பண்படுத்தும் நல்மொழிகள்!

டாக்டர் மெ.ஞானசேகர்

சிறுமி லீலாவின் தந்தை சேட் இரயில்வேயில் பணிபுரிந்தார். அவருக்கு அவ்வப்போது ஊர் மாற்றலாகிவிடுவதால் அவரோடு தாயாரும் சென்றுவிடுவார். லீலா தன் உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு டார்ஜிலிங்கில் ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தாள். அந்த உறவினருக்குக் குழந்தைகள் இல்லாததால் லீலாவை நன்கு பார்த்துக் கொண்டார்கள். ஆனால், தன்னோடு விளையாட யாருமில்லையே என்ற ஏக்கம் லீலாவுக்கு இருந்தது.

அதேசமயம், சனி, ஞாயிறு வந்துவிட்டால் கொண்டாட்டம்தான். காரணம் லீலாவோடு பிறந்த இரண்டு அண்ணன்மார்களும் டார்ஜிலிங்கில் இருந்த ஒரு பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தனர். சனி, ஞாயிறுகளில் அவர்கள் உறவினர் வீட்டுக்கு வந்துவிடுவதால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

லீலாவுக்குப் படிப்பில் அதிக ஈடுபாடு இல்லை. இவளுடைய தோழி குலுவும் ஓரளவுக்குத்தான் படிப்பாள். அண்ணன்மார்கள் சில சமயம் பெண்பிள்ளை என்பதால் இவளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள். இதில் ஒரு விளையாட்டு மரம் ஏறுதல். ஆனால் லீலா அவர்களிடம் “உங்களைவிட அதிக உயரம் நான் ஏறுவேன்” என்று சொல்லி மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டாள். இப்படித் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்ததால் படிப்பு விருப்பமில்லாமல் சென்றது.

இச்சூழலில் லீலாவின் தந்தை டார்ஜிலிங் அருகில் சில மாதப் பணிகளுக்காக இரயில்வே பணிமனைக்கு வந்துவிட்டார். வாடகை வீடு எடுத்து குடும்பம் ஒன்றாக இருந்தது. பெற்றோர், அண்ணன்மார்களுடன் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. எனவே விளையாட்டுகள் அதிகமானது. அதேசமயம் காலாண்டுத் தேர்வும் நடந்தது. ஒருநாள் லீலா படிக்காமல் விளையாடுவதைக் கண்ட அவளின் அம்மா “என்ன லீலா, தேர்வுக்குப் படிக்கவில்லையா? விளையாடுகிறாயே” என்று கேட்டதும், சுதாரித்துக் கொண்ட லீலா, “எல்லாம் படித்துவிட்டேன் அம்மா” என்று பதில் கூறினாள்.

“அப்படியா, வா, உன்னிடம் சில கேள்விகள் கேட்கிறேன்” என்று அழைத்ததும், “இல்லையம்மா, இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்” என்று சொல்லி அப்போதுதான் புத்தகத்தைத் திறந்தாள். தேர்வு ஆரம்பிக்கும் முன்பு எல்லோரும் படித்துக் கொண்டிருந்த பல பகுதிகளைப் பார்த்த போதுதான் சிறப்பாகத் தயாரிக்கவில்லை என்பதையும் கண்டுகொண்டாள்.

தேர்வு ஆரம்பித்தது. அன்று தேர்வினை முதலில் முடித்தவள் லீலா தான். சுற்றிப் பார்த்த போது, எல்லோரும் வேகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். தான் அதிகம் படித்துவரவில்லை என்பதைச் சிந்தித்தாள். அதேசமயம் ‘எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடுவேன்’ என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள்.

தேர்வுகள் முடிந்து, மீண்டும் பள்ளி திறந்தது. வகுப்பு ஆசிரியை தேர்ச்சி அட்டையைக் கொண்டு வந்து வகுப்பில் வாசிக்க ஆரம்பித்தார். எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வாசிக்கப்பட்டது. ஒவ்வொரு பெயரும் வாசிக்கும்போது தன் பெயர் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆசிரியை இருபது மாணவர்களின் பெயர்களை வாசித்துவிட்டார். லீலாவின் பெயர் இன்னும் வரவில்லை.

