் இங்கிலாந்து சென்று சில மாதங்கள் அங்கு தங்கும் வாய்ப்பு கிட்டியது. நம்மை ஆண்டவர்கள், நம் மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் அதுகாறும் பார்த்திருந்த போது அவர்கள் மீது மிதமிஞ்சிய கோபமும், வெறுப்பும் இருந்தது. நேரில் பெற்ற அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் ஒழுங்கும், சட்டத்தை மதிக்கும் மாண்பும், வாழ்க்கை முறையும் எனக்குப் பிடித்துப் போய்விட்டது. ஆகவே அங்கு நான் கண்ட காட்சிகள், பெற்ற அனுபவங்கள், கழித்த இனிமையான தருணங்கள் ஆகிய அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இது வெறும் பயணக் கட்டுரை அல்ல; மனித உணர்வுகளின் பதிவுகள். என்னுடன் பயணிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

‘‘என் பார்வையில் பிரிட்டன்’’ என்ற தலைப்பில் நான் தொடர்ந்து எழுத உள்ளேன்.
பயணத் தயாரிப்பு ஒரு வாரமாக வீடுவீடாக இல்லை, பெரிய பெரிய பெட்டிகள், இறைந்து கிடந்த துணிமணிகள், அண்ணாச்சி மளிகைக் கடையையே மடித்துப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளும் முயற்சி என ஏக களேபரம். ஏகப்பட்ட மளிகைச் சாமான்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. சாம்பார் பொடி, மிளகாய்த் தூள், ரசப்பொடி, இட்லிப் பொடி என அனைத்து வகைப் பொடிகளும் அடைக்கப்பட்ட நெகிழி உறைகள் குவியலாகக் கிடந்தன. அடுத்து தின்பண்டங்கள் ஒரு பக்கம் இருந்தன. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என ஊகித்திருப்பீர்களே! ஆமாம். இங்கிலாந்துக்கு மூன்று மாதங்கள் போய் வருவதற்குத்தான் இந்த அமர்க்களம்.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் குளிர் ஆரம்பித்துவிடும் என்பதால், அதற்குரிய உடுப்புகள், காலுறைகள், காலணிகள் இத்யாதி… இத்யாதி. இம்முறை நேராக இலண்டன் செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுக்கவில்லை. எத்தியாட் விமானத்தில் அபுதாபி வரை செல்வது; அங்கு 7½ மணிநேரம் காத்திருப்பு, அதற்குப் பிறகு இலண்டன் விமானம் ஏறவேண்டும் என்றார் என் மகன். முக்கியமாக எடுத்துச் செல்லப்பட வேண்டியது மாத்திரைகள். சென்றமுறை, அதாவது 2020 – இல் போயிருந்த போது சரியாக, நாங்கள் சென்ற நான்கு நாட்கள் கழித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. நான்கு மாதங்கள் வீட்டுச்சிறை. கொரோனா காரணமாக எதிர்பாராமல் அதிக நாட்கள் தங்க நேர்ந்ததால், மாத்திரைகள் தீர்ந்துபோய் படாத அவஸ்தை படவேண்டியதாயிற்று.

நம் ஊரில் மருந்துக் கடைக்குப் போய் எந்த மாத்திரையையும் வாங்கிக் கொள்ள முடியும். பல சமயம் நம் உடல் உபாதையைச் சொன்னால், மருந்துக் கடைக்காரரே டாக்டராகி மருந்து தருவார். மேலும் இங்கே தெருவுக்கு ஒரு டாக்டர், ஊருக்கு நூறு மருத்துவமனைகள் என்ற நிலை. நிறைய பணம் இருந்தால் சில பெரிய மருத்துவமனைக்குப் போகலாம். பணம் இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். நள்ளிரவில்கூட மருத்துவமனைக்குப் போகலாம்.

ஆனால் வெளிநாடுகளில் கண்ட மேனிக்கு மருந்து வாங்க முடியாது. நம் நாட்டைப் பற்றி ஆயிரம் நொட்டை சொல்லலாம். ஆனால் இந்த விஷயத்தில் நாம் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆகவே முன்னர் பட்ட சிரமம் இந்த முறை இருக்கக்கூடாது என்று எச்சரிக்கையுடன் ஆறு மாதங்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொண்டோம். மகளே மருத்துவர் என்பதால், தாராளமாக, ஏராளமாக எழுதிக் கொடுத்துவிட்டார். என்னவெல்லாம் உடல் உபாதை வரக்கூடும் என யோசித்து, யோசித்து, இருக்கிற மற்றும் இல்லாத வியாதிகளுக்கெல்லாம் மாத்திரை வாங்கிக் கொண்டுவிட்டோம். அவற்றை வைக்கவே ஒரு பெட்டி தேவைப்பட்டது. பொருள்களைப் பெட்டியில் வைப்பதும், எடை பார்ப்பதும், பின்னர் எடுப்பதும் கிளம்பும் நேரம் வரை தொடர்ந்தது.