பீனிக்ஸ் மனிதர்கள் -13

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

ஒரு மனிதன் தெய்வத்தைத் துணைக்கழைத்துக் கொண்டு, ஒரு செயலைச் செய்ய நினைக்கும்போது, ஒருவேளை அச்செயல் ஈடேறாமல் போனாலும், வருத்தப்பட்டு அச்செயலைப் புறக்கணித்து விடுவது சரியான விஷயமல்ல.

மாறாக, தன்னுடைய முயற்சியின் துணையால் அம்மனிதன் தனது செயல்பாட்டைத் தொடர முயன்று, விடாமுயற்சி செய்து, தான் எண்ணிய வெற்றியை அடைவதைத்தானே சிறப்பான செயலாகக் கொள்ளமுடியும்? என்று சொல்கிற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் உண்மையின் அகச்சீற்றம் தகிக்கும் தீப்பிழம்பாய் நம்மைச் சுடுகையில், நமது ஆழ்மனது நாம் கைவிட்ட முயற்சிகளை எண்ணி வெட்கித் தலை குனிகிறது..

“ஆட்டுக்கு வாலை அளந்துதான் வச்சான்”, “உருண்டு புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமாம்“, “கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவானாம்“ என்பதாக இயலாமையையும், முயற்சியின்மையையும் வசவு வார்த்தைகளால் வாழ்த்துப் பூக்கள் பாடுகிற சமூகம், தெய்வத்தால் ஆகாது என்றாலும், தன் முயற்சிகளால் போராடி வெற்றி பெற முனைகிற மனிதர்களைக் கொண்டாடுகிறதா? என்று பார்த்தால், பெரும்பாலும் இல்லையென்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.

எனினும், முயற்சியாளர்களைப் புறந்தள்ளுகிற பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியிலும், நல்லோர் வட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும், அத்தகு மகத்தான முயற்சியாளர்களும் உருவெடுத்து கொண்டேதான் இருப்பார்கள் என்பதையும் உலக வரலாறு அவ்வப்போது நம் கண்முன்னே நிரூபித்துக் கொண்டே நில்லாதோடும் நதி போல பயணிக்கிறது..

அப்படியான ஒரு மகத்தான முயற்சியாளராக தனது நாற்பத்தாறு வயதுக்குள், சுமார் இருபதாண்டுக்கால ஆசிரியப்பணி அனுபவத்தோடும், குழந்தைமையைக் கொண்டாடும் நேசமிகு நெஞ்சத்தோடும், நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமிதத்தோடும், அடுத்த தலைமுறையிடமிருந்து தனக்குப் பிடித்த விஷயங்களைக் கற்றுக்கொள்கிற ஆர்வத்தோடும் வாழ்ந்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திரு கிறிஸ்து ஞானவள்ளுவன் அவர்கள்.

தனது இளம் வயதிலேற்பட்ட போலியோ பாதிப்பை மீறி, ஏளனங்களைப் புறந்தள்ளி, வாழ்தல் குறித்த தாகத்தோடும், தேடலோடும் தொடர்ந்து பயணிக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்வை அறிந்து கொள்ளுதல், நம் வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கக்கூடும் எனும் நம்பிக்கையோடு, இந்த மாத “பீனிக்ஸ் மனிதர்கள்” இதோ உங்கள் கரங்களில்…

  1. உங்கள் இளமைக் காலம் பற்றி..?

அப்பா சத்தியநாதன் தமிழார்வம் மிக்க அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர். அம்மா நிக்கோலஸ் இல்லத்தரசி. ஒரு சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகள் என்னுடன் பிறந்தவர்கள். எனது இளமைக் காலத்தில் வீடு வேம்பாருக்குப் பக்கத்திலுள்ள அக்கரை விசுவாசபுரத்தில் இருந்தது. அச்சமயத்தில பனைமரத் தொழிலாளர்களைக் கொண்டு பதனீர் இறக்கி, கருப்புக்கட்டி தயார் செய்து வந்தோம். அந்நாட்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வாக அமைந்திருந்தது.

  1. உங்கள் கல்விப் பருவம் பற்றிய விபரங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்…?

