சாதனையாளர் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்
ஒரு தலைமுறைக்கு முன்பு சிறுவர்களிடையே கதைப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்தது, ஒவ்வொருவராகப் படித்து முடிக்கும் வரை காத்திருப்பார்கள் அல்லது அந்த புத்தகத்திற்காக சண்டை போடுவது கூட அலாதி இன்பமானது..!
ஒவ்வொரு வீடுகளிலிலும் தாத்தா பாட்டியிடம் அடம் பிடித்து கதை சொல்லச் சொல்லி கேட்டு அப்படியே மடியில் தூங்கி விடும் பெரும் வாய்ப்பு குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் மிகப்பெரிய வரமாக அமைந்திருந்தது..!
என்னதான் சமூக வலைத்தளங்கள் சூழ்ந்திருந்தாலும் அதனை ஒதுக்கி விட்டு, அப்படி கதை கேட்டும் குழந்தைகள் வளர்ந்திருக்கிறார்கள், கதை சொல்லியாகவும், ஒரு படைப்பாளியாகவும் சாதனை படைத்திருக்கிறார்கள்..!
கோவை உலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் சோ.ராஜேஷ், முனைவர் அ.இராஜலட்சுமியின் இளைய மகள் ஹரி வர்ஷினி ராஜேஷ்சும் தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்ததினால் “..ஒரு நூலாசிரியராக..” உயர்ந்திருக்கிறார்..!
இந்தியாவின் “..இளம் வயது எழுத்தாளர்..” விருது பெற்றிருக்கும் ஹரிவர்ஷினி ராஜேஷ் (12), ஸ்ரீபல்தேவ்தாஸ் கிக்கானி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிவர்ஷினி ராஜேஷ் தன்னுடைய 8 – வயதில் எழுத ஆரம்பித்து 12 –
வயதிற்குள் 13 – புத்தகங்கள் எழுதி முடித்திருக்கிறார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவலாகும்..!
“..பதினெண் கதைகள், ஜீராவும் பஜ்ஜியும், நிசாசினியின் மீன் பொம்மை, அரைப் பல்ல காணோம், மூணு கண்ணன் வந்துட்டான், குகைக்குள் பூதம், காண்டாமிருகம் எதுக்கு ஓடுது, குக்கூகுக்கூ தவளை, மேக்கப் போட்ட விலங்குகள், ஐந்து பூதங்கள், காட்டுக்குள் திருவிழா, முத்தமிழறிஞரின் முத்து மொழிக் கதைகள், தேவதையின் அற்புத உலகம்..” போன்ற பதிமூன்று புத்தகங்கள் ஹரிவர்ஷினி ராஜேஷ் எழுதியதிற்கு இவரது அக்கா வர்ஷினி ராஜேஷ் படங்கள் வரைந்திருக்கிறார்.
ஹரிவர்ஷினி ராஜேஷ் நூலாசிரியர் மட்டுமல்ல, கதை எழுதும் போட்டி, கதை சொல்லும் போட்டி, விளையாட்டுப் போட்டி, தனிநபர் நடிப்பு, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் போட்டி, தேசப்பக்தி பாடல்கள் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.
ஒரு “..இளம் கதை சொல்லியாக..” அவதாரமெடுத்து பல நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறார். அத்துடன் தன்னுடைய யூடீயூப் சேனலில் தான் எழுதிய கதைகள் மற்றும் மற்றவர்கள் எழுதிய கதைகளும் நேர்த்தியாக வழங்கி வருகிறார்.
தமிழகத்தின் பல்வேறு பொது அமைப்புகள் மூலமாக “..இளம் கதை சொல்லி, சொல்லின் செல்வர், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மூலமாக பராட்டும், விருதும் பெற்ற ஹரிவர்ஷினி ராஜேஷ் இதுநாள் வரை 27 – விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள் பலவும் பெற்றுருக்கிறார்.
இளம் வயதில் புத்தகம் எழுதியதிற்காக இந்தியா ரெக்கார்ட் அகதெமி சார்பாக ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், ஆசிஸ்ட் வோல்ட் ரெக்கார்ட், யங் அட்சீவர் அவார்ட் மற்றும் ஆன்லைன் போட்டியிலிலும் கலந்து கொண்ட விருதுகளின் சாதனைப் பட்டியல் நீள்கிறது..!
தமிழகத்தின் பற்பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று வருகிற ஹரிவர்ஷினி ராஜேஷ்யிடம் பேசினோம்..,
“..இந்தியாவின் இளம் எழுத்தாளர் விருது கிடைத்த சந்தோசங்களைத் தாண்டி இன்னும் நிறையப் புத்தகங்கள் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் வந்து விட்டது. நான் எழுதும் புத்தகங்களை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்கிற உற்சாகம் வந்து விட்டது. அப்படி படிக்கும் குழந்தைகள், சிறுவர்கள் அவர்க ளின் கருத்துக்களையும் அறிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்கூட படிக்கும் சகதோழிகள் நாங்களும் என்னைப் போல் ஆக வேண்டுமென்று சொல்லுவார்கள், என்னை ஒரு எடுத்துக்காட்டாக நினைத்து அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சொல்லும் போது எனக்கு அளவு கடந்த சந்தோசமாக இருக்கும்.
எங்க ஸ்கூல்ல எல்லா ஆசிரியர்களும் என்னைப் பாராட்டினார்கள், இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது, இன்னும் நான் நிறைய சாதனைகள் பண்ணுவதற்கு ஆலோசனைகள் வழங்கியும், ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.
நாங்கள் குடும்பத்துடன் வெளியே செல்லும் போது நான் புத்தகம் எழுதி வெளியிட்டுருக்கிறேன் என்று அடையாளம் தெரிந்து, என்னிடம் வந்து கை கொடுத்து வாழ்த்துக்கள் சொல்லும் போது என் மனசுக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கும்.
குழந்தைகள், சிறுவர்கள், யாராக இருந்தாலும் சரி பெரியவர்களை மதிக்க வேண்டும், பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும், போன்ற கருத்துக்களையும் என் கதையில் மையப்படுத்தி எழுதி வருகிறேன்.
என்னோட அம்மா ஒரு நாள் எனக்கு ஒரு வீடியோவை காட்டினார்கள், அந்த வீடியோவில் ஒரு குழந்தை நான் சொன்ன கதை வீடியோவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தை நான் பார்த்து ரொம்பவும் உற்சாகமாகி விட்டேன்.
அப்போது தான் ஏற்கனவே என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு ஒரு கதையால் சமூகத்தில் ஒரு சிறு குழந்தையிடம் கூட மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்கிற நம்பிக்கை மேலும் வலிமையாக மாறியது. அந்த தன்னம்பிக்கையுடன் அடுத்தடுத்த கதைகளில் கவனம் செலுத்துக்கிறேன். நான் எழுதும் கதைகள் மூலமாகவும் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.