வெற்றியோடு விளையாடு! – 28
டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்
முனைவர் எம்.எஸ்.முத்துசாமி ஐபிஎஸ்
காவல் துறை தலைவர் (ஓய்வு)
அவர்களுடன் ஒரு நேர்காணல்
காவல்துறையின் உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் எம்.எஸ் முத்துசாமி IPS. சட்டத்துடன் முரண்படும் குழந்தைகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பணியில் இருந்த போது பணிபுரிந்த இடங்களில் எல்லாம் தமிழ் இலக்கிய அமைப்புகளை உருவாக்கியவர். ஏழைகளின் வாழ்வு முன்னேற, எண்ணற்ற உதவிகளைச் செய்தவர். அவரைப் பார்த்ததுமே நமக்குள் பாசிட்டிவ் எனர்ஜி பரவிப் படர்கிறது. ‘வெற்றியோடு விளையாடு’ பகுதிக்காக இந்த மாதம் முத்துசாமி ஐபிஎஸ் அவர்களின் நேர்காணல் முழுமையாக, ஆளுமைச் சிற்பி வாசகர்களுக்கு இதோ:
1) தங்களது பெற்றோர் மற்றும் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்களேன்?
எனது பிறந்த ஊர் மாங்குடி-மீனாட்சிபுரம் கிராமம். இது விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரத்திற்கு அருகில் உள்ளது. சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி என்னும் 782 அடிகள் கொண்ட நூலை இயற்றிய மாங்குடி மருதனார் பிறந்த ஊர் இது. எனது பெற்றோர்கள் சங்கரலிங்கம், வள்ளியம்மாள். எனக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருக்கிறார்கள்.
எனது இளமைக் காலம் முழுவதும் வறுமைதான். ஐந்தாம் வகுப்புவரை எங்கள் கிராமத்தில் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் பயின்றேன். 1970 – களில் எங்கள் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, நாங்கள் புலம்பெயர்ந்தோம். தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் உள்ள அகணி அரசுப்பள்ளியில் ஆறு, ஏழு, எட்டு படித்தேன். கோயில்பத்து பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தேன்.பத்தாம் வகுப்பிற்கு எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டோம். பத்து,பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புக்கள் தளவாய்புரத்தில் படித்தேன். கல்லூரிப்படிப்பை இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் படித்தேன். இருபது கிலோமீட்டர் காலையும், இருபது கிலோமீட்டர் மாலையும் என தினமும் நாற்பது கிலோமீட்டர் சைக்கிளில், கல்லூரி சென்று வந்தது மறக்க முடியாதது.
2) பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது நீங்கள் முதல் மாணவரா, சராசரி மாணவரா?
பள்ளிகளில் படிக்கும் போது நான் சராசரி மாணவன்தான்.பதினொன்றாம் வகுப்பில் கணிதப்பாடத்தில் தோற்றுவிட்டேன். ஆனால், மீண்டும் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் Pure Science Group படித்து, வகுப்பில் முதல் மாணவனாகத் தேறினேன்.
+2 முடித்தபின்பு, மேலே படிக்க வசதி இல்லை. எனவே ஓராண்டு, தளவாய்புரத்தில் உள்ள ஒரு விசைத்தறிக்கடையில், துணிகள் மடித்து வைக்கும் வேலை பார்த்தேன். மாதம் ரூபாய் 250 சம்பளம் வாங்கினேன். எனது படிப்பு ஓராண்டு Break ஆன பின்பு, மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசையால், Day scholar ஆக கல்லூரியில் இளங்கலை வரலாறு படிக்க ஆரம்பித்தேன். ஹாஸ்டலில் சேர்வதற்கு வசதியில்லை. கணிதம் படிக்காத காரணத்தால், இளங்கலை வேதியியல், இயற்பியல் பாடங்களைப் படிக்க முடியவில்லை.
எனது கல்லூரி வாழ்க்கையே எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அனைத்துப் பேராசிரியர்களும் என்மீது அன்பு மழை பொழிந்தனர். பேராசிரியர் கி.சு. கிருஷ்ணசாமி என்னை அதிகம் நெறிப்படுத்தினார். பல்கலைக்கழக அளவில் ஐந்தாம் இடமும், கல்லூரியில் முதல் இடமும் பெற்றேன். முதுகலை சமூகப்பணி படிப்பிலும், பல்கலைக் கழக அளவில் இரண்டாம் இடம் பெற்றேன்.
3) விளையாட்டுப் போட்டி இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்வீர்களா?
