ஐந்து ஆறைவிடப் பெரியது 27

திரு.முகில்
எத்தனையோ உயிரினங்கள் குறித்து இந்தத் தொடரில் எழுதியாயிற்று. அடுத்து எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தபடியே நடைபயிற்சியில் இருந்தபோது, கருப்பு நிறப் பூனை ஒன்று குறுக்கே ஓடியது. அட, இதைவிட நல்ல சகுனமே கிடையாதே! மியாவ் சுழி போட்டு பூனைகள் உலகத்துக்குள் புகுந்துவிட்டேன்.
ஆகச்சிறந்த செல்லப்பிராணிகள் நாயா, பூனைகளா என்று எத்தனைப் பட்டிமன்றங்கள் நடத்தினாலும் தீர்வு கிடைக்காது. நாய்கள் அளவுக்கு பூனைகளுக்கு நன்றி விசுவாசம் கிடையாது. அவை சுயநலம் மிக்கவை. உதவும் குணம் கிடையாது. ஒரு நாளில் 16 மணி நேரத்தைத் தூங்கியே கழிப்பவை. பூனைகளுக்கு மனிதர்கள் மீது எளிதில் நம்பிக்கை உண்டாகாது. அவை எதையும் எவரையும் சந்தேகத்துடனேயே பார்க்கும். பூனைகள் கெட்ட வேட்டையாடிகள். பூனைகளால், உலகில் பல பறவை இனங்களும், பாலூட்டி உயிரினங்களும் முற்றிலும் அழிந்து போயிருக்கின்றன. இப்படிப் பல குற்றச்சாட்டுகளுக்குச் சொந்தக்காரர் பூனையார். ஆனால், மேற்சொன்னவை தவிர, பூனைகளைப் புகழ்ந்து பாராட்டிச் செல்லம் கொஞ்ச இன்னும் ஏராளமான பாசிட்டிவ் உண்மைகள் உண்டு. ‘பூனை, தான் கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைத்துக் கொள்ளும்’ என்றொரு பழமொழி உண்டு. நாம் கொஞ்சம் கண்களை அகலத் திறந்து கொண்டு, மனிதர்கள் பழக்கி வளர்த்த முதல் செல்லப்பிராணியாகக் கருதப்படும் பூனைகளை நெருங்கிப் பார்ப்போம்.
தானியங்களைப் பாதுகாப்பதற்காக, அவற்றை நாசப்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே மனிதன் பூனைகளை வளர்க்கத் தொடங்கினான். பின்பு அது செல்லப்பிராணியாக மனிதர்களோடு ஒட்டிக் கொண்டது என்பது ஆய்வுகள் சொல்லும் தகவல். ஆனால், எகிப்தியர்களின் பூனைப்பாசம் அதையும் தாண்டிப் புனிதமானது. பண்டைய எகிப்தில் பூனைகளுடன் எகிப்தியர்களும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் என்பதே சரி. வீடு ஒன்று தீப்பிடித்தால் உள்ளே இருக்கும் முக்கியமான பொருள்களை விட்டுவிட்டு, பூனைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வரும் அளவுக்கு அவர்கள் படு தீவிர பூனைக் காதலர்கள். பூனை, எகிப்தியர்களின் உயிருக்கு நேர்!
எகிப்தியர்கள் வழிபட்ட கடவுள்களில் விலங்குகள், பறவைகள் உருவம் கொண்டவர்களே அதிகம். அதில் பூனையும் முக்கியமான கடவுள். அந்தப் பெண் மியாவ் கடவுளின் பெயர் ‘பாஸ்டெட்’. பாம்புகளிடமிருந்தும் எலிகளிடமிருந்தும் வீட்டில் வளர்க்கும் பூனைகளே தங்களைப் பாதுகாப்பது போல, தீய சக்திகளிடமிருந்து பாஸ்டெட் தங்களைக் காப்பதாகக் கருதினார்கள். வீட்டில் பூனை இருந்தால் அதிர்ஷ்டம், நல்ல விஷயங்கள் நடக்குமென உறுதியாக நம்பினார்கள். வசதியான எகிப்தியர்கள் தாங்கள் வளர்க்கும் பூனைகளுக்கு ஜிமிக்கி கம்மல் முதல் நெக்லெஸ், கொலுசு வரை போட்டு அழகு பார்த்தார்கள்.
ஒரு வீட்டில் ‘வாழ்ந்த’ பூனை ஒன்று இறந்துவிட்டால், ஆண்கள் தங்கள் புருவங்களை மழித்துக்கொண்டனர். மீண்டும் புருவம் வளரும் வரை செத்துப்போன பூனையை நினைத்து துக்கம் கொண்டாடினர். பூனையைக் கொல்வது என்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. பூனைக்கான பிரம்மாண்டமான கோயில் என்று பெர்-பாஸ்ட் என்கிற பண்டைய எகிப்திய நகரத்தில் கட்டப்பட்டிருந்தது.
