
மூளை என்னும் முதல்வன்
திரு.A.மோகனராஜூ,சேலம்
நுண்ணறிவின் அளவிற்குக் காரணம் மாற்றம் செய்வதில் இருக்கும் திறனே ஆகும். (Measure the intelligence is the ability to change -Albert Einstein) என்று அறிஞர் ஐன்ஸ்டீன் சொல்கிறார். இந்த உலகம் கணிதம் என்ற மொழியால்தான் முழுவதும் எழுதப்பட்டு இருக்கிறது என்று அறிஞர் கலிலியோ சொல்கிறார். கணிதம் வாழ்வின் பல சாத்தியக்கூறுகளை ஆய்கிறது. இது பிரபஞ்சத்தின் மொழி. கடினமான பல பிரச்சனைக்கு எளிமையான, நேர்த்தியான தீர்வைக்காண கணிதம் உதவுகிறது.
இலக்கியங்கள் எந்த ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாமல் கனவும் கற்பனையுமாக எல்லையில்லாது பரவுகிறது. ஆனால் கணிதம் அப்படி அல்ல. உறுதியான ஆழமான அடித்தளம் கொண்டு எழுகிறது, அது எல்லையில்லாத உயரத்திற்கு சென்றாலும் ஏணிப்படிகள் போல ஒரு கட்டமைப்பில் வளர்ந்து உயர்கிறது. சுமார் 80 – நாடுகளில் 8000 – கும் மேற்பட்ட அறிவியல் பாடங்கள் கணிதத்தின் துணைக்கொண்டே கற்பிக்கப்படுகின்றன. இந்த உலகம் எப்படி அணுக்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஐன்ஸ்டீன் மற்றும் அறிவியல் அறிஞர்களால் கணிதம் கொண்டே விளக்கிச்சொல்ல முடிந்தது.
இந்தப் பிரபஞ்சம் கணித மொழியால் மட்டும்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று நவீனக் கணிதத்தந்தை ரெனே தேஸ்கார்ட்ஸ் (Rene Descartes) சொல்கிறார். கணிதம் உள்ளுணர்விற்கும் அப்பாலும் செல்கிறது, இயற்கையின் உண்மைகளைத் தெளிவாக எடுத்துச்சொல்கிறது, ஆனால் இலக்கியம், கனவுகளையும், கற்பனைகளையும், கதைகளையும் சொல்கிறது.
இலக்கியங்களின் கதைகள், கவிதைகள், சரித்திரம் எல்லாம் மனித வாழ்வியல் கோட்பாடுகளை விளக்கிச்சொல்கிறது, அன்பு, கருணை, ஒற்றுமை, கடின உழைப்பு, விழிப்புணர்வு போன்ற வாழ்வின் புரியாத தளங்களை இலக்கியங்கள் புரிய வைக்கின்றன. அன்பில்லாதவன் என்ன செய்வான், கருணை உள்ளவன் என்ன செய்வான் என்றால் இலக்கியம் நமக்குப் பல புரிதல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் அனைத்துப் புரிதலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும், ஒன்றுபோல என்றும் இருக்காது. ஆனால் கணிதம் அப்படியல்ல மனிதன், இனம், மொழி, நாடு, கண்டம் மாறினாலும் கணித எண்களும், சமன்பாடுகளும் அவைகள் கொடுக்கும் முடிவுகளும் மாற்றமில்லாமல் ஒன்றாகவே இருக்கும். காரணம் கணிதம் என்றும் மாறாத இயற்கையின் உண்மைகளை அடிப்படையாக்கொண்டு இயங்குகிறது. 2+2=4 என்பது உலகெங்கிலும் எந்த நேரமும், யாரிடமும் எங்கும் மாறுவதில்லை.
ஒரு கிராமத்தில் ஒரு “குண்டுக்கல்” அதை தூக்குபவனுக்கு அழகிய, தன் மகளை மணம்முடித்துக் கொடுப்பதாக ஊர்த் தலைவர் தெரிவித்தார், ஊரில் உள்ள எல்லோரும் முயற்சி செய்தார்கள், ஒருவன் கல்லைத்தூக்கி அழகியை மணந்துகொண்டான்.