தொடர்ந்து ஒரு சில பாடங்களில் தோல்வியுற்றவர்கள் பெயரை வாசித்தார். இந்தப் பட்டியலும் சென்றது. வகுப்பிலிருந்த அடுத்த இருபது பெயரும் வாசிக்கப்பட்டது. அதிலும் லீலாவின் பெயர் இல்லை. மனது ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது. லீலாவின் தோழி குலுவின் பெயரும் இதுவரை வாசிக்கப்படவில்லை.

ஆம், ஆசிரியை இறுதியாக லீலாவையும், குலுவையும் அழைத்தார். இருவரும் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி கண்டுள்ளதைக் கூறிக் கடிந்து கொண்டார். வகுப்பே தன்னை அவமானமாகப் பார்ப்பதை உணர்ந்தாள் லீலா. தேர்ச்சி அட்டையில் பெற்றோரின் கையொப்பம் வாங்கி வரவேண்டும் என்று ஆசிரியை அதை லீலாவிடம் கொடுத்தார்.

“படிக்காமல் எப்போதும் விளையாடிக் கொண்டிருந்ததால் இப்படி ஆகிவிட்டதே, இதைப் பெற்றோரிடம் காட்டினால் என்ன நடக்கும்? என்ன சொல்லுவார்கள்?” என்ற சோகத்தோடு வீட்டிற்கு வந்தாள்.

வீட்டில் நுழைந்ததும் தேர்ச்சி அட்டையை அப்பா, அம்மாவிடம் காட்டினாள். இருவரும் அதைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை. “சரி, நீ உள்ளே சென்று உடையை மாற்றிக் கொண்டு வா” என்று கூறினார்கள்.

லீலாவுக்கு நிம்மதி. தன்னை அப்பா, அம்மா கண்டித்து ஒன்றும் சொல்லவில்லை என்று மனதுக்குள் மகிழ்ந்தாள். சிறிது நேரத்தில் அவளது தந்தை அவள் அருகில் வந்தார். அவளிடம், “மகளே, நான் இன்னும் ஒரு வாரத்தில் வேறு ஒரு இடத்துக்கு வேலைக்குப் போகிறேன். உன்னுடைய மதிப்பெண்கள் எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகின்றது. நீ இவ்வளவு மோசமாக மதிப்பெண் எடுக்கக் காரணம், உனது மனப்பான்மைதான். நீ படிக்கவும் இல்லை; மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று உழைக்கவும் இல்லை. இந்த மனநிலை மாறவேண்டும். நமக்கென்று ஒரு கடமை இருக்கின்றது. அதை நாம் செய்ய வேண்டும்” என்று கூற லீலா அமைதியாகக் கேட்டுக் கொண்டாள்.

ெதாடர்ந்து லீலாவின் தந்தை “லீலா, நாம் எதைச் செய்தாலும் முழு விருப்பத்தோடு சிறப்பாகச் செய்ய வேண்டும். ஒரு செருப்புத் தைப்பவன் தாறுமாறாகச் செருப்புகளைத் தைத்து விற்பனைக்கு எடுத்துச் சென்றால் யாரும் வாங்கமாட்டார்கள். அவன் வியாபாரம் சரியும், வாழ்க்கையும் தோற்றுப்போகும். அதேசமயம் அவன் சிறப்பான செருப்புகளைத் தைத்து வியாபாரம் செய்யும் போது வியாபாரம் பெருகும்; வாழ்க்கையும் ஜெயிக்கும்” என்று தன் மகளிடம் பேசினார்.