தொடக்கக் கல்வியை வேம்பார் TDTA  தொடக்கப்பள்ளியிலும், நடுநிலைக் கல்வியை வேம்பார் புனித பீட்டர் நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் (அப்போது உயர்நிலைப் பள்ளி மட்டுமே. தற்போது மேல்நிலைப் பள்ளி) தினமும் 2 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று படித்தேன். எனது வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கி வைத்தது கன்னிராஜபுரத்தில் உள்ள நூலகம்தான். அன்று தொடங்கிய வாசிப்பு இன்று வரை தொடர்கிறது.

மேல்நிலைக் கல்வியை பாரம்பரியமிக்க தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்தேன். விடுதி வாழ்க்கை எனக்குப் பல புதிய அனுபவங்களைக் கற்றுத் தந்தது. 12 ஆம் வகுப்பை 1991 மார்ச்சில் முடித்தாலும், ஆசிரியப் பயிற்சியில் சேர்வதற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த இரண்டு வருடமும் துணிக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினேன்.

1993 செப்டம்பரில் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து இரண்டு வருடங்கள் படித்தேன். என்னை ஒரு எழுத்தாளனாக, பேச்சாளனாக மேம்படுத்திக் கொண்டது இந்த ஆசிரியப் பயிற்சி காலத்தில்தான். 1995ல் ஆசிரியப் பயிற்சியை முடிக்க வேண்டிய நாங்கள் தமிழக அரசின் நடவடிக்கைகளால் 1997ல் தான் முடித்தோம். என் தொடக்கக் கல்வி தொடங்கி, ஆசிரியப் பயிற்சி வரை ஆசிரியர்கள் விரும்பும் மாணவனாகவே கல்விப் பயணத்தை முடித்தேன்.

  1. இளவயதிலேயே போலியோவால் பாதிப்படைந்தவர் நீங்கள். அது பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்..? அது சார்ந்து ஒரு ஐயம்.. இந்தியாவிலிருந்து போலியோவை முழுவதுமாக நீக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. அது எந்தளவு சாத்தியமென நினைக்கிறீர்கள்?

1973 ஜூலையில் என்னைத் தாக்கிய காய்ச்சல் போலியோவில் முடிந்ததாகச் சொல்வார்கள். அதன்விளைவாக நடக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளேன். இதனால் என்னை ஏழு வயதில்தான் முதலாம் வகுப்பிலேயே சேர்த்துள்ளார்கள். பள்ளிக்கு 2.5 கி.மீ தூரம் நடந்து செல்லும்போது, பல முறை கால் மடிந்து கீழே விழுந்துள்ளேன். சில நேரங்களில் உடன் வரும் மாணவர்கள் ஓடிப்போக, அவர்களோடு ஓட முடியாமல் உட்கார்ந்து அழுதது நினைவுக்கு வந்து போகிறது.

இதனால் பெற்றோர் எனக்காகவே பதனீர் சீசன் முடிந்ததும் வேம்பாரில் வாடகை வீடெடுத்து தங்கினார்கள். பலரும் ஊனத்தைச் சுட்டிக்காட்டிப் பேசும்போது, மனம் வெதும்பி அழுத அனுபவங்களும் உண்டு. தொடர்ந்து கால் சற்று பலமானதால், இந்தக் கஷ்டங்கள் குறைந்து போனது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் போது கன்னிராஜபுரத்தில் இருந்து சைக்கிளில் வரும் அண்ணன் இளராஜ் அவர்கள் காலையில் ஏற்றிச் செல்வார். எட்டாம் வகுப்பு முடித்ததும் அப்பா பழைய சைக்கிள் ஒன்று வாங்கித் தந்ததால் சகஜ நிலைக்கு வந்து விட்டேன். அந்நாள் முதலாக ரெக்கை கட்டிப் பறந்தது ஞானவள்ளுவனின் சைக்கிள்.

இப்போதெல்லாம் இளவயதுப் பிள்ளைகளில் போலியோவால் பாதித்த குழந்தைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. அந்தவகையில், போலியோ இந்தியாவில் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். ஒருவேளை அந்தநாட்களில் இந்த சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால், நான் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன் என்கிற எண்ணம் வந்துபோகிறது.

  1. நீங்கள் 1999 முதல் ஆசிரியராக இருக்கிறீர்கள் என்கிற வகையில், அன்றைக்கும் இன்றைக்குமான மாணவர்களின் மனவியல் மாற்றங்களைச் சொல்லுங்கள்..?.

“எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு” என்கிறபடி என்னோடு ஆசிரியப் பயிற்சி முடித்த நண்பர்கள் 2005ல் தான் ஆசிரியப் பணி பெற்றார்கள். நான் மாற்றுத்திறனாளி என்பதனால் 1999 ஜனவரி 18லேயே ஆசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டேன். நான் பதிந்ததென்னவோ தூத்துக்குடி வேலை வாய்ப்பகத்தில் தான். ஆனால், மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு செய்த அனைவரும் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டோம்.

பொதுவாக, அன்றைக்கும் இன்றைக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களின் மனநிலையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால், உயர் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அலைபேசிகள் எளிதான புழக்கத்தில் வந்ததும், மதுக்கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டதும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது.

இதன்விளைவாக, அவர்களின் நடவடிக்கைகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிதாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்கிற சட்டமும் வந்த பின்னர், மாணவர்கள் முற்றிலும் மாறி விட்டனர். இதனால், ஆசிரியர்கள் மீதான மரியாதை குறைந்து போய் விட்டதைக் காண வருத்தமேற்படுகிறது.

  1. கூனங்கரணை, எக்கக்குடி, கூராங்கோட்டை, நரசிங்கக்கூட்டம் என்று இதுவரை நான்கு பள்ளிகளில் ஆசிரியப்பணி செய்திருக்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய பள்ளிகளில் பெற்ற அனுபவங்கள் பற்றி..?

கூனங்கரணை

முதல் காதல், முதல் ஸ்பரிசம், முதல் முத்தம் மறக்க முடியாதது என்பது போல முதல் பள்ளியான கூனங்கரணையை மறக்க முடியாது. 18.01.1999ல் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியம், கூனங்கரணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணியேற்றேன். அது முழுமையான விவசாய கிராமம். தினமும் ஐந்து கி.மீ பயணித்து நான் தங்கியிருந்த ஒரத்தி கிராமத்திலிருந்து, பணிக்கு போவேன். முதலில் சைக்கிளிலும் பின்னர் TVS 50 வண்டியிலும் பள்ளி போனேன். ஆனாலும், ஒருபோதும் சலிப்புத் தட்டாத பயணமும் பள்ளியுமாக வாய்த்த காலம் அது.

திரு.தண்டபாணி, திரு.முத்தியாலு, திரு.குப்புசாமி என முத்தான மூன்று தலைமையாசிரியர்களின் கீழ் ஐந்தரை ஆண்டுகள் பணிபுரிந்த பள்ளி அது. நான் நினைத்ததையெல்லாம் செயல்படுத்தி வெற்றி கண்ட பள்ளி அது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியிலேயே தஞ்சமடைந்திருந்த காலம். அன்பான மாணவர்கள், அருமையான பெற்றோர்கள் என்று அமைந்து, ஆசிரியப் பணியை நேசிக்கத் தொடங்கிய நாட்கள் அவை.

அந்த ஊரிலிருந்து வேறு பள்ளிக்கு
மாறுதல் கேட்டபோது, “ஊருக்கு வேண்டுமானால் மாறுதலில் செல்லுங்கள். இங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லக் கூடாது” என்றுகூறி தடுத்துநிறுத்தி அன்பு மழை பொழிந்தவர்கள். ஊருக்கு மாறுதல் பெற்றபோது பெரிய
அளவில் விழா நடத்தி அரைப் பவுன் தங்க மோதிரம் அணிவித்து வழியனுப்பினார்கள். விளைவாக அன்பைச் சுமந்தபடி கிளம்பினேன்.

எக்கக்குடி

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் புகழ்பெற்ற சிவன்கோயில் உள்ள உத்திரகோச மங்கைக்கு அருகிலுள்ள ஊர் எக்கக்குடி. பெரும்பான்மையாக இஸ்லாமிய மக்கள் வாழும் ஊர். என்னைத் தன் பிள்ளைகளுக்கு மேலாக பார்த்துக் கொண்ட திருமதி. புஷ்பவள்ளி தலைமையாசிரியையிடம் பணி புரிந்தது நான் பெற்ற பேறு. “செலவைப் பற்றி கவலைப்படக் கூடாது. நிகழ்வைச் சிறப்பாக நடத்த வேண்டும்” என்பதைக் கற்றுக் கொண்டது இவரிடம் தான்.

