ஐந்து ஆறைவிடப் பெரியது 26


திரு.முகில்

ட்டுக்கார ராமசுப்ப நாயக்கர், அன்று கிடை எழுப்புகிற நேரத்துக்குச் சற்று முன்னதாகவே கிடைக்கு வந்தார். புலத்தில் கிடை சரியாகப் பெயர்த்துப் போடப்பட்டிருக்கிறதா என்று சுற்றிப் பார்த்தார். கிடை நாய்களும் கிடைக் காவல்காரர்களும் ஊருக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆட்டுக் கூண்டுகள், வட்ட முறைப்படி சரியாகவே வைக்கப்பட்டு இருந்தன.

துண்டங்களின் சொந்தக்காரர்களின் வீட்டுச் சிறுவர்கள், ‘பாலாட்டங் குழைகளை அரிஅரியாகப் பிரித்து, அதன் நீண்ட வேர்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து முடிச்சுப்போட்டு, கூண்டுகளைச் சற்றே நிமிர்த்தி, தலையை முட்டுக் கொடுத்துக்கொண்டு, ஆட்டுக்குட்டிகளுக்குக் குழை கட்டிக் கொண்டிருந்தார்கள். வளர்ப்பு ஆட்டுக்காரர்கள் கிடைக்கு வந்து தங்களுடைய ஆட்டுக்குட்டிகள் சௌகரியமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டும், அந்தக் குட்டிகள் தாயின் மடுவில் முட்டி முட்டிப் பால் குடிப்பதை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டும், நின்று கொண்டும் இருந்தார்கள்.
வீடுகளில், குழந்தைகளுக்குப் பால் இல்லாத பெற்றவர்கள் கிடைக்கு வந்து, தருமப்பால் பீய்ச்சி வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். வயிற்றுக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, வெள்ளாடுகள் வயிற்றினுள்ளிருந்து இழுத்து அசைபோடும் ‘உதவி’யை எடுத்து, கறந்த பாலுடன்

உடனே கலந்து, சங்கால் அந்தக் குழந்தைகளுக்குப் புகட்டிக் கொண்டிருந்தார்கள். கண்வலிக்காரர்கள், ஆட்டுக்காரர்களின் ஒத்தாசையுடன் வெள்ளாட்டம் பாலை, காம்பைப் பிடித்து தங்களின் நோயுடைய கண்களின் பீய்ச்சிக் கொண்டிருந்தார்கள். கிடாய்கள் புருவைகளையும் குறால்களையும் இச்சையுடன் ‘போ’ என்ற சத்தத்துடன் ‘வெரட்டிக்’ கொண்டு இருந்தன. வீடுகளில் புது அடுப்புப் போட்டவர்கள் அதன் மேல் மெழுகுவதற்கு ஆட்டுச் சாணத்தைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஆடுகளின் வளர்ந்த ரோமத்தை கதிமையான பெரிய கம்பராக் கத்தியினால் சிலர் ‘மலுவிக்’ கொண்டிருந்தார்கள்…