லீலா யோசித்தாள். தான் குறைந்த மதிப்பெண் எடுத்த போதும் தனது பெற்றோர்கள் கடிந்து கொள்ளாமல் தன்மீது அன்புகாட்டி வழிகாட்டுகின்றார்களே என்று அந்தக் குழந்தை மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

மறுநாள் முதல் வகுப்பில் லீலாவிடம் மாற்றம் தெரிந்தது. பாடத்தைக் கவனிப்பதே முக்கியமானது என்று அதைச் செய்ய ஆரம்பித்தாள். படிப்பில் கவனம் பல மடங்கு கூடியது. அடுத்த தேர்வில் மிகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. ஆண்டு இறுதியில் வகுப்பில் படிப்பில் முதல் மாணவி என்று பெயர் பெற்றாள்.

இப்படித் தொடர்ச்சியாகப் படிப்பில் முதலிடம் பெற்ற லீலாவின் வாழ்க்கைப் பாதைகள் கவனிக்கப்பட வேண்டியது. திருமணமானபின் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் படித்தார் லீலா சேட். 1958-ஆம் ஆண்டு பார் தேர்வில் முதலிடம். அதாவது தேர்வு எழுதிய 580 மாணவர்களில் முதலிடம் பெற்றார். திருமணமான ஒரு பெண் சாதனை படைத்தார் என்று பாராட்டு; கூடவே பார் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பெண்ணாகவும் பெயர் பெற்றார்.

தொடர்ந்து இந்தியா வந்து வழக்கறிஞர் தொழில் செய்தார். பின்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல் தலைமைப் பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் முதல் தலைமைப் பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்றுப் பணிசெய்தார்.

பல்வேறு நீதி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பணிசெய்யும் நிறுவனங்களுக்குத் தலைைம தாங்கினார் லீலாசேட். பெண்களுக்குச் சொத்தில் உரிமையுண்டு என்பதை முன்னெடுத்தவர்களில் இவர் முக்கியமானவர். காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்தார். குழந்தைகளைப் பாதிக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு வரையறை இருக்க வேண்டும் என்று நீதி வழங்கினார். ‘சக்திமான்’ தொலைத் தொடர் இவரது தலைமையின்கீழ் விவாதிக்கப்பட்டது. ‘கற்பழிப்புச் சட்டங்கள்’ திருத்துவதற்கான மூன்று நீதிபதிகள் குழுவில் ஒருவராகத் திகழ்ந்தார்.

குழந்தைப் பருவத்தில் படிப்பார்வம் இல்லாத நிலையைக் கண்டுகொண்டு தன்னையே சரிசெய்த லீலாசேட் சாதனைப் பெண்மணியாக வலம் வந்தார். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பதற்கு இவர் குழந்தைப் பருவத்தில் பெற்ற மனமுதிர்ச்சியும், மனப்பான்மையுமே மேலான காரணமாக அமைந்தது.

பெற்றோர்களின் கவலை

இன்று பெற்றோர்கள் பலருக்குத் தங்களது பிள்ளைகள் எப்படி வளர்வார்களோ? என்ன ஆகுமோ? என்ற கவலை அதிகமாக உள்ளது.

இணையதளம், வீடியோ விளையாட்டுகள், நேரத்தைக் களவாடும் இதரப் பொழுதுபோக்குகள் குழந்தைகள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தையெல்லாம் உருவாக்கும் என்ற கவலை எதார்த்தமானதுதான். அதேசமயம் இதனைக் கண்காணித்துச் சரிசெய்ய வேண்டிய கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு.

ஒரு கணவனும், மனைவியும் தங்களது ஒரே மகனுடன் மும்பையிலிருந்து சென்னைக்கு இரயிலில் கிளம்பினார்கள். பள்ளி விடுமுறைக்காக அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். இரயிலில் மூவருக்கும் படுக்கை வசதி கிடைத்தது. ஒரு இருக்கை ஜன்னல் பக்கமாக அமைந்ததால் மகிழ்ச்சி. காரணம் மகன் அதை விரும்புவான். கடந்த முறை ஜன்னலோர இருக்கை கிடைக்கவில்லை என்று மகன் பிடிவாதம் பிடிக்க பயணம் முழுவதும் மிகவும் வேதனையாக அமைந்துவிட்டது.

