
அறிவியலின் கதை -03
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
பண்டைய பாபிலோன், எகிப்து ஆகிய நாகரிகங்களில் அறிவியல் வளர்ந்து வந்த அதே சமயத்தில் இமயமலையை ஒட்டிய பகுதிகளான இந்தியத் துணைக் கண்டம், சீனா ஆகிய நிலங்களிலும் அறிவியல் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தது.
இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம், சீனாவில் மஞ்சள் நதி நாகரிக மக்கள், நகரங்களை அமைத்து வாழத் தொடங்கி இருந்தனர். அப்போது இந்தியத் துணைக் கண்டமும், சீனாவும் மிகப்பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகளாக இருந்தன. பல அரசுகள் இரு நிலங்களிலும் ஆட்சி புரிந்தன. அந்த அரசுகள் வெளி தேசங்களுடன் வணிகத் தொடர்பை உருவாக்கின. இந்த வணிகத்தையொட்டி அறிவியலும் இங்கே உச்சம் தொட்டது. அறிவியல் வணிகத்துக்கு உதவியது. வணிகத்தில் இருந்து கிடைத்த செல்வம் அறிவியல் ஆய்வுகளுக்கு வித்திட்டது.
சீனாவின் பொறியியல் முன்னேற்றம்
அத்தனை பெரிய சீனாவை ஆள்வது மன்னர்களுக்குச் சுலபமாக இருக்கவில்லை. அதற்கான தேவையே புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி அவர்களை உந்தித் தள்ளியது.
எதிரிகளின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தேவையால் உலகின் மிகச் சிறந்த பொறியியல் அதிசயமாக திகழும் சீனப் பெருஞ்சுவரை (Great Wall of China) சீனர்கள் எழுப்பினார்கள். பொதுயுகத்திற்கு முன் 5 – ஆம் நூற்றாண்டில் கிழக்கு சவு வம்சம் சீனாவை ஆண்டபோது சுவர் கட்டும் பணி தொடங்கியது.
சீனப் பெருஞ்சுவர் வடக்கில் இருந்து அந்நியர்கள் படையெடுத்து வருவதைத் தடுக்கவும், சீனாவுக்குள் வாழும் மக்களின் நகர்வைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. அந்த சுவரைக் கட்டி முடிக்கவே பல நூற்றாண்டுகள் ஆகின. தொடர்ந்து பழுது பார்க்கவும், நீட்டிக்கவும் செய்து கடைசியாக மொத்தம் 21,196 – கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு இன்றைய சீனப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது.
அதேபோல சீனாவில் உள்ள மற்றொரு பொறியியல் சாதனை சீனப் பெருங்கால்வாய் (Grand Canal). 5 – ஆம் நூற்றாண்டில் சூய் வம்சத்தில் இந்தக் கால்வாய்ப் பணிகள் தொடங்கின. இயற்கையாக உருவான நதிகளையொட்டி கட்டப்பட்ட இந்தக் கால்வாய், 1794 கிலோ மீட்டர்கள் நீளத்தில் வடக்கில் பெய்ஜிங்கில் ஆரம்பித்து தெற்கில் ஹாங்க்சோவை இணைக்கிறது. இப்படி ஒரு கால்வாயைக் கட்டுவது எளிது கிடையாது. பொறியியல் நுட்பமும், நில அளக்கையின் ஞானமும் இருந்தால்தான் சாத்தியம். இதைவிட இவ்வளவு நீளத்துக்கு கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க கடுமையான மனித உழைப்பும் தேவை.
சீனர்களும் அண்டமும்
சீனர்கள் ஒட்டுமொத்த அண்டத்தையும் உயிருள்ள பொருளாகப் பார்த்தனர். இங்குள்ள அனைத்தும் ஆற்றலால் இணைக்கப்பட்டுள்ளதாக கருதினர். அண்டத்தின் உயிராற்றலை ‘ச்சீ’ (Qi) என அழைத்தனர்.