ஆடுகளை, அவற்றைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வை, இதைவிட அழகாக விவரித்திட முடியுமா! கரிசல் பாட்டையா கி.ராஜநாரயணன் எழுதிய ‘கிடை’ என்ற நாவலை வாசித்திருப்பீர்கள் என்றால் நீங்களும் அதை உணர்ந்திருப்பீர்கள். இதுவரை வாசிக்காதவர்கள், அதை வாசித்தே தீருவேன் என்று சத்தியம் செய்துவிட்டு, ஆடுகளைப் பின் தொடருங்கள்.
ஆடு என்றாலே மந்தமான விலங்கு. ஆட்டு மந்தை மனநிலை என்பது மோசமான ஒன்றைச் சொல்லும் உதாரணம். ஏன் ஆட்டுக்கு இந்த அவப்பெயர் என்பதை முதலில் பார்த்து விடுவோம். ஓர் ஆடு மலையில் ஒரு பக்கத்தின் பாறையில் இருந்து இன்னொன்றுக்குத் தாவியது. இடைவெளி அதிகமிருந்ததால் அது கீழே பள்ளத்தில் விழுந்து இறந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆடுகளும் ‘சுயபுத்தி’ இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாகத் தாவி, பள்ளத்தில் விழுந்து இறந்தன. இப்படிப் பல கதைகளும், நிஜ சம்பவங்களும் உண்டு. இதுவே ‘ஆட்டு மந்தை மனநிலை’, அதாவது Herd Behaviour என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு விஷயத்தை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காகவே, அது சரியா, தவறா என்று யோசிக்காமல் தாமும் அதைச் செய்வது. சுயபுத்தி இல்லாத தன்மை. இது ஆடுகளிடம் மட்டுமல்ல, பல உயிரினங்களிடத்தும் உண்டு. மனிதர்களிடமும் மிக அதிகமாகவே உண்டு. ஆகவே ஆடுகளை மட்டும் இழிவுபடுத்துவது அநீதி. ஒரு நடிகர் குறிப்பிட்ட இடத்துக்கு வருகிறார் என்றதும் ரசிகர்கள் ஆபத்தை உணராமல் மரத்திலும் கட்டடங்களிலும், இன்ன பிற உயரமான இடங்களிலும் தொங்கிக் கொண்டு நிற்பதுகூட இதில் சேர்த்திதான். மந்தை மனநிலை என்பது புத்தி இல்லாத மந்த மனநிலை. அது ஆடுகளைவிட மனிதனுக்கு மிக அதிகமாகவே உண்டு. ஆகவே அமைதி காப்போம்!

ஆடு என்பதனைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்கள், இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன. ஆடு என்பது பொதுப்பெயர். அதில் மருக்கை என்பது பெண் ஆட்டைக் குறிப்பது. யாடு என்பதும் ஆட்டைக் குறிப்பதே. செச்சை என்றால் செந்நிறம் கொண்ட வெள்ளாட்டு வகை. வருடை என்றால் மலைப்பகுதியில் வாழும் வரையாடு. துருவை என்றால் இரும்பின் துரு நிறத்தில் இருக்கும் செம்மறியாடு. வெள்ளை என்றால் வெள்ளாட்டு வகை. மை என்றால் கருமை நிற ஆடு. மறி என்பது ஆட்டுக்குட்டி. கிடாய் என்றால் கிட்டுவது, அதாவது தகர்ப்பது. எதிரியைத் தலையால் மோதித் தகர்க்கும் விலங்கு என்று பொருள்.

இடையர்கள், வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, அவை தரும் பாலைக் கறந்து, வீடு வீடாகச் சென்று கொடுத்து, அதற்குப் பதிலாக நெல் பெற்றுக் கொண்டார்கள் என குறுந்தொகை செய்தி சொல்கிறது. (பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுஉடை இடைமகன்).

இரு விசும்பு அதிர முழங்கி… என்ற அகநானூற்றுப் பாடல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஓர் இரவில் நிகழ்ந்த காட்சி ஒன்றை அழகிய தமிழால் விவரிக்கிறது. செம்மறியாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்ற அந்த இடையன், மாலையில் இடியும் மின்னலுமாகப் பெய்த மழையில் மாட்டிக் கொண்டான். ஆடுகளுடன் ஓரிடத்தில் தங்கிவிட்டான். நள்ளிரவில் ஆடுகளின் அச்சத்தைப் போக்குவதற்காக ஒரு கையில் தீப்பந்தமும், மறுகையில் வலிமையான கோலும் ஏந்தி நின்றான். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஏதாவது ஓர் ஆடு, வழி மாறி தன் பக்கம் வராதா என்று குறுநரி ஒன்று குறுகுறுப்புடன் காத்திருந்தது. இதைக் கண்ட இடையன், தன் வாயினால் நீண்ட சீழ்க்கை ஒலி (விசில்) எழுப்ப, அந்த ஒலி காடெங்கும் அதிர, அதைக்கேட்டு அஞ்சிய நரி முட்புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