அப்போது, வீடு வந்து சேர்ந்ததும் தன் தாயிடம் புலம்பினாள் அந்தப் பெண். “ஐந்து பிள்ளைகளையும் மாமனார், மாமியாரையும் பார்த்துக் கொண்டு நீங்கள் எப்படிச் சமாளித்தீர்கள் அம்மா? ஒரு பையன் இவனையே என்னால் சமாளிக்க முடியவில்லையே” என்று வழக்கம் போல வேதனைப்பட்டாள். அவளது தாய், “கவலைப்படாதே, நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டுதான் வாழ்க்கை நடத்துகிறீர்கள். இதை உன் மகன் பார்க்கத்தான் செய்கின்றான். எனவே நீங்கள் வளர்க்கும் அந்தத் தளிர் நிச்சயம் சமயம் வரும்போது சரியாகவே வளரும்” என்று ஆறுதல் கூறினாள்.

இன்று இரயிலில் ஏறி அமர்ந்ததும் தனது பத்து வயது மகன் வேகமாகச் சென்று ஜன்னலோரம் அமர்ந்து கொண்டதைக் கண்டதும், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததையும், தன் தாய் சொன்னதையும் அசைபோட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

சிறிது நேரத்தில் ஒரு குடும்பம் வந்தது. இரண்டு பெண் குழந்தைகளுடன், அவர்களது தாய். இவர்களை ஏற்றிவிட்டுவிட்டு கணவன் சென்றுவிட்டார். சிறுமிகளின் தாய், தனியாகச் செல்ல வேண்டுமே என்ற கவலையோடு இவர்களைப் பார்த்தாள்.

அப்போது முதலில் வந்த குடும்பப் பெண்மணி லேசாகப் புன்னகைக்க, அவர்களும் சென்னைக்கு விடுமுறைக்கு வருவதாகச் சொன்னாள் இரண்டாவதாக வந்த குடும்பப் பெண்மணி. அவளது இரண்டு பெண் குழந்தைகளில் ஒன்று எட்டு வயதும், மற்றொன்று ஐந்து வயதும் இருக்கும் என்பது புரிந்துவிட்டது. சில நிமிடங்களில் இவளது பத்து வயது மகனும், அந்தச் சிறுமிகளும் நண்பர்களாகிவிட்டார்கள்.

டிபன் சாப்பிட்டு முடித்தார்கள். இப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. “எதிர் ஜன்னல் பக்கம் யார் அமர்வது?” என்பதில் அந்த இரண்டு சிறுமிகளுக்குள்ளும் சண்டை. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள். அந்தத் தாய் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

“என்ன இப்படிச் சென்று கொண்டிருக்கிறதே?” என்று ஒற்றைப் பையனின் பெற்றோர் எண்ணிக் கொண்டிருந்த போது, இவர்களின் மகன் அந்தச் சிறுமிகளில் இளையவளை அழைத்துத் தனது ஜன்னலோர இடத்தைத் தந்துவிட்டு அருகில் அமர்ந்துகொண்டான். பிரச்சனை முடிவுக்கு வந்தது. சென்னை வந்து சேரும் வரை குழந்தைகள் மகிழ்வோடு பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

இந்தச் சம்பவத்தைக் கண்டபோது ஒற்றைப் பையனின் தாய்க்கு தனது தாய் சொன்னது நினைவுக்கு வந்தது. குழந்தைகளிடம் பிடிவாதம், அனுசரித்துச் செல்லாமை, சோம்பேறித்தனம், படிப்பில் ஆர்வமின்மை போன்ற சில பழக்கவழக்கங்கள் காணப்பட்டாலும், பெற்றோர்கள் சரியாக இருந்தால் இவற்றை விரைவில் மாற்றிவிட முடியும் என்பதே அந்தச் சிந்தனை.