அதேபோல சீனர்கள் அண்டம் என்பது பஞ்ச பூதங்களால் ஆனது என நம்பினார்கள். நிலம், நீர், மரம், நெருப்பு, உலோகம் ஆகியவைதான் அந்த பஞ்ச பூதங்கள். இந்த ஐந்து அடிப்படைப் பருப்பொருட்களுக்கும் தனி குணமும், சக்தியும். அவை ஒன்றோடு ஒன்று ஒத்திசைவில் கலந்து உலகை உருவாக்கியுள்ளன என்கிறது சீனர்களின் பண்டைய அறிவியல். இப்படி அண்டம் அனைத்தும் பருப்பொருட்களாலும் ஆற்றலாலும் உருவானது என சீனர்கள் நம்பியதால் ‘அணு’ (Atom) குறித்த கருத்தாக்கம் சீனாவில் உருவாகவில்லை.
எண்களும் பயன்பாடும்
இன்று நாம் பள்ளியில் பயிலும் அபாகஸ் கருவி பொது யுகம் 1500 – ஆம் நூற்றாண்டிலேயே சீனாவில் பயன்பாட்டில் இருந்தது. அபாகஸ் முறையை வைத்து அடிப்படைக் கணக்குகளான கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் ஆகியவற்றை வேகமாக அவர்களால் செய்ய முடிந்தது.
எண்கள் நாட்களின் நீளத்தையும், வருடத்தின் நீளத்தையும் கணக்கிட உதவின. பொது யுகம் 1400 – ஆண்டிலேயே ஒரு வருடம் என்பது 356.5 – நாட்கள் என சீனர்கள் கணக்கிட்டு வைத்திருந்தனர். மாதங்களைக் கணக்கிட மற்ற நாகரிகங்களைப்போல் சீனர்களும் நிலவின் இயக்கத்தைத்தான் பயன்படுத்தினர்.
இதனால், இயற்கையில் அனைத்தும் சுழற்சியில் இயங்குகிறது என்பது சீனர்களின் புரிதல். இந்தச் சுழற்சியின் அடிப்படையில்தான் அண்டமும் இயங்குவதாக சீனர்கள் நம்பினர். இதன்படி பார்க்கும்போது அண்டமும் அழிந்து பிறக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை.
சீனர்கள் அண்டத்தின் கட்டமைப்பையும் ஆய்வு செய்தனர். வானில் தோன்றும் நட்சத்திரங்களை ஆராய்ந்து அவர்கள் உருவாக்கிய வரைபடம், அண்டம் வளைத்திருக்கிறது என்கிற புரிதலை அவர்களுக்குக் கொடுத்தது. ஹான் வம்சத்தில் வாழ்ந்த ஜுவான் லி எனும் சீன அறிஞர் சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் ஆகியவை வெட்ட வெளியில் அலைகின்றன என்றும், காற்றினால் அவை நகர்கின்றன என்றும் கூறினார். இந்தக் கருத்து, வானில் உள்ள பொருட்கள் அனைத்தும் நிலையாக ஒரே இடத்தில் இருக்கின்றன என்று சொன்ன பண்டைய கிரேக்க சிந்தனையில் இருந்து மாறுபடுகிறது.
கிட்டத்தட்ட விண்வெளி குறித்து நவீனப் புரிதலுக்கு நெருக்கத்தில் சீனர்களின் பண்டைய புரிதல்கள் இருந்தன என்பது நமக்குத் தெரிய வருகிறது.
பூமி பழமையானது எனச் சீனர்கள் நம்பி வந்தபடியால், அவர்கள் தொல்லுச்சங்களை (Fossils) அப்போதே பொக்கிஷமாக கருதத் தொடங்கினர். தொல் எச்சங்கள் என்பவை தாவரங்கள், விலங்குகளின் இருகிய மிச்சங்கள் என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது. கற்களை அவற்றின் கடினத்தன்மையை வைத்தும், நிறங்களை வைத்தும் சீனர்கள் வகைப்படுத்தினர். பச்சை மாணிக்க கற்களுக்கு சீனாவில் ஒரு மதிப்பு இருந்தது. அதை அழகான சிலைகளாக வடிக்கும் சிற்பிகளும் இருந்தனர்.