ஐந்து ஆறைவிடப் பெரியது 26

திரு.முகில்

மீன் தன் இரையைத்தான் பார்க்கிறது, தூண்டிலை அல்ல! – இது மங்கோலியப் பழமொழி.
‘‘ஒரு மீனிடம் மரம் ஏறத் தெரியாதா என்று கேட்டுப் பாருங்கள். அது வாழ்க்கை முழுக்கத் தன்னை முட்டாளாகவே கருதிக் கொள்ளும்’’ இது புகழ்பெற்ற தத்துவம்.

மீன்கள்
பிடிப்பதற்குத்தான்.
மீனை எடு.
வலையை மற.

இது ஜென் கவிதை.

பசித்த ஒருவனுக்கு மீனை அளித்தால், அந்த நேரத்துப் பசியைப் போக்குகிறாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், அவனது வாழ்க்கைக்கே வழி காட்டுகிறாய். இது பிரபல நம்பிக்கை வாசகம்.

தத்துவங்களிலும் பழமொழிகளிலும் மனிதனின் சிந்தனைகளிலும் மீனானது உணவு என்ற உணர்வோடுதான் பெரும்பாலும் நோக்கப்படுகிறது. மீன்கள், உலகில் மனிதனுக்கும் மூத்தவை. உலகில் முதன் முதலாக மீனானது எந்த மனிதனால், எங்கே, எப்போது, எதனால் பிடிக்கப்பட்டு, எப்படி உண்ணப்பட்டது என்பதற்கான விடையே கிடையாது. உலகின் முதல் தூண்டில் யாரால் உருவாக்கப்பட்டது என்பதற்கும் பதில் கிடையாது. ஆனால், மனிதர்களின் வாழ்வோடும் வாழ்வின் தத்துவத்தோடும் மீன்கள் நீந்திக்கொண்டே இருக்கின்றன. பலருக்கு மீனின்றி அமையாது உலகு, மீனின்றி அமையாது உணவு. கடலும் கடல் சார்ந்த தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரமே மீன்கள்தாம். பெரும்பாலான மதங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவும்கூட.

மீன்களுக்கும் மதங்களுக்கும் நம்பிக்கை சார்ந்த பிணைப்புகள் பல உண்டு. சிலுவையைப் போல கிறிஸ்தவர்களுக்கு இன்னொரு முக்கியமான அடையாளச் சின்னம், இக்துஸ் (Ichthys) என்ற மீன் வடிவச் சின்னம். அதனுள் இருக்கும் எழுத்துகளுக்கு, ‘இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், மீட்பர்’ என்று பொருள். முற்காலத்தில் கிறிஸ்தவர்களின் ரகசியச் சின்னமாக அது இருந்தது. அறிமுகமில்லாத இருவர் சந்திக்கும்போது ஒருவர் தரையில் மீன் வடிவச் சின்னத்தைப் பாதி வரைய, மற்றவர் மீதியைச் சரியாக வரைந்து முடித்தால் இருவரும் கிறிஸ்தவர்கள் என்று தெரிந்து கொள்வார்கள். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு பெருங்கூட்டத்துக்கே இயேசு உணவளித்த அதிசயத்தை மத்தேயு அதிகாரம் விவரிக்கிறது.

பைபிளின் வசனங்களெங்கும் மீன் வாசம்! யூத மதம் மீனை சந்ததிப் பெருக்கத்தின் சின்னமாகவும், அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் உயர்த்திக் காட்டுகிறது. யூத வருடப் பிறப்பில் மீன்கள் முக்கியமான அதிர்ஷ்ட உணவு.