விளைகின்ற பயிருக்கு நல்ல நீரும், உரமும், களையெடுப்பும், கண்காணிப்பும் தேவைப்படுகின்றது. இதைத் தோட்டக்காரர் அல்லது விவசாயி செய்கின்றார். இதைப் போலத்தான் வளர்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல எண்ணங்களையும், ஒழுக்கத்தையும், தவறுகள் செய்யும் போது தக்க முறையில் திருத்தங்களையும், நல்ல பழக்கவழக்கங்களையும் தரவேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. தான் எந்த நிலையில் இருக்கின்றேன் என்பது வளரும் பயிருக்குத் தெரியாது. ஆனால், தான் வளர்வேன் என்ற நம்பிக்கையை அது மண்ணிடமும், தன்னை வளர்க்கும் மனிதனிடமும் கொண்டிருக்கிறது.

இதையே தான் நாம் குழந்தைகள் வளர்ப்பிலும் காண்கின்றோம். விளையும் பயிரைப் பார்க்கின்ற ஒரு விவசாய அதிகாரி, “இது சரியாக வளர்கிறது, இதற்கு மேலும் இந்த உரங்களைப் போடுங்கள். அல்லது நீங்கள் நன்றாகப் பராமரிக்கிறீர்கள்” என்று கூறிப் பாராட்டுவார். அல்லது உங்களிடம், “என்ன இப்படி பயிர்களை வைத்திருக்கிறீர்கள்?, பூச்சியரிக்கிறதே, வாடியிருக்கிறதே” என்று கேட்டுச் சரியானதைச் செய்ய வழிகாட்டுவார்.

சில பெற்றோர்களை பிள்ளைகளோடு சந்திக்கும் போது ஆசிரியர்கள் பிள்ளைகளைப் புகழ்வதுண்டு. சில சமயம் தங்களது வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. “வகுப்பில் ஒரு இடத்தில் இருப்பதில்லை கவனிப்பதில்லை; கவனித்து எழுதுவதில்லை; வீட்டுப்பாடம் முடித்து வருவதில்லை; சுத்தமாக இருப்பதில்லை; அசிங்கமான வார்த்தைகள் அதிகமாகப் பேசுகின்றான்; சண்டை போடுகின்றான்; ஆசிரியரை எதிர்த்துப் பேசுகிறான்; கிண்டல் அடிக்கிறான்…” என்று பட்டியல் இடுவார்கள் ஆசிரியர்கள். அன்பு ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இந்தக் குறைபாடுகளைக் களைந்து அவர்களை உருவாக்குவதும் நமது கடமைதான். ஆசிரியர்கள் மனது வைத்தால் மேற்சொன்ன எல்லாவற்றையும் பள்ளியில் சரிசெய்திட அவர்களால் முடியும். அதற்குத் தகுதியுள்ளவர்களாகவும், விருப்பம் உள்ளவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

இப்படி ஆசிரியர்கள் ஒருபுறம் பட்டியல் வாசிக்க, இப்போதெல்லாம் ஆசிரியர்களை முந்திக்கொண்டு பெற்றோர்கள் பட்டியல் வாசிக்கின்றார்கள். “வீட்டில் அப்பா, அம்மா சொல்லைக் கேட்பதில்லை; எந்நேரமும் செல்போனை வைத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கிறான்; வீட்டைவிட்டு வெளியே ெசன்றால் இரவு திரும்பவே தாமதம் செய்கின்றான்; கண்ட பசங்களுடனும் பழகுகின்றான்; எங்களையே எதிர்த்துப் பேசுகின்றான்; அடிக்க வருகின்றான்; தம்பி, தங்கைகளோடு சண்டை போடுகின்றாள்; தலை சீவ அடம்பிடிக்கின்றாள்; ஒரு வேலை, உதவி கூடச் செய்வதில்லை; பொய் சொல்லுகின்றாள்; படிப்பது போல நடிக்கின்றாள்; புத்தகத்தை எடுத்துப் படிப்பதே இல்லை; எப்போதும் வாட்ஸ் ஆப் தான்; எப்போதும் பேஸ்புக் தான்; ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை…” இப்படி அடடா எத்தனை குறைகளைப் பெற்றோர்கள் ஆசிரியர்களிடமும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சொல்லிப் புலம்புகின்றார்கள்.