தாங்கள் வளர்க்கும் பூனை இறந்துவிட்டால், அதன் உடலை அழகுபடுத்தி, பதப்படுத்தி, மம்மியாக்கினார்கள் எகிப்தியர்கள். ஆம், பண்டைய எகிப்தில் மியாவ் மம்மிகளும் இருந்தன! சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்த இளவரசர் தூத்மோஸ். அவரின் செல்லப்பிராணி டா-மியு என்கிற பெண் பூனை. இளம் வயதிலேயே இளவரசர் இறந்து போக, அவருக்கென்று எகிப்திய பாணி கல்லறை உருவாக்கப்பட்டது. அவரின் செல்லமான டா-மியு பட்டத்து இளவரசருக்கான மரியாதையோடு தன் மீதி காலத்துக்கும் வாழ்ந்து மறைந்தது. அதுவும் இளவரசரோடு ‘மம்மி’யாக வைக்கப்பட்டது.
ஸ்காண்டிநேவிய புராணப் பெண் கடவுளான ஃப்ரேஜாவின் ரதத்தை இரண்டு பூனைகள் இழுப்பதாகக் கதைகள் உண்டு. காஸா (Kasha) என்பது ஜப்பானிய பூனை வடிவ அசுரக் கடவுள். இறந்தவர்களது உடலானது புதைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போய்விட்டால், காஸா தூக்கிப் போய்விட்டதாகவும், அந்த நபருக்கு மறுபிறவி கிடையாது என்பதும் ஜப்பானியர்களின் நம்பிக்கை.
சஷ்தி என்பது இந்தியாவிலும் நேபாளத்திலும் வழிபடக்கூடிய பெண் இந்துக் கடவுள். குழந்தை பிறப்பு, விவசாயச் செழிப்புக்கான கடவுளாக கருதப்படும் சஷ்தியின் வாகனம் பூனைதான். இந்த சஷ்தி தெய்வம், அவளது கருப்புப் பூனை குறித்து வங்க மொழியில் புராணக் கதைகள் உண்டு. ஒரு குடும்பத்தின் இளைய மருமகள், கருப்பு நிறப் பூனை ஒன்று (வேறு நிறங்களும் சொல்லப்படுவதுண்டு) உணவைத் திருடியதாக அதைத் துன்புறுத்தினாள். அந்தப் பூனை அந்த இளைய மருமகளுக்குப் பிறந்த ஏழு குழுந்தைகளையும் அடுத்தடுத்து திருடிக் கொண்டு போனது.
எட்டாவது குழந்தையைத் திருடிக் கொண்டு போகும்போது, இளைய மருமகள் பூனையைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தாள். எட்டுக் குழந்தைகளையும் கடவுள் சஷ்தியிடம் அந்தப் பூனை பத்திரமாக ஒப்படைத்திருந்தது. பூனையைத் துன்புறுத்தியற்காக அந்த மருமகளை மன்னிப்புக் கேட்கச் செய்த சஷ்தி கடவுள், அவளது குழந்தைகளைத் திருப்பிக் கொடுத்ததோடு, வளமும் நலமும் பெருக ஆசிர்வதித்ததாகக் கதை உண்டு.
பூனைகள் குறித்து ஏராளமான மூட நம்பிக்கைகள் பல்வேறு கலாசாரங்களில் உண்டு. இங்கே பூனை குறுக்கே சென்றால் அபசகுனம், போகிற காரியம் விளங்காது என்று ஜோதிட சாத்திரத்தில் இருப்பதாக நம்புபவர்கள் அநேகம். அதுவும் கருப்புப் பூனை குறுக்கே செய்தால், அவ்வளவுதான், சனி பகவானே குறுக்கே கேட் வாக் செய்துவிட்டார் என்று பதறிவிடுவார்கள்.
ஆம், பூனைகளிலும் நிறவெறி மனிதனுக்கு உண்டு. குறிப்பாக ஐரோப்பியர்களுக்கு அது அதிகம் இருந்தது. அவர்கள் பலர் கருப்புப் பூனையை சாத்தானின் வடிவமாக நம்பினர். இன்னும் நம்புகின்றனர். மந்திர, தந்திர, தீய செயல்களுடன், அதை நிகழ்த்தும் சூனியக்காரர்களின் செல்லப்பிராணியாக கருப்புப் பூனை அடையாளப்படுத்தப்படுகிறது. சினிமாக்களில்கூட திகிலை உண்டாக்க கருப்புப் பூனையே குறுக்கே ஓட விடப்படுகிறது.
ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தால் அவரது படுக்கையில் கருப்புப் பூனையைப் படுக்க வைத்தால் சீக்கிரம் இறந்து விடுவார் என்றும், இறுதி ஊர்வலத்தில் கருப்புப் பூனை எதிரே வந்தால் அதே குடும்பத்தில் இன்னொரு உயிர் போகும் என்றும் ஐரோப்பியர்கள் நம்பினர். பாசிட்டிவ் மூடநம்பிக்கைகளும் உண்டு. அந்தக் காலத்தில் நெடுந்தூரக் கடல் பயணம் செய்யும் மாலுமிகள், தங்களுடன் கருப்புப்பூனையை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதினார்கள். அதேபோல, கணவன் கடலில் மீன் பிடிக்கச் சென்றால், மனைவி வீட்டில் கருப்புப் பூனையைப் பேணிப் பராமரித்தபடி காத்திருக்கும் வழக்கமும் இருந்தது. அது கணவனுக்குக் கடலில் பாதுகாப்பை அளிக்கும் என்று நம்பினார்கள்.