ஆடும், ஆடு சார்ந்த வாழ்க்கையும் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. முன்பெல்லாம் விவசாயத்தின் உப தொழிலாகத்தான் ஆடு வளர்ப்பு இருந்து வந்தது. மண் வளத்தை அதிகரிக்க, கிடை போடுவதற்காகவே ஆடு வளர்த்தார்கள். ஆனால், இப்போது அது பிரதான தொழிலாகவும் மாறி வருகிறது. ஆடு வளர்ப்பதற்கு அதிகம் செலவு வைக்கக்கூடிய தொழில் அல்ல என்பது மிகவும் முக்கியமான காரணம். குறிப்பாக, செம்மறி ஆடுகளைவிடவும் வெள்ளாடுகளை வளர்ப்பதற்கு சுமார் இரண்டரை மடங்கு குறைவான தொகையே செலவாகும். பராமரிப்பு குறைவு. குறைந்த இடம் போதும் போன்ற காரணங்களால் விவசாயிகள் உட்பட பலரும் முழுநேர ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

பலன் தரும் ஆடுகள்

ஆட்டுச் சந்தை, அதன் வணிகம் பெரிதாக வளர்ந்திருக்கிறது. ஆட்டுக்கறியின் தேவை அதிகரித்திருப்பதால் அதன் விலையும் அதிகரித்திருக்கிறது. ஆக, ஆடு வளர்ப்பு என்பது நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாகவும், மாநிலத்தின், தேசத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட அளவு பங்களிப்புத் தரக்கூடியதாகவும் இருக்கிறது.

Survival of Fittest என்று சொல்வார்கள் அல்லவா. அதற்கான அற்புதமான கதை ஒன்றில் ஆடுகளே நாயகர்கள். சித்தர்களுள் ஒருவராக அறியப்படும் இடைக்காடர், மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டு வந்தவர். ஒரு சமயம் ஊர் மக்களிடம், ‘இன்னும் கொஞ்ச நாள்களில் கொடிய பஞ்சம் வரப்போகிறது’ என்று கணித்து எச்சரித்தார். ஆனால், மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருந்ததால் யாரும் இடைக்காடரின் சொற்களை மதிக்கவில்லை. அவரை ஏளனமாகப் பேசினார்கள்.

இடைக்காடரோ பஞ்சத்தை எதிர்கொள்ளத் தயாரானார். தம் ஆடுகளை எந்தக் காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலைகளையும், வறட்சியிலும் செழித்து விளையும் ஆவாரம் செடி தளைகளையும் தின்னப் பழக்கினார். ஆடுகளை ஆவாரம் தளைகளைத் தின்னப் பழக்குவது சிரமம் என்றாலும் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். அதேபோல அவற்றைக் கடல் தண்ணீரைக் குடிக்க வைத்தும் பழக்கினார். தான் சேகரித்த வரகு தானியத்தை மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பி பெரிய வீடு கட்டினார்.

இடைக்காடர் கணித்தது போலவே பஞ்சம் வந்தது. ஆவாரம் தளைகளையும், எருக்கிலைகளையும் உண்டு பழகிய ஆடுகள், கடல் தண்ணீரைக் குடித்து தம் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்தன. உடலில் அரிப்பெடுத்தால், சுவற்றில் தம் உடம்பைத் தேய்த்துக் கொள்வது ஆடுகளின் வழக்கம் அல்லவா. அவை அப்படித் தேய்க்கும்போது இடைக்காடர் கட்டிய வீட்டின் மண் சுவற்றிலிருந்து வரகு தானியங்கள் உதிர்ந்தன. அவற்றைச் சேகரித்த இடைக்காடர், வரகைத் தூர்த்து, அரிசியாக்கி, ஆட்டுப் பாலைப் பீய்ச்சி, அதைக் கஞ்சியாக்கிக் குடித்து, அந்தப் பஞ்ச காலத்தைக் கடந்தார். ஆடுகளும் அவை பாட்டுக்கு குட்டிப் போட்டு, மேய்ச்சல் வாழ்க்கை வாழ்ந்து, பஞ்சத்தைச் சிரமமின்றிக் கடந்தன. இடைக்காடரை ஆடுகளும், ஆடுகளை இடைக்காடரும் பரஸ்பரம் காப்பாற்றிக் கொண்டார்கள். தக்கன பிழைக்கும்! ம்ம்மேஏஏஏ!
இடைக்காடர் மட்டுமல்ல, அரையாடைக் காந்தியும் ஆட்டுப்பால் பிரியரே. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் ஆட்டுப்பாலை அள்ளி அள்ளிப் பருகலாம். எலும்புத் தேய்வு என்னும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் ஆட்டுப்பால் தடுக்கிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதன் மூலமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் வராமலும் பாதுகாக்கிறது. வெள்ளாட்டுப் பாலானது சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆக, ஆட்டுப்பால் என்பது உணவு என்பதைக் காட்டிலும் நல்ல மருந்தாக இருந்து வருகிறது. மருத்துவப் பலனுக்காகவே காந்தியும் ஆட்டுப்பாலை ஏற்றுக் கொண்டார்.