ஆக, இவற்றையெல்லாம் வாசிக்கும் போது ஒன்று மட்டும் நமக்குப் புரிகின்றது. பிள்ளைகளில் பலர் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் படுத்தி எடுக்கிறார்கள் என்பது தான். குறிப்பாக இந்தக் கொரோனா காலத்தில் சொல்லவே வேண்டாம், பெற்றோர்கள் படும்பாடு ரொம்பக் கஷ்டமாகவே பலருக்கு அமைந்துவிட்டது.

அப்படியானால் பேசாமல் நாம் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு, அடங்கியிருக்கும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா? இதற்கு வாய்ப்பில்லை. ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பெறுவதற்குப் பதிலாக “நாம் சொல்வதைச் செய்யும் ரோபோக்களை வாங்கிக் கொள்ளலாம்.” எந்திரன் படத்தில் கண்டது போல இரசிக்கலாம். ஆனால் மனிதக் குழந்தைகள் தரும் அன்பை, பாசத்தை, அனுபவத்தை மனித இயந்திரக் குழந்தைகள் தரமுடியாது. எனவே, ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் குழந்தைகளை வளர்க்கின்றோம். இங்கே உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களை உருவாக்கிட வேண்டியது
நமது கடமை.

ஆனால், இன்று பல பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளைத் தங்களது சிந்தனையில் ஏற்றிக்கொண்டு குழந்தைகளை இயந்திரங்களைப் பராமரிப்பது போலப் பராமரிக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்பதை அவர்கள் காலத்தால் உணர்வார்கள். நமது குழந்தைகளை நோக்கி நாம் சொல்லக் கூடிய அனைத்து வகையான குறைகளுக்கும், குற்றங்களுக்கும் ‘நாமும் பொறுப்பு’ என்பதை உணர்ந்திட வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனைச் சரிசெய்திட நாம் பக்குவப்பட வேண்டும். அதற்கான தேடலை, கல்வியறிவை நாம் பெறவேண்டும்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைகள் மண்ணில் பிறக்கையிலே… பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே”

என்ற பாடல் பெற்றோரின் கடமைைய, உடனிருப்பை, வழிகாட்டுதலைப் பிரதானப்படுத்துகின்றது. எனவே, குழந்தைகளைக் குறைசொல்வதை விடுத்து அவர்களை நெறிப்படுத்த, நல்வழி செல்லத் துணைநின்றிட பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் மனதார முன்வர
வேண்டும்.

காந்தியே பேருதாரணம்

காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது பெற்றோரைக் காத்திட்ட சரவணன் சம்பவம் அவரை மிகவும் கவர்ந்தது. இச்சம்பவம் பெற்றோரிடம் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சூழ்நிலை காரணமாகத் தவறிட நேர்ந்த போதும் உடனடியாகத் திருந்தி வாழ அவரது பெற்றோரின் வார்த்தைகள் துணைநின்றது.

காந்தியடிகளைக் கவர்ந்த மற்றொரு நாடகம், கதாபாத்திரம் அரிச்சந்திரன்.

எந்தச் சூழலிலும் பொய் பேசமாட்டேன் என்ற உறுதியை அரிச்சந்திரன் கதாபாத்திரம் மூலம் இளமையிலேயே மனதில் இறுத்தினார் காந்தியாடிகள்.

ஒரு நாள் பள்ளிக்கு வந்த பள்ளி ஆய்வாளர், காந்தியை ‘Kettle’ என்ற வார்த்தையை எழுதச் சொன்னார். அவர் தவறாக எழுதினார். தொலைவில் நின்ற ஆசிரியர் காந்தியிடம் வேறு ஒரு மாணவனைப் பார்த்து எழுதச் சொன்ன போது அதை அவர் செய்யவில்லை. காரணம் நேர்மை தவறக்கூடாது என்பதில் காந்தி நிலையாக இருந்தார். இதனால் தான் மகாத்மா காந்தியானார். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பதற்கு காந்தியடிகளும் ஒரு பெரிய உதாரணமே.