ஒரு நாட்டில் ஒரு குதிரையை அடக்குபவனுக்கு தன் மகளை மணம்முடித்துக் கொடுப்பதாக அரசன் பிரகடனம் செய்தார். நாடு முழுவதும் உள்ள எல்லோரும் முயற்சி செய்தார்கள், இளவரசி சொன்னாள், உடல் பலத்தால் ஒருவன் குதிரையை அடக்கி என்னை மணப்பதை நான் விரும்பவில்லை. நான் கொடுக்கும் எண்புதிர் போட்டியில், மூளையைப்பயன்படுத்தி விடையைக் கண்டுபிடித்தவனைத்தான் மணந்துகொள்வேன் என்றாள். எல்லோரும் முயற்சி செய்தார்கள், ஒருவன் சரியானவிடையைக் கண்டுபிடித்து இளவரசியை மணந்துகொண்டான். ஒரு கணிதப்புதிருக்கு கணக்கிட்டு விடைகாண முயலும்போது, மூளையின் ஒவ்வொரு நியுரான் செல்லும் தன் பங்களிப்பைக்கொடுத்து விடையைக் காண முயற்சிக்கிறது. தற்போது உலகம் முழுவதும் இளைஞர்கள் அதிகப்படியான நேரத்தை கணினி விளையாட்டுப் போட்டிகளில் (Video, and puzzle Games) செலவிடுகிறார்கள். மூளையை முழுவதுமாகப் பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்தி மகிழ்வடைகிறார்கள்.
கணிதமே அளவுகோல்
அன்றாட வாழ்க்கையில், படித்த, படிக்காத, ஏழை, பணக்கார, நாகரிகம் உள்ள, இல்லாத எல்லோர் வாழ்விலும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கணிதம் நீக்கமற நிறைந்திருக்கிறது. கணிதம்தான் மனித மூளையில் அதிகமான வளர்ச்சியைக் கொடுத்தது. மனித மூளை 86 பில்லியன் நியுரான் செல்கள்வரை வளர்ந்து வளர்ச்சியின் எல்லையைத் தொட்டது கணிதம் மூலமாகத்தான். கணிதம் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் திறமையை மேம்படுத்துகிறது. பணம் மட்டும் கணிதத்தால் எண்ணப்படுவதில்லை, உலகில் உள்ள எல்லாப்பொருட்களும் கணிதம் கொண்டே அளவிடப்படுகிறது.
3,6, மற்றும் 9 என்ற எண்கள் பிரபஞ்சத்தின் ரகசியத்தின் திறவுகோள் என்கிறார்கள். 3 என்ற எண் உருவாகுதலுடன் தொடர்புடையது. உடல், மனம், ஆன்மா உருவாகும் சக்தி படைத்தது. 6 என்ற எண் சமநிலையுடன் தொடர்புடையது, நல்லிணக்கம், உறவுகள், மற்றும் பொருள் சார்ந்தது (கெய்ன்), 9 என்ற எண் நிறைவுருதல், (Transformation) மற்றும் சமுதாயப்பணியுடன் தொடர்புடையது என்றும் அறிவியல் அறிஞன் நிகோலா டெஸ்லா சொல்கிறார். உண்மையில் அனைத்து எண்களும் ஒவ்வொரு மனிதனின் மூளைச்செல்களிலும் இரண்டறக்கலந்து வாழ்வை வளப்படுத்துகிறது.
அதனால்தான் எண்களுக்கு உயிர் இருக்கிறது என்று “ஆலிசின் அற்புத உலகம்” எழுதிய எழுத்தாளர் லூயிஸ் கரோலின் நம்பினார். கணிதம் எல்லையில்லாது பெருகி வளரும் ஒன்றுதானே. தானாக வளரும் ஒன்று உயிர் உள்ளதுதானே. ஒருவர் விபத்தில் அடிபட்டு மூளை காயமடைந்து மயக்க நிலையில் பத்து நாட்கள் இருந்து மீண்டெழுந்தார். அவர் உடல் முழுவதும் நன்றாக இருந்தது. மூளை நன்றாக இருக்கிறதா என்பதை சோதிக்க டாக்டர் ஒரு கணக்கை கொடுத்து விடைகண்டு பிடிக்கச்சொன்னார். சரியாக விடை கண்டு பிடித்து தன் மூளை மிகச்சிறப்பாக இயங்குகிறது என்று உறுதிப்படுத்தினார்.