இடைநிலை ஆசிரியராக இருந்தாலும் ஏழாம் வகுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அம்மாணவர்கள் எட்டாம் வகுப்பிற்கு மாறியபோது, எட்டாம் வகுப்பையும் என்னிடம் தந்து, என்னுடைய வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். சொந்த ஊரிலிருந்து மிக நீண்ட தூரம் என்பதால் இரண்டே ஆண்டுகளில் மாறுதல் பெற்றேன். ஆனாலும், இன்றும் ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் மிக நெருக்கமாக உள்ள ஊர்.

கூராங்கோட்டை

மிக நீண்ட காலமாக, அதாவது பத்தாண்டுகள் பணியாற்றிய ஊர் கூராங்கோட்டை என்கிற ஊர் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் உள்ளது. என்னை முழுமையான ஆசிரியராக மாற்றிய ஊர். அந்த ஊரில் பணியாற்றியிருந்த என் அப்பாவிடம் படித்தவர்களின் பேரன் பேத்திகள் மற்றும் பிள்ளைகள் என்னிடம் படித்தார்கள். அந்தவகையில் மூன்று தலைமுறை மக்களின் உறவைத் தந்த ஊர். பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டேன்.

திரு.கணேசன், திருமதி.வைரமணி என இரு தலைமையாசிரியர்களிடத்தில் பணிபுரிந்தேன். அவர்கள் கொடுத்த சுதந்திரமே என்னைச் சிறப்பாக செயல்பட வைத்தது. ஊர் மக்கள் கடலாடி ஒன்றியத்தில் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து எனக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தினார்கள். அதனைப் போலவே தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றபோது பெரிய அளவில் விழா நடத்தி அரைப் பவுன் தங்க மோதிரம் அணிவித்து வழியனுப்பியவர்கள்.

அந்த ஊரின் பல திருமண அழைப்பிதழ்களில் எனது பெயரும் இடம் பெற்றது. தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே என்னை ஏற்றுக் கொண்டார்கள். என் வீட்டு சுக துக்கங்களில் ஒட்டு மொத்த ஊராக வந்து கலந்து கொண்டனர். இன்றும் அங்கு நடைபெறும் ஊர்த் திருவிழாவிற்கு என் வீட்டிற்கு கிராமமாக வந்து அழைப்பிதழ் தருகிறார்கள். கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன். மறக்கவும் முடியாது.

நரசிங்கக்கூட்டம்

எனக்கு தலைமையாசிரியர் அங்கீகாரம் கொடுத்த ஊர். நான் தலைமையாசிரியரானால் என்னென்ன செய்ய வேண்டுமென கனவு கண்டேனோ, அத்தனையையும் நனவாக்கி மகிழும் ஊர். மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வைக்கிறது. பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கொடுக்கும் ஒத்துழைப்பு இன்னும் நிறைய செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.

நான் பணியேற்றபோது ஏழு மாணவர்கள் மட்டுமே பயின்றிருந்த பள்ளியை, இருபத்து இரண்டு மாணவர்கள் பயிலும் பள்ளியாக மாற்றியது எனக்குக் கிடைத்த முதல் வெற்றி. ஆங்கில வழிப் பள்ளியில் படித்த மாணவர்களை என்னை நம்பி இப்பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள்தான் இந்த வெற்றிக்குக் காரணம். இப்பள்ளியால் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் பல.

  1. கடந்த 2018 முதல் தலைமையாசிரியராக பணி செய்கிறீர்கள். ஆசிரியராக இருந்ததற்கும், தலைமையாசிரியராக பழகுவதற்கும் என்னவிதமான வித்தியாசத்தைஉணர்கிறீர்கள்?

எல்லாவற்றிற்கும நானே பொறுப்பு என்ற பொறுப்புணர்வையும், நினைத்ததை தயக்கமின்றி செயல்படுத்த முடியும் என்கிற நிலையையும் தந்திருக்கிற நல்வாய்ப்பாக இந்நிலையைப் பார்க்கிறேன். தடைகள் ஏதுமில்லாததால் முழு வேகத்தோடு பயணிக்க முடிகிறது. அதிகாரிகள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நாமே பொறுப்பு என்பதால், கூடுதல் கவனத்தோடு பணி செய்யவும், அனைத்து மாணவர்களுக்கும் நாம் நினைத்ததைச் செய்யவும் முடிகிறது.