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, மிகப் பெரிய விபத்தில் சிக்கி, இடுப்பு எலும்புகள் உடைந்துவிட்டன. எனவே, விளையாட்டில் அதிகம் ஈடுபட முடியாமல் போயிற்று. இலக்கியப் போட்டிகளில் கூட, கல்லூரிக் காலங்களில்தான் ஈடுபட்டேன். எம்.ஏ படிக்கும்போது, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களால், சிறந்த தமிழ்ப்பேச்சாளர் என பாராட்டுக்கிடைத்தது, எனக்கு சிறந்த ஊக்கமாக அமைந்தது.
4) இளமைக்காலத்தில் உங்கள் லட்சியம் போலீஸ் அதிகாரி ஆவதுதானா?
நிச்சயமாக இல்லை. துணைக் காவல் கண்காணிப்பாளராகத் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு வரை, காவல்துறையில் பணிசெய்யும் ஆசை இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், காவல்துறையில் சேர்ந்தபின்பும், மீண்டும் TNPSC Group -1 தேர்வு எழுதி, வேறு வேலைக்குப்போக முயற்சிசெய்தேன், Divisional Fire Officer(DFO) பதவி கிடைத்தது. நண்பர்களின் ஆலோசனைப்படி, காவல்துறையில் தொடர்ந்தேன். காலப்போக்கில், காவல்துறையை மிகவும் அதிகம் நேசித்து, வேலை செய்தேன்.
5) உங்கள் கனவு சாத்தியப்பட்டதற்கு தங்களுடைய உழைப்பு எப்படி இருந்தது?
1989-90களில், சென்னை அண்ணாநகர், பன்னிரண்டாவது பிரதான சாலையில் இருந்த Special Training Institute(STI)ல் சேர்ந்து, மத்தியத் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி பெற்றதுதான், இப்போதைய உயர்வுக்கு அடிப்படை. 1990 ஐஏஎஸ், நேர்முகத்தேர்வில், நான் வெற்றிபெறவில்லை. அடுத்த ஆண்டு, TNPSC Group-2 மூலம் Senior Inspector of Cooperatives பதவி கிடைத்தது. அதில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தேன். TNPSC Group-1 தேர்வு மூலம், 1998ல் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) பணியில் சேர்ந்தேன். 1989-90 களில், ஒரு நாளுக்கு, பத்து மணிநேரம் படிக்கமுடிந்தது. அதன்பின்பு, வேலையில் இருந்துகொண்டு அவ்வாறு படிக்க முடியவில்லை.
படித்தவர்கள் எல்லோரும் பாஸ் செய்வதில்லை. ஆனால், பாஸ் செய்த எல்லோரும் படித்தவர்கள்தான். எனவே, சிறப்பான அணுகுமுறை தேவை. அந்த அணுகுமுறையை, நூறு சதவிகிதம், நான் செயல்படுத்தாமல் போனதற்காக என்னை நானே மன்னிக்க முடியாது. இன்னும் சிறப்பாக முயற்சி செய்திருக்கலாம். என் கனவு சாத்தியப்படவில்லை என்பதை, வருத்தத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன். இருப்பினும், காவல்துறையில் பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது, எனக்குக்கிடைத்த பெரிய பேறு. அதனால், மிகுந்த மனநிறைவு கிடைத்தது.
6) தங்களுடைய பணிக்காலத்தில் தங்களுடைய முக்கிய சாதனைகளாக எவற்றை கருதுகிறீர்கள்?
காவல்துறையில், பணி செய்யும்போது, பிற சேவைகள் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் கிடைக்கும். நம்மைச்சுற்றியுள்ள பிரச்சனைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வதே பெரிய சாதனைதான். அதைத்தவிர வேறு ஒன்றும் நான் சாதனையாகச் செய்யவில்லை.
காவல்துறையின் அன்றாடப் பணிகளுடன் நேரடித்தொடர்பில்லாத, ஆனால் சமுதாய நலன்சார்ந்த, சில சேவைகளைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மானாமதுரையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்தபோது, பொதுமக்களுடன் சேர்ந்து ‘மானாமதுரை பாரதி தமிழ்ச்சங்கம்’ என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தியதும், 2004ம்ஆண்டு, நான் எழுதி வெளியிட்ட ‘ஐஏஎஸ்,ஐபிஎஸ், குரூப்-1 தேர்வுகளுக்கு தயார் செய்வது எப்படி’ என்ற புத்தகத்தின் ராயல்ட்டி தொகையை, பாரதி தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கியதும், சமூக சேவைதான்.
திண்டுக்கல் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, சாலை விபத்துக்களை வெகுவாகக் குறைத்தது, மூத்த குடிமக்களுக்கு தனியாக குறைதீர் கூட்டங்கள் நடத்தியது, மாவட்டக் காவல்துறையில் பணியாற்றிய, ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனையுடன், மருத்துவ அடையாள அட்டை வழங்கியது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து ‘திண்டுக்கல் இலக்கியக் களம்’ என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கியது,
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.