ஆகையால், இளம் பருவத்திலேயே குழந்தைகளுக்கு நல்ல நூல்களை, நாடகங்களை, சொற்பொழிவுகளை அறிமுகம் செய்ய வேண்டும். “அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள்” என்ற போராட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தற்போது கலையும், இலக்கியமும் சார்ந்த விழாக்கள் குறைந்துபோய்விட்டன. இதனால் நல்ல விஷயங்களைப் பெறுகின்ற, நல்ல மனிதர்களை, சாதனையாளர்களைச் சந்திக்கின்ற வாய்ப்புகள் குறுகிப் போய்விட்டன. மொழிப் பாடங்களின் தேர்வும், முக்கியத்துவமும் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் வழி கிடைக்கக்கூடிய வாழ்வியல் பாடங்கள் குறைந்துவிட்டன. இந்தச் சூழல்கள் மாறவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திறமைகளையும் நல்லொழுக்கங்களையும் வழங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற வேண்டும். வாரத்தின் பாட வேளைகளில் ஒரு அரைநாள் கட்டாயம் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சட்டமும், அமலாக்கமும் கட்டாயம் தேவையாகிறது.

அதேசமயம் இந்த நிகழ்வுகள் ஆபாசங்களைக் கொண்டுவரும் வெறும் உணர்ச்சி சார்ந்தவைகளாக இல்லாமல் அமைய வேண்டும். அறிவியல் கண்காட்சிகள், வினாடி வினாப் போட்டிகள், நாட்டுப்புறக் கலைகள், பாடல்கள், ஓவியங்கள், இசைக் கச்சேரிகள், சொற்பொழிவு அரங்கங்கள் என்று வாரம் தோறும் பள்ளி, கல்லூரிகள் அரை நாள்கள் அமர்க்களப்படட்டும், எல்லோரும் மகிழ்வோடு கற்கும் கல்வி நிலையங்கள் உருவாகட்டும். இவற்றின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல பண்புகளையும் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள்.

விளைகின்ற பயிர் அதன் வளரும் பருவத்தில் அடையாளம் காணப்படுவது போலக் குழந்தைகளும் வளர்கின்ற பருவத்திலேயே அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்படவோ அல்லது ஊக்கமூட்டி வளர்க்கப்படவோ சூழல்கள் உருவாக வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் சிறந்த சிற்பத்தை உருவாக்கிட ஒரு சிற்பி முனைவதைப் போல முனைப்புக் காட்டினால் விளைகின்ற, வளர்கின்ற நம் பிள்ளைகள் எல்லோரும் இந்த தேசத்தின் அணிகலன்களாகத் திகழ்வார்கள்.

எப்படி, விளையும் பயிரைப் பலன் தரச் செய்யும் வண்ணம் உருவாக்குவது தோட்டக்காரரின் கடமையாக உள்ளதோ, இதுபோன்ற கடமை உணர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக மக்களாலே தான் வளர்கின்ற குழந்தைகளின் நலன் பாதுகாக்கப்படவும், மலர்ச்சி பெறவும் முடியும். எனவே, குழந்தைகள் சாதிப்பதும், வெற்றி பெறுவதும் பெரியோர்கள் நமது கையில்தான் உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொண்டால், அதற்கான பங்களிப்பினை நாம் செய்தால் விளைகின்ற எல்லாப் பயிர்களும் நல்ல பலனைத் தரும். ஆகவே, “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற பழமொழி குழந்தைகளுக்காகச் சொல்லப்பட்டது போலத் தோன்றினாலும், உண்மையில் குழந்தைகளை வளர்க்கும் நிலையிலுள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் முகத்தை வெளிக்காட்டும் நோக்கில், தெரிந்து கொள்ளும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வோம். நல்ல குழந்தைகளை உருவாக்கி நல்ல விளைச்சலை நாட்டுக்குத் தருவோம்.