காந்தி, சிறு வயதிலிருந்தே தனது உணவுப் பழக்கத்தில் கடும் சோதனைகளை மேற்கொள்ளும் நபராக இருந்தார். அதற்கு தன் உடலையே சோதனைக் கருவியாக வைத்துக் கொண்டார். அது சில சமயங்களில் அவரது உடல் நலனையும் கடுமையாகப் பாதித்தது. பாலை அசைவம் என்று கருதிய காந்தி, அதை அருந்துவது அஹிம்சைக்கு எதிரானது என்று சொல்லி முற்றிலும் தவிர்த்தார். ஒரு சமயம் காந்தி உடல் மெலிந்து தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். அப்போது மருத்துவர் ‘உங்கள் உடல் தேறுவதற்கு பால் குடிப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை. பால் குடித்தால்தான் குணமாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்.

‘பசும்பால், எருமைப்பால் குடிக்க வேண்டாம். பதிலாக ஆட்டுப்பாலை அருந்துவது என்பது உங்கள் கொள்கையைப் பாதிக்காது’ என்று கஸ்தூரிபா காந்தி வலியுறுத்தினார். காந்தி அதை முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், தன் உடல் நலனுக்காக, சத்தியாகிரகப் போராட்டத்தை வலிமையுடன் முன்னெடுத்து நடத்த வேண்டும் என்பதற்காக, தனது பிடிவாதத்தைத் தளர்த்தி, ஆட்டுப்பால் பருகத் தொடங்கினார். பின்பு அது அவரது தினசரி உணவில் சேர்ந்து கொண்டது. ஆட்டுப்பாலைக் கொண்டு உணவைச் சமைக்கும் வழக்கமும் காந்திக்கு இருந்தது. ஆட்டுப்பால் தயிரை, ஐஸ்கிரீம்போல அவர் விரும்பி உண்டார்.
காந்தியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார். ‘உணவு பழக்கங்கள் மனிதரின் குணத்தை மாற்றுமா? நீங்கள் ஆட்டுப்பால் மட்டுமே குடிக்கிறீர்கள். அது உங்களுடைய குணத்தை மாற்றுமா?’

அதற்கு காந்திஜி சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். ‘இப்போதுதான் நான் ஒரு குவளை ஆட்டுப்பால் குடித்தேன். இப்போது என் தலையில் கொம்பு முளைக்கப் போவதுபோல அரிப்பு தெரிகிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் சீக்கிரம் ஓடிப்போய்விடுங்கள்.’
காந்தி எங்கே சென்றாலும் அவருக்கெனச் சிரமப்பட்டு ஆட்டுப்பால் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவர் பயணம் செய்யும்போது ரயில் நிலையங்களில் பசும்பால், எருமைப்பாலெல்லாம் கிடைத்தது. ஆட்டுப்பாலுக்காகச் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆட்டுப்பால் விஷயத்துக்காக காந்தியின் தீவிர ஆதரவாளரான கவிக்குயில் சரோஜினி நாயுடு கிண்டலாகத் தனது கருத்தைச் சொன்னார். ‘காந்திஜி எளிமையைக் கடைபிடிப்பதற்கு அதிகம் செலவாகிறது.’