  1. மாணவர்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள். அந்த எண்ணம் எப்படித் தோன்றியது?. அதற்கான துணைக்கரங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

மாணவர்களின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றும் திட்டங்கள், ஆர்வத்தைத் தூண்டும் திட்டங்கள் என இரண்டாகப் பிரித்து செயல்படுத்துகிறேன்.

தேவையை நிறைவேற்றும் திட்டங்கள்…

புதிதாய்ச் சேரும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குதல்.

ஒரு செட் சீருடை தைத்து வழங்குதல்.

ஒரு செட் டிராக்சூட் டீசர்ட் வழங்குதல்.

மாதமொரு பழம் திட்டம் மற்றும் காலை இணை உணவுத் திட்டம்.

உடல் நலம் பேணும் செயல்பாடுகள்.

ஆர்வத்தைத் தூண்டும் திட்டங்கள்..

பிறந்தநாள் பரிசுத் திட்டம்

மரம் வளர்த்தால் பரிசு திட்டம்.

பறவை மேடை மற்றும் சிட்டுக் குருவிகள் வளர்த்தல்.

பனையோலையில் பொருட்கள் செய்யப் பயிற்சி.

பள்ளி நூலகம்.

கல்விச் சுற்றுலா மற்றும் களப்பயணம்.

சிறுசேமிப்பு

நேர்மை அங்காடி

திறமைகளின் நாற்றங்கால்

இப்படி புதுப்புது திட்டங்களை பள்ளியில் செயல்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்தது மட்டுமல்ல, கிடைக்காததும் என் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அதன்படி தனியார் பள்ளி, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என எங்கு வித்தியாசமான திட்டங்களைப் பார்த்தாலும், அதனை எங்கள் பள்ளியில் நடைமுறைப்படுத்தி வருகிறேன். என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு திட்டத்தையும் நான் தொடங்க மட்டுமே செய்கிறேன். பின்னர் உள்ளூர் நண்பர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், எனது நண்பர்கள், முகநூல் நண்பர்கள், உறவுகள் ஆகியோர் என்னுடன் இணைந்து கொள்கிறார்கள். எந்தவொரு திட்டத்தைத் தொடங்கினாலும், அதில் எனது பங்கும் நிச்சயம் அதிகமாகவே இருக்கும். எனவே, நண்பர்களும் தயக்கமின்றி உதவுகிறார்கள்.

  1. தற்போது நீங்கள் பணி செய்யும் தொடக்கப்பள்ளி பற்றியும், உங்கள் சக ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லுங்களேன்?.

நான் தற்போது தலைமையாசிரியராகப் பணிபுரியும் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஈராசிரியர் பள்ளி. நான் தலைமையாசிரியராகப் பணியேற்றபோது உதவி ஆசிரியர் இல்லை. ஒரு மாதம் கழித்து திரு.தமிழ்மணி அவர்கள் உதவி ஆசிரியராகப் பணியேற்றார். இரண்டு ஆண்டுகள் என்னுடன் பணிபுரிந்தார். உடல்நிலை ஒத்துழைக்காததால் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார்.

அதன் பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரு.அய்யப்பன் அவர்கள் என்னுடன் பணிபுரிந்து வருகிறார். எனக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறார். திறமையான ஆசிரியர். பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிப்பவர். சிறந்த ஓவியர். அழகாக எழுதக்கூடியவர். மாணவர்களுக்கு விருப்பமான ஆசிரியர். என்னுடைய வேலைப் பளுவை வெகுவாக குறைத்து விட்டவர்.

  1. நீங்கள் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மட்டுமல்லாது, படைப்புலகிலும் இயங்கி வருகிறீர்கள். அதுபற்றி?

என்னுடைய முதல் படைப்பு 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே பத்திரிக்கையில் வெளிவந்து விட்டது. ஆசிரியர் பயிற்சிக்கு செல்வதற்கு முன்பே பல இதழ்களிலும் எழுதி வந்தேன். ஆசிரியர் பணியில் இணைவதற்கு முன்பே பலரும் அறிந்த வாசக எழுத்தாளனாக பயணித்தேன்.