ஒரு எண்ணம் மூளையில் இருக்கும்போது அது, மனிதனுக்கு மனிதன் மாறுகிறது, நிலையான வடிவத்தில் இருப்பதில்லை, அன்பு, கருணை, ஆனந்தம், காதல், இதற்கு ஒரு வடிவம் கொடுப்பது மிகவும் கடினம். ஆனால் எண்கள் மூளையில் இருக்கும்போதும் சரி அது வெளியில் இருக்குபோதும் சரி, 1, 23, 45, 67, 890. என்று மிகத்தெளிவான வடிவத்தில் இருக்கின்றது. அந்த எண் உணர்த்தும் எந்தப் பொருளும் ஒரு நிலையான வடிவமும் அளவும் கொண்டிருக்கிறது.
எழுத்துக்கள், அதாவது மொழி வருவதற்கு முன்பே எண்கள், கணிதம் மனித வாழ்வில் கலந்துவிட்டது. மனிதன் மொழியறியாதபோதே வேட்டையாடிக் கொண்டுவந்த பொருட்களை கணக்குப்போட்டுத்தான் பிரித்துக்கொடுத்தான். ‘எண் என்ப ஏனைய எழுத்தென்ப’ என்று வள்ளுவர் பெருந்தகையும், ‘எண் எழுத்து இகழேல்’ என்று ஔவை மூதாட்டியும் எழுத்துக்களுக்கு முன் எண்களை வைத்து கண்களுக்கு சமமாகப் பார்த்தார்கள். ஒருவன் கைப்பையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்ற எண்ணம், நிலையில்லாத பல மாற்றங்களுக்கு உட்பட்டது. எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பணத்தை எடுத்து எண்ணிவிட்டால், அது மாறாத உண்மையாகிவிடுகிறது.
தினம் தினம் ஒரே வேலையைச்செய்வதால் மூளை அலுத்துப்போய்விடுகிறது. குதிரை காலையில் புல் மேயத்தொடங்கினால் மாலைவரை புல்மேய்வதுதான், இது வாழ்நாள்முழுதும் குதிரையின் வாழ்வில் நடக்கிறது, குதிரை அலுத்துப்போவதில்லை, ஆடும் மாடும் அப்படித்தான், வேண்டாம் என்று புல்லை ஒருபோதும் ஒதுக்குவதில்லை.
ஒரு மனிதனுக்கு 10 நாட்கள் தொடர்ந்து பழைய சாதம் மூன்று வேலையும் கொடுத்தார்கள், 11-வது நாள் அவன் தற்கொலைக்கு முயற்சி செய்தான். அறுசுவை உணவு கொடுத்து உயிர்ப்பிழைக்க வைத்தார்கள். மனிதனுக்கு புதிய உணவு பல சுவைகளில் தேவைப்படுகிறது, அது அவன் உடலுக்கு அல்ல அவன் மூளைக்குத்தான், காரணம் மனித மூளை எப்போதும் புதுமையை நேசிக்கிறது, அற்புதங்களை படைக்கத் துடிக்கிறது. இயற்கையின் ரகசியங்களை ரசிக்கப் போராடுகிறது. உணவு, உடை, இருப்பிடம், வாகனம், எதுவானாலும் புதுமையாகவே மூளைக்குத் தேவைப்படுகிறது. கணிதம்தான் புதுமையைப் படைக்கிறது.
ஒரு கணிதச் சமன்பாட்டை, ஒரு எண்ணைக் கண்டுபிடிக்கும் போட்டியைக் (Number puzzles) கொடுத்துப்பாருங்கள். மூளை நியுரான் செல்கள் அனைத்தும் எல்லை இல்லாத வேகத்தில் ஒன்று சேர்ந்து செயல்படும். மூளையைத்தூண்ட, சுறுசுறுப்பாக வைத்திருக்க உடனடி டானிக், கணிதம். ஆய்வுகளுக்கு ஒப்பற்ற உபகரணம் கணிதம். ஒரு மனிதனை இருட்டு அறையில் அடைத்துப் பூட்டி வைத்திருந்தாலும் அவன், கற்பனையில் கண்ணிமைக்கும் நேரத்தில் முழு வீச்சில், மண்ணிலிருந்து நிலவிற்குச் சென்று நடந்து பார்ப்பான், நடு இரவிலும் அங்கிருந்து சூரியனுக்கும் (சுமார் 15 கோடி கி.மி) சென்று தொட்டுப்பார்த்து சூட்டை உணர்ந்துவிடுவான்.