முயற்சி தரும் முன்னேற்றம்! (புதிய தொடர்)
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

பெரும் வணிகம் மற்றும் முதலீடுகளில் ஏராளமான செல்வத்தைப் பெற்று உலகின் முன்னணித் தொழிலதிபராகத் திகழ்பவர் வாரன் பஃபெட். பல ஆண்டுகளுக்கு முன்பு
ஆர்.சி. வில்லி என்ற தொழில் நிறுவனம் ஒன்றை 175 – மில்லியன் டாலர்களுக்கு பில் சைல்டு (Bill Child) என்பவரிடம் வாங்கினார். உழைப்பால், நேர்மையால், கொள்கையால் உயர்ந்தவர் பில் சைல்டு என்று அவரைப் புகழ்ந்து பாராட்டினார் வாரன் பஃபெட்.

1954 – ஆம் ஆண்டில்

ஆர்.சி. வில்லி என்ற தனது மாமாவின் கடையில் வேலை செய்தவர் பில் சைல்டு. இவரது தந்தை பண்ணையில் வேலை செய்த ஒரு தொழிலாளி. பில் சைல்டு ஆசிரியராகப் பணிபுரியப் படித்திருந்ததால் ஒரு கல்லூரியில் பணிசெய்து கொண்டே, தன் மாமாவின் கடையில் பகுதிநேரத்தின் பணியாளராகப் பணிசெய்து வந்தார். திடீரென்று அந்த ஆண்டு தனது மாமா இறந்துவிட்டதால் அக்கடையை ஏற்று நடத்துமாறு அவரது அத்தை கேட்டுக் கொண்டார்.

சுயதொழில் நல்லதுதான் என்றாலும், தனது மாமா நடத்திய கடை நஷ்டத்தில் இயங்கி வந்ததையும், கடன்கள் இருந்ததையும் பில் சைல்டு அறிவார். 600 – சதுர அடி கொண்ட அந்தக் கடை அப்பகுதியில் மக்களுக்குத் தேவையான தளவாடப் பொருட்களை விற்று வந்தது.
தொழில் செய்து, கடுமையாக உழைத்தால் இந்தக் கடையை முன்னேற்றிக் கொண்டு வரலாம் என்று நம்பினார் பில் சைல்டு.

எனவே, தனது ஆசிரியர் தொழிலைக் கைவிட்டு விட்டு வங்கிக்குச் சென்று கடையை விரிவுபடுத்தக் கடன் கேட்டார். வங்கி அதிகாரிகள் நஷ்டத்தில் இயங்கும் கடையை மூடிவிடுவது நல்லது என்றும் கடன் தர இயலாது என்றும் கைவிரித்துவிட்டனர்.

தனது மாமா நடத்திவந்த கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளதையும், தொடர்ந்து மக்கள் வாடிக்கையாளராக உள்ளதையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உழைக்க முடிவெடுத்தார். தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு கடன்களை அடைக்க வழிசெய்தார். தேவையான போது குறைந்த அளவில் கடன்களை வாங்கி, அதை விரைவில் அடைப்பது என்பதைக் கடைப்பிடித்தார்.

இப்படிப் பொறுமையாக உழைத்த அவருடைய கடையின் வியாபாரம் ஒரு நாளைக்கு 25,000 டாலர்கள் என்ற நிலையை பதினோராவது ஆண்டில் எட்டியது. தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் உழைத்த போது அவரது கடைகளின் விற்பனை ஆண்டுக்கு பத்து கோடி டாலராக உயர்ந்தது. 1994 – ஆம் ஆண்டு அது 25 – கோடி டாலர்களை எட்டியது. ஒரு எளிய மனிதராக வியாபாரத்தைத் தொடங்கிய இவரது வெற்றி அப்பகுதியில் இருந்த பலரையும் கூர்ந்து நோக்கிட வைத்தது. ஹவாய் தீவில் வீடுகளுக்குத் தேவையான மிகப்பெரிய தளவாடப் பொருட்கள் விற்கும் நிறுவனமாக ஆர்.சி. வில்லி திகழ்ந்தது.

சர்வதேசத் ெதாழில் முனைவோருக்கான வில்லெஸ் மையத்தின் இயக்குனர் ஜேம்ஸ் ரிச்சி என்பவர் சிறந்த சிந்தனை கொண்ட மனிதராகக் கருதி பில் சைல்டை ஒரு தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அழைத்தார். பில் சைல்டின் தொழில் வெற்றிக்கான காரணங்களை அங்கே விவரித்த போது, பின்வரும் எட்டுக் கொள்கைளை பில் சைல்டு கொண்டு உயர்ந்தார் என்பதை அறிய முடிந்தது.

ஒன்று – ஒவ்வொரு வாடிக்கையாளரையும், நீங்கள் உங்களை எப்படி மற்றவர்கள் நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே நடத்துங்கள் என்பது முதலாவதாகும்.

இரண்டு – சிறிய விஷயங்களைக் கூர்ந்து கவனியுங்கள். காரணம், சிறிய விஷயங்கள்தான் எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்துகின்றன.

மூன்று – நேர்மையாகத் தொழில் செய்யுங்கள்.

நான்கு – சரியானதை மட்டுமே செய்யுங்கள்.

ஐந்து – மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அதையே நாமும் செய்யாமல், நமக்குச் சரியானது என்பதைச் செய்தல்.

ஆறு – வேலைக்குத் தகுந்த, சரியான பணியாளர்களை நியமியுங்கள்.

ஏழு – ஊழியர்களை உங்கள் சொந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களைப் போல நடத்துங்கள்.

எட்டு – விற்பனை செய்வதற்காக மட்டும் அல்ல, மாறாகத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தொழில் நடத்துங்கள்.