கேட்டலும் அறிதலும் – 02


திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

வணக்கம் ஐயா…

வணக்கம். உட்காருங்க. நான் பள்ளிக்கு வரும் போது, பள்ளிக்கூடத்தின் வெளியே விற்கும் பொருட்களை வாங்கி சிலர் சாப்பிட்டுட்டு இருந்தீங்க. அங்கிருக்கிற அசுத்தமான தண்ணீரை சிலர் குடிச்சிட்டு இருந்தீங்க. அதெல்லாம் தவிர்த்திடுங்க.. ரொம்ப ஆபத்தானது..

ஏன் ஐயா.. அது பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆமாம். அண்மையில் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின் அறிக்கை ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லியிருக்கிறது. அதாவது அந்த அறிக்கையில், 2008 முதல் 2017 வரை பிறந்த கிட்டத்தட்ட 1.56 கோடி பேர், எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்றும் இதில், 76 சதவிகித பாதிப்புகளுக்கு எச்.பைலோரி
(H. Pylori) என்ற பாக்டீரியா தொற்றே காரணமாக இருக்கும் எனக் கூறுகிறது. பொதுவாக, இந்த பாக்டீரியா, குழந்தைப் பருவத்தில் அசுத்தமான தண்ணீர், உணவு, உண்பதன் வாயிலாகப் பரவும். பிறகு வயிற்றில் தங்கி, நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் குடற்புண்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் இந்தப் பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, ஆசியாவிலேயே இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.

கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் பாதுகாப்பானவை தானே?

இது நம் பொதுவான நம்பிக்கை. பிரான்சில் நடந்த ஓர் ஆய்வில் குளிர்பானங்கள், ஐஸ் டீ, பழச்சாறு போன்ற கண்ணாடிப் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களில், லிட்டருக்கு ஏறத்தாழ 100 நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது அசல் பிளாஸ்டிக்காலான பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் இருக்கும் பிளாஸ்டிக் நுண் துகள்களை விட அதிகமாம்..

இந்த நுண்துகள்கள் எப்படிக் கண்ணாடிப் பாட்டில்களுக்குள் வர முடியும்?

நல்ல கேள்வி. பாட்டில்களில் இருக்கும் உலோக மூடிகளின் மேல் பூசப்பட்டுள்ள பெயின்ட் உதிர்ந்து (கரைந்து) கலப்பதே இந்த மாசுக்கு முக்கியமான காரணம். பாட்டில் மேல்மூடியை அடைக்கும் முன், மூடிகளை காற்றால் ஊதி கழுவுவதன் வாயிலாக, இந்த துகள்களின் எண்ணிக்கையை 60 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. கார்க் எனப்படும் தக்கையால் மூடப்பட்ட கண்ணாடிப் பாட்டில்களில் உள்ள தண்ணீரில் மிகக் குறைந்த அளவே நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.