எனவே, படைப்புலகை விட்டுவிட விருப்பமில்லை. அது மட்டுமல்லாது.. படைப்புகள் குறித்த ஆர்வம் என் கற்பித்தலுக்கும் பெரிதும் உதவுகிறது. அதனாலேயே படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். கதை, கட்டுரை, பேட்டி, கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல், சிரிப்பு, துணுக்கு என இதுவரை 3000க்கும் மேற்பட்ட படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன.

சரியாகச் சொல்வதென்றால், நான் படைப்புலகில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எனவே, படைப்புலகிலும் தொடர்ந்து பயணிப்பேன்.

  1. நீங்கள் இதுவரை பெற்றுள்ள விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

ஆசிரியப் பணிக்கான விருதுகள் :

2014ல் மதுரை தினமலர் வழங்கிய “லட்சிய ஆசிரியர் விருது”

சென்னை தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், Dr.இராதாகிருஷ்ணன் அவர்கள் வீட்டில் வைத்து வழங்கப்பட்ட “ஆசிரியர் செம்மல் விருது”

சேலம் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை வழங்கிய “வாசகன் நாயகன் விருது” எனும் அங்கீகாரத்தை எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன், நூல்களின் காவலர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோரின் கரங்களால் பெற்றேன்.

சென்னை தென்னிந்திய சமூக கலாச்சார அகாடமி வழங்கிய, “சேவா ரத்னா விருது” அங்கீகாரத்தை முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கிய, “சிறந்த ஆசிரியர் விருது”

கல்வியாளர் சங்கமம் வழங்கிய, “மாற்றங்களின் நாயகன் விருது” அங்கீகாரத்தை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.பொன்னையா அவர்கள் கரங்களால் பெற்றேன்.

தூத்துக்குடி பாரதி அரிமா சங்கம் வழங்கிய “மகாகவி பாரதி ஆளுமை விருது”

இந்து தமிழ்திசை நாளிதழ் வழங்கிய “முன்னோடி அன்பாசிரியர் விருது” அங்கீகாரத்தை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு.செங்கோட்டையன் அவர்கள் வழங்கப் பெற்றுக் கொண்டேன்.

வேம்பார் காமராஜர் சமூகநலப் பேரவை வழங்கிய “சாதனை நாயகன் விருது”

இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி அவர்கள் வழங்கிய சிறந்த பள்ளிக்கான “கல்வி ரத்னா விருது”

திருக்குறளுக்காக…

சென்னை எழில் இலக்கியப் பேரவை வழங்கிய “குறள் உரைச் செம்மல் விருது” அங்கீகாரத்தை முன்னாள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்வியாளர் க.ப.அறவாணன் அவர்களின் கரங்களால் பெற்றேன்.

காரைக்குடி வள்ளுவர் பேரவை வழங்கிய “குறள் ஆர்வலர் விருது” அங்கீகாரத்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திருக்கரங்களால் பெற்றேன்.

மற்ற விருதுகள்

காஞ்சி முத்தமிழ்ச் சங்கம் வழங்கிய “முகநூல் வேந்தர் விருது” பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் வழங்கப் பெற்றுக் கொண்டேன்.

கோவை தமிழ் இலக்கியப் பாசறை வழங்கிய “கவிதைத் தூதர் விருது” முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு.பொன்ராஜ் அவர்கள் வழங்கப் பெற்றுக் கொண்டேன்.

காஞ்சி முத்தமிழ்ச் சங்கம் வழங்கிய “சிறந்த சமுக நல ஆர்வலர் விருதை” முன்னாள் தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் Dr..மணிகண்டன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய “சிந்தனைச் சிற்பி விருது” அங்கீகாரத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பி.பி.செல்லத்துரை அவர்களிடமிருந்து பெற்றேன்.

மேலும், கவிதைகளுக்காக பத்திற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன்.

  1. ஒரேநேரத்தில் கல்வித் தளம், படைப்புத் தளம், முகநூல் தளம் என்று மூவகைச் செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கான நேரத்தை எப்படி பங்கிட்டுக் கொள்கிறீர்கள்?

பள்ளி நேரங்களிலும் இரவு 8 முதல் 10 மணி வரையிலும் பள்ளி சம்மந்தமான வேலைகளைச் செய்ய ஒதுக்குகிறேன். பெரிய அளவிலான வேலைகளை சனி, ஞாயிறு விடுமுறையில் செய்கிறேன். கதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புகளை இரவு 10 முதல் 12 மணி வரையும், அதிகாலையிலும் எழுதுகிறேன்.

எனக்கான ஓய்வுக்காக பள்ளி விட்டு வந்ததும் இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பேன். அந்த நேரங்களில் முகநூலில் பதிவுகளைப் பதிவிடுகிறேன். இந்தக் கொரோனா காலத்தில் எந்த நேரக் கட்டுப்பாடும் கிடையாது என்பதால் நினைத்த நேரத்தில் நினைத்ததைச் செய்து வருகிறேன்.

  1. பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண வாழ்க்கை அமைவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. அதுபற்றி உங்கள் பார்வை?

பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண வாழ்க்கை அமைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறதென்பது உண்மைதான். ஆனால், அது பொருளாதாரம் சார்ந்தே இருக்கிறது. பொருளாதாரத்தில் தன்னிறைவாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண வாழ்க்கை அமைவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது என் கருத்து.

என்னைப் பொறுத்தவரை அரசுப் பணியில் இருப்பதால், பலரும் பெண் தர முன்வந்தனர். எனக்கு பொதுநலச் சேவையில் ஈடுபாடு இருந்ததாலும், திருமணத்தை விரும்பாததாலும் திருமணத்தை தவிர்த்தேன்.

  1. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை பல்வேறு அறப்பணிகளுக்கும் பயன்படுத்துவதாக அறிந்து பெருமை கொள்கிறோம். அந்தப் பணிகளை வாசகர்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே?

நான் எனது சம்பளத்தில் ஒரு பகுதியை, பல்வேறு அறப்பணிகளுக்குப் பயன்படுத்துவது உண்மைதான். இதில் முன்னுரிமை தரக்கூடியதாக எனது பள்ளி மாணவர்களுக்கும், பள்ளிக்கும் அமைத்துக் கொள்கிறேன். மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும்போது, நண்பர்கள் உதவியோடு என் பங்கும்
இருக்கும்.

எனது தந்தையின் நினைவாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு சீருடையும், எனது தாயாரின் நினைவாக ஒரு டிராக்சூட், டீ சர்ட் வாங்கித் தருகிறேன். அனைத்து மாணவர்களுக்கும் வாங்க ரூ 20,000 ஆகும். அதுபோக, ஒவ்வொரு ஆண்டும் தொழிற்கல்வி பயிலும் மூன்று மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கவும் உதவுகிறேன்.

நான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ 3,000, ரூ 2,000 மற்றும் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ 1,000 பரிசு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

இதுதவிர நான் படித்த பள்ளிகளின் ஆண்டு விழாவுக்காக ஆண்டுதோறும் ரூ 5,000 வழங்கி வருகிறேன். இப்படியான கல்விச் செலவுகள் செய்யத் தயங்குவதில்லை. மேலும், சிறப்பாகச் செயல்படும் ஒரு சில தொண்டு நிறுவனங்களுக்கும் என்னாலியன்ற உதவிகளையும் செய்து வருகிறேன்.

  1. உங்கள் எதிர்காலச் செயல்பாடுகள் பற்றி..?

எனது தந்தை ஆசிரியர் திரு.சத்தியநாதன் அவர்கள் பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை அமைத்து, ஏழை மாணவர்களை தொடர்ந்து படிக்க வைக்கும் எண்ணம் இருக்கிறது. அதனை முறையாக விரைவில் தொடங்குவேன்.

அதுபோலவே அப்பாவின் நினைவாக போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களை மட்டுமே கொண்டதாக நூலகம் உருவாக்கி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கொடுக்கவும், வாரம் ஒருமுறை பயிற்சி வகுப்புகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன். இந்த இரண்டு எதிர்காலத் திட்டங்களும் அநேகமாக வரும் 2021 ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என நம்புகிறேன்.

குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியராக, ஏழை மாணவர்களின் காவலராக, சிறந்த இலக்கியப் படைப்பாளராக அரும்பணியாற்றும் திரு.கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களின் நற்பணிகள் தொடர்ந்திட ‘ஆளுமைச் சிற்பி ’
வாழ்த்துகிறது.  =

இவரை வாழ்த்த,
திரு கிறிஸ்து ஞானவள்ளுவன், தூத்துக்குடி
கைபேசி & 